செய்திகள் அலசல்

களிப்பும் சுளிப்பும்

வர்த்தகத் துறையில் இந்தியா பீடுநடை போடுகிறது என்பதற்கு இன்னுமொரு உதாரணமாக ஆசியாவிலுள்ள உயர்ந்த 100 நிறுவனங்களில் இந்தியாவில் மட்டும் 13 நிறுவனங்கள் இருக்கின்றன என அமெரிக்காவின் பிசினஸ் வீக் செய்த சர்வே கூறுகிறது. முதலிடத்தில் தைவானும், இரண்டாம் இடத்தில் ஜப்பானும் உள்ளன. அடுத்த படியாக இந்தியா, சீனாவையும் பின்னுக்குத் தள்ளி முந்தியிருக்கிறது நமக்கெல்லாம் பெருமைதானே!

***

ஐக்கிய நாட்டு மேம்பாட்டு அமைப்பு ஆண்டுதோறும் நடத்தும் மனித மேம்பாடுக் குறியீட்டில் இந்தியா 126வது இடத்திலிருந்து 128வது இடத்திற்கு இறங்கி இருக்கிறது.. எழுத்தறிவு, கல்வி, உடல் நலம், வாழ்க்கைத்தரம், ஆயுள் நீடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 177 நாடுகளில் நடத்தப்படுகிறது இந்த ஆய்வு பொருளாதர அடிப்படையில் இந்தியா பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அதனுடைய பயன்கள் சமமான அளவில் மக்களைச் சென்றடையவில்லை. மனித நல மேம்பாட்டில் பின் தங்கியிருக்கிறதென இந்தக் குறியீடு தெரிவிக்கிறது.

***

கொல்கத்தாவில் பிறந்த கவுதம் லெவிஸ், போலியோ தாக்கியதால் அவரது தாயாரால் அனாதையாக விடப்பட்டார். இவர் அன்னை தெரெசா ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து, தடைக்கற்கள் பல தாண்டி, ஐரோப்பிய விமான பைலட்டாக இருக்கிறார். இவர் மற்றவர்களைவிடத் திறமையாக விமானம் ஓட்டி பல விருதுகளை வென்றுள்ளார். இதைத் தவிர ஒரு பாப் இசைக்குழுவையும் நடத்திவருகிறார். ஊனம் என்பது மனதைப் பொறுத்ததுதான், உடலைப் பொறுத்ததில்லை என்பதற்கு கவுதம் லெவிஸ் ஒரு சான்று.

***

சாதரணமாக எட்டு வயதுச் சிறுவனென்றால் விளையாட்டில்தான் கவனமாக இருப்பான். ஆனால் பெங்களூருவைச் சேர்ந்த கரன் டிராவிட் சற்று வித்தியாசமானவன். பழைய கம்ப்யூட்டர் இருப்பவர்களிடம் அவற்றைத் தானமாகப் பெற்று அதன்மூலம் ஏழைச் சிறுவர்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தருகிறான். சிறு வயதில் பிச்சை எடுப்பதையும் வீட்டு வேலை செய்வதையும் வெறுக்கும் இவனுக்கு விடுமுறை நாட்களில் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள பழங்குடிச் சிறுவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதுதான் பொழுதுபோக்கு. ஆறு மொழிகளில் எழுதப் பேசத் தெரியுமாம் இவனுக்கு.

ஏழைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது இந்தச் இறுவனுக்கு? ஒரு முறை அப்பாவிடம், "ஏன் சில சிறுவர்கள் மட்டும் ஆங்கிலம் தெரியாமல் இருக்கிறார்கள்?" என்று கேட்டபோது அவர்களுக்கு ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கப் பண வசதியில்லை என்று சொன்ன வார்த்தைகள்தான் தூண்டுகோலாக அமைந்தன. அப்துல் கலாமின் ஆதரிசக் கனவுகளை இதுபோன்ற சிறுவர்கள் கட்டாயம் நிறைவேற்றுவார்கள்!

***

ரங்க ராசி

எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜனின் 80வது பிறந்த நாள் விழாவில் விழுந்த கிசு கிசு. ரா.கி.ர.விடம் யார் வேலை கேட்டு வந்தாலும் முதலில் அவர்களது பெயரைக் கேட்பாராம். இப்படித்தான் ஒருவர் தனது பெயர் ரங்கராஜன் என்றதும் ரா.கி.,"முதல்ல உன் பெயரை மாத்துப்பா, அப்புறம் நீ நல்ல கதை எழுதி பேர் வாங்கிடுவ, அது நான்தான்னு எல்லாரும் என்னைப் பாராட்டுவாங்க" என்றாராம். அந்த ரங்கராஜனும் திருமணத்திற்குப் பிறகு பெயரை மாற்றிக்கொண்டு கதை எழுத ஆரம்பித்தாராம். அவர் வேறு யாருமில்லை பிரபல எழுத்தாளர் சுஜாதாதான் (நன்றி: தினமலர்)

