சுண்டல்

எவ்வளவு அழகா அலை வந்து போச்சு! வரும் போது விட்டுட்டுப் போன எல்லாத்தையும் திரும்ப எடுக்கற மாதிரி உடனே திரும்ப வரதுமா எவ்வளவு அழகு! இல்லை.. சின்ன சின்ன துகளா எவ்வளவு அழகா மணல் கொட்டி கிடந்தது! அதுவே ஈரமா இருந்தா எப்படி இணைஞ்சு போகுது, ரசிக்க இவ்வளவு விசயம் இருந்தாலும், இதோ இப்போ வந்துட்டேன்னு, அவ சொல்லி இப்ப வரைக்கும், அவ சொன்ன ‘இப்போ’ மட்டும் வரவே இல்லை..!!.

"என்னதான் நெனச்சிகிட்டு இருக்கா அவ, இன்னும் பத்து நிமிஷம் பார்க்க வேண்டியதுதான், இல்லைன்னா போய்ட்டே இருக்கணும்".. இது போல் பல பத்து நிமிடங்களை நான் ஏற்கெனவே கடந்து இருந்த போதுதான், "சார் சுண்டல்", சப்தம் கேட்டு திரும்பினேன். அவன் என் முகத்தைப் பார்த்தே "அக்காவுக்கு வெயிட்டிங்கா சார்..?" அவனுக்குத் தெரிந்த வியாபார நிமித்தமாகப் பேசிவிட்டு பதிலைக் கூட எதிர்பாராமல், இரண்டு பொட்டலங்களைக் கையில் தந்தான். மேலும் ஒரு தாளை எடுத்து இரண்டாகக் கிழித்து கைகளில் ஒட்டி இருந்த மணலைத் துடைத்தான்.

தனிமையில் செய்யும் காரணமற்ற காரியங்களைப் போல்தான் நானும் சுண்டலை சாப்பிட்டுக் கொண்டே சுற்றி இருந்த காகிதத்தைப் படித்தேன். அதில் ஒரு பாதி கதை இருந்தது. முழுதும் படித்து விட்டு வேகமாக, இன்னொரு பொட்டலத்தையும் பிரித்தேன். அதில்முடிவு இருந்தது. ஆனால் தொடர்ச்சி இல்லை. எங்கு சென்றதெனப் புரியவில்லை. காத்திருப்பதையும் மறந்து குழம்பி போய் இருந்தேன்.

கதையை மீண்டும் ஒரு முறை படிக்க துவங்கினேன்

*****

அவன் வழக்கம் போல் தான் அமரும் இடத்தில் இருந்த காய்ந்த ரோஜாவைத் தட்டி விட்டு கையில் புதிதாய் ஒன்றை ஏந்தி இருந்தான். தரையில் கிடந்த ரோஜாவை உற்றுப் பார்த்தான். தலை நிமிர்ந்து ஒரு முறை வானம் பார்த்தான். அந்த வீட்டின் அசைவுகளையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். அவள் வீட்டை நோக்கி ஒருவன் நடந்து வரவும் அவன் உன்னிப்பானான். வருபவன் அவளுடைய நண்பனாய் இருக்க வேண்டும், சில காலமாய் அவள் வீட்டிற்கு இந்த நேரத்தில் வந்து கொண்டிருக்கிறான், எப்படியும் அவனை வரவேற்க அவள் வெளியே வருவாள், நம்பிக்கையுடன் அவனையே கவனிக்க..

அவனும், இவனை சற்று வித்தியாசமாய் பார்த்துக் கொண்டே, அவள் வீட்டின் கதவைத் தட்டினான்.

அவள் வரவும், கேட்டான். "யார் அவன்?.. ஒரு வாரமாய் நானும் இவன இங்கு பார்த்திட்டு இருக்கேன்!"

அவள் ஒருமுறை வெளியே அவன் இருந்த இடத்தைப் பார்த்துக் கொண்டே, "நீயாவது பரவா இல்லை.. ஒரு வாரமாத்தான் பார்த்துட்டு இருக்க.. நான் அவன சின்ன வயசில இருந்தே பார்த்துட்டு இருக்கேன். எனக்கு எப்படி இருக்கும்..?"

