செய்திகள் அலசல்

சென்னை எக்ஸ்னோரா அமைப்பு பிலாய் எஃகுத் தொழிற்சாலையின் மேலாண் இயக்குநர் ஆர்.ராமராஜு அவர்களுக்கு விருது அளித்துப் பாராட்டியது. ஸ்ரீரங்கத்துக் காரரான ராமராஜு வடக்கே சக்கைப் போடு போடுகிறார். அங்கு இதுவரை தயாராகியுள்ள இரும்புக்கம்பிகளை நேராக நீட்டினால் இந்த பூமிப் பந்தை ஏழரை முறை சுற்றலாமாம். விருது இதற்காகவெல்லாம் இல்லை. பசுமையான, தூய்மையான நகரமாக பிலாய் எஃகு நகரை உருவாக்கி இருப்பதற்காகத்தானாம். அவரது பணிக்காலத்தில் இது வரை 52 லட்சம் மரங்களை நட்டுக் காத்து வருகிறார். பல பூங்காக்கள், நீர்த் தடாகங்கள் என எழில் கொஞ்சுகிறதாம் அந்த ஊர். சிங்கப்பூர், சிங்கப்பூர் என்று சொல்கிறீர்களே, பிலாயைப் போய்ப் பாருங்கள் என்கிறார்கள் அங்கு சென்று வந்தவர்கள் ( இப்படிப் பாராட்டியவர்களில் டி.வி. வரதராஜனும் ஒருவர் ). அவர்கள் காட்டிய ஐந்து நிமிடக் குறும்படமும் சொல்வதெல்லாம் சரிதான் என்று நம்ப வைக்கிறது.

****

சென்னை எக்ஸ்னோரா அமைப்பு இன்னுமொரு நல்ல முயற்சியைத் தொடங்கி இருக்கிறது. “சென்னை, விளக்கை அணை” என்று அந்த இயக்கத்துக்குப் பெயர். வரும் மே மாதம் முதல் தேதி இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை அத்தனை விளக்குகளையும் அணைத்து வைத்திருக்கக் கோரும் இயக்கம். அந்த ஒரு மணி நேரத்தை சுவையாகக் கழிக்க மெழுகுவர்த்தி வெளிச்ச டின்னர், நிழல் விளையாட்டு, பாட்டுக்குப் பாட்டு போன்ற நிகழ்ச்சிகளை அடுக்கு மாடி கட்டிடங்களில் நிகழ்த்தலாம் என்று பரிந்துரைக்கிறார்கள். இருட்டில் திருட்டு மற்றும் அசம்பாவிதங்கள் நடந்து விடாமல் இருக்க முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளையும் சொல்கிறார்கள்.

விளக்கு அணைப்பு அமங்கலம் அல்லவா என்று கேட்டால், சென்னை ஒளி மிகு நகரமாக நீடூழி வாழத்தான் இந்த ஒரு மணி நேர விளக்கணைப்பு என்கிறார்கள். அந்த ஒரு மணி நேரத்தில் மிச்சமாகும் மின்சாரம் மிகக் கணிசமானது என்றாலும் மின்சாரச் சேமிப்பு என்பது அடையாளப் பூர்வமானது மட்டுமே என்கிறார் எக்ஸ்னோரா நிறுவனர் நிர்மல். இயக்க காலத்தில், சுற்றுச் சூழல் தூய்மை, சூடாகும் பூமியைப் பற்றிய விழிப்புணர்வு இவற்றையெல்லாம் தீவிரமாகப் பிரசாரம் செய்வது என்பதே முக்கிய நோக்கம். சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!

****

அண்மையில் குழந்தைகள் கலந்து கொண்ட சென்னைக் கூட்டம் ஒன்றில் அப்துல் கலாம் இன்னும் மக்கள் மன மாளிகையில்தான் வசிக்கிறார் என்பது நிதரிசனம் ஆயிற்று. குழந்தைகளுக்கு அவர் அளித்த 4 அம்சத் திட்டம்.

1) ஒரு குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்
2) தேவையான அறிவைப் பெறுங்கள்
3) கடின முயற்சி மேற்கொள்ளுங்கள்
4) அச்சமின்றி அத்தனை இடர்களையும் வெல்லுங்கள்

“பெரிதாகக் கனவு காணும் கடின உழைப்பாளிக்கு வெற்றி தேடித் தர உலகிலுள்ள அத்தனை சக்திகளும் இணைந்து பணி புரியும்.” என்று சொல்லி நிறைவு செய்கிறார் கலாம். “நன்று கருது; நாளெல்லாம் வினைசெய்; நினைப்பது முடியும்’ என்ற பாரதியின் புதிய ஆத்தி சூடியுடன் ஒப்பு நோக்குக.

