சுண்டாட்டம் – இசை விமர்சனம்

புது முகங்கள் நடிக்கும் படம். விளையாட்டுதான் கதைக்கரு என்று தலைப்பே சொல்லி விடுகிறது. பிரம்மா.ஜி.தேவ் இயக்கத்தில் பிரிட்டோ, எஸ்.என்.அருணகிரி என இரண்டு இசையமைப்பாளர்களின் கூட்டிசையில் பாடல்கள் எப்படி வந்திருக்கின்றன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

அடி உன்னாலே…

நாயகியால் தன்னுள் ஏற்பட்ட மாற்றங்களை நாயகன் பாடும் பாடல். கார்த்திக் பாடியிருக்கிறார். அழகாகக் காற்றில் சிறகடிக்கிறது ஆல்பத்தின் முதல் பாடல். ஆர்ப்பாட்டமான இசைக் கருவிகளை மெல்லிசைக்குப் பயன்படுத்தியிருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. ரசித்த வரிகளில் சில:

"யாருடன் பேசும் போதும் உன் கொலுசின் ஓசை கேட்கும்
தீராத போதை தந்தாயே!
காதல் மழையாய்ப் பொழிகிறதே! – என் நெஞ்சில்
கவிதை புயலாய் வீசியதே!"

காதல் வரும் வரை

இது நாயகியின் காதல் நிலை சொல்லும் பாடல். சைந்தவியின் குழையும் குரல் பாடலுக்குக் கூடுதல் பலம். இடையிசையில் வயலினின் ஆதிக்கம் சற்றே அதிகம். கலவையான இசைதான், இருந்தும் வரிகளும் குரலும் அதை மறந்து பாடலைக் கவனிக்க வைக்கின்றன.

கவனித்த வரிகளில் சில:

"நான் மட்டும் தனியாக,
நிலவுக்குத் துணையாக,
நான் மட்டும் உனைப் பார்க்கிறேன்."

கண் கொண்டு

இசையமைப்பாளர் பிரிட்டோவே எழுதி, பாடியிருக்கும் சோகப் பாடல். மெலிதான, அதிகம் உறுத்தாத இசை, சோகம் சொல்லும் குரல் என நன்றாகத்தான் இருக்கிறது. அதில் இரு வரிகள்:

"கண்ணாடி போல் சில்லானதே மனம், உன்னைக் கண்டு எந்நாளுமே
உயிரோடு என்னைக் கொல்லுதடி காதல்!"

நறுமுகையே

கிதாரின் லேசான மீட்டலுடன் ஆலாப் ராஜுவின் மயக்கும் குரலோடு தொடங்குகிறது பாடல். மெலிதான டிரம்ஸ் பீட்கள் தொடர, நம்மைக் கட்டிப்போடுகிறது. காதலின் நடைமுறை விவரிக்கும் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார். இறுதியில் வரும் மதுபாலாவின் குரலும் அருமை! கைப்பேசிகளில் ரீங்காரமாக இதை எதிர்பார்க்கலாம். சில வரிகள்:

"காதல் ஒரு வன்முறைதானே அன்பே என் அன்பே!
இது கடவுளின் செய்முறை அல்ல அன்பே!
கனவினால் இரவினைத் தின்றாய் அன்பே என் அன்பே!
உன் காதலால் என்னையும் கொன்றாய் அன்பே!"

சுண்டாட்டம் – சுற்றி வரும்!

About The Author