சென்னையில் ஒரு மழைக் காலத்தில்…

கொட்டும் மழையில் ரெயில்வே ப்ளாட்ஃபாரத்தில் ஷ்ரேயா ஆடிப் பாடுவது திரையில் பார்ப்பதற்கும், விசில் அடிப்பதற்கும் வேண்டுமானால் இனிக்கலாம்; நிஜத்தில் அல்ல! இதை மெய்ப்பிக்கும் வகையில் ஐந்து மாதங்களுக்கு முன் சென்னையை வாட்டி எடுத்த மழையில் ஏற்பட்ட என் கசப்பான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கடல் தாண்டி வந்தும் கண்டம் தாண்ட முடியாமல் நான் தவித்த கதை இது.

இனிக்கும் குரலில் எங்கள் விமானத்தின் வருகையை அறிவித்த பெண்மணி வெளியே வெள்ளக்காடாக உள்ளது என்று கூற மறந்து விட்டாள். இந்த மழையில் தரையிறங்கும் போதே எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. சஷ்டி கவசமும் அனுமன் சாலிஸாவும் மாறி மாறி வாயிலிருந்து கொட்ட, வெளியே கொட்டும் மழையே மேல் என்று நினைத்திருப்பார் என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பாட்டி.

சென்னை விமான நிலையத்தில் நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் நடந்தன. கூட்டம் கூட்டமாக பல வெள்ளைக்காரர்கள் வந்திருந்தார்கள். ஆங்காங்கே சில கறுப்பர்கள் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம் நாட்டின் எழிலைக் காண வந்துள்ளனர் என்று பெருமிதம் கொண்டேன். என் முன்னால் நின்று கொண்டிருந்த சர்தார்ஜியின் சோதனை முடிய, அவர் யாரையோ மொபைலில் "ஓய் தும் கஹான் ஹோ?" என்று கேட்டுக் கொண்டே கூட்டத்தில் மறைந்தார்.

தாடியும் மீசையுமாய் இருந்த என்னை பலத்த சந்தேகத்தோடு இமிக்ரேஷன் அதிகாரி பாஸ்போர்டில் இருந்த புகைப்படத்தோடு ஒப்பிட்டார். நான் உள்ளூர் ஆசாமிதான் என்று புரிந்தவுடன் என் பாஸ்போர்ட்டைத் திறந்து பார்த்தார். பிழையாக விலாசம் எழுதப்பட்ட கடுதாசி போல பல இடங்களில் பச்சை குத்தப்பட்டிருந்தது. கிடைத்த இடத்தில் அவரும் தன் பங்கிற்கு ஒரு குத்து குத்தினார்.

ஒரு பத்து மணி சுமாருக்கு என் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். பெற்றோரிடம் என்னை அழைக்க வர வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். என் பேச்சைக் கேட்டு அவர்கள் வராததால்தானோ என்னவோ மழை வானத்தைப் பிய்த்துக் கொண்டு கொட்டியது. டாக்ஸி ஏதும் கிடைக்குமா என்று தேடினேன். கறுப்புத் துண்டும், சந்தன குங்குமமும், கழுத்தில் துளசிமாலையும், வெறும் காலுமாக ஒரு டாக்ஸி டிரைவர் இருந்தார். "சாமி சரணம். எங்க போவனும் சார்?" என்று சென்னை வாசம் வீச பேசினார். "வில்லிவாக்கம்.." என்று சொல்லி முடிப்பதற்குள் என் பெட்டியை எடுத்துக் கொண்டு "வா.. சார் " என்று குடு குடுவென்று நடந்தார். டாக்ஸிக்கு சென்றோம்.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாஸடர் வண்டி கறுப்பும் மஞ்சளுமாக நின்று கொண்டிருந்தது. நம் ஊருக்கு வந்து இறங்குபவரின் முதல் செலவு பெரும்பாலும் மங்களகரமாக இந்த மஞ்சளில்தான் தொடங்கும்! (நம் ஊர் ஆட்டோவும் இதே மஞ்சள்). ‘மீட்டரா ஹீட்டரா’என்று தெரியாத வகையில் கொதித்துக் கொண்டிருந்தது. ‘ஃப்ளாட் ரேட்’ என்று கூறப்படும் முன்பே ‘நியாயமான(?) விலை’ என்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக 350 ரூபாய் கேட்க, வீட்டிற்குச் சென்றால் போதும் என்று ஒப்புக் கொண்டேன். பழங்காலத்து டேபிள்ஃபேனைப் போல சத்தம் போட்டுக் கொண்டு எங்கள் வண்டி ஓடத் தொடங்கியது. மன்னிக்கவும்.. நகரத் தொடங்கியது. மழையும்தான்!

