‘செய்தின்னா என்னப்பா?’ ஜானு கேட்டாள். இன்று சனி இரவு.
ஞாயிறு காலை என்பது ஒவ்வொருவருக்கு ஒரு விதம். தினசரி 40 கிலோமீட்டர் பயணித்துத் திரும்புகிற என் மாதிரி நடுத்தர வர்க்க மனிதனுக்கு வரப்பிரசாதம். காலையில் நிதானமாய் எழுந்திருக்கலாம். தினசரியை முழுமையாய்ப் படிக்கலாம். காப்பியை ருசித்துக் குடிக்கலாம். முடிந்தால் இன்னொரு தரம் தூங்கி எழுந்திருக்கலாம். அவசர கதியில் சாப்பிட வேண்டாம். சாம்பார் சாதத்திற்கு முன் பொடி சாதம், தொக்கு சாதம், கீரை சாதம் என்று வெயிட் ஏற்றலாம்! வெள்ளிக்கிழமை மாலை முதலே அதற்கான கற்பனைகளில் ஈடுபடலாம்.
சனி இரவு என்பது குடும்ப நேரம்! வாசலில் கட்டில் போட்டு அமர்வோம். அந்த வாரம் நடந்ததை அலசுவோம். சரண்யா செய்த குழப்படிகளைக் கிண்டல் செய்வோம். அதுவும் ஜானு பார்க்கத்தான் பொடிசு. பேச்சில் எம்டன். நைசாய் எங்களையே கலாய்க்கும். மறுநாள் ஞாயிறுக்கான மதிய சாப்பாடு நிர்ணயம் செய்யப்படும். தெரியாததைக் கேட்டுக் கொள்ளவும் இந்த அரட்டை நேரம் உபயோகமாகும்.
நேற்று கூட அப்படித்தான் ஜானு கேட்டாள். ‘கடவுள்னா என்னப்பா?’
"கட உள். அதாவது உள்ளே கடந்து போனால் கிட்டும் ஆனந்தம்." இப்படிச் சொன்னால் ஜானு நைசாய் கேலி செய்யும்.
"உனக்கு எதையாச்சும் பார்த்தா.. அல்லது உனக்கு புதுசா ஏதாச்சும் கிடைச்சா.. உனக்குள்ளே ஒரு ஹேப்பி வருதே.. அது எப்பவும் உன் மனசுல இருந்தா அதான் கடவுள்."
"அப்ப நீங்க ஏன் எப்பவும் ஹேப்பியா இல்லே.. அம்மாவும் நீங்களும் ஏன் அப்பப்ப வருத்தமா இருக்கீங்க"
"சேச்சே.. நான் ஆபீஸ் போனப்புறம் அங்கே ஹேப்பியா இருப்பேனே"
சரண்யா சொன்னாள். "நானும்தான்"
எங்கள் மூவருக்குமே சிரிப்பு வந்து விட்டது. சிரித்து சிரித்து அதே மகிழ்ச்சியுடன் படுக்கப் போவோம். எழுந்தால் இனிமையான ஞாயிறு என்ற எதிர்பார்ப்புடன்.
ஆனால் இந்த ஞாயிறு அப்படி இருக்க முடியவில்லை.
காலை ஐந்தரை மணிக்கே வாசல் அழைப்பு மணி ஒலித்தது. அரை மனதாய் எழுந்து போய்க் கதவைத் திறந்தால்.. உறவினர் குடும்பம்.
"ரொம்ப நாளா வரணும்னு சொல்லிகிட்டே இருந்தோம். இன்னிக்கு வந்தாச்சு" ரெயில் வாசனையோடு (!) நின்றார்கள்.
"வாங்க.. வாங்க"
"என்னமோ தெரியலே.. ஆட்டோகூட கிடைக்கலே.. நடந்தே வந்துட்டோம்" என்றார் கஞ்ச மகாப் பிரபு.
கதவை முழுமையாய்த் திறந்து உள்ளே வரச் சொன்னேன். ஹால் விளக்கு மூன்றும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்தன. மூலையில் உருண்டிருந்த ஜானுவின் மீது போர்வை போர்த்த முயன்றபோது வந்திருந்த வால் பையன் ‘ஹை.. ஜானு அக்கா’ என்று உலுக்கி எழுப்பினான்.
அவள் முகத்தைப் பார்க்காமல் இருக்க வேறு புறம் திரும்பினால்.. எதிரே சரண்யா. ‘பால் இல்லை’ என்று ஜாடை காட்டினாள்.
சட்டையை மாட்டிக் கொண்டேன். "இதோ வரேன்"
தெரு முக்கில் பால் பூத் இன்னும் திறக்கப்படவில்லை. அரை கிலோ மீட்டர் போனால் பஜார். அங்கே ஏதாவது ஒரு கடையில் பாக்கட் பால் கிடைக்கலாம். வேறுவழி. போனேன்.
வழியெல்லாம் பூட்டிக் கிடந்த வீடுகள். கொடுத்து வைத்தவர்கள். இன்னும் தூங்குகிறார்கள். நாதன் நகரைத் தாண்டி மெயின்ரோடு. பால் பாக்கட் முதல் கடையிலேயே கிடைத்து விட்டது.
சில்லறைக்காக கடைக்காரர் குனிந்து தேடிய அதே நேரம் சர் சர்ரென்று கார்கள் விரைந்தன. பின்னால் ஒரு வேன் நிறைய ஆட்கள் வந்தனர்.
"கடையை மூடுரா"
கற்கள் பறந்தன. ஷட்டர்கள் இறங்கின. எல்லா திசைகளிலும் மனிதர்கள் ஓடினார்கள். உயிருள்ள மனிதர்கள் ஓடியபோது பிரேதங்கள் ஓடுகிற பிரமை. அத்தனை வெளிறிப்போன முகங்கள்.
பால் பாக்கட்டை பேண்ட் பாக்கட்டில் திணித்துக் கொண்டு அந்த ஜில் உணர்வுடன் நானும் ஓடினேன். செருப்பு ஒரு காலை விட்டு ஓடிப் போனது. என்மீது கறுப்பாய் தார் போல ஏதோ விழுந்து அப்பியது. வலது காலில் சுளுக்காகி சற்றே நொடித்த ஓட்டம்.
வீட்டுக்குள் போனால் தொலைக்காட்சியில் ப்ளாஷ் நியூஸ். ஒரு கட்சியைப் பற்றி தவறான தகவல் தந்ததற்காக மாவட்டத்தில் பதற்றம். பத்திரிக்கை அலுவலகம் கொளுத்தப்பட்டு ஊரெங்கும் கலாட்டா.
ஜானு எழுந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ஞாபகமாய் கேட்டாள்.
"அப்பா.. பதிலே சொல்லலியே.. செய்தின்னா என்னப்பா?"
“
தயவு செய்து இது பொன்ற கெவலமான கதைகளை பொஅடாதேர்கல்