ஆண் பாவம்
குடும்ப வன்முறைச் சட்டம் பெண்களுக்கு மட்டும்தானா? மனைவிமார்களிடம் இடிபடும் அப்பாவிக் கணவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? குடும்ப வன்முறைச் சட்டம், வரதட்சிணைக் கொடுமைச் சட்டம் போன்றவை சில பெண்களால் ஆண்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றன என்று சொல்கிறது சேவ் ஃபாமிலி ஃபவுன்டேஷன் எனும் ஆண்களுக்கான அமைப்பு. இந்த அமைப்பு நவம்பர் 19ஐ ஆண்கள் தினமாக அறிவித்து சில ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறது.
இந்த அமைப்பின் வெப்சைட்டில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களின் கண்ணீர்க் கதைகளைக் காணலாமாம். இந்திய வரிப்பணத்தில் 82 சதவிகிதம் ஆண்களின் பங்குதான். ஆனால் சம உரிமை என்ற பெயரால் கடந்த 60 ஆண்டுகளாக இச்சமூகம் ஆண்களை வஞ்சித்து வருகிறது எனச் சொல்கிறது இந்த அமைப்பு. கடந்த சில ஆண்டுகளாகத் திருமணமான பெண்களைவிட ஆண்கள்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது இது தரும் புள்ளி விவரம்.
என்ன, நீங்களும் இந்த அமைப்பில் மெம்பராகணுமா? தயவு செய்து மனைவிக்குத் தெரியாம பாத்துக்குங்க!
மனிதநேயம் இரண்டு செய்திகள்
மனிதநேயம் எந்த அளவுக்கு மறைந்துவிட்டது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம். உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரை அவர்களது உறவினர்கள் கோணிப்பையில் சுற்றி சாலையோரத்தில் எறிந்துவிட்டார்கள். அந்த வழியாக வந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் விஷயமறிந்து முதியவரை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தாராம். முதியவருக்கு சர்க்கரை நோயினால் இரண்டு கால்களும் அழுகிய நிலையில் அவர்களது உறவினர்கள் அவரைத் தூக்கி எறிந்திருக்கலாம் எனச் சொல்கிறார்கள்.
அப்படியும் மனிதநேயம் முழுதும் மரித்து விடவில்லை எனும் படியாகச் சில செய்திகளும் வரத்தான் செய்கின்றன. 11 வயதான சங்கரி தியாகராஜன் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மூளை செயலிழந்து போன சிறுமி, மூளை செயலை இழந்து இறந்துவிட்டது என்ற நிலையில் பெற்றோரின் சம்மதத்துடன் அவளது கல்லீரல் எடுக்கப்பட்டு 59 வயதானவருக்குப் பொறுத்தப்பட்டது. சங்கரியின் கண்களையும் சிறுநீரகங்களையும் கூட தானமாகக் கொடுத்துள்ளார்கள் அவரது பெற்றோர்கள். இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!
ராமர் பிறந்தார்- எங்கள் ராமர் பிறந்தார்!
ஜோதிட- வானியல் ஆய்வாளரான ஸ்ரீஹரி அவர்களின் ஆய்வுப்படி ராமரின் பிறந்த தேதி ஜனவரி 10, 5114 கி.மு. இதிகாசத்தின் நிகழ்வுகளை, தங்கள் அறிவியல் ரீதியாக கணினி மென்பொருள்களின் உதவியோடு ஆராய்ச்சி செய்துவரும் பாரத் க்யான் என்ற அமைப்பு இந்த செய்தியை வெளியிட்டுருக்கிறது.
ராமாயண காவியத்தின் பிற முக்கியமான தேதிகள்.
