கின்னஸ் புகழ் கோயில்
தில்லியில் உள்ள புகழ்பெற்ற அட்சர்தம் சுவாமி நாராயணன் கோயில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 86 ஆயிரத்து 342 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது இக்கோயில். உலகில் முதன்முறையாக ஒரு இந்துக் கோயில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவை.
ஹாரி பாட்டர் இதுவரை 65 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 35 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டுள்ளனவாம்.
சென்னையில் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் இரவு பத்து மணிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.
பலன்: பத்து மணிக்கு முன்னதாகவே சிலர் டாஸ்மார்க் மதுபானங்களை அதிக அளவில் வாங்கி பத்து மணிக்குப் பின் அதிக விலைக்கு விற்கிறார்களாம். அரசின் சட்டமும் இவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே பிறப்பிக்கப் பட்டிருக்கிறதென விஷயம் தெரிந்தவர்கள் சந்தேகிக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு அதிரடியான சட்டத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறதாம். இந்தச் சட்டப்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்கள் அரசுக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் செலுத்த வேண்டும் (செய்தி : தகவல் ராணி)
ரஷ்ய மாணவர்கள் தமிழ் கற்கவும் தமிழக மாணவர்கள் ரஷ்ய மொழி கற்கவும் சென்னை- மாஸ்கோ ஆகிய இரு பல்கலைக் கழகங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
உபயோகிக்க ஒரு செய்தி
அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களை சென்னை மாநகராட்சிக்கு 97899 5111 என்ற எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பலாமாம்.
அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்ட கிரண் பேடி அவர்கள் சென்னை தியசாபிகல் சொசைடியில் அன்னி பெசண்ட் நினைவு சொற்பொழிவில் கலந்துகொண்டபோது பொறுப்பும் கடமையும் வெறும் அலங்காரத்தோகை அல்ல, அவைகள் இல்லாத தோகை வெறும் சுமையே என்று கூறினார். அவர் சமூக அக்கறை அவரது பேச்சில் தெரிந்தது. மக்களுக்கு அமைதியான வாழ்வு அரிதாகி வருகிறதைக் குறிப்பிட்டு இந்த நிலை மாற தனது நாட்டைக் காப்பாற்றுங்கள் என்ற திட்டம் பற்றி விளக்கினார். நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஐந்து பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அமைதி, கட்டுப்பாடு, நேர்மை, நல்லிணக்கம் ஆகிய வாழ்க்கை முறைகளை எப்படி அமைப்பது என்று திட்டம் அமைத்துக்கொண்டால் சிறு துளிகள் பெரு வெள்ளமாக மாறி நாடெங்கிலும் காலப்போக்கில் ஒரு வன்முறையற்ற, அமைதியான சமூகத்தை அமைக்க முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். எவ்வளவு நல்ல சிந்தனை அவருக்கு?
கருவிலேயே பெண்குழந்தைகளை அழிக்கும் கம்சத்தனம் படிப்பில்லாத கிராம மக்களிடம் மட்டும் இல்லை. நன்கு படித்து வசதியுடன் வாழும் மேல்தட்டு மக்களிடமும் இருக்கிறதென அரசாங்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டில்லியிலும் மும்பையிலும் மிக்க வசதியுடன் வாழும் பகுதிகளில் ஆண்களுக்குப் பெண்கள் விகிதம் 1000திற்கு டில்லியில் 762 ஆகவும், மும்பையில் 728 ஆகவும் இருக்கின்றன. இவர்கள்தான் தங்களுக்கு சுலபமாகக் கிடைக்கும் மருத்துவ தொழில் நுட்ப வசதிகளின் உதவியுடன் பெண் சிசுவெனத் தெரிந்தவுடன் கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள். பெண் குழந்தைகளைத் தவிர்ப்பதற்கு வறுமை மட்டும் காரணமில்லை. காலம் மாறினும் இன்னமும் மாறாத மனிதர்களின் மனத்தடைகள் தான் காரணம் எனத்தெரிகிறது.
“