தன் மானேஜர் பிரசாத் அப்படிச் சொன்னதும் பிரபல நடிகை சுவஸ்திகா வியப்பானாள். "என்ன!… எனக்கு மேக்கப் போடணும்னு சொல்லியும் கூட அந்த பியூட்டி பார்லர் லேடி வர மறுத்துட்டாளா? ஆச்சரியமாயிருக்கே!"
"யெஸ் மேடம்! அவங்க இன்னிக்கு வேற ஒரு கல்யாணத்துல, கல்யாணப் பொண்ணு மேக்கப்புக்கு ஏற்கனவே கமிட் பண்ணிட்டாங்களாம். அதனால அதை விட்டுட்டு இங்க வர மாட்டாங்களாம்!"
"ஸ்டுப்பிட்! சுத்த விவரம் புரியாத பொண்ணாயிருக்காளே! பிரபல நடிகை சுவஸ்திகாவுக்கு மேக்கப் போட்டு… அதையே விளம்பரம் பண்ணி அவளோட பியூட்டி பார்லரை டெவலப் பண்ணிக்கலாம்… ஒருவேளை அவளுடைய மேக்கப் திறமை ரொம்ப நல்லா இருந்தா நானே அவளை என்னோட அடுத்த படங்களுக்கு ரெகமண்ட் பண்ணாலும் பண்ணுவேன்… அப்புறம் சினி ஃபீல்டுலே பெரிய மேக்கப் உமன் ஆயிடலாம்… லைஃப் ஸ்டைலே மாறிப் போகும்! இது ஏன் அந்தப் பெண்ணோட புத்திக்கு எட்டல?"
"தெரியல மேடம்! நான் தெளிவாவே சொன்னேன், இந்த மாதிரி… பிரபல நடிகை சுவஸ்திகாவுக்கு மேக்கப் போடற மேக்கப் உமன் சென்னைல இருந்து வந்திருந்தாங்க… ஆனா இங்க அவுட்டோர் ஷூட்டிங் வந்த இடத்துல அவங்களுக்கு திடீர்ன்னு வைரஸ் ஃபீவர் அட்டாக் ஆயிடுச்சு… அவங்க திரும்ப சென்னைக்கே போயிட்டாங்க… அதான் உங்களை கூப்பிடறோம்னு!"
"ப்ச்! சென்னைல, எனக்கு மேக்கப் போடறதுக்காகச் சான்ஸ் கேட்டு என் வீட்டு வாசல்ல வந்து பியூட்டீஸியன் கோர்ஸ் படிச்ச பல பேர் தவம் கிடக்கறாங்க… இங்க இந்த லேடி என்னடான்னா…" சலித்துக் கொண்டாள் நடிகை சுவஸ்திகா.
அப்போது அறைக்குள் வந்த டைரக்டர் பரமேஷ், "என்ன மேடம், மேக்கப் உமன் கிடைச்சாங்களா இல்லை சென்னைல இருந்தே வரவைக்கலாமா?"
"ம்…ம்… ஒரு மணி நேரம் டைம் குடுங்க சார்! நானே டிரை பண்ணிப் பார்க்கறேன்."
"ஓ.கே மேடம்! எதுவானாலும் கொஞ்சம் சீக்கிரமே சொல்லிடுங்க! ஹீரோவோட கால்ஷீட் நாளையோட முடியுது. அவர் நாளைக்கு மறுநாள் ஃபாரீன் கிளம்பறாராம்!" சொல்லிவிட்டு டைரக்டர் பரமேஷ் நகர,
"மேனேஜர்! நான் பர்ஸனலா மீட் பண்ணனும்னு சொல்லி அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வாங்க!"
அவசரமாகப் புறப்பட்டுச் சென்ற மேனேஜர் பிரசாத், அடுத்த அரை மணி நேரத்தில் அந்த பியூட்டி பார்லர் பெண்ணோடு வந்து நின்றான்.
மேலிருந்து கீழ் வரை அந்தப் பெண்ணை நுட்பமாய் நோட்டமிட்ட நடிகை சுவஸ்திகா, இதழோரம் இளக்காரப் புன்னகை ஒன்றைத் தவழ விட்டவாறே, "எனக்கு மேக்கப் போடக் கூப்பிட்டதுக்கு வர முடியாதுன்னுட்டியாமே!"
"ஆமாங்க மேடம்! இன்னிக்கு மத்தியானத்துக்கு மேல எங்க ஊர் தர்மகர்த்தாவோட பொண்ணுக்குக் கல்யாண அலங்காரம் பண்ண நான் போகணும்!…" அப்பெண்ணின் பேச்சில் ஒரு பணிவு இருந்தது.
"எவ்வளவு கெடைக்கும் அந்த மேக்கப்புக்கு?"