பரதன் பிறந்த நாள் ஜனவரி 11, 5114 கி.மு. ராமரின் பட்டாபிஷேகம் குறிக்கப்பட்ட நாள் ஜனவரி 4, 5089 கி.மு. அனுமன் இலங்கைக்கு சீதையைத் தேடிச் சென்றது செப்டம்பர் 12, 5076 கி.மு. அனுமன் இலங்கையிலிருந்து திரும்பி வந்தது செப்டம்பர் 14, 5076 கி.மு. (செய்தி: இந்தியன் எக்ஸ்ப்ரஸ்)
விதிகளை மாற்றி எழுதிய பெண்
ஹிந்து மதக் கோட்பாடுகளின்படி பெண்கள் ஈமச்சடங்குகளில் பங்கேற்க முடியாது. அவர்கள் இடுகாட்டிற்கும் அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் ஒரிஸ்ஸா மாநிலத்தில் சம்பல்பூர் நகராட்சியில் உள்ள மயானத்தில் 48 வயதான சாந்தி பெகார என்ற பெண்மணியே இறுதிச் சடங்குக்கான சிதையைத் தயாரிக்கும் பொறுப்பில் இருக்கிறார். இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த தன் கணவர் இறந்து போனதும் இவர் தொடர்ந்து இந்தப் பணியைச் செய்து வருகிறார். தொடக்கத்தில் இதற்கு எதிர்ப்பு இருந்தபோதும் அக்கறையுடன் தன் வேலையைச் செய்து வந்ததால் நகராட்சி அவரது பணியை நிரந்தரமாக்கி இருக்கிறதாம்.
(தகவல் குடிமக்கள் முரசு)
கிரிக்கெட் பந்தயங்களின் போதுதான் நமது மக்கள் நாட்டுப் பற்றையும் தேசியக்கொடியின் மீது உள்ள அக்கறையையும் அதீதமாகக் கட்டுவார்கள்- முகத்திலும் உடலிலும் வரைந்து கொள்வார்கள், மேலே போர்த்திக் கொள்வார்கள். ஜெய்பூர் கிரிக்கெட் அதிகாரிகள் ஒருபடி மேலே போய், காங்கிரஸ் கொடியை சாப்பிடுவதற்கு டேபிள் க்ளாத் ஆக உபயோகப் படுத்தினார்களாம். போதாக்குறைக்கு அதன்மேல் ஒரு மது பாட்டில் வேறு, இப்படி ஒரு மரியாதை நமது நாட்டுக் கொடிக்கு!
கைதி எடுத்த ரன்
ஹைதராபாத் சிறையிலிருந்து கைவிலங்கிடப் பட்டிருந்த கைதி ஒருவன் தப்பியோடி விட்டான். கான்பூரில் நடந்த பாகிஸ்தான், இந்தியா கிரிகெட் போட்டியை சிறைக் காவலர்கள் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தபோது கைதி எஸ்கேப்! மாட்சில் ரன்னை ரசித்துக்கொண்டிருக்கும் போது கைதி எடுத்த ரன்னை கோட்டைவிட்டு விட்டார்களே என்று ஒரு அங்கலாய்ப்பு.
மரணம் என்பது தவிர்க்க முடியாது. ஆனால், குடும்பத் தலைவன் இறப்பதால் மனைவி, குழந்தைகளுக்கு ஏற்படும் அவலத்தைக் குறைக்கப் பயன்படுவது ஆயுள் இன்ஷ்யூரன்ஸ். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி, குடும்பத்துக்காக பிரிமியம் கட்டி, அசம்பாவித மரணத்துக்குப் பின் அந்த இன்ஷ்யூரன்ஸ் தொகை கிடைக்காமல் போனால் என்ன கொடுமை?
விண்ணப்பப் படிவத்தில், முக்கியத் தகவலை மறைத்தாலோ, தப்பான தகவல் தந்தாலோ, பாலிஸி செல்லாததாகி விடும். குடும்பத்துக்கு இன்ஷ்யூரன்ஸ் தொகை கிடைக்காது. இதை உறுதி செய்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நிறைய கேஸ்களில் முகவர்கள், தகவல்களைத் தெரிந்து கொள்ளாமல்,“ஆம்” அல்லது “இல்லை” என்று கேள்விகளுக்கு இயந்திரத்தனமாக பதில் எழுதி விடுகிறார்கள். பொதுவாக, பாலிஸி எடுப்பவர்களும் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போட்டு விடுகிறார்கள். பாலிஸி பலனற்றுப் போகிறது. பாலிஸி எடுத்தும் குடும்பம் தத்தளிக்க வேண்டியதாகிறது.
