சென்னா கட்லெட்

தேவையான பொருட்கள்:

வெள்ளைக் கொண்டைக்கடலை – ¼ கிலோ
கடலைமாவு – ½ கோப்பை
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 6
மிளகாய்த் தூள் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் – 1½ மேசைக்கரண்டி
சோம்பு – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
தண்ணீர், எண்ணெய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக் கடலையை 10 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து விட்டுப் பொடித்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சோம்பையும், சீரகத்தையும் சிவக்க வறுத்து, ஆற வைத்துப் பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், கொண்டைக்கடலை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, சோம்பு, சீரகப் பொடி, உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையுங்கள். தேவைப்பட்டால் சன்னா மசாலாப் பொடியும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

பிசைந்ததைச் சின்ன சின்ன உருண்டைகளாகப் பிடித்து, வடை போலத் தட்டிக் கொள்ளுங்கள். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு, தட்டிய கட்லெட்டை அதில் இட்டு இரண்டு பக்கங்களும் சிவந்து முறுகலான பின் எடுத்தால், சுவையான ‘சென்னா கட்லெட்’ தயார்! சாதத்துடனும் பரிமாறலாம். தக்காளி சாஸுடன் மாலை நேரச் சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author