***

29.11.2007
என்ன இருந்தாலும் இது கொஞ்சம் ஓவராகத் தெரிகிறது. வேலைக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுப்பதற்கு விழா எடுத்து போட்டோ போட்டிருக்கிறார்கள். இதே ரீதியில் போனால் மாசாமாசம் சம்பளம் கொடுப்பதற்கு (ஏன்,லீவ் சாங்ஷன் லெட்டர் கொடுப்பதற்குக் கூட) இப்படி விழா நடத்தி விளம்பரம் செய்வார்கள் பொலிருக்கிறதே என்று அங்கலாய்க்கிறார், எதையும் லாஜிக்கல் எண்ட் வரை கொண்டு போய்ச் சிந்தித்துத் தள்ளும் லாஜிக் லாவண்யா.

***

தினம் தினம் பேப்பர்களில் வருகிற செய்திகளைப் பார்த்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது. நிர்வாகப் படிப்பான M.B.A. பயிற்சி தரும் உயர் கல்வி நிறூவனங்களில் (Indian Institute of Management) நுழைவுத் தேர்வில் மாணவர்களுக்குப் பதிலாக கெட்டிக்காரர்களை டம்மியாக அமர்த்தித் தர ஏஜென்ஸிகள் இருக்கின்றனவாம். பீஹார், உ.பி. மாநிலங்களில். இறுதித் தேர்வுக்கும் ஏற்பாடு செய்து விடுவார்கள் போல. இந்த உயர் படிப்பு “படித்து” வெளி வரப்போகும் மாணவர்கள்தாம் எதிர்காலத்தில் நிர்வாகிகளாக உயர் பதவிகளில் அமரப்போகிறார்கள். ஏற்கெனவே, நமது அமைப்புகளில் நேர்மை கொடி கட்டிப் பறக்கிறது. இனி கேட்கவே வேண்டாம்!

***

இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தன் மனைவி நிடாவிற்குப் பிறந்த நாள் பரிசாக ரூபாய் 240 கோடி மதிப்பு வாய்ந்த ஏர் பஸ் விமானத்தைப் பரிசாக அளித்திருக்கிறார். இதில் குளியல் அறை, படுக்கை அறை வசதி ஆகிய சகல வசதிகளும் இருக்கின்றனவாம். (எல்லாத்துக்கும் கொடுத்து வச்சிருக்கணும் என்று முணுமுணுக்கிறாள் என் தர்மபத்தினி).

***

ஒரு திருமணத்திற்கோ அல்லது ஒரு விருந்து அழைப்பிற்கோ செல்லுமுன்பு தங்களை ஒப்பனை செய்துகொள்வதற்கு சராசரியாக ஒரு மணி நேரமும் 12 நிமிஷங்களும் ஆகிறதாம். மொத்தத்தில் தங்கள் ஆயுள் காலத்தில் சுமார் மூன்று வருடத்தைப் பெண்கள் அவர்கள் வெளியில் செல்லும்போது தங்களை அலஙரித்துக் கொள்வதில் செலவிடுகிறார்களென மிகவும் உபயோகமான ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. (தகவல் டெய்லி டெலிக்ராப்).

(அப்படியே புடவைகளையும் புடவைகேற்ற மேட்சிங் ஜாக்கெட் செலெக்ட் செய்ய பெண்களுக்கு ஆயுளில் எவ்வளவு நேரமாகிறதென்று ஒரு ஆய்வு செய்யலாமே என்கிறார் வேலையில்லாத வெங்குசாமி)

***

லண்டன்: சாக்லேட்டுகள், இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடும் கர்பிணிப் பெண்களுக்குப் பெண் குழந்தை பிறக்குமாம். அதேபோல, சிப்ஸ், பர்கர் போன்ற ஸ்னாக்ஸுகளை விழுங்கினால் ஆண் குழந்தை பிறக்குமாம். தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று இந்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வின்படி, இனிப்புப் பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுவோருக்குப் பெரும்பாலும் பெண் குழந்தைகளே பிறப்பதாகவும், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடுவோருக்கு ஆண் குழந்தைகளும் பிறக்கின்றனவாம் (தகவல்.வெப்துனியா)

***

திருட்டு லேப்டாப்புடன் நடந்து கொண்டிருந்த வாலிபர் கைது. – செய்தி

“மடி”யில் கனம் இருக்கும்போது இப்படி “வழி”யில் பயமில்லாமல் போகலாமா?

“Headless chicken” பேச்சு புகழ் ரானென் சென்னை பாராளுமன்றம் எச்சரித்து விட்டு விட்டது. – செய்தி

நல்ல வேளை “தலை” தப்பியது. இல்லாவிட்டால்,He would have been in a soup.

