புத்தாண்டு கொண்டாட்டங்கள்
புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாட வேண்டியதுதான்! ஆனாலும் நாம் கொஞ்சம் ஓவரோ என்று நள்ளிரவுப் புத்தாண்டுக் கொண்டாட்டின் போது நடந்தேறிய நடக்கக் கூடாத நிகழ்ச்சிகள் சிந்திக்க வைக்கின்றன.
மும்பையில் எழுபது பேர் கொண்ட ஒரு கும்பல் தங்கள் நண்பர்களோடு புத்தாண்டு பார்ட்டிக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்த இரண்டு என்.ஆர்.ஐ பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறது. இது பற்றி ஊடகங்களில் வெளிவந்த புகைப்படங்கள் அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. போலிஸ் கமிஷனரோ, ‘புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் பொதுவாக அமைதியாக இருந்தன. இதை ஊதிப் பெரிது படுத்தாதீர்கள்’ என்று கூறுகிறார்.
சென்னையில் சவேரா நட்சத்திர ஓட்டலில் குடித்துக் கும்மாளம் போடுக்கொண்டிருந்த இளைஞர், இளைஞிகள் பட்டாளம் நீச்சல் குளத்தின் மேலே அமைக்கப்பட்டிருந்த மேடையில் குத்தாட்டம் போடத் துவங்க, மேடை உடைந்து ஒரு மென்பொறியாளர் உயிரிழந்தார். சிலருக்குக் காயம். கேரளாவிலோ ஸ்வீடனிலிருந்து சுற்றுலா வந்திருந்த பெண்னிடம் சிலர் கொண்டாட்டத்தின் உச்சத்தில் தவறாக நடந்துகொள்ள ‘இனிமேல் இந்தியா பக்கமே வர மாட்டேன் என்று சொல்லிச் சென்றுவிட்டார் அந்தப் பெண். இதைத்தவிர போதையில் வண்டியை ஓட்டி விபத்தில் மாட்டியவர்கள் பலர். இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பார்க்கும்போது, ‘நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்’ என்ற சந்தேகமும் துயரமும் ஏற்படுகிறது. நிச்சயமாக புத்தாண்டு நமது மகிழ்ச்சி அலைகளையும் வரும் காலத்தைப்பற்றிய ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தும் நாள். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றி இந்த ஆட்டமும் போதையும் அவசியம்தானா? பரவலான வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பிறகு கணினிப் பொறியாளர்கள் மட்டுமன்றி பலரிடம் பணப் புழக்கம் அதிகமாகவே இருக்கறது. இது தவிர, மென்பொருள் பொறியாளர்கள் கடுமையாக வார முழுவதும் இரவு பகல் பாராமல் உழைப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு வடிகாலாகத்தான் புத்தாண்டு என்றில்லை, காதலர் தினம், வார இறுதி நாட்களில் இது போன்ற நிகழ்ச்சிகளிலும் மது அருந்தி நடனமாடி தங்கள் மன அழுத்தத்தைப் போக்கிகொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள். (ஆண்களைத் தவிர வேலை பார்க்கும் மற்றும் கல்லூரிப் பெண்களும் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்பது நிச்சயமாக அதிர்ச்சி அளிக்கிறது) இந்தக் குறுகிய கால மகிழ்ச்சி சில நேரங்களில் ஏற்படுத்திவிடும் துயர சம்பவங்கள் இவர்களை மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தரையும் சமுதாயத்தையும் ஒட்டுமொத்தமாகக் காயப்படுத்துகின்றன.
எங்கே கொஞ்சம் இந்த மாதிரி சிந்தியுங்கள்!. புத்தாண்டு தினத்தன்று மட்டுமின்றி நேரம் கிடைக்கும்போது நேரத்தை உங்கள் தாய் தந்தையோடு, உறவினர்களோடு, மனைவி குடும்பத்தோடு சேர்ந்து கலகலவென மனம் விட்டுப்பேசி, விருந்துண்டு மகிழும்போதோ அல்லது அன்றைய தினத்தில் நம்மிலும் நலிவுற்றோர், எந்த நாளிலுமே மகிழ்ச்சியின் ரேகையை அறியாத ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று, அவர்களை மகிழ்வித்து, அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும்பொழுதினிலோ ஏற்படும் மனநிறைவுக்கு நிகராக இருக்குமா? இதனால் கிடைக்கும் சந்தோஷம் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உற்றார்களுக்கும்தான் உண்மையான மகிழ்ச்சி மற்றவர்களை முகம் மலரச் செய்யும் போதுதான் ஏற்படுகிறது என உணர்ந்து நமது அடுத்த அடியை எடுத்து வைப்போம். நிச்சயமாக இந்தப் புத்தாண்டு ஒளிமயமாகத் திகழும்.
