சுல்தான் தி வாரியர் – ஒரு முன்னோட்டம்

"லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வருவேன்" என்று பாபா திரைப்படத்தில் நம் சூப்பர் ஸ்டார் சொன்னார். அவர் லேட்டஸ்ட்டாக எடுக்கப் போகும் அவதாரம் என்னவென்று தெரியுமா? அவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா இயக்கும் சுல்தான் தி வாரியர்தான். இயக்கம் மட்டுமல்ல, எண்ணம்-எழுத்து-ஆக்கம், ஏன் தயாரிப்பும் கூட சௌந்தர்யாதான்! இந்த ஒரு திரைப்படத்திலேயே சௌந்தர்யா எங்கேயோ போய்விடுவார் என்று கோடம்பாக்கம் மட்டுமல்ல, ஏன், இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பேச்சு! பின்னர் இருக்காதா என்ன, படத்தின் விநியோகஸ்தர்கள் ஹாலிவுட் வார்னர் ப்ரதர்ஸ் என்ற நிலையில்! எங்கு ஆரம்பித்தது இந்த "சுல்தான்"?

இயக்குனர் எஸ்.ஜே.சூரியாவின் "அன்பே ஆருயிரே" திரைப்படம் ஞாபகம் உள்ளதா? அதில் நீல நிறத்தில் உடை அணிந்து கொண்டு நினைவுகள் எல்லாம் அலைவது? கம்ப்யூட்டர் க்ராபிஃக்ஸ் மூலம் அதெல்லாம் செய்தது சௌந்தர்யாதான். அதன் பின்னர், தன் சொந்த முயற்சியில் ஆகர் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் துறையில் இன்னும் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார்.

ரஜினிகாந்த் சிவாஜி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயம், கோடம்பாக்கத்தில் நிறைய பேச்சு அடிபட்டது. கார்ட்டூன் வடிவத்தில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் சில விளம்பரங்களில் ரஜினி தோன்றுவார் என்றார்கள். இன்று வரை அப்படி ஒன்றும் வந்ததாக தெரியவில்லை.

ஆனால், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு சௌந்தர்யாவிடமிருந்து அறிவிப்பு வந்தது – தன் தந்தையை வைத்து ஒரு முழு நீள அனிமேஷன் திரைப்படம் செய்யப்போகிறார் என்று. சில மாதங்களிலேயே பிரேசிலுக்கு சென்று அனிமேஷன் வேலைகளில் மூழ்கினார். திரும்பி வந்ததும், இப்படத்திற்காக ஆகர், வார்னர் சகோதரர்களுடன் கை கோத்துக் கொண்டதைத் தெரிவித்தார். பின்னர், அட்லாப்ஸும் (அன்று "அட்லாப்ஸ்", இன்று "பிக் பிக்சர்ஸ்") சேர்ந்து கொள்ள, திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பது தெரிய வந்தது. படத்தின் முதல் ட்ரெய்லரும் வெளிவந்தது.

http://www.youtube.com/watch?v=Jzk63gUkFV8

ட்ரெய்லரைப் பார்த்து விட்டீர்களா? உடனே இப்படத்தின் இணையதளத்தையும் பார்த்துவிடுங்கள். ரஹ்மானின் டைட்டில் ட்ராக்கையும் கேட்டுவிடுங்கள் – பிரமிப்பு அடையுங்கள்!

http://www.sultanthefilm.com/

நிறைய விதத்தில் இந்தத் திரைப்படம் நமக்கெல்லாம் ஒரு புது அனுபவமாக இருக்கப் போகின்றது. ஒரு இந்திய திரைப்பட நடிகரை அனிமேட் செய்வது இதுதான் முதல் முறை. ‘போலார் எக்ஸ்ப்ரெஸ்’ என்ற ஆங்கில திரைப்படத்தை பார்த்திருக்கின்றீர்களா? அதில் ஐந்து வேடங்களில் டாம் ஹேங்ஸ் நடித்திருப்பார் – எல்லா கதாபாத்திரங்களும் அனிமேஷன் வடிவில்தான். அது போல, இந்தியாவில் முதல் முயற்சி இது
.
அனிமேஷன் திரைப்படங்களைக் கையாளுவதற்கே நிறைய திறமை தேவை. ஏன்? அனிமேஷன் என்றால் என்ன? பயப்பட வேண்டாம், பெரிய லெக்சர் எல்லாம் தரப்போவதில்லை. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

இந்த படத்தில், ஒரு பந்து மேலும் கீழும் குதிப்பது தென்படுகின்றது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், நம் கண்களுக்கு அப்படி குதிப்பது ஒரு வீடியோ போலத் தெரிகின்றது. உண்மையில், இங்கு இருப்பது ஆறு புகைப்படங்கள், ஒரு வீடியோ அன்று.

Frames

இந்த ஆறு புகைப்படங்களை வரிசையாக, வினாடிக்கு பத்தென்று நம் கண்களுக்கு காண்பித்தால், அது ஒரு வீடியோ போலத் தெரியும். கோளாறு வேறெங்கும் அல்ல, நம் கண்களில்தான். அந்த கோளாறு இல்லை என்றால், நம்மால் தியேட்டரில் அமர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்க்க முடியாது. வெறும் ஸ்டில் ஃபோட்டோக்கள்தான் தெரியும். சரி சரி, சுல்தான் திரைப்படத்திற்கு வருவோம்.