****

இன்ஃபோசிஸ் வித்தியாசமான நிறுவனம்தான். அதன் முதன்மை நிர்வாக அதிகாரி க்ரிஷ் கோபால கிருஷ்ணனுக்கு தாய் வழியில் 18000 இன்ஃபோசிஸ் கம்பெனி பங்குகள் கிடைத்திருக்கின்றன. பங்குகள் பெற்ற 24 மணி நேரத்துக்குள் ஊழியர்கள் கம்பெனிக்குத் தகவல் தர வேண்டும் என்பது கம்பெனி விதியாம். க்ரிஷ் அதை மறந்து விட, ஐந்து லட்சம் அபராதம் விதித்து, ஏதாவது சேவை நிறுவனத்துக்கு அந்தத் தொகையை நன்கொடையாகத் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டார்கள். அதை நிறைவேற்றிவிட்டார் க்ரிஷ். எந்த நிறுவனத்துக்கு நன்கொடை கொடுத்தார் என்று தெரியவில்லை. சுதா நாராயணமுர்த்தியின் அறக்கட்டளைக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் என்பது யூகம். அதனால் என்ன? தப்பில்லை. நல்ல காரியம்தானே?

****

அதிசயமாகத்தான் இருக்கிறது ஐதராபாதில் ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கு நுழைவுத் தேர்வு வைக்கிறார்களாம். அவசரப்படாதீர்கள், அதிலில்லை விஷயம். இந்த நுழைவுத் தேர்வுக்கு கோச்சிங் செய்ய தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. கட்டணம் சும்மா 6000 ரூபாய்தான். அடுத்து ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஐ.ஐ.டி. கோச்சிங்கும் ஆரம்பித்து விடுவார்கள் போல. சென்னை இந்த விஷயத்தில் பின் தங்கியிருப்பது போலத் தெரிகிறது.

****

உபயோகிக்க ஒரு செய்தி

சென்னை மாநகராட்சி இந்தியாவிலேயே முத்ல் முறையாக மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க 1913 என்ற எண்ணை அறிமுகம் செய்திருக்கிறது. மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் 1913 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டதின் நினைவாக இந்த எண்ணைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

****

ஆண் பாவம்

பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அயல் நாட்டுக் கணவர்களின் வரதட்சிணைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய செய்திகள் அதிகமாக வருகின்ற இந்த வேளையில் வெளிநாட்டுக் கணவர்கள் சிலர் இதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். “வரதட்சணைக் கொடுமைப் புகார்களில் உண்மை கிடையாது. சட்டத்தில் பெண்களுக்குக் காட்டப்படும் சலுகைகளை அவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். எங்களுக்கும் பாதுகாப்புத் தேவை” என மத்திய அமைச்சகரத்தில் புகார் கொடுத்திருக்கிறார்களாம்! ஆண் பாவம் பொல்லாது என்கிறார்கள் இவர்கள்!

****

பீகாரில் ஆயுள் காப்பீட்டு ஏஜண்டான 24 வயதே ஆன ராகினி ஒரே நாளில் 15 கோடி ரூபாய் மதிப்பிற்கான பாலிசிகளைச் சேர்த்து கமிஷனாக மட்டும் ஒரு கோடியே 50 இலட்சம் பெற்று எல்லோரையும் அசர வைத்திருக்கிறார். (செய்தி : தேவி இதழ்)
ஒரு சின்ன பின்குறிப்பு : இவர் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் செல்லக் குமாரி.

****

ஊழல் இடம் மாறலாமா?

ராஜாஜி அவர்கள் தமிழ் நாட்டின் முதல்வராக இருந்தபோது அவரது நண்பர் ஒருவர் எழுதிய கடிதத்தில் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள ஆணையர் லஞ்சம் வாங்குவதாகவும், அவரை அந்த மாவட்டத்திலிருந்து மாற்ற வேண்டுமென்றும் எழுதினார். ராஜாஜி தான் எழுதிய பதிலில் கூறியதாவது, “அவரை நான் மாற்ற இயலாது. ஏனெனில் லஞ்சத்தையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதை நான் விரும்பவில்லை. அவர் மீது ஆதாரங்களோடு கூடிய குற்றச்சாட்டை அனுப்பினால் நாம் அவரை சிறைக்கு அனுப்புவோம்” (நன்றி : “அறிஞர்கள் வாழ்வில்” எடையூர் சிவமதி)

****

About The Author