"என் மனைவி நான் என்ன சொன்னாலும் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டேங்கறா" என்று சலித்துக்கொண்டார் அவர் தன் நண்பரிடம். "வைரத் தோடு வாங்கித் தர்றேன் என்று சொல்லிப் பாருங்களேன்" என்றார் நண்பர்!
உடலில் எவ்வளவோ அவயவங்கள் இருந்தாலும் காதுக்கென்று ஒரு தனி முக்கியத்துவம் இருக்கிறது. செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயிற்றுக்கே ஈயப்படும் என்கிறார்கள்.
நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று சொல்கிறாயே என்பதற்கு,"காது காது என்றால் லேது லேது என்கிறாயே" என முணுமுணுப்பவர்கள் உண்டு. காது என்றால் தெலுங்கில் ‘வேண்டாம்’ என்று பொருளாம்.
நாம் ரொம்ப மெதுவாகப் பேசுகிறோம் என்று நினைப்போம். ஆனால் சிலருக்குப் பாம்புச் செவி; (பாம்பிற்குக் காது உண்டா?!) காத தூரத்திலிருந்து பேசினாலும் கேட்கும். "உனக்கு செய்தி தெரியுமா? நம்ம ஆபீஸ் பங்கஜத்திற்கும் ராமசாமிக்கும் ஒரு இதுவாம்" என்று கிசுகிசுத்துக் காதைக் கடிப்பவர்கள் உண்டு!
காதில் செல்போனை ஒட்ட வைத்துக் கொண்டு மணிக்கணக்கில் பேசும் காதலர்கள் உண்டு. அவர்களைக் ‘காதிலர்கள்’ என்றுகூட அழைக்கலாம்! நம்மில் பலர் தான் கேட்டதையோ பார்த்ததையோ தனது கற்பனையுடன் கண், காது, மூக்கு வைத்து விவரிப்பார்கள். அதனால்தான் கண்ணால் பார்ப்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய் என்று சொல்கிறார்களோ!
நான் இருபாலார் பள்ளியில் படித்த காலத்தில் என் தந்தை பள்ளியில் மாணவிகளுடன் பேசக்கூடாது; பேசினால் காது அறுந்துவிடும் என்று பயமுறுத்தி அனுப்பி வைப்பார்.
என்ன சொன்னாலும் நம்பிவிடுவோம் என்று எண்ணி நம்மிடம் ரீல் விடுபவர்களிடம் "எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு; என் காதுல பூ சுத்தாதே" எனக் கூறுகிறோம். ஒரு காரியத்தைச் சொன்னால் அதை ஊருக்கே விளம்பரப்படுத்தி செய்பவர்கள் உண்டு. கன கச்சிதமாகக் காதும் காதும் வைத்ததுபோல் செய்து முடிப்பவர்களும் உண்டு!
பெண்கள் காதில் முன்பெல்லாம் தோடு அல்லது ஜிமிக்கி அழகாகத் தொங்கும். ஆனால் இப்போதெல்லாம் காதில் கவச குண்டலங்களை மாட்டிக் கொண்டு ஒரு தூளியையே தொங்கவிட்டுக் கொள்வதுதான் நாகரிகமாகிவிட்டது. அந்தக் காலத்தில் கிராமத்திலுள்ள பெண்கள் காதைவிடப் பெரிதாக பெரிய ஓட்டைகளுடன் பாம்படங்களை மாட்டிக் கொள்வதை நம்மில் சிலர் பார்த்திருப்போம்.
நாம் பேசுவதைக் கேட்பதாக பாவனை செய்து கவனத்தை எங்கேயோ வைத்திருப்பவர்கள் பலர். இவர்களிடம் சொல்வதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்! ஏதோ ‘இவன் சொல்வதைச் சொல்லிவிட்டுப் போகட்டுமே’ என்று நாம் சொல்வதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடுபவர்களும் உண்டு. வாய்க்கு வந்தபடி அகராதியில் இல்லாத வார்த்தைகளை குழாய்ச் சண்டையில் பேசுவதைக் கேட்கும்போது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதைப்போல் இருக்கும். அறிஞர்கள் பேசும்போது கேட்பவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக "உங்கள் காதுகளைக் கடன் கொடுங்கள்" என்பார்கள். அதனால்தான் வள்ளுவர் ‘செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்’ என்று சொல்கிறார்.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே செந்தேன் வந்து பாயுது காதினிலே’ என்றான் பாரதி. ஆனால் செந்தமிழை செந்தமிளாக்கும் உச்சரிப்பைக் கேட்கும் போதும், தமிழ்ப் பாடல்களைப் பாடகர்கள் கடித்துத் துப்பும்போதும், ‘செந்தேள் வந்து பாயுது காதினிலே’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
விஞ்ஞானபூர்வமாகக் கூட காதின் உள்பக்கத்தில் உள்ள திரவம் மூளையின் நரம்புகளோடு இணைந்து நம்முடைய பல செயல்களைக் கட்டுப்படுத்துகிறது எனச் சொல்கிறார்கள்.
காது கேட்காமலிருப்பதை நகைச்சுவை என்ற பெயரில் கேலி செய்யும் அநாகரிகத்தைப் பல திரைப்படங்களில் பார்த்து மனம் வருந்தியிருக்கிறோம். பழைய ஜோக்தான் என்றாலும் காது சம்பந்தப் பட்டதால் உங்கள் காதுகளில் போடலாம் என்று நினைக்கிறேன்!
ஒரு கணவன் டாக்டரிடம் தன் மனைவிக்கு சரியாகக் காது கேட்பதில்லை என்று சொல்கிறான். அதற்கு டாக்டர், "உங்கள் மனைவியிடம் முதலில் தூரத்திலிருந்து – பிறகு சிறிது சிறிதாக அருகாமையில் சென்று பேசிப் பாருங்கள்" என்கிறார். கணவனும் வீட்டிற்குப்போய் சற்று தூரத்திலிருந்து "இன்று டிபன் என்ன?" என்று கேட்க, பதிலில்லை. சற்று அருகாமையில் சென்று மறுபடியும் கேட்டான். அதற்கும் பதிலில்லை. இன்னும் அருகாமையில் மீண்டும் சென்று கேட்டான். அவள், "உங்களுக்கென்ன, காது செவிடா? நானும் இதுவரை மூன்று தரம் ‘பொங்கல் பொங்கல்’ என்று சொல்லிவிட்டேன்" என்றாள் கோபமாக.
"இந்தப் பழைய ஜோக்கையே எத்தனை முறை சொல்வாய்?" என்று கேட்பது என் காதில் விழவில்லையே – நான்தான் காதில் பஞ்சை வைத்துக் கொண்டு விட்டேனே!!!
என்னடி உன் புருசன் காதில இவ்வளவு பெரிய கட்டு?
அது வேறன்னுமில்ல, புதுசா தோசக்கல்லு வாங்கினத காதில போட்டுவச்சேன்!
உன் மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? என்னும் திருப்பாவை வரியை இலக்கிய நயத்துக்காகச் சேர்க்கலாம்.
Even an ENTdoctor cannot give so much information about our ears – in all angles. I am sure the authore has not left out any proverb about ears – all sayings on ears / hearing are well used.
என்ன கொடும சார்
காதோடு காதாய் சொல்ல வேண்டிய சமாசாரத்தை இப்படி பப்ளிக்கா போட்டு உடைச்சிட்டிங்களே. காது தோடு தொலைந்து போனது என்று காது கேளாதவனிடம் காதோடு சொன்னான் என்ற ஒரு வழக்கமுண்டு.
மிகவும் அருமை. மன்னை பாசந்தி.