” அட நீ சும்ம கிட கிழவி. வாயத்துறந்தா நல்ல வார்த்த வராது” மேரியின் அம்மா தன்அம்மாவை அதட்டினாள்.
”யாருக்குத்தாண்டி அவங்கவங்களுக்குப் புடிச்சமாதிரி நிறத்துக்கு ஏத்தமாதிரி சேலை கிடைக்கு ஏதோ இந்தப் பெரிசுங்க பார்த்து கொடுக்கிறதக் கட்டிக்கிட்டு பொம்மைமாதிரி நிக்கணும்” என்று உள்ளே நுழைந்து. தனது சேலையை எடுத்து தொடையிடுக்கில் சொறுகியபடி அமர்ந்தாள் கேத்தரின், சேலைகளை ஒவ்வொன்றாய்ப் புரட்டினாள் வேகமாக. கேத்தரின் மேரியின் அண்ணி.
” ஏன்க்கா, உன் கல்யாணப் புடவைதான் ரொம்ப நல்லாயிருக்கே… இன்னும் புதுசா அப்படியே இருக்கு” என்றாள் ரெஜினா.
”எனக்குத்தான் தெரியும் அதோட தரம். பாக்கத்தான் படு சோக்கு. லேசான்னா போதும் டர்ர்ர்ன்னு போய்டும். ஏதோ என் நிலைமை. வாய்ச்சது வசதியானதுன்னு வச்சிருக்கேன்” என்று சம்மணமிட்டாள் கேத்தரின்.
”இந்த சேலைகளே இல்லன்னா ரொம்ம நல்லாயிருக்குமில்ல?” என்றாள் மேரி. சேலைகளை எடுத்துப்பார்ககாமல். ஓரமாய் அமர்ந்து தனது கழுத்தின் செயினில் இருந்த சிலுவையை உருட்டியபடி.
”இதவிட வெளிநாட்டுல உள்ள பொம்பளைங்க மாதிரி… ஒரே சேலையை துண்டு துண்டா வெட்டி அஞ்சு பத்துன்னு விதவிதமா உடுக்கிறாங்கள்ல. அது ஜாலியான லைப்பு. நிறைய வெரைட்டியும் கிடைக்கும். லைப்ல எஞ்சாய்மெண்ட்டும் இருக்கும்” என்றாள் பார்வதி.
”ஆமா. நீ சொல்றது சரிதான். நம்ம நாட்டுலதான் இந்த சேலையக் கட்டிக்கிட்டு அவஸ்தை. ஜாக்கெட்ட கொஞ்சம் ஸ்டைலா தச்சாலே. எவனுக்குப் புடிக்குமுன்னு இப்படி கட்டுறன்னு எவனுக்கு புடிக்கணுமோ அவனே கேக்குறான். என்ன பண்ணுறது?” என்று ஒரு சேலையை விரித்து தனது மார்மேல் போட்டுப் பார்த்தாள் கேத்தரின்.
”ஆத்தங்கரையோரம் அவுத்த சேலையத, ஆத்து நுரைத்தண்ணி அடிச்சுக்கிட்டு போயிட்டா, மாத்துத் துணியில்லாம மானங்கெட்டுப் போவாளாம் மங்கத்தா, இத்துப்போனாலும் எடுத்துப்போட மாட்டாளம், செத்தேபோனாலும் மறு- சேலை வாங்க மாட்டாளம் எங்காத்தா. அப்படி வாழ்ந்தோண்டி நாங்க. இப்ப பத்து கட்டுறாளுவளாம் படுகாலு தேவடியாளுக” என்று பாட்டி தாடையை இடித்துக் கொண்டாள்.
”ஏய் அந்தக் கிழவியத் துரத்துங்க. என்ன பேசிக்கிட்டிருக்க. நல்ல நாளும் அதுவுமா? சீ வெளியில போ” என்று விரட்டினாள் மேரியின் அம்மா.
”அது கிடக்கட்டுக்கா. கிழவி பாவம் கொஞ்சநாளாவே இப்படிப் பிணாத்துது. நீ அடுத்து அதுக்குத்தான் காரியம் பண்ணணும், சீக்கிரம் பம்பாய் போய் வா” என்றாள் பாத்திமா சித்தி.