***

இந்திய தொழிலியக்க வரலாற்றில் இது ஒரு முற்போக்கு நடவடிக்கை. ஒவ்வொரு துறையிலும் ஏகப்பட்ட சங்கங்கள் காளான்கள் போல முளைக்கின்றன. லெட்டர் ஹெட்டை வைத்துக் கொண்டு மிரட்டுகிற சங்கங்கள். நிர்வாகமே தங்கள் கைப்பாவையாகத் தோற்றுவித்து இயக்குகிற சங்கங்கள். இந்த நிலையில் தெற்கு ரயில்வே பெரும்பான்மை பலத்தை அறிவதற்காக ரகசிய வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. எட்டு சங்கங்கள் பங்கு கொண்ட இந்தத் தேர்தலில் 83% சதவீதம் ஊழியர்கள் வாக்களித்துள்ளார்கள். டிசம்பர் 3ம் தேதி முடிவு தெரியும். பெரும்பான்மை சங்கமே அங்கீகாரம் பெறும். இது போல் எல்லாத் துறைகளிலும் நடந்தால் இனிமேல் ஆளாளுக்கு யூனியன் பெயரைச் சொல்லிக் கொண்டு, டபாய்த்துக் கொண்டிருப்பது தவிர்க்கப்படும்.

***

பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க தனியார் துப்பறியும் நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இல்லை என்று உறுதி செய்து கொள்ளத் தக்க ஏற்பாடுகளைச் செய்வார்களா என்று கேட்கிறார் சினிக் சின்னசாமி. அட போங்க ஸார், Strong Political Will அரசாங்கத்திடம் இல்லாத வரை எல்லாம் வேஸ்ட் என்கிறார் அவர்.

***

பாலம் வேணுமா பாலம்

அமெரிக்கா விஸ்கோன்சினில் உள்ள கிகாப்பூ நதியின் மீதுள்ள பாலத்தை வாங்க வேண்டுமா? ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இந்தப் பாலம் கடந்த 31 ஆண்டுகளாக உபயோகிக்கப் படாததால் பழுதாகி நொறுங்கி நதியில் விழுகின்ற நிலையில் இருக்கிறதாம். அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து விற்கப் போகிறார்கள் ஒரு டாலருக்கு!

***

ஒரு சபிக்கப்பட்ட வைரம்

1857ம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் போது கான்பூர் இந்திரன் கோவிலிலிருந்து கொள்ளையடிக்கபட்டு பெர்ரிஸ் என்ற ராணுவ வீரனால் பிரிட்டிஷ் அரசுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பழுப்பு வைரம் இப்போது லண்டன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்படவிருக்கிறது.

இது ஒரு சபிக்கப்பட்ட வைரமாம். இந்த வைரத்தை வைத்திருந்த பெர்ரிஸ¤க்கு உடல் நலம் சீரழிந்தது. அதைப் பெற்றுக்கொண்ட அவருடைய மகன் தற்கொலை செய்துகொண்டு இறந்தான். ஸ்கார் ஒயில்டின் நண்பரான விஞ்ஞானி எட்வர்ட் ஹெரான் என்பவர் இந்த வைரத்தின் கடைசி சொந்தக்காரர். 1890வது ஆண்டு இந்த வைரத்தை அவர் பெற்றபோது அவர் பட்ட துயரங்கள் அளவற்றது.. அவர் தன் நண்பர்களுக்கு அதைக் கொடுத்தபோது அடுத்தடுத்து சோதனைகளாம். அதை அவர் ஒரு ஏரியில் வீசியெறிந்ததும் கூட மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவரிடமே வந்து சேர்ந்ததாம். ஏழாண்டுகளுக்கு முன்பு விட்டேகர் என்ற தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை பொறுப்பாளர் அதை ஒரு கருத்தரங்குக்கு எடுத்துச் சென்றபோது மேகங்கள் இருண்டு ஒரு பெரிய புயல் காற்றில் சிக்கித் தவித்தாராம். “அந்த அனுபவம் மிகவும் பயங்கரமானது, நாங்கள் பிழைத்ததே மறு பிறப்பு’ என்கிறார் அவர். இப்படி சாப வரலாறு படைத்த வைரம்தான் இப்போது சாதுவாக லண்டன் தேசிய அருங்காட்சியகத்தில் அமரப்போகிறது.

***

புகை பிடிப்பதால் புற்று நோய், இதயக்கோளாறுகள் தாக்கக் கூடும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அகில உலகளவில் அண்மையில் செய்த ஒரு ஆய்வின்படி இளமையிலேயே தலை வழுக்கை விழும் சாத்தியங்கள் அதிகமென்ற செய்தி சரும நோயின் ஆவணங்கள் என்ற பிரிடிஷ் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதைச் சொல்லும்போது புகை பிடிப்பது பற்றிய ஒரு உபரி செய்தி நினைவுக்கு வருகிறது. மத்திய அமைச்சர் அன்புமணி கேட்டுக்கொண்டதன் பேரில் நடிகர் விஜய் இனி திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேனென்று உறுதி அளித்து அவரின் சபாஷைப் பெற்றிருக்கிறார்.

About The Author