இனிக்காத செய்தி
நீரிழிவு நோயைப் (டயபெடிஸ்) பற்றிய ஒரு செய்தி. (நவம்பர் 14 புதன் கிழமை உலக டயபெடிஸ் தினம் கூட) உலகளாவிய சர்க்கரை நோய் அமைப்பின் ஆய்வுப்படி 20லிருந்து 79 வயதானவர்களில் இந்தியாவில்தான் மிக அதிகமாகனவர்கள் டயபெடிஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். சீனா, அமெரிக்கா, ரஷ்யா எல்லாமே நமக்கு அடுத்தபடிதானாம். ஒவ்வொரு ஆண்டும் 15 வயத்துக்கும் குறைவான 75000 சிறுவர், சிறுமிகள் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்களாம்.
இந்த நோயைத் தடுப்பதற்கு ஒரு சுலபமான ஆனால் பயனுள்ள பயிற்சி, தினம் 30 நிமிடம் அக்கறையாக நடந்தால் போதும், சர்க்கரை நோய் விலகிவிடும்.
பெருமை
வரைகலை தொடர்பான மென்பொருளில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் அடோபி நிறுவனத்தின் தலைவராக அமெரிக்கா வாழ் இந்தியர் சாந்தனு நாரயன் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இப்போது அந்த நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் அவர்.
ஏன் இப்படி?
உலகின் மிகச் சிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவின், அதாவது பாரதத்தின் எந்தப் பல்கலைகழகமும் இல்லை. முந்தைய ஆண்டுகளில் இடம் பெற்றிருந்த ஐ.ஐ.டி. கூட இந்த ஆண்டின் பட்டியலில் இடம் பெறவில்லை. 28 நாடுகளின் பல்கலைக்கழகங்களைப் பற்றி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஹார்வர்ட் பல்கலைக் கழகம் முதலிடம் வகிக்கிறதாம்.
சலோ அமெரிக்கா!
"அமெரிக்காவிற்கு மாணவர்களை அனுப்புதல்” செய்வதில் தொடர்ந்து இந்தியா ஏழாவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது. சீனா, தென் கொரிய நாடுகள் அடுத்த இடங்களைத்தான் பெறுகின்றன. சர்வதேச அளவில் உயர் கல்வியை நாடும் மாணவர்களின் முதல் சாய்ஸ் அமெரிக்காதானாம். உயர்தரக் கல்வியும் அதிக ஊதியம் தரும் வேலை வாய்ப்புகளும் தான் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
உ.பி.யிலிருந்து யு.எஸ். வரை
உ.பி.யைச் சேர்ந்த 52 வயதான ரேனு கட்டர் என்ற பெண்மணி அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக் கழகத்தின் தலைமை இயக்குனராக நியமிக்கப் பட்டிருக்கிறார். இது ஒரு சுலபமான பயணம் இல்லை. 1974களில் புதிதாக மணமாகி, தன் கணவருடன் வந்த புதிதில் தட்டுத் தடுமாறியே ஆங்கிலம் பேச முடிந்த இவர் தன் விடாமுயற்சியால் அங்கு மேன்மேலும் படித்து, பல பட்டங்களும் பெற்று, படிப்படியாக இப்போது இந்த உயர் பதவியை அடைந்திருக்கிறார். துவளாத மனமிருந்தால் வெற்றிகள் வரிசையாகக் காத்து நிற்கும் அல்லவா?
கல்வித்துறைக்காக 39 ஆண்டுகள் பணியாற்றிய கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் துணைவேந்தர் டாக்டர் என்.எஸ். ராமகவுடா 16 ஆண்டுகளாகத் தனது 15 லட்சம் ரூபாய் பணிக்கொடைக்கும் ஓய்வூதியத்திற்கும் அரசாங்கத்தின் கதவுகளைத்தட்டி ஒய்ந்துவிட்டார். இன்னும் பணம் கிடைத்தபாடில்லை.
75 வயதுக்காரர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் தேர்வு எழுதினார். ஒரு தாளில் மார்க் 25. மறு மதிப்பீடு கேட்டதில் மார்க் 56. வித்தியாசம் அதிகம் இருக்கவே, மீண்டும் ஒரு மதிப்பீடு செய்தார்கள். மார்க் பூஜ்யம். சரியாக மறுபடியும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அவர் போட்ட மனுவை ரூல் நம்பரையெல்லாம் காட்டி நிராகரித்து விட்டது பல்கலை. ஹைகோர்ட் இப்போது, மீண்டும் மதிப்பீடு செய்யத்தான் வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டது. நமது சந்தேகம் எல்லாம், பேப்பரே தொலைந்து விட்டிருக்கக் கூடும் என்பதுதான். பல்கலைகளின் குளறுபடிகள் நமக்கு அத்துபடி!
