சில ஆண்டுகளுக்கு முன் இந்தியில் வெளிவந்த ‘டெல்லி பெல்லி’ படத்தின் தமிழ் வடிவமாக ஆட்டம் போடவிருக்கிறது ‘சேட்டை’. இந்தியில் ஒரு பாடல் கூடக் கிடையாது. ஆனால், கண்ணன் இயக்கத்தில் தமன் இசை அமைத்துள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ளன ஐந்து பாடல்களும் ஒரு தீம் டிராக்கும். இவை எப்படி இருக்கின்றன என இப்பொழுது பார்க்கலாம்!
அகலாதே அகலாதே
மேற்கத்திய இசையின் பாதிப்பில் ஒரு தமி்ழ் டூயட். விஜய் பிரகாஷ், மேகா பாடியிருக்கிறார்கள். விஜய் பிரகாஷின் குரலில் வழக்கமான ஈர்ப்பு சற்றே குறைவாகத் தெரிகிறது. ஒருவேளை, வித்தியாசத்துக்காக அப்படிப் பாடியிருக்கிறாரோ என்னவோ! ஆனால், இது பாடலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளனுக்கும், விமானப் பணிப்பெண்ணுக்கும் இடையேயான காதல்தான் பாடுபொருள்.
"அதிரடிப் பூவே நீ வரும் வரை
வாழ்வினில் ருசிகரம் ஏதும் இல்லை.
தத்தளிக்கிறேன் தீ தெளிக்கிறாய்
நீ இங்கே தருவது பெரும் தொல்லை!" – கார்க்கியின் வரிகள்.
எதத்தான் கண்டுட்ட நீ புதுசா?
கானா பாலா எழுதி, வழக்கம்போல் அவரே பாடியும் இருக்கிறார். காதலியைத் தூற்ற தமனின் இசையில் ஒரு ஹைடெக் கானா. முன்னாள் காதலியை யாரும் இதற்கு மேல் டேமேஜ் செய்ய முடியாது. வரிகளைக் கேட்டால் நீங்களும் இதைத்தான் சொல்வீர்கள்.
"நீ பாத்துட்ட துட்டத்தான், வரமாட்ட கிட்டத்தான்
நீதான்டி ஒஸ்தி பொண்ணா? அட நான்தானே டஸ்டு பின்னா?"
அர்ஜுனா அர்ஜுனா!
சுசித்ராவின் குரல் பாடலை ரசித்துக் கேட்க வைக்கிறது. தொடக்கத்திலும் இடையிலும் வரும் செனாயின் இசை மேலும் ஈர்ப்பு. பாதிப் பாடலுக்குப் பிறகுதான் கார்த்திக்கின் குரல் வருகிறது. அவர் பாடியிருக்கும் விதம் பாடலுக்குப் பலம். இயைபுடன் கூடிய வார்த்தைகள் பாடலை அலங்கரிக்கின்றன.
"தூரத்துச் சூரியன் நான் பனியென உருகுகிறேன்!
மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்!"
லைலா லைலா
ஆண்ட்ரியாவின் குரலில் ஒரு ஐட்டம் பாடல். பாடல் நெடுகிலும் துள்ளல் இசைதான். இசைக்கு ஈடுகொடுத்து, வார்த்தைகளைச் சிதைக்காமல் உச்ச ஸ்ருதியில் நன்றாகப் பாடியிருக்கிறார். லைலாவின் சுய வர்ணனைதான் பாடல். யார் அந்த லைலா என்பது படம் பார்த்தால் தெரியும் என்று நினைக்கிறேன்.
போயும் போயும்
கிதாரின் மெல்லிய தொடுதலுடன் பாடல் ஆரம்பிக்கும்பொழுதே மயக்கும் மெல்லிசை என்பது புரிகிறது. நாயகி காதலில் விழுந்த கதை சொல்லும் பாடல். ஹரிசரண், சின்மயி பாடியிருக்கிறார்கள். மதன் கார்க்கியின் எழுத்துக்களால் பாடல் உயிர்ப்புடன் ஒலிக்கிறது. மீணடும் மீண்டும் கேட்கவும் வைக்கிறது.
"காதலில் மீமிகை யாவுமே மூலிகை!
ஏங்கிடும் காரிகை நானே
நாழிகை யாவிலும் புன்னகை சேர்க்கவா?
என் காயம் எல்லாம் ஆறச் செய்தாய் உன்னாலே வேறொரு
பெண்ணாய் மாறினேன்".
மற்றொன்று தீம் இசை. சற்றே பழக்கப்பட்ட இசைதான். இருந்தாலும் சிறிது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
சேட்டை – காதல் சீண்டல்.