பாலிஸிதாரும், முகவரும் அதிக விழிப்புணர்ச்சியுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். கம்பெனிகளைக் குறை கூறிப் பிரயோசனம் இல்லை. “அதீத நன்னம்பிக்கை” என்ற அடிப்படையிலேயே, பாலிஸி ஒப்பந்தங்கள் ஏற்படுகின்றன. தகவல்களைத் தவறாகத் தருபவர்களுக்குப் பணம் வழங்கினால், உண்மையைச் சொல்லி சற்றே அதிக பிரிமியம் கட்டுபவர்களுக்கு அநீதி செய்வதாகும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சரியானதே. இது தனி சப்ஜெக்ட். இதைப் பற்றித் தனியாகத்தான் விளக்க வேண்டும்.
உறங்காத நினைவுகள்:
நாம் உறங்கும்போது நம் மூளை ஒய்வெடுத்துக் கொள்கிறதென்றுதானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் டாக்டர் டேவிட் யூஸ்டன் நடத்திய ஒரு ஆய்வின்படி அப்படியில்லையாம். தூங்கும்போதுதான் மூளை சுறுசுறுப்பாக இயங்கி அன்று நடந்த நிகழ்சிகளை நினைவிற்குக் கொண்டு வந்து அசைபோடுகிறதாம். மூளையின் இந்த இயக்கம் நிஜ வாழ்வில் நடந்ததை விட இன்னும் வேகமாகவே இருக்கிறதாம்.
(தூங்காதே, எழுந்து படி என வெகுநேரம் தூங்கும் மாணவர்களை விரட்டினால் நான் பகலில் படித்ததையெல்லாம் அசை போடுகிறேன் எனச் சொல்லக்கூடும்.)
சின்னஞ்சிறு இயக்குனர்கள்:
கோயம்பத்தூரில் உள்ள அன்பு இல்லத்தில் வாழும் தெருவோரச் சிறுவர்கள் கோயம்பத்துர் சந்திப்பு என்ற வண்ணப்படம் தயாரித்திருக்கிறார்கள். அவர்கள் தெருவோரங்களில் தனியாக விடப்பட்ட தங்களின் துயரக் கதையை மெல்லிய நகைச்சுவை கலந்து இயக்கி இருக்கிறார்கள். ஸ்கிரிப்ட், எடிட்டிங் யாவையும் அவர்களே செய்திருக்கிறார்கள். ஆதரவற்ற இந்தச் சிறுவர்களின் படத்தை அலைகள் மீடியா வெளியிட்டிருக்கிறது.
ஒரு களிப்பு, ஒரு சுளிப்பு:
வசதியற்ற சிறுவர்களின் இதய, மற்ற அறுவை சிகிச்சைகளுக்கான செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள முன்வந்து சென்னைத் தனியார் மருத்துவ மனைகளுடன் இதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டு ஆணை பிறப்பித்திருப்பதற்குக் களிப்பு.
படிக்கின்ற சிறுவர்களைத் தங்களின் தொண்டர் படைகளில் சேர்த்துக்கொண்டு பயிற்சி அளிக்க உத்தேசிக்கும் தி.மு.க.வின் (அபாயகரமான) திட்டத்திற்கு ஒர் சுளிப்பு.
நியாயமா?
“வேடிக்கை என்னவென்றால் நாம் சரியானவற்றைச் செய்வதில் காட்டும் சுறுசுறுப்பைவிட நாம் செய்த தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதில்தான் அதிகம் சுறுசுறுப்பைக் காட்டுகிறோம்” – கலீல் ஜிப்ரான்
“