ரத்தத்தின் ரத்தமே!
ரத்தம் என்பது இயற்கை உருவாக்கிய ஒரு பேராச்சரியம்! உயிரிருக்கும் வரை உடலுக்குள்ளே ஓடும் ஜீவநதி அது. கடைசி மூச்சும், இதயத்துடிப்பும் நிற்கும் வரை உள்ளே இந்த நதி சளைக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
உடலுக்குள்ளே கிளைகள் விட்டுப் படர்ந்திருக்கும் ரத்தக்குழாய்களின் மொத்த நீளம் ஒரு லட்சம் மைல்கள். இது பூமியின் நான்கு மடங்கு சுற்றளவு. மனித உடலிலுள்ள ரத்தம் பற்றிய ஆராய்ச்சிக்கு ‘ஸராலஜி’ என்று பெயர். ‘ஸர’ என்கிற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது இது. ‘ஸர’ என்றால் ஓடுவது, – to flow என்று அர்த்தம்.
ரத்தத்துக்கு இரு ‘முகங்கள்’ உண்டு! ஒன்று – அது மருத்துவர்களுக்குக் காட்டும் (நமக்கு ஓரளவுக்குத் தெரிந்த) முகம். மற்றது – போலீஸுக்குக் காட்டும் முகம்!
–மதன். (‘மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்’ நூலில்).
சி.வி. இராமன் சென்னை மாநிலக் கல்லூரியில் 1905ஆம் ஆண்டு தங்கப் பதக்கத்துடன் கூடிய இயற்பியல் பட்டம் பெற்றார். 1907இல் சிறப்புத் தேர்ச்சியுடன் கூடிய முதுநிலைப் பட்டம் வென்றார். சிறிது காலம் அரசுத்துறை நிதிக் கணக்காயராக இருந்து விட்டு, 1917இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார்.
கற்பித்தல் பணியோடு ஆய்வுப் பணியையும் மேற்கொண்ட சி.வி. இராமன், 1928இல் ஒளி விலகலை ஆராய்ந்து ‘இராமன் விளைவு’ என்னும் புதிய கோட்பாட்டைக் கண்டுபிடித்தார். தொடர்ந்து ஆய்வு செய்து 1930இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். வெள்ளையரல்லாத ஒருவர் அறிவியல் நோபல் பரிசு பெற்றார் என்னும் பெருமை முதன் முதலில் அவருக்கே உரித்தாயிற்று. பின்னர் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் ஆனார். இவருடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு கூர்கிறார்.
"26.01.1954 அன்று உங்களுக்கு இந்திய அரசு மிக உயரிய பாரத ரத்னா விருதை வழங்க உள்ளது. முன்னதாகவே வந்து என் விருந்தினராகத் தங்க வேண்டும்!" – இப்படி ஒரு மடல் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராஜேந்திரப் பிரசாத் அவர்களிடமிருந்து வந்தபோது, இராமன் அவர்கள் பணிவோடு மறுமொழி விடுத்தார்.
"மன்னிக்க வேண்டும்! என்னுடைய மாணவர் ஒருவர் பி.எச்.டி ஆய்வேட்டை என் வழிகாட்டலில் முடிக்கும் தறுவாயில் உள்ளார். உடனிருந்து அவருக்கு உதவ வேண்டிய நிலையில் உள்ளேன். எனவே உங்கள் விருந்தோம்பலை ஏற்க முடியாத நிலை" என்று.
விருது வழங்கும் விழா அன்றுதான் டெல்லி சென்றார். விருது பெற்ற கையோடு பெங்களூருக்கு விரைந்தார். குறிப்பிட்ட நாளில் தன் மாணவர் பி.எச்.டி ஆய்வேட்டைச் சமர்ப்பிக்க உதவினார்.
விழா, விருந்து முதலியவற்றை விடக் கடமைதான் முக்கியம் என்று கருதினார். இந்த உணர்வுமிக்க ஆசிரியப்படை உருவானால் ஆயிரமாயிரம் அறிவியல் மேதைகளை, கண்டுபிடிப்பாளர்களை இன்றும் நம் நாட்டில் உருவாக்க முடியும்.
இந்தக் கடமை உணர்வு யாருக்கு வரும்? தமக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள எதிரிகளை வென்றவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும்.
–முனைவர்.சி.சைலேந்திரபாபு., ஐ.பி.எஸ் அவர்களின் "Boys and Girls Be Ambitious" ஆங்கில நூலிலிருந்து தமிழாக்கம், முனைவர்.இனியன்.
“