”அம்மா எனக்கு சேலை?” என்று மேரி கேட்டாள்.
”உனக்குத்தான் நீ எடுத்துக்கிறேன்ன்னு சொன்னியே. நான் எடுத்துப் பிடிக்கலைன்னா. திங்குதிங்குன்னு ஆடுவ. நாளைக்குப் போய் எடுத்துக்க. பார்வதிக்கும் மார்க்கெட்டக் காட்டு” என்றாள் மேரியின் அம்மா.
மேரி துவக்கத்தில் இப்படிச் சொல்லியிருந்தாலும் தற்போது அம்மா எடுத்தால் நன்றாக எடுப்பாள் என்றே மனதுக்குப் பட்டது. என்ன செய்யலாம் என யோசித்தாள்.
”பார்வதி உனக்கு சேலை?” ரெஜினா.
”இருக்கு. கொண்டு வந்திருக்கேன்.” பார்வதி
”ஐய்யோ! அதெல்லாம் இருக்கட்டும். நாளைக்கு நீயும் மேரியும் போய் எடுத்திட்டு வாங்க. உங்களுக்குப் புடிச்சதை வாங்கிக்கங்க” என்றாள் ரெஜினா.
”பார்க்கலாம். எங்க வீட்டிலயும் சேலை கட்டுங்கிறாங்க. இங்கயும் சேலை கட்டுங்கிறாங்க. சேலை கட்டாம இருக்க முடியாதா? எத்தனை மார்டன் டிரெஸ் வருது அதெல்லாம் எவ்வளவு அழகாவும் சீப்பாவும் இருக்கு. கட்டிக்கணும் ஒத்து வந்தா பார்க்கணும். இல்லாட்டி தூக்கிஎறிஞ்சிட்டு அடுத்த டிரெஸ்க்கு போவணும். எனக்கென்னமோ நான் விருப்பப்பட்ட போது மட்டும் கட்டிக்குவேன். ஆனாலும் அதிகநேரம் கட்டிக்க மாட்டேன். அக்கா கல்யாணத்துக்கும் காலையில கட்டுவேன். அப்புறம் சேஞ்ஜ்” என்று பார்வதி சோம்பல் முறித்தாள்.
”அந்தக் காலத்திலயெல்லாம் கல்யாணச் சேலைக்கு அத்தனை மதிப்பு. ஆயுசு பூறாவும் வச்சிருப்பாங்க. இப்பவெல்லாம். கலர் பிடிக்கலைன்னா. தரம் பிடிக்கலைன்னா உடனே சேஞ்ஜ்… சேஞ்ஜ்.” என்றாள் எலிசாபெத் அண்ணி.
”அவங்கவங்களுக்கு எழுதின மாதிரிதான் சேலை கிடைக்கும்” என்றாள் மேரியின் அம்மா.
”என்ன அத்தை, சேலைகூடவா தலையெழுத்துப்படி கிடைக்கும். கடைக்குப் போனா ஆயிரம் கிடக்கு நமக்குப் புடிச்சத வாங்கிக்க வேண்டியதுதான். அங்கேயே உடுத்தும் பாத்துக்கலாம். புடிக்கலைன்னா அப்பவே மாத்திக்கலாம். இல்ல, கட்டி கொஞ்ச நாள்ல சாயம் போய்ட்டாலோ கெட்டுப் போய்ட்டாலோ கோர்ட்ல கேஸ் போடலாம் தெரியுமா?” என்றால் கேத்தரின் அண்ணி.
”அடி யார்டி சேலைக்கெல்லாம் கேஸ் போட்டுக்கிட்டு. கோர்ட்டுக்கு அலைஞ்சு அவமானப்படுறதை விட கிடைச்சவரைக்கும் லாபமுன்னு அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போக வேண்டியதுதான்” என்றாள் பாத்திமா சித்தி.
”இருட்டுக்கு பயந்த சின்னவ, அவன் சுருட்டு சூட்டுக்கு சொக்குவாளாம். முலை கசக்கி அவன் புள்ளைக்குப் பாலாக்குவா, முத கொடுத்த சேலைய உடம்புக்குத் தோலாக்குவா”. என்று பாட்டி பாடினாள். அவள் மேலும் பாடிக் கொண்டிருந்தாள். ஆனால் தெளிவாய் எதுவும் கேட்கவில்லை.