வைப்பர்கள் மாறி மாறி வீச, பழைய வெள்ளம் போய் புது வெள்ளம் வருவது போல் கார் கண்ணாடியெல்லாம் ஈரமாகவே இருந்தது. நான் வசிக்கும் துபாயில் இந்த நேரத்தில் அதாவது பகல் 12 மணிக்கு ‘ஈ-காக்கா’ கூட வெளியே வராது. ஆனால் சென்னையில் இந்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் அலை மோத, எங்கு பார்த்தாலும் நெரிசல். ‘கத்திப்பாரா’வைத் தாண்டி ஊர்ந்து வந்தோம். அப்படியே நீச்சலடித்து நீச்சலடித்து கோயம்பேடு வருவதற்குள் பகல் 2 மணி ஆகிவிட்டது. கோயம்பேடு சிக்னலில் டிராஃபிக்கில் மாட்டிக் கொண்டோம்.

கோயம்பேடு சிக்னல் எப்படி இருக்கும் என்று உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஒழுங்கான டிவைடர் (divider) ஏதும் இருக்காது. பெரிய பெரிய பாறாங்கல்லைப் போட்டு வைத்திருப்பார்கள். போகும் வழி, வரும் வழி என்ற அடையாளம் எல்லாம் தெரியாது. சில ‘பல்லவன்’-கள் வந்த வழியிலேயே கூட திரும்பிச் செல்லும். கூவத்தின் நறுமணம் ஒரு பக்கம் வீசும். மறுபக்கம், பாதி இடிக்கப்பட்ட திருமண மண்டபம். இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இடத்தில் மழை காரணமாக வண்டியின் டயர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நின்று கொண்டிருந்தது. நாங்களும்தான்!

மூன்று நான்கு முறை சிக்னல் விழுந்த பிறகும் எங்கள் வண்டிக்கு இடம் கிடைக்கவில்லை.இடப்பக்கத்தில் குட்டை போல் தண்ணீர் தேங்கி டிவைடர் எல்லாம் காணாமல் போயிருந்ததால் யாரும் அந்த வழியாக முன்னேற விரும்பவில்லை. ஆனால் இரண்டு ஆட்டோக்கள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சென்றன. டாக்ஸி டிரைவருக்கு என் மீது கருணை ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் அவரும் அந்தக் குட்டையில் நீந்த முன் வரிசைக்கே வந்தோம். பின்னால் திரும்பிப் பார்த்தேன். இராமாயணத்தில் வரும் வானரப்படையைப் போல நீண்டு கொண்டே போனது. "அப்பாடியோ! நல்ல வேளை அதில் மாட்டிக் கொள்ளவில்லை!" என்று மகிழ்ந்தேன். சிக்னல் விழுந்தது. டாக்ஸி டிரைவர் கியரை போட்டு த்ராட்டிலை (throttle) மிதித்தார்.

‘வ்ர்ர்ர்ர்ர்’ என்று சத்தம் மட்டும்தான் வந்தது. வண்டி நகரவே இல்லை. மீண்டும் த்ராட்டில்.. மீண்டும் வ்ர்ர்ர்ர். இந்த முறை சற்று ‘தடதட’வும் கேட்டது. "இரு சார்.. சைலன்ஸருல கட்ட எதுனா மாட்டிருக்கும். கொஞ்சம் ரிவர்ஸ் எடுக்கறேன்" என்றார் டிரைவர். ஏழுமலையானை வேண்டிக் கொண்டு ரிவர்ஸ் கியரில் ஒரு அழுத்து அழுத்தினார். வண்டிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.. இப்போது மட்டும் நகர்ந்தது. பின்னால் இருந்த இண்டிகாவை நோக்கி. ‘டமார்’ சத்தம். ‘ச்ச்ச்ச்ச’ என்று முணுமுணுத்துக்கொண்டே டிரைவர் கொட்டும் மழையில் வண்டியை விட்டுக் கீழே இறங்கினார். வண்டியைச் சுற்றி முழங்கால் அளவுக்குத் தண்ணீர். பின்னால் நின்று கொண்டிருந்த வண்டிகளின் ஹார்ன் சத்தம் பீறிட்டது. ‘தம்’ கட்டி தண்ணீருக்குள் ஒரு முங்கு முங்கினார் டிரைவர். அவ்வப்போது மூச்சுத் திணறி வெளியே வருவார். மறுபடி மறைவார். எனக்கு இதில் அனுபவம் இல்லாததால் செய்வதறியாது உட்கார்ந்திருந்தேன்.

இதற்கிடையே இடிபட்ட இண்டிகா ஆசாமி ஓடி வந்து எங்கள் வண்டியின் சாவியை ‘அபேஸ்’ செய்து கொண்டு நாங்கள் என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் மீண்டும் தன் வண்டிக்குச் சென்று விட்டார். தண்ணீரில் மூழ்கியிருந்த டிரைவர் அந்த வேலையை விட்டுவிட்டு அவரிடம் சென்று கெஞ்ச வேண்டியதாயிற்று. நம் ஊரில் கடவுளுக்கு மதிப்பு இருக்கிறதோ இல்லையோ மாலை போட்டுக் கொண்டிருந்தால் நல்ல மதிப்பு உண்டு. இண்டிகா ஆள் சற்று நேரம் ஏதோ மண்டையாட்ட, எப்படியோ ஏதோ சொல்லி சமாளித்து டிரைவர் சாவியை வாங்கிக்கொண்டு வந்தார். மீண்டும் காருக்கடியில் செல்வதற்குள் அடுத்த ‘கண்டம் வந்தது’ டிராஃபிக் போலீஸ் உருவத்தில்.