"என்ன காதலா?"..

"ஆமா, டூயட் பாடிட்டு இருக்கும் போதுதான் நீ வந்திட்ட.. அவனப் பார்த்த இல்ல.. அவனும், அவன் டிரஸ்சும்..?"

அவள் அவனைப் பற்றி விவரிக்காததை ஞாபகப்படுத்திக்கொண்டே சோஃபாவில் அமர்ந்தாள்.

அவன் முகத்தில் வசீகரத்திற்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லை. முக்கால் பாகம் முடியே மறைத்திருக்கும்.நெற்றி வரை விழும் முடியும், தாடியுடன் இணைந்த மீசையுமாய், இடைப்பட்ட பகுதி மட்டுமே அவனை அடையாளம் காட்டியது. அனைத்தையும் நீக்கினாள். பழக்கப்பட்டவரே அடையாளம் காண்பது கடினம் என்பது போல் இருந்தான். காற்று அடிக்கையில் அவனுக்கு முன் அவனை, அவன் ஆடை இழுத்து செல்வது போல் உடை அணிந்திருந்தான்.

அவள் மேற்கத்திய நாகரீகத்தின் உச்சத்திலும் இல்லாமல், கீழேயும் இல்லாமல், இடைப்பட்டு இருந்தாள். தான் நாகரீகமாக இருக்கிறோம் என்று எண்ணும் அளவு அவளுடைய நாகரீகம் இருந்தது..

****
வழக்கம் போல் தான் அமரும் இடத்திற்கு வந்த போதுதான் அவன், அவளுடைய நண்பன் அங்கு அமர்ந்திருந்ததைக் கண்டான். குழப்பத்துடன் பார்க்க, அவன் சினேகமாய், ‘வா’ என்பது போல தலை அசைத்தான்..

மரியாதை நிமித்தங்கள் முடிந்ததும், அவன் நேரடியாய் விஷயத்திற்கு வந்தான். "அவள உனக்குப் புடிச்சிருக்குன்னு நினைக்கிறேன், அவ கிட்ட நேரடியா சொல்ல வேண்டியதுதானே..?"..

"நான் சொல்லி ரொம்ப நாள் ஆச்சு, முடியாதுன்னு சொல்லிட்டா.."

"சரி அப்போ, விட்டு விட வேண்டியதுதானே..? தெய்வீகக் காதல்னு சொல்ல போறியா..?"

"இல்ல, ஒரு ஒருத்தருக்கும் ஒரு மாதிரி, எப்பவாவது காட்டுப் பகுதியில போய் இருக்கீங்களா..? நடக்கிறதால ஏற்பட்ட அந்த பாதையப் பார்க்கும் போது ஒரு உணர்வு ஏற்படும்; இல்ல எங்கயோ கேட்கிற ஒரு மணி சப்தம், கண்ண மூடி ஏதோ குகைக்குள்ள போற மாதிரி, அது நமக்குள்ளையும் பரவும்; ஆனா புரியாது, யோசிக்கவும் முடியாது. அது மாதிரி உணர்வுதான் அவகிட்ட எனக்கும்.."

"தப்பா எடுத்துக்காத, எதனால இப்படி ஒரு மாதிரியா யோசிச்சு, உங்கள நீங்களே ஒரு வட்டத்துக்குள்ள அடைச்சுக்கிறீங்க. சுதந்திரமா இருங்க.."

"மன்னிக்கனும், நீங்க எத சுதந்திரம்னு சொல்றீங்கன்னு புரியல. இப்போ உங்களுக்கு கார்ல போற உணர்வு சுதந்திரம்னா.. கார் இல்லாத போது நீங்க சுதந்திரம் இல்லாம இருக்கீங்கன்னு அர்த்தம்.. நீங்க உங்கள சாராம வேற எதையோ சார்ந்து இருக்கிறதுக்குப் பேர் சுதந்திரம் இல்ல. நான் என் வரைல ரொம்ப சுதந்திரமா இருக்கேன்.."

