சூர்யா (1)

மார்பில் வலித்தது அனுவுக்கு.

‘ம்மா’… என்று மனசுக்குள் அரற்றினாள். புரண்டதில் கட்டில் கிறீச்சிட்டது.

"என்னடி…" அம்மாதான் எதிரில் வந்து நின்றாள்.

மூன்று நாட்களாய்ப் பொங்குகின்ற துக்கம் மறுபடி பிரவகித்தது. அம்மாவின் கண்ணீர் அவள் தலையில் பட்டு… ஒரு துளி தெறித்தது.

“எத்தனை பிரசவம்… என் கையால பார்த்திருப்பேன்… எத்தனை குழந்தைகள் வளர்ந்து ஆளாக்கி… எல்லாம் இப்ப ஜாம்… ஜாம்னு இருக்கு… என் பேத்தி மட்டும் எனக்குத் தங்காமே…"

மூன்று நாட்களாக அம்மா இதையேதான் சொல்லிச் சொல்லி அழுகிறாள்.

என்ன செய்து… என்ன. பிறந்து பூமியைத் தொட்ட நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் ‘திரும்பப் போகிறேன்’ என்று அதுவும் சொல்லவில்லை. இவர்களுக்கும் முன்பே தெரிந்திருக்கவில்லை. தெரிந்துதான் என்ன செய்திருக்கப் போகிறார்கள்!

"அம்மா என்ன இது?" பாலு இவர்களின் அழகைக் குரல் கேட்டு வந்து விட்டான்.

"அவளைச் சமாதானம் பண்ணுவியா… அதை விட்டுட்டு இப்படியா… ச்சே … ஏய் … அனு… என்னம்மா இது… டாக்டர் சொன்னது மறந்து போச்சா… ? மாப்பிள்ளை எங்கே போனார்…?"

ராஜன் தோளில் டவலுடன் வந்தான். அழுதழுது அவன் கண்களும் இடுங்கியிருந்தன.

"ப்ளீஸ்… இவளைத் தனியா விடாதீங்க, இவ பக்கத்துலேயே கொஞ்சம் இருங்களேன்…"

அம்மா விலகி சமையலறைக்குள் போனாள். ராஜன் அனுவின் கட்டிலில் அமர்ந்து கொண்டான். அண்ணனின் கண்டிப்புக் குரலுக்குக் கட்டுப்பட்டோ… ராஜனின் அருகாமையோ… எதோ ஒன்றில் மனசு சமாதானமாகி… அனு மெல்ல அழுகையை நிறுத்தினாள்.

பாலு சமையலறைக்குள் நுழைந்தான். "என்னம்மா இது… உனக்கு என்ன ஆச்சு…"
"…போடா… உன்னால முடியும்… என் கண் முன்னால எத்தனை குழந்தைகளைப் பார்த்து…" முடிக்க முடியாமல் அரற்றினாள்.

"… கஷ்டம்தாம்மா… அதுக்காக… அனுவையும் சோகம் பாதிச்சு… அவளுக்கும் எதாவது ஆகணும்னு ஆசைப்படறியா…"

"…இப்படி… ஆயிருச்சே… எத்தனை… பூஜை… அபிஷேகம்…" மறுபடி மறுபடி நினைத்து அழுதாள்.

"…அம்மா… ப்ளீஸ்ம்மா… உன்னைக் கன்ட்ரோல் பண்ணீக்க… அட்லீஸ்ட்… அவளுக்கு எதிர்லயாவது துக்கத்தைக் காட்டாதே. ம்ம்… அப்புறம் யாராவது விசாரிக்க வந்தா… அனுவைத் தொந்தரவு பண்ணாதே. நீயே பேசி அனுப்பிரு… வர்றவங்க சும்மா இல்லாமே… எதையாவது சொல்லி துக்கத்தைக் கிளறிட்டுப் போயிடறாங்க…"

பாலு மெளனமாய் விலகி வெளியில் வந்தான். கிணற்றடி மேடையில் அமர்ந்து வாழை மரத்தையும்… அதன் அடியில் அதை ஒட்டியே வளரும் கன்றினையும் பார்வை தன்னிச்சையாய் நோக்க… உள்ளூர அழுதான். அனு… உனக்கா… இந்த சோகம்…!