அவர்கள் யாருக்கும் சேலைகட்டிக் கொள்வதும் சேலைபற்றிப் பேசுவதும் கூட பிடிக்கவில்லை போலும். குளோரிக்கு இவர்களின் பேச்சும் செய்கையும் பிடிக்கவில்லை. பாட்டியின் பாடலும் பாட்டியின் உணர்வும் இவளுக்கு மயக்கத்தை தந்தது. பாட்டியின் எண்ணம் தான் சரி. சேலைகள் வேண்டும் பெண்களுக்கு. எத்தனை தரம் குறைந்ததாய் இருந்தாலும் சரி, சேலைகள் அவசியம்தான். மானம் காக்கிறது. பாதுகாப்பு அளிக்கிறது என்ற பைத்தியக்காரத் தனங்களுக்காக இல்லை. மகிழ்ச்சிக்காக. உடலில் அதை சுற்றிக்கொள்ளும் போது உண்டாகும் சுகத்துக்காக. அந்த சுகத்தை சேலைகளால் மட்டுமே கொடுக்கமுடியும் என்ற விதி இருப்பதால் வேறு எதுவும் செய்யமுடியாத சூழ்நிலைக்காக.
பிடிவாதத்தாலும் வரட்டு கௌரவத்தாலும் நாகரீகம் என்ற பெயரிலும் அதனை ஒதுக்கி வைப்பவர்கள் திருட்டுத் தனமாய் அவசர அவசரமாய்க் கட்டிக் கொண்டு அவிழ்த்துப் போடும் நிலை வரும். இப்படி பல யோசனைகள் குளோரியின் மூளைக்குள். வெளியில் நடந்த அரட்டைக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தது.
சேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சற்றுநேரம் அமைதியாக இருந்தனர். இந்த அமைதி எதற்காக என்று தெரியவிலை. ஆனால் அனைவரும் கடுமையாக சிந்தித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
திருமணம் ஆனவர்கள் தங்களுக்குக் கிடைத்த சேலைகளைப் பற்றியும் ஆகாதவர்கள் கிடைக்கப்போகும் சேலைகளைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
ரெஜினா எழுந்தாள். கேத்தரின் அவளின் கையைப்பிடித்து இருத்தியபடி ” எங்கடி போற?” என்றாள்.
”விடுக்கா. என்ன பண்ணுறது. உனக்கு புடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை கேட்க நாதியில்ல. நாளைக்கு பொம்மைக்கு சுத்திவிட்டாப்பல இருக்கும். இடுப்புல நிக்கலன்னாலும் இருக்கி கட்டி விட்டிருவீங்க. எடுப்பா இல்லன்னு யாரும் சொன்னாக்க. உனக்கு வாய்ச்சது அதுதான் சும்மா கிடடின்னு வாயை அடைச்சிடுவீங்க” என்று எழுந்தவள், கேத்தரின் அருகே மீண்டும் அமர்ந்து கொண்டாள்.
” அட என்னடி ஏடா கூடமா பேசிக்கிட்டு. கலகலன்னு வேலையைப் பாருங்கடி” என்று அனைவரையும் முடுக்கினாள் மேரியின் அம்மா.
பார்வதிக்கு குழப்பமாகவும் பயமாகவும் இருந்தது. இத்தனை சுதந்திரமாகப் பேசும் மேரியின் வீட்டார் மத்தியில் ரெஜினாவுக்கு சேலை பிடித்திருக்கிறதா என்ற அக்கறையில்லை. ஆனால் இவள் குடும்பத்தில் இவளால் வாய்திறக்கவே முடியாது. என்னாவாகும்? கற்பனை செய்யவே பயமாக இருந்தது. நல்ல சேலையாக அமையவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டாள்.
பாட்டி தனக்கு கிடைத்தது போல் உலகில் எவருக்குமே சேலை கிடைக்கவில்லை என்ற பெருமீதத்துடன் உட்கார்ந்திருந்தாள்.
அருமையான கதை! வாழ்த்துகள்!