"சரி.. அது எப்படியோ போகட்டும். அவளோட சிந்தனை, செயல் எல்லாமே உனக்கு எதிர் திசையில் இருக்கு. அப்படியே அவ சம்மதிச்சாலும் இது எப்படி ஒத்துப்போகும்னு நம்பற..??.."

"உண்மைதான். இப்போ நீங்க வந்து என்கிட்ட விசாரிக்கிறீங்க. அதில இரண்டு விதமான உணர்வுகள் இருக்கு. ஒன்னு என் மேல உங்களுக்கு ஏற்பட்ட பரிதாபம், இன்னொன்னு இதால உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை வந்திடாதுங்கிற நம்பிக்கை.. அவளுடைய திசைனு நீங்க சொல்றதும் அதான். தன்னத் தானே பாதுகாப்பா வெச்சிட்டு அதுக்குள்ள எவ்வளவு இன்பம் காண முடியுமோ அதுக்கு முயற்சி பண்றது… அவ என்கிட்ட முன்ன விட ரொம்ப பாதுகாப்பாவும், ஆனந்தமாவும் இருப்பா.."

"அவள மாத்திடுவேன்னு சொல்றியா..?"

"இல்ல.. ஒருத்தர் இன்னொருத்தருக்காக மாறிட்டேன்னு சொல்றது ஒரு பொய். சந்தர்ப்பம் பார்த்து காத்து இருக்கார்னுதான் அர்த்தம். வேணும்னா உணர்த்தலாம். அதுவும் வலிக்காம உணர்த்தறது கொஞ்சம் கஷ்டம்.."

"ம்ம், சரி அவ ஒத்துக்குவான்னு நீ நினைக்கிறியா..?"

"தெரியல..ஆனா எனக்கு அவளப் புடிச்சிருக்கு.."

"எவ்வளவு நாள், இப்படியே இருப்ப..?"

"அதுக்கும் தெரியல. ஆனா இருப்பேன், எனக்கு இந்த உணர்வு மழுங்கிற வரைக்கும், ஆனா கம்மியாகுமான்னு தெரியல.."

*****

அதுதான் சரி. அவன் அவளைக் காதலிக்கவே இல்லை.. இதை அவனிடம் இன்று சொல்ல வேண்டும்.. அவன் கிட்டத்தட்ட நேற்றைய நிகழ்வுகளில் இருந்து மீளாமல் இருந்தான், அவனுடைய பதில்கள் சில சமயம் நியாயமாகவும் சில சமயம் முட்டாள்தனமாகவும் தெரிந்தது. தேவை இல்லாமல் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோமோ என்றும் தோன்றியது..

*****

அங்கு வாடிய ரோஜா மட்டும்தான் இருந்தது, அவனைக் காணவில்லை.. அவளும் அதைக் கவனித்தாள்.

"நீ ஒரு நல்லவனை இழந்துவிட்டாய்.." அவன் சொல்லி விட்டு அவள் பதிலை எதிர்பாராமல் வீட்டிற்குள் சென்றான்…

நிறைவு…
இப்படிக்கு.

****

இப்படித்தான் இருந்தது அந்தக் கதை, "அவன் அப்படி என்ன சொல்லி இருப்பான்..? அவன் திரும்ப வராமல் இருக்கும்படி..??…அவந்தான் மணி சப்தம், அது இதுன்னு ஏதேதோ சொல்லி இருக்கானே! அப்பறம் எப்படி அவன் அவளக் காதலிக்கவே இல்லைனு சொல்லி இருக்கான்..? ஒன்னுமே புரியல.."

அப்போதுதான் என்னுடைய செல்ஃபோன் மணி அடிக்கும் ஓசை கேட்டது. அவள்தான்! அவளைத் திட்ட வேண்டியதை மறந்துவிட்டு நான் இருக்கும் இடத்தைத் தெரிவித்துவிட்டு மீண்டும் கதைக்குள் வந்தேன்…

ஒரு வேளை இப்படி இருக்குமோ..?!

About The Author