தோளை யாரோ தொட்டார்கள்.

ராஜன்.

"…வாங்க…”

“அனு என்ன பண்றா…"

"தூங்கிட்டா…"
எதிரில் இருந்த ஸ்டூலில் அமர்ந்தான்.

"…ஆபிசுக்கு லீவு சொல்லியாச்சா…"

"…ம்…"

"டிக்கட் ரிசர்வ் பண்ணனும்… எட்டாம் தேதி நைட் டிரெயின்தானே…"

"…ம்…"

"…மழை இப்ப எப்படி… ஒரு தடவை மழை சீஸன்ல நான் அங்கே வந்துட்டு… ஹப்பா… திணறிப் போயிட்டேன்… தண்டவாளமே தெரியலே… டிரெயின்லாம் கேன்சல்…"

ராஜனின் பார்வை இலக்கின்றி அலைபாய்ந்தது.

"…உங்க ஆபீசுல… ஞாபகமறதியா… ஒருத்தர் இருப்பாரே… இன்னும் சர்வீஸ்லதான் இருக்காரா…"

பாலுவின் எந்த விசாரணைக்கும் பதில் சொல்லாத ராஜன் மெல்ல முனகினான்.

"…ஹரீஷ்னு பேர் வச்சோம். பொண்ணா இருந்தா… சூர்யான்னு…"

பாலு எதைப் பற்றிய நினைவு வரக் கூடாது என்று தவிர்க்க நினைத்தானோ… மிக இயல்பாக அதுவே மேலெழுந்து திணறடித்தது.

"…ஃபர்ஸ்ட் ஒரு டெலிகிராம் வந்தது. நானே அதுக்குள்ளே டிக்கட் ரிசர்வ்… பண்ணிட்டேன். அவசரம் அவசரமா போய் பாலபிஷேகம் பண்ணிட்டு வந்தேன். இங்கே வீட்டுக்குள்ளே நுழையும் போது… என் பெண்… எனக்கு இல்லே…"

"…வந்து… ராஜ்…"

"…நான் என்ன தப்பு பண்ணேன்… எனக்கு ஏன் இந்த தண்டனை… என்னை விடு. அனு… பாவம்… ஏங்கினா… அவளுக்காகவாவது…"

"…குழந்தை பிழைக்க சான்ஸே இல்லை… ஒரு மாசமோ… ரெண்டு மாசமோ… மேக்சிமம்… கொஞ்ச நாள்தான் இருக்க முடியும்னு… டாக்டர்தான் சொல்லிட்டாரே… இருந்து அவஸ்தைப் படறதுக்கு…"

"…முடியலே பாலு. மனசை சமாதானப்படுத்த முடியலே. எனக்கு ஏன் குறையோட குழந்தை பிறக்கணும். நல்லபடியா ஒண்ணு பிறந்து… அது உயிரோடு இருக்கக் கூடாதா…"

"ஊஹும்… இனிமே இருக்க வேண்டாம். கிளம்புங்க… வெளியில் எங்கேயாவது போயிட்டு வரலாம்…" என்றான் பாலு.

"… அவளைப் பாதிக்கப் போவுதுன்னு… நான் என்னோட ஃ பீலிங்சை மறைச்சுக்கிட்டு…"

பாலு விடாப்பிடியாய் ராஜனை எழுப்பினான்.

"… மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வரேம்மா…"

ராஜன் சுயநினைவிழந்தவன் போல பாலுவைத் தொடர்ந்தான்.  
(மீதி அடுத்த இதழில்)

About The Author

2 Comments

  1. kanmany

    நிறைய நாட்களின் பின் உங்கள் படைப்பு வந்ததில் சந்தோசம் ரிசபன்

Comments are closed.