ஜாக்கிரதை! ஜாமின் கொடு!
சிலநாட்களுக்கு முன்னால்தான் வழக்கறிஞர்கள் போலிஸ்காரர் ஒருவர் தம்மில் ஒருவரை அடித்துவிட்டார் என்று வேலை நிறுத்தம் செய்து நீதிமன்ற நடவடிக்கைகளையே ஸ்தம்பிக்க வைத்தார்கள். இன்று வழக்கறிஞர்கள் ஒரு மாஜிஸ்திரேட்டை அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டார் என்பதற்காக அடித்து காயப்படுத்திய வினோதம் நடந்திருக்கிறது. போலிஸ் இவர்களை அடித்தால் ஸ்ட்ரைக் செய்வார்களாம் – ஆனால் இவர்கள் நீதிபதிகளைக் கூட அடிப்பார்கள் – யாரும் கண்டுகொள்ளக் கூடாது! ஒரு வேளை நடவடிக்கை எடுத்தால் அதற்கும் வேலை நிறுத்தம் செய்யலாம்! அரசியல்வாதிகளுக்கு இசட் + பாதுகாப்பு தேவைப்படும்போது நீதியைக் காப்பவர்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பு கூட இல்லாமல் போவது பரிதாபம்தான்! இனிமேல் நீதிபதிகள் வழக்கறிஞர்களைக் கேட்டுக்கொண்டு அவர்கள் சொன்னபடிதான் தீர்ப்பு எழுத வேண்டும் போலிருக்கிறது!
வழக்கறிஞர்களை எதிர்த்து நீதிபதிகள் வேலை நிறுத்தம் செய்வார்களா என்று கேட்கிறார் அதிகப் பிரசங்கி அண்ணாசாமி
லஞ்ச நேரம் லஞ்ச நேரம்!
கடலூர் மாவட்ட ஆணையாளர் லஞ்சம் வாங்காத அரசு ஊழியருக்கு நற்சான்று வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். லஞ்சம் வாங்குவது (சம்பளம் வாங்குவதுபோல) மாமூலான விஷயம் என்பதை ஒப்புக்கொண்டு அதை வாங்காமல் இருக்கும் தியாகத்திற்கு விருது வழங்குவதுபோல இருக்கிறது கலெக்டரின் அறிவிப்பு!
துபாயில் ஆசியாவைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் ஊதியம் மிகக்குறைவாக இருக்கிறது என்பதற்காக வேலை நிறுத்தம் செய்ததோடு பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தியிருக்கிறார்களாம்! ஸ்ட்ரைக், கல்லெறிதல், பஸ் எரிப்பு எல்லாம் நம் நாட்டில்தான் செல்லுபடியாகும்! நாலாயிரம் தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றப் போகிறதாம் அரசாங்கம்! தொழிற்சங்கங்களுக்கே அனுமதியில்லாத நாட்டில் நியாயமான கோரிக்கையாக இருந்தாலும் அந்த நாட்டுச்
சட்டம்தானே செல்லுபடியாகும்?
சாதனை-பன்மொழிப் பாலகன்
பிரிட்டனில் உள்ள ஓட்பரியில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்பண் சர்மா என்ற 10 வயதுச் சிறுவன் 10 மொழிகளில் பேசி அசத்துகிறான். தனது சொந்த ஆர்வத்தினால் பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலி, ஸ்வாஹிலி, போலிஷ், தாய், மற்றும் மிகவும் கடினமான உகாண்டா தேசத்து மொழியான லுகாண்டன் ஆகிய மொழிகளைக் கற்றுக் கொண்டிருக்கிறான். டெய்லி மிர்ரர் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.
ஏர்வாடியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு தனியார் இல்லத்தில் 27 பேர் தீக்கிரையாகி மாண்டது (2001) நினைவிருக்கலாம். சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததால் அவர்களால் தப்பிக்கக் கூட முடியாத நிலை. இந்தச் செய்தி அப்போது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்போது இந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. மனநல காப்பகத்தின் உரிமையாளருக்கு196 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை நீதிபதிக்கு மறுபிறப்பில் நம்பிக்கையிருக்குமோ?
ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிவதற்காக நிறுவப்பட்ட சென்னை பம்மல் கண் மருத்துவமனை இதுவரை ஒரு லட்சம் அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்துள்ளது. எட்டு ஆண்டுகளில் இந்த சாதனை. இந்த அறுவை சிகிச்சைகளில் 94% முற்றிலும் இலவசம். இதன் நிறுவனர், இயக்குநர் விஸ்வநாதன் அவர்களையும் அவருக்கு துணை நின்ற அத்தனை பேரையும் பாராட்டுகிறோம்.
புகை பிடிப்பவர்களைத் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என்று எர்ணாகுளம் தெரெஸா கல்லூரி மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ளார்கள். உறுதிமொழி எடுக்க வைத்தவர் கே.ஜே. ஏசுதாஸ்.
புகை சம்பந்தமான இன்னொரு செய்தி. கேரளாவில் பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப் பட்டுள்ளது தெரிந்ததே. சமீபத்தில் இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் மாட்சின் போது, புகை பிடித்துக் கொண்டிருந்ததாக ஷாருக்கான் மீது கண்டனக் கணைகள் பாய்ந்தன. ஆனால், மார்க்ஸிஸ்ட் கட்சியின் சீதாராம் எச்சூரி, புகை பிடித்துக் கொண்டிருந்த "புகைப்"படம் பத்திரிகைகளில் வந்திருந்தும், யாரும் முணுமுணுக்கக் கூட இல்லையே?
ஷாருக்கான் அரசியல்வாதி இல்லையே என்கிறீர்களா? சரிதான்.
சாராயத்தில் தண்ணீர் கலந்து விற்றதற்காக மூன்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு தண்டனை-செய்தி.
குடிமகன்களுக்கு கிக்கைக் குறைத்த அளவில் அவர்கள் நல்லதுதானே செய்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் ஒரு மது விலக்கு அபிமானி.
சபாஷ், நெஞ்சைத்தொடும் நீதி!
நோயால் அவதியுறும் தந்தைக்கு தன் கல்லீரலின் ஒருபகுதியைத் தானமாக கணவன் அளிப்பதற்கு தடை விதிக்கக் கோரி அவர் மனைவி சுமகிரன் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்து ஆந்திரப் பிரதேச உயர் நீதி மன்ற நீதிபதி தனது தீர்ப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
"இந்த உலகத்தில் வருவதற்கே காரணமாக இருந்த பெற்றோர்கள்தான் என்பதை வழக்குத் தொடுத்த பெண்மணி மறந்துவிட்டார் என்பது மிக்க வேதனையைத் தருகிறது. பெறோர்களின் தன்னலமற்ற தியாகத்தினாலேயே குழந்தைகள் வளர்ந்து வாழ்கையில் வளமுடன் வாழ்கிறார்கள். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள பரஸ்பர அன்பை யாரும் அணைபோட்டுத் தடுக்க முடியாது. தானும் ஒரு பெற்றோராக ஆகி இதே போ¡ன்ற ஒரு நிலைமையை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை வழக்கைத் தொடுத்துள்ள பெண்மணி மறந்து விட்டார் என்பது துயரமானது".
பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய தீர்ப்பல்லவ்வா இது!
“
னன்ட்ராக உல்லது