கலாமுக்கு சலாம்
பொங்கல், தீபாவளி என்று எந்த நாளாக இருந்தாலும் சின்னத் திரைக்குக் கொண்டாட்டம்தான். நடிக, நடிகைகளின் பேட்டி, இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று திரைப்படங்கள், குத்தாட்டம் என மக்களை மாக்களாக்கி வைத்திருக்கும் இந்த சின்னத்திரை வரலாற்றில் முதல் முறையாக உருப்படியாக ஒரு நிகழ்ச்சி. சன் டி.வியில் காலை மலரில் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுடன் ஒரு சந்திப்பு புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருந்தது.
டாக்டர் அப்துல் கலாம் தனது பள்ளி கல்லூரிப் பருவங்கள், எதிர்காலக் கனவுகள் ஆகியவற்றை சுவையாகப் பகிர்ந்து கொண்டார். முத்து ஐயர் என்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியர், தான் கணிதத்தில் 100 மார்க் வாங்கியதை வீட்டிற்கு வந்து சொன்னதை நினைவு கூர்ந்தார். இன்னொரு ஆசிரியர் சிவசுப்ரமனிய ஐயர் கடற்கரைக்கு அழைத்துச் சென்று பறவைகள் பறக்கும் விதத்தைக்காட்டி விளக்கியதுதான் தனக்கு விமானத்துறையில் ஈடுபடுவதற்கு அடித்தளமாக அமைந்ததென்றார். சுதந்திர தினத்தன்று நேரு பேசியதை பள்ளியில் ரேடியோவில் ஒலிபரப்பினார்களாம். தில்லியும் நாடு முழுவதும் உற்சாகத்தில் மிதக்க, காந்தி அடிகளோ இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாராம்.
கல்லூரி நாட்களில் நண்பர்களோடு செலவிட்ட மகிழ்ச்சியான நாட்களைக் கூறிய அவர், தமிழ் மீடியத்திலிருந்து ஆங்கில மீடியத்திற்கு மாறுவதால் ஏற்பட்ட இடர்களையும் கூறினார். அப்போது செயின்ட் ஜோசஃப் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் பணிபுரிந்த புனித தந்தை செக்யூரா என்பவர் மாலையில் தினம் ஒரு மணி நேரம் தமிழ் மீடியத்திலிருந்து வந்தவர்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவாராம். (அந்த அர்ப்பணிப்பும் பக்தியும் இன்றைய ஆசிரியர்களிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்)
விமானப்படை நுழைவுத்தேர்வில் தோல்வி அடைந்தபிறகு காசியில் தான் சந்தித்த சுவாமி சிவானந்தா அந்தக் கூட்டத்தில் அவரைத் தனியே அழைத்து மனதுக்கு ஆறுதலூட்டியதை நினைவு கூர்ந்தார். அவர் தன்னைக் கூப்பிட்டதற்கு மற்றவர்கள் பேன்ட் அணிந்திருக்க, தான் மட்டும் வேட்டி அணிந்திருந்தது காரணமாக இருக்கலாம் என்று நகைச்சுவையோடு கூறினார். தன்னை மிகவும் கவர்ந்த புத்தகம் Light From Many Lamps என்ற பல தலைவர்கள் விஞ்ஞானிகள் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் கூறும் புத்தகம் என்றார்.
விமானம் கட்டுவோம் என்ற கட்டுரைக்கு முதல் பரிசு வாங்கினாராம். எம்.ஐ.டி.யில் படிக்கும்போது ராக்கெட் வடிவமைப்பு பற்றி செய்த ப்ராஜெக்டைப் பற்றி, பணியாற்றிய காலத்தில் தனது எட்டு வருஷ ப்ராஜெக்டான சாடிலைட் லான்ச் பற்றி, அது தோல்வியுற்றபோது தோல்வியைத் தான் ஏற்று மறுபடி வெற்றி அடைந்தபோது, அதைத் தண்ணுடன் பணியாற்றியவர்கள்தான் காரணம் என மகுடம் சூட்டிய அவரது அணித்தலைவர் சதீஷ் தவான் பற்றி விரிவாகக் கூறினார்.
அவர் கூறிய முக்கியமான செய்தி, இந்தியா அமைதியான, யாரிடமும் போரிட விரும்பாத நாடுதான். வளர்ச்சிக்கு அமைதி தேவை, ஆனால் அமைதியை நிலைநாட்ட வலிமை வேண்டும் என்பதுதான். இந்தியா 2020ல் வல்லரசாவதற்கான 10 கட்டளைகளை அவர் கூறியபோது நமக்கு ஒரு பிரமிப்பு ஏற்பட்டது, அவர் கனவு பலிக்க ஒவ்வொரு இந்தியனும் தனது பங்கினை ஆற்ற வேண்டும். இவரது சமகாலத்தில் நாம் வாழ்வதே நமது பேறுதான்.
