சேதுவின் வரலாறு தொன்மையானது. ஆதிகவி என்று வர்ணிக்கப்படும் வால்மீகி முனிவர் சேதுவின் வரலாறை ராமாயணத்தில் முதல் முதலாகப் பதிவு செய்து விட்டார். இந்த வரலாறு திரிக்கப்பட்டதில்லை; மாற்றப்பட்டதில்லை. இது மாற்றப்பட முடியாத ஒன்று என்பதை தமிழில் ராமாயணம் பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பன் அறுதியிட்டு உறுதி கூறுகிறான்.
"வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்
தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்"
நான்கு பாதங்கள் கொண்ட செய்யுளில் வால்மீகியின் காவியத்தில் ஒரு பாதத்தைக் கூட மாற்ற முடியாது; இடைச் செருகல் செய்ய முடியாது என்பது மகாகவியின் வாக்கு.
இந்த அடிப்படையில் வால்மீகியின் காவியத்தை ஆராய்ந்து ராமாயணம் பற்றிக் கால விமர்சனம் செய்துள்ள ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதியுள்ள ஸ்ரீ வால்மீகி ஹ்ருதயம் என்ற நூலில் சேது பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்:
"பிறகு, ஸமுத்திரத்தை எப்படித் தரணம் செய்வதென்று ஆலோசிக்கையில், ஸமுத்திர ராஜனை உபாஸிப்பதே நல்லதென்று விபீஷணர் சொன்னார். உடனே ராமர் ஸமுத்திரக் கரையில் வலது கையில் சிரஸை வைத்துக் கொண்டு தர்பாஸனத்தில் மூன்று நாட்கள் சயனம் செய்து கொண்டு நியமத்துடன் இருந்தார். (வால்மீகி ராமாயணம் – யுத்தகாண்டம் -21 -9,10)
இவ்விதம் மூன்று இரவுகள் சென்றும் ஸமுத்திர ராஜன் அனுக்கிரஹம் செய்யாததனால் ராமர் கோபம் கொண்டு வில்லேந்தி ஸமுத்திரத்தில் பாணம் போட ஆரம்பித்தார். ஸமுத்திரம் கலங்கி அல்லோலகல்லோலப் பட்டது. உடனே ஸமுத்திர ராஜனே நேரில் வந்து, "ஜலஸ்வரூபனான என்னை விலகி நில் என்றால் எப்படி முடியும்? வேண்டுமானால் என்னைத் தாண்டிப் போவதற்கு வழி சொல்லுகிறேன்" என்று சொல்லி நளனைக் கொண்டு அணை கட்டும்படி சொன்னார். அப்படியே நளனும் ஏற்றுக் கொண்டு அப்பொழுதே அணை கட்ட ஆரம்பிக்கலாம் என்று சொன்னான்.
அன்றைக்கே ஆரம்பித்து மரங்களை வெட்டிப் போட்டு கற்களால் நிரப்பி முதல் நாள் 14 யோஜனை, 2வது நாள் 20, 3வது நாள் 21, 4வது நாள் 22, 5வது நாள் 23 ஆக 100 யோஜனை தூரமும் அணை கட்டி விட்டார்கள். (வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம் 22 – 68 -73)
அணை கட்டி முடிந்தவுடனேயே சுக்ரீவன் சொன்னதன் பேரில் ராமர் ஹனுமார் பேரிலும், லக்ஷ்மணன் அங்கதன் பேரிலும் ஏறிக் கொண்டு ஸைன்யத்துடன் அணை வழியாக ஸமுத்திரத்தைக் கடந்து தென்கரைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். சில நிமித்தங்களைக் கொண்டு அன்றைக்கே லங்கைக்கு சமீபம் போய் விட வேண்டுமென்று ராமர் ஆக்ஞை செய்தார். அப்படியே வேகமாகப் போய் சுவேலம் என்ற குன்றின் மேல் ஏறி அங்கிருந்து லங்கையைப் பார்த்தார்கள். அப்பொழுது சூரியன் அஸ்தமித்து விட்டார். அன்றிரவு பூர்ண சந்திரன் இருப்பது போல பிரகாசமாயிருந்தது." (ஸ்ரீ வால்மீகி ஹ்ருதயம் பக்கங்கள் 397,398)
மேலே வால்மீகி முனிவர் கூறியதுதான் சேதுவின் ஆதாரபூர்வமான வரலாறு.
திரிக்கப்படாதது; மாற்ற முடியாதது!
இதையொட்டி கம்பன் சேது கட்டியது பற்றி சேது பந்தனப் படலம் என்ற தனிப் படலத்தில் 72 பாடல்களில் விரிவாக விளக்குகிறான்.
சேதுவின் தோற்றம் பற்றிய கம்பனின் பாடல்கள் அற்புதமான பாடல்கள்:
"நாடுகின்றது என், வேறு ஒன்று? – நாயகன்
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான்,
‘ஓடும்’ என் முதுகிட்டு என, ஓங்கிய
சேடன் என்னப் பொலிந்தது, சேதுவே!
மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென் மகன்
பொய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது,
ஐயன் ஈட்டிய சேனை கண்டு, அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்
கான யாறு பரந்த கருங் கடல்
ஞான நாயகன் சேனை நடத்தலால்
ஏனை யாறு, இனி, யான் அலது ஆர்" என
வான யாறு, இம்பர் வந்தது மானுமால்,
கல் கிடந்து ஒளிர் காசு இனம் காத்தலால்,
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை,
எல் கடந்த இருளிடை, இந்திர
வில் கிடந்தது என்ன விளங்குமால்.
சேதுவின் தோற்றம் சேடன் போலப் பொலிந்தது; வான ஆறு இங்கு வந்து அமைந்தது போலச் சேது இருந்தது; இந்திர வில் போல – இருளை நீக்கிய ஒளி போல – சேது ஒளிர்ந்தது என்று கம்பன் இப்படி சேதுவைப் புகழ்ந்து வர்ணிக்கிறான்.
அது மட்டுமின்றி, தன்னை ஆதரித்த வள்ளல் சடையனுக்கு நன்றி தெரிவிக்க கம்பன் தேர்ந்தெடுத்த இடங்களுள் ஒன்று சேது பந்தனப் படலம்.
பெரிய குரங்கு மலையை அப்படியே தூக்கி எறிய அதை நளன் சடக்கெனப் பிடித்துத் தாங்கினான் – எப்படித் தாங்கினான்? தஞ்சம் என்று வந்தோரை சடையன் தாங்குவது போலத் தாங்கினான்!
"மஞ்சினில் திகழ் தரும் மலையை, மாக்குரங்கு
எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே, நளன்
விஞ்சையில் தாங்கினன் – சடையன் வெண்ணெயில்
‘தஞ்சம்!’ என்றோர்களைத் தாங்கும் தன்மை போல்"
கம்பன் எவ்வளவு முக்கியத்துவத்தைத் சேது பந்தனத்திற்குத் தந்துள்ளான் என்பதை அவனது நன்றிப் பாட்டு ஒன்றே விளக்குகிறது.
வால்மீகியின் அடிப்படையில் துளஸிதாஸரும், வேறு பல புராணங்களும் சேது கட்டப்பட்டதை இன்னும் விரிவாக விளக்குகின்றன.
(நன்றி : ஆதிப்பிரான்)
எனவேதான் சேதுவை மேடுறித்தி வீதி சமைப்போம் என்று பாரதி பாடினான் போலும், நல்ல கட்டுரை எடுத்தாளப்பட்டுள்ளது.- அரிமா இளங்கண்ணன்