"யோவ் என்னயா சாவிய வெச்சு வெளயாட்டு? வண்டிய எடுய்யா" என்று கத்திக் கொண்டே வண்டியை நோக்கி வந்தார். நான் அவரை சமாளித்துக் கொண்டிருந்த நேரத்தில் வெளியே இரண்டு பக்கமும் வாகனங்கள் எல்லாம் மழைக்கால விதிமுறைகளுக்கு உட்பட்டு எங்கள் மேல் தண்ணீரை அடித்துக் கொண்டே சென்றன. எங்கள் வரிசை மட்டும் நகராமல் நின்று கொண்டிருந்தது.

ஹார்ன் சத்தம் இப்போது கலிங்கத்துப் பரணி போர்க்களத்தை விட பலமானது. போலீஸ்காரர் ஒரு பக்கம் கத்திக் கொண்டிருந்தார். மறுபக்கம் டிரைவர் பரிதாபமாக தவித்துக் கொண்டிருந்தார். தாண்டிச் செல்லும் வாகனங்கள் திட்டின. போதாக்குறைக்கு மழை வேறு அடித்து நொறுக்கியது. எங்கள் அவலம் ரேடியோ ஸ்டேஷன் வரை தெரிந்துபோக, "என் குத்தமா உன் குத்தமா" என்று பாடினார் இளையராஜா. வேறு வழியில்லை.. நாமும் வெளியே வந்து பார்த்துதான் ஆகணும் என்று கதவைத் திறந்தேன். குறுக்கே ஒரு டிவிஎஸ் 50 வந்து நின்றது. பார்க்க மெக்கானிக் போல் இரண்டு பேர் இறங்கினர். அதில் ஒருவர் என்னிடம் நடந்ததை விசாரிக்க மற்றொருவர் காருக்கடியில் பாய்ந்தார். ரேடியோவில் இப்போது 3 மணி செய்திகளை வாசித்தனர்.

காருக்கடியில் சென்றவரை சற்று நேரம் காணவில்லை. திடீரென்று ‘கடலோரக் கவிதைகள்’ சத்யராஜ் மீனைப் பிடித்து வருவதைப் போல கையில் ஒரு பாறையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். நான் சொன்னேனே அந்த டிவைடர் பாறை – அந்த பாறைதான் அது. மழையில் அடித்து வரப்பட்டு குறிபார்த்து எங்கள் வண்டிக்கடியில் சிக்கிக் கொண்டதா அல்லது ஆபத்தான இடப்பக்கம் வழியாக வந்ததன் விளைவா என்று யோசிக்கத் திராணி இல்லை. அதுவரை அதட்டிக் கொண்டிருந்த போலீஸ்காரர் முகம் மாறி "சார் அத அப்படியே ஓரமா போட்ருங்க சார்" என்று குழைந்தார். ஆபத்பாந்தவனாய் வந்த அந்த இருவருக்கும் 100 ரூபாய் கொடுத்து அனுப்பினேன். இண்டிகாகாரரையும் கொஞ்சம் ‘கரெக்ட்’ செய்துவிட்டு அடுத்த முறை பச்சை விழுந்ததும் கிளம்பி விட்டோம். 4 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.

நெரிசல் மிகுந்த நகரங்களில் மழையை வேண்டினால் மட்டும் போதாது. அதை எதிர்கொள்ளத் தயாராகவும் இருக்க வேண்டும். இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சிக்னலில் ஏதோ அதிசயமாய் பெய்த மழையில் மாட்டிக்கொண்ட எங்களுக்கே இத்தனைத் தொல்லை. மிஞ்சிப் போனால் 25 கி.மீ தூரத்தில் உள்ள வீட்டிற்கு வர, 1500 கி.மீ . தாண்டி வந்த நேரத்தை விட அதிக நேரமானது; இண்டிகாவின் ‘பம்ப்பர்’ பாவம் அலங்கோலமாய்த் தொங்கியது; டாக்ஸி டிரைவர் வீடு வரும் வரை அந்த பீதியிலிருந்து மீளவேயில்லை. ("சார் எதுனா கம்ப்ளெய்ண்ட் கிம்ப்ளெய்ண்ட் பண்ணிடாத சார்" என்று பாவமாக கேட்டுக் கொண்டார்) அப்படியென்றால் ஒவ்வொரு வருடமும் ஆந்திரா, ஒரிசா மாநிலங்கள் மழையால் எத்தனை பாதிக்கப்படுகின்றன! வடிகால் அமைப்புகளை முறைப்படுத்த வேண்டிய கட்டாயமிருக்கிறது.

About The Author

3 Comments

  1. AKM(ABDUL KHADER MOHIDEEN) vetriyur

    பலே பலே கலக்கிப்புட்டீங்க போங்க…

Comments are closed.