மரண அறிவிப்பு
அவிநாசி சக்திநகரைச் சேர்ந்த பழனிசாமி என்ற 75 வயது முதியவர் தான் சில நாட்களில் இறக்கப்போகிறோம் என்று உணர்ந்து, இறந்தபின் வெளியிட வேண்டிய பத்திரிகையைத் தன் புகைப்படத்தை ஒட்டி, தானே எழுதினாராம். இறக்கும் அன்று காலையில் தனது மகன்களை அழைத்துத் தன்னை ஹாலில் படுக்க வைக்கச் சொன்னதோடு, மனைவியிடமிருந்து மோதிரத்தையும் மகனிடமிருந்து கைக்கடிகாரத்தையும் வாங்கி அணிந்துகொண்டார். கொஞ்சம் பணத்தைத் தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டார். தலைமாட்டில் ஊதுபத்தி, மற்றும் அகல்விளக்கு ஏற்றிவைக்கச் சொல்லிவிட்டு தன் நெற்றியில் திருநீறு பூசச் சொன்னார். காலை எட்டு மணிக்கெல்லாம் அவரது உயிர் பிரிந்துவிட்டது. ஏதோ ஒரு அமானுஷ்ய சக்திதான் அவரைத் தனது மரணத்தை முன்கூட்டியே உணர வைத்திருக்க வேண்டும்�.
‘நாய்’கன்
செல்வகுமார் என்ற இளைஞர் 15 வருஷங்களுக்கு முன்னால் இரண்டு நாய்களை அடித்துக் கொன்று மரத்தில் தொங்கவிட்டாராம். அதற்குப்பிறகு சிறிது சிறிதாக அவரது கைகால்கள் முடங்கிக் காது கேட்காமல் போனதாம். இதற்குப் பரிகாரமாக ஒரு பெண் நாயை மணப்பெண்ணாக அலங்கரித்து சேலைகட்டி மாலை மாற்றி, திருமணம் புரிந்து கொண்டிருக்கிறார். நாயமான பரிகாரம்!
போதையூட்டும் செய்திகள்
உலக அளவில் இந்தியாவில்தான் அதிக அளவில் விஸ்கி விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டில் மொத்தம் 7.5 கோடி கேஸ்கள் (7.5 கோடி X24) விற்பனையாகியிருக்கின்றன. இதில் ஸ்காட்ச் விஸ்கியின் பங்கு 50 லட்சம் கேஸ்கள். இந்த விஷயத்தில் நாம் அமெரிக்காவையும் முந்திவிட்டோம். அமெரிக்காவில் பிசாத்து 4.5 கோடி கேஸ்கள் மட்டும்தான் விற்பனையாம். என்ன இருந்தாலும் காந்தி பிறந்த தேசம் ஆயிற்றே!
சென்னையில் தீபாவளி அன்று மட்டும் டாஸ்மாக் கடைகளில் 60 கோடிக்கு மது அமோக விற்பனை – செய்தி
மது, மற்றும் அசைவம் உட்கொள்வோர் புற்றுநோய் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகிறார்களாம். ஒரு நாளைக்கு 60 மில்லிலிட்டருக்கு மேல் மது அருந்தக்கூடாது. – ஒரு ஆய்வறிக்கை
ஜெர்மானிய சர்வதிகாரி ஹிட்லர் உலகத்தையே தன் கைக்குக் கீழ் கொண்டுவர நினைத்தார். அவர் தன்னிடம் வைத்திருந்த உலக உருண்டை இப்போது ஏலம் விடப்பட்டுள்ளது 1,15000 டாலர்களுக்கு. 1945ஆம் ஆண்டு ஹிட்லர் தன்னைச் சுட்டுக்கொண்டு இறந்தபிறகு, அவர் பதுங்கியிருந்த இடத்திலிருந்து பொருட்களை எடுக்கும்போது ஜான் பார்மசியான் என்ற ராணுவ வீரருக்குக் கிடைத்ததுதான் இந்த உலக உருண்டை. இத்தனை நாள் பரணில் இருந்த இந்த உருண்டையை தூசுதட்டி இப்போது தனது 91 வயதில் ஏலம் விட்டிருக்கிறார்.
கண்ணாடி முன்னாடி
பெண்கள் ஒரு நாளில் கண்ணாடி முன் நின்று எத்தனை முறை அழகு பார்க்கிறார்கள் என்று பிரிட்டனில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது (எதற்குத்தான் சர்வே என்று விவஸ்தை கிடையாதா?). பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 34 முறை கண்ணாடி முன்னால் நிற்கிறார்களாம். அதிகபட்சம் 71 முறை. தூங்கி எழுந்ததும் கண்னாடி முன்னால்தான் முதல் வேலையாக முழிக்கிறார்கள் என்று சொல்கிறது சர்வே. ஆண்களும் சளைத்தவர்கள் இல்லை. அவர்கள் 27 முறை கண்ணாடி பார்க்கிறார்கள். இருபாலாருமே 27 வயதில்தான் அதிக முறை அழகு பார்த்துக் கொள்கிறார்கள் 60 வயது மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை தங்கள் முகத்தை ஆடியில் பார்த்துக் கொள்கிறார்களாம்.