"அறுநூறு ரூபாய்"
"ஹா… ஹா… ஹா!…" என்று வாய் விட்டுச் சிரித்தவள் தன் மேனேஜர் பிரசாத் பக்கம் திரும்பி, "மேனேஜர்! நீங்க இவங்ககிட்ட நாம குடுக்கப் போற தொகையை சொல்லவே இல்லையா?"
"சொன்னேன் மேடம்!"
"எவ்வளவு சொன்னீங்க?"
"இருபத்தஞ்சாயிரம் மேடம்!"
"இஸிட்! ஓ.கே. இப்ப நான் சொல்றேன்… ஃபிஃப்டி தௌஸண்ட்… அம்பதாயிரம் தர்றேன்! போம்மா! போய் உன்னோட மேக்கப் கிட்டை எடுத்துக்கிட்டு உடனே வா! ம் பிரசாத்! இவங்களைக் கார்லியே கூட்டிட்டு போயி திரும்பக் கூட்டிட்டு வாங்க!"
"மேடம்! நான் வர்றேன்னு சொல்லவேயில்லையே!"
"வாட்! அம்பதாயிரம்ன்னு சொல்லியும் வர மறுக்கறே! இன்னும் அதிகம் வேணுமா?"
"மேடம்! நீங்க ஒரு கோடி ரூபாய் குடுத்தாலும் நான் வர மாட்டேன். ஏன்னா, ஒரு தடவை புக் பண்ணி வாக்குக் குடுத்திட்டேன்னா எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த வாக்கு தவற மாட்டேன்! அதுவும் கல்யாணப் பொண்ணு அலங்காரத்துக்கு ஒத்துக்கிட்டேன்னா உயிரே போனாலும் அதைப் பண்ணி முடிச்சிட்டுத்தான் சாவேன்!"
நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவளை சுவஸ்திகா ஊடுருவிப் பார்க்க,
"மேடம்! வாக்குத் தவர்றது மனுஷனுக்கு அழகில்ல. அது கிட்டத்தட்ட துரோகம் இழைக்கற மாதிரி. அதனால என்னைய மன்னிச்சுக்கங்க!" சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்த சுவஸ்திகாவின் மனதில் நேற்றைய நிகழ்வுகள் படமாய் ஓடின.
"த பாருங்க மேடம்! டைரக்டர் ராம்தேவ் உங்களை ஃபீல்டுக்கு அறிமுகப்படுத்தினவரா இருக்கலாம். தொடர்ந்து அஞ்சாறு படம் தோத்துப் போனதால இன்னிக்கு நொடிஞ்சு போய்க் கெடக்கற அவருக்கு எதோ பாவம்னு கை குடுக்கறதுக்காக நீங்களும் அவருக்குக் கால்ஷீட் குடுத்திருக்கீங்க, சரி… ஆனா பெரிய பேனர் ஒண்ணு உங்களைத் தேடி வந்து அதே தேதிங்களைக் கேட்கும்போது நீங்க யோசிக்காம அந்தத் தேதிங்களை இவங்களுக்கு மாத்தித் தரலாம்… தப்பில்ல. டைரக்டர் ராம்தேவ்கிட்டே ஸாரின்னு ஒரே வார்த்தை சொல்லிட்டுப் போயிட்டேயிருக்கலாம்."
மேனேஜர் பிரசாத் தொடர்ந்து செய்த மூளைச் சலவையால் நிறம் மாறிப் போன சுவஸ்திகா தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநருக்குத் துரோகம் செய்யச் சம்மதிக்கலானாள்.
"ச்சே! கிராமத்துல பியூட்டி பார்லர் நடத்தற ஒரு சாதாரணப் பொண்ணுக்கு இருக்கற நாணயமும் நன்றியுணர்ச்சியும் கூடப் புகழ்பெற்ற நடிகையான எனக்கு இல்லையே! வாழ்க்கையையே மாத்தற சான்ஸ் வந்தும் வாக்கு மாறாத அவ எங்கே… வாழ்க்கை குடுத்த டைரக்டருக்கே துரோகம் நெனைச்ச நான் எங்கே?"
"மேனேஜர்!… மேனேஜர்!"
ஓடி வந்த பிரசாத், "சொல்லுங்க மேடம்!"
"என்னோட கால்ஷீட் டைரக்டர் ராம்தேவுக்கே இருக்கட்டும். மாத்த வேணாம்! அந்தப் பெரிய பேனர்க்கு இப்போதைக்கு நோன்னு சொல்லிடுங்க!"
"மேடம்! நீங்க…"
"பிளீஸ் டூ வாட் ஐ ஸே!"
அவள் அதட்டலில் அரண்டு போனவன், அமைதியாய் நகர்ந்தான்.
வெரி நைஸ் ஸ்தொரி