கணிப்பு
த சண்டே இந்தியனும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மார்க்கெட் ரிசர்ச் அமைப்பும் இணைந்து சில சுவாரஸ்யமான கருத்துக்கணிப்புகள் நிகழ்த்தியிருக்கின்றன. சென்ற ஆண்டின் சில முக்கிய நிகழ்வுகள், பிரச்னைகள் பற்றிய மக்களின் கருத்தை அறிய அதில் 2008 க்கான ‘உங்களின் முக்கிய கவலை என்ன’ என்ற கேள்விக்கு 29% மக்கள் தீவிர வாதம் , 26% ஊழல் , 22% மோசமான நிர்வாகம் , 13% குற்றம், 10% பணவீக்கம் என பதிலளித்திருக்கிறார்கள்.
அரசியலை முழு நேர வேலையாக மேற்கொள்வீர்களா என்ற கேள்விக்கு 73% இளைஞர்கள் இல்லை என மறுத்து விட்டு சென்றார்கள் (நன்றி: த சண்டே இந்தியன்)
களிப்பு
பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறியிருந்தாலும் ஜப்பான் இந்தியாவின் பள்ளிகள் நடக்கும் முறைமையைக் கண்டு அதிசயித்திருக்கிறது. அவர்கள் உலகில் கல்வியில் சூப்பர் பவராக இந்தியாவை மதிக்கிறார்கள். இந்திய மாணவர்கள் கணித வாய்பாடுகளை பாராமல் சொல்வது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியாவின் கணித பயிற்சிகள் போன்ற புத்தகங்கள் அங்குள்ள புத்தக நிலையங்களில் நிரம்பியிருக்கின்றனவாம். அங்கு உள்ள இந்தியர்களுகாக நடத்தப்படும் பள்ளிகளில் ஜப்பானிய மாணவர்கள் பெருமளவில் சேருகிறார்கள். (இந்தியன் எக்ஸ்பிரஸ்)
சுளிப்பு
மத்திய பிரதேசம் சாத்னாவில் ஒரு அரசு பள்ளியில் எட்டாவது படிக்கும் வயது மாணவன் அண்மையில்( ஜனவரி 3 ந்தேதி) அவனுடைய ஒரு சக மாணவனால் பள்ளி வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். அண்மையில் குர்காண் பள்ளியில் டிசம்பர் 11 ந்தேதி 15 வயது மாணவன் ஒருவன் அந்த பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்த இரண்டாவது நிகழ்ச்சி இது. அறியாத பிஞ்சுப்பருவத்தினரின் பசுமையான மனதில் இந்த வெறி வித்துகளை விதைப்பதற்கு யார் காரணம்? சமூக அக்கறை உள்ள்வர்களும், ஊடகங்களும். பெற்றோர்களும், கல்வியாளர்களும் கவலையுடன் சிந்திக்க வேண்டும்.
1852 ம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியால் முதன் முறையாக் வெளியிடப்பட்ட தபால்தலை இப்போது ரூபாய் 4 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை விலை போக இருக்கிறது. சென்னையில் நடந்துகொண்டிருக்கும் தபால் தலைக் கண்காட்சியில் இந்த தபால்தலை காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. 1854 களில் வெளியிடப்பட்ட தபால் தலைகளும் , ஸ்விட்சர்லாந்திலிருந்து வெளியிடப்பட்ட காந்தி நினைவுத் தபால் தலைகளும் காட்சியில் உள்ளன.
விருப்ப ஒய்வுக்குப் பின் முழு மூச்சில் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் கிரண் பேடி காவல் நிலையங்களில் உதவி கிடைக்காதவர்களுக்கென www.saferindia.com என்ற ஒரு வலைப் பதிவு துவங்கியியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒரு பாலமாக இயங்கப்போகிறார் தனது இயக்கம் மூலமாக.
குன்றை மணந்த மணவாளன்
நக்ஸல்களின் தொல்லையைத் தடுப்பதற்காக ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த கிராமத்தில் நந்தி முண்டா என்ற மலை வாசி லக்ஷயினி என்ற ஒர் குன்றுக்குத் திலகம், மாலயிட்டு மணம் செய்துகொண்டார். அவர் கனவில் மலைத்தேவதை வந்து நக்சல்களின் அபாயம் நீங்கி கிராமத்தைக் காப்பாற்ற வேண்டுமெனில் இவ்வாறு ஒரு குன்றை மனம் புரிந்துகொள்ள வேண்டுமென கனவில் சொன்னதே காரணம். இந்தத் திருமணம் மலை வாசிகளின் முறைப்படி நடந்தது.
“