கிராமங்களுக்குள் பல தெய்வங்களின் கோயில்களை நாம் பார்க்கிறோம். முக்கியமாக பிள்ளையார், சிவன், சுப்பிரமண்யம், அம்பாள் என்றிருந்தாலும் கிராமத்தின் எல்லையில் காக்கும் தெய்வமாக இருக்கிறாள் ஒரு அம்மன். அவளை எல்லையம்மன் என அழைக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள்.
அந்த எல்லை அம்மன் பல பெயரில் அந்தந்த கிராம மக்களுக்கேற்றவாறு அமர்ந்து அருள் புரிகிறாள். செல்லியம்மன், மாரியம்மன், பிடாரியம்மன், பேச்சியம்மன், திரௌபதியம்மன் என்று பல வித அம்மன்களை ஊர்க்கோடியில் பார்க்க முடிகிறது.
இந்த எல்லா அம்மன்களுக்கும் வருடா வருடம் மூன்று தடவைகளாவது விழா நடக்கும். ஆனால் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே விழா நடக்கும் ஒரு அம்மன் கோயில் கூவனூர் கிராமத்தில் உள்ளது.
இந்த அம்மனின் பெயர் செல்லியம்மன். இந்த செல்லியம்மனின் விழா எப்போதுமே ஆடி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் செவ்வாயன்று நடக்கும். பழைய காலங்களில் எதையும் தண்டோரா போட்டபடி அறிவிப்பது வழக்கம். அதே போல் இந்த விழா ஆரம்பிக்கும் முன் ஒருவன் அந்தக் கிராமம் முழுவதும் இதை அறிவிக்கிறான். பலர் வெளி கிராங்களிலிருந்தும் வந்து கூடுகிறார்கள். அவர்களுக்குச் செல்லியம்மன் குலதெய்வமாக இருக்கலாம்.
இந்த அறிவிப்பு ஆன பின் ஒருவரும் அந்தக் கிராமத்தை விட்டு ஏழு நாட்கள் வெளியே போகக் கூடாது. வெளியிலிருப்பவர்களும் உள்ளே வர அனுமதியில்லை. இந்த விழாவை நடத்தும் ஏழு பேர்கள் விழாவின் ஆரம்பத்தில் குதிரையில் வந்து இறங்கி பிறகு காப்பு கட்டிக் கொள்வார்களாம். அவர்கள் தங்க தனிக் குடிசைகள் போடப்படும். அவர்கள் வந்தவுடன் கிராம மக்கள் தக்க மரியாதையுடன் அவர்களை உபசரித்து குடிசையில் தங்க வைப்பார்கள். ஐயப்பன் விரதம் போல் அவர்களுக்கு ஒருவேளை மட்டும் பலகாரம் போன்ற உணவு அளிக்கப்படும்.
எங்கும் இருட்டுதான். தெருவில் மின்சார விளக்கும் எரிய விடமாட்டார்கள். அம்மனும் இருட்டில்தான் அமர்ந்திருப்பாள். அம்மனுக்கு மின்சார விளக்கு ஆகாதாம். கிராம மக்களும் மிகவும் கவனமாக இதைக் கடைபிடிக்கிறார்கள். தீப்பந்தம் மட்டும் கொளுத்துவார்கள்.
விழா இரவன்று நடக்கும் அம்மனின் ஊர்வலம் வர ஆரம்பிக்கும்போது மட்டும் பெண்கள் வீட்டினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டுவிடுகிறார்கள். சன்னல் கூட திறப்பதில்லை. குழந்தைகளும் உள்ளேயே இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அம்மன் ஊர்வலம் ஆரம்பிக்கும் முன் தம்பட்டத்தின் சத்தம் கிளம்பும். அந்த நேரத்தில் வாசலிலோ தெருவிலோ எந்தப்பெண்மணி இருந்தாலும் ஓட்டமும் நடையுமாக தன் வீட்டிற்குப்போய் கதவை அடைத்துக்கொள்வார்கள். முக்கால்வாசிப் பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பார்கள்.
இதற்கான காரணம் தெரியவில்லை. கோயில் விழாவின்போது ஒருவரும் கருப்பு நிற உடை அணியக் கூடாதாம்.
முதல் ஐந்து நாட்கள் இதுபோல் இரவில் ஊர்வலம் நடக்கும். ஆறாம் நாளும், ஏழாம் நாளும் கொஞ்சம் வித்தியாசமாக விழா முடியும். அந்தப் பகுதி நிலங்களுக்கு வரி வசூல் செய்தும், மக்கள் நன்கொடையாக அளிக்கும் பணத்தையும் சேர்த்தும் விழாவை நடத்துகிறார்கள்.
ஆறாம் நாள் ஆரம்பம். நடு நிசி. ஒரு ஆடு அழகாக நிற்க அதற்கு நெற்றியில் குங்குமம் இடப்படும். பின் மாலைகளும் அணிவிக்கப்படும். பின் கோயில் சாற்றுக்காரர்களில் ஒருவர் அதைக் கோடரியால் வெட்டி பலி கொடுக்கிறார்.
ஆடு பலிகொடுத்த பின்னர் ஒருவர் அதன் மாமிசத்தை எடுத்துக்கொண்டு சமையல் செய்ய அமைத்திருக்கும் ஒரு தற்காலிகமான இடத்தை நோக்கிச் செல்வார். பின் மாமிசப் பிரசாதம் ரெடியாகும்!
மூன்றடுக்கு டிபன் பாக்ஸில் வைப்பார். முன்பெல்லாம் மூன்றடுக்கு மண்பாண்ட உறியில் தூக்கிக் கொள்வார்களாம். கோயிலைச் சேர்ந்த ஏழு முக்கிய சாற்றுக்காரர்கள் கையில் நீளமான கத்தியைப் பிடித்துக் கொள்வார்கள். ஒரு கையில் கத்தி, மறு கையில் பெரிய தீப்பந்தம். இப்போது அவர்கள் நடுநிசி ஊர்வலத்திற்குக் கிளம்பி விட்டார்கள்.
(இதன் தொடர்ச்சி அடுத்த இதழில்)