அனிமேஷன் திரைப்படங்களுக்கு அனேக எடுத்துக்காட்டுகளைத் தரலாம். ‘நீமோ’, ‘ஷ்ரெக்’, சமீபத்தில் வந்த ‘கோரலைன்’ எல்லாவற்றிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நகைச்சுவை, அன்பு, பயம், வீரம் என்று அத்தனை உணர்ச்சிகளையும் அனிமேஷனில் அழகாய்க் காட்ட திறமை வேண்டும். ஆனால், சுல்தான் இதற்கெல்லாம் ஒரு படி மேல் – ஒரு நிஜ மனிதரின் செயல்களையும், குறிப்பாக நாம் போற்றும் அவர் ஸ்டைலையும் அனிமேஷன் வடிவில் தரப்போகின்றது. பிரம்ம பிரயத்தனம்தான்!

அது மட்டுமல்ல, சுல்தான் ஒரு 3D திரைப்படம் என்று அதன் இணையதளம் சொல்கிறது. மை டியர் குட்டிச்சாத்தான் திரைப்படத்தை மறக்க முடியுமா! நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு 3D திரைப்படம். 3D என்றால்? சரி, வேண்டாம், பிழைத்துப் போங்கள். முன்பொரு காலத்தில், இரண்டு காமராக்களை தொண்ணூறு டிகிரியில் வைத்து ஒரே காட்சியை படம் பிடித்து, நம் கண்களுக்கு திரைப்படங்களில் 3D வியூகத்தை ஏற்படுத்துவது வழக்கம். ஆனால், இன்று கம்ப்யூட்டர் க்ராபிஃக்ஸ் வளர்ச்சியால், இரண்டு காமராவெல்லாம் தேவையில்லை. கோல்மால் செய்து நம் கண்களுக்கு திரைப்படத்தை 3D வடிவத்தில் கொடுத்துவிடலாம். பாருங்கள், நம் கண்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றார்கள்! ஸ்டில் படங்களை காட்டி வீடியோ என்கிறார்கள், க்ராஃபிக்ஸ் மூலம் 3D எஃபெக்ட்ஸ் தந்து விடுகின்றார்கள். பாவம்! "கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்" என்பது அந்த காலம். இன்றோ, கண்ணையே ஏமாற்றியாகிவிட்டது!

சரி, சரி, மீண்டும் சுல்தான். படத்தின் கதை என்ன? ரஜினிகாந்த் ஒரு சாகச மனிதராகத் தோன்றுகின்றார். ஊரில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் எதிர்த்துப் போராடி கடைசியில் வெற்றி பெறுகின்றார். மக்களை நல்வழியில் செலுத்துகின்றார். யாருக்குமே தெரியாத கதையை உங்களுக்கு சொல்லியிருக்கின்றோம். அதனால், மூச்ச்ச்ச்!

சமீபத்தில் படத்தின் கதாநாயகிக்கு குரல் யார் கொடுப்பார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது. இலியானா என்றார்கள், இல்லை – சென்னை-28ல் நடித்த விஜயலக்ஷ்மி, இயக்குனர் அகத்தியனின் மகள். தமிழ், ஆங்கிலம், ஹிந்து, தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். திரைப்படம் எப்பொழுது வெளிவரும் என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஆனால், படத்தின் இசை வெளியீட்டிற்காக அனேகமானோர் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நண்பன் ஒருவனுடன் சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தபொழுது, சென்ற வருடம் வெளியான இத்திரைப்படத்தின் இரண்டாம் ட்ரெய்லரைப் பற்றி அரட்டை அடிக்க நேர்ந்தது. கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் (வீடியோ கேம்ஸ்) "ப்ரின்ஸ் ஆஃப் பெர்ஷியா" என்றொரு பிரசித்தி பெற்ற விளையாட்டு உண்டு. அதனின் சாயல் சுல்தானில் அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டினான்.

யாரங்கே, ரஜினி திரைப்படத்தில் குற்றம் சொல்பவன்! சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டேன். அந்த ட்ரெய்லரை நீங்களும் பார்த்துவிட்டு "நன்றாக உள்ளது!" என்று சொல்லுங்கள்.

http://www.youtube.com/watch?v=EBYKprLi0hM&feature=related

பார்த்துவிட்டீர்களா? எண்ணங்கள் பின்னே சென்று, எனக்கு படையப்பாவில் சூப்பர்ஸ்டார் சொல்லும் வசனம்தான் காதில் ஒலிக்கின்றது.

இது சும்மா ட்ரெய்லர்தாம்மா! மெயின் பிக்சர நீ இன்னும் பார்க்கல. பார்த்தே.. ஆடிப்போயிடுவ!!

About The Author

2 Comments

  1. madan

    வெர்ரிகோட்
    ஒரெ ஒரு நசதிரம் மட்டும் வ்ருடதில் ஒருமுரை தன் வருமம்

Comments are closed.