பேசுவது பெண்ணா?
இந்த ஆய்வின் முடிவைக் கேட்டால் ஆண்கள் வாயடைத்துப் போவார்கள். ஆமாம். ஆண்கள்தான் வாயாடிகளாம், , பெண்கள் இல்லை. வாய் ஒயாமல் பேசுபவர்களாம். அகில உலக அளவில் நடத்திய இந்த ஆய்வின்படி இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். தங்கள் மனைவிகளோடு, பெண் நண்பர்களோடு, கூட்டத்தில், பேசுகையில் அண்கள் அதிகமாகவே பேசுகிறார்களாம். நண்பர்களோடும், குழந்தைகளோடும் பேசும் போது பெண்கள் அதிகமாகப் பேசுகிறார்களாம். ஆனால் மொத்தத்தில் பெண்களைவிட அதிகம் பேசுவது ஆண்கள் தானாம். (எந்த மீசை வைத்த, முக்கியமாக மணமான ஆணாவது இதை ஒப்புக்கொள்வாரா?)
செவிக்கும் ஈயப்படும்
ஒரு கல்யாண சந்தடியில் சப்தத்திற்குக் குறைவேது?. அப்படிப் பட்ட சப்தம் நிறைந்த பல சூழ்நிலையிலும் நாம் எப்படி நமக்கு வேண்டியவர்களோடு உரையாடுகையில் அவர்கள் பேசுவதைக் கேட்க முடிகிறது? இப்படி எந்தவித ஆரவாரமான சூழ்நிலையிலும் நாம் உரையாட முடிவதற்கு இடதுபுற மூளைதான் சப்தம் நிறைந்த சூழ்நிலைகளிலிருந்து நமக்குத் தேவையானவற்றைப் பிரித்து நமக்குக் கேட்கும்படி செய்கிறதென ஜப்பான், கனடா, ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்களாம் (ஆனால் சில சப்தமற்ற சூழ்நிலைகளிலும் நான் கேட்பது உங்களுக்கு ஏன் காதில் விழுவதில்லை என என் சகதர்மிணி கேட்கிறாள்).
சாக்ரடீஸ் விருது
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விஸ்வநாதனுக்கு சர்வதேச சாக்ரடீஸ் விருது கிடைத்துள்ளது. "சர்வதேச ‘சாக்கிரடீஸ்’ விருது கிடைத்ததை என் வாழ்நாளில் கிடைத்த பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்" எனக் கூறும் விஸ்வநாதன் தமிழகத்தின் பல கல்லூரிகள் எஜுசாட் மூலமாக இணைத்திருப்பது தனது முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகக் கூறுகிறார்.
விடாக் ‘கண்’டர்
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பார்வையற்ற வாலிபர் புதேவ் சர்மா 15 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு பணி நிரந்தம் பெற்றார். உடல் ஊனமுற்றவர்களுக்கான இரண்டு சதவிகித இட ஒதுக்கீட்டின்படி தனக்குப் பணி நியமனம் நிரந்தரம் செய்யப்படாததை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமென நீதியின் கதவுகளை 15 ஆண்டுகளாக விடாமல் தட்டி நியாயம் பெற்றிருகிறார்.
சிவப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு
ஒரு இரவில் ஒரு விவாகரத்தும் இரண்டு திருமணங்களும். ராஞ்சி, நவம்பர் 8ந் தேதி இரவு. மணமுடிந்தவுடன் தான் வரதட்சணையாகக் கேட்ட சிவப்பு நிற பஜாஜ் டிஸ்கவர் மோட்டார் பைக்குக்கு பதிலாக கருப்பு நிற ஹீரோ ஹோண்டாவைப் பார்த்தவுடன் கோபம் கொண்ட மணமகன் ரியாஜ் மணமகள் ப்ர்ஹானாவை தலாக்கி விவாக ரத்து செய்தார். மணமகன் மீது கோபங்கொண்ட கிராம மக்கள் மணமகனையும் அவன் தந்தையையும் தாக்கி போலீஸில் ஒப்படைத்தனர். மணமகன் ரியாஜுடன் திருமணத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான யசின் அன்சாரி என்பவர் பர்ஹானாவை மணம்புரிந்து கொள்ள ஒப்புக்கொள்ள ஒரு விவாக ரத்தும் இரண்டு திருமணங்களும் இனிதே நிறை வேறின ஒரே இரவில்.
“
அருமை