மஹாராஷ்டிராவில் துளஜாபூர் என ஓர் ஊர் இருக்கிறது. ஷோலாப்பூர் அருகில். அங்கிருந்து வண்டியில் பயணித்தால் சுமார் ஒரு மணி நேரத்தில் போய்விடலாம். அங்கு அருள்பாலிப்பவள்தான் சிவாஜி பூஜித்த அன்னை பவானி!
மாமன்னன் வீர சிவாஜிக்கு அவர் தாய் சிறு வயதிலிருந்தே பக்தியையும் வீரத்தையும் ஊட்டி வளர்த்தார். அவரது தேவியான பவானி கோயிலுக்கு தினமும் இரு வேளையும் அவர் சிவாஜியை அழைத்துச் சென்றதால் சிவாஜிக்கு அந்த அம்மன் மேல் அளவு கடந்த பக்தி. முகலாயர்கள் போர் தொடுத்த வேளையில் அவர் இந்தத் துளஜாபூர் பவானி தேவியை மனமுருகப் பிரார்த்தித்தபோது அம்பாளே அவருக்கு வீர வாள் கொடுத்ததாக வரலாறு. அன்றைய தினத்திலிருந்து சிவாஜி வாயில் எப்போதும் ‘ஜெய்பவானி’ எனும் மந்திரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
துளஜாபூர் பவானி கோயில் சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மிகப் பெரியதாக இருக்கிறது. உள்ளே படியேறிப் போக வேண்டும். பின், கோபுர தரிசனம் கண்டு உள்ளே சென்றால் ‘கல்லோலா’ எனும் கோயில் திருக்குளம் இருக்கிறது. அருகில் இன்னொரு குளம் கோமுகத் தீர்த்தம் எனும் பெயரில் இருக்கிறது. பெயருக்கேற்ப இந்தக் குளத்தில், நீர் பசுவின் வாயிலிருந்து கொட்டுவது போன்று வடிவமைக்கப் பெற்றுள்ளது. கோயிலில் கூட்டம் எப்போதுமே அலைமோதுகிறது.
இந்த பவானி தேவியைப் பற்றி ஒரு மராட்டியர் சொன்ன கதை.
அனுபூதி என்று ஒரு பெண் இருந்தாள். பவானியின் தீவிர பக்தை. அவளுக்கு ஒரு குழந்தை இருந்தது. நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த குடும்ப வாழ்வில் திடீரென்று பேரிடி. அனுபூதியின் கணவன் இறந்து போனான். தன் குழந்தையை ஒரு முனிவரிடம் ஒப்படைத்துவிட்டு அனுபூதி காட்டில் சென்று தவம் செய்கிறாள். கண்களை மூடியபடி அவள் தவம் செய்யும் அழகை அரக்கன் ‘குக்குரா’ ரசிக்கிறான். அவளைக் கவர முயல்கிறான். அன்னை பவானி தன் பக்தையைக் காக்க ஓடி வருகிறாள். குக்குராவை அழிக்கிறாள். அனுபூதி கண்கள் கலங்க நன்றி தெரிவித்து ஒரு வேண்டுகோள் விடுக்கிறாள்.
"பவானி அன்னையே! எனக்குக் காட்சி தந்தபடி நீ இங்கேயே எழுந்தருளி எல்லோருக்கும் கருணை காட்டி அருள் புரிய வேண்டும்!" என்கிறாள்.
அன்னை பவானியும் அங்கேயே கோயில்கொண்டு விடுகிறாள்.
இன்னொரு கதை.
கௌதம முனிவரின் மனைவி அகல்யாவிடம் இந்திரன் தகாத முறையில் நடந்து கொண்டதும், அதனால் கௌதம முனிவர் இருவரையும் சபித்ததும் நாம் அறிந்த கதையே. சாபத்தால், இந்திரன் மிகவும் இன்னல்படுகிறான். தன் சாபம் தீரத் துளஜாபூர் பவானியிடம் பிரார்த்திக்கிறான். அவளும் மனமிரங்கி, "இந்திரா! உன் பாபங்கள் களைய அருகில் இருக்கும் குளத்தில் முழுகி எழுந்திரு!" என்கிறாள். இந்திரனும் அப்படியே செய்து சாபத்திலிருந்தும் அந்தப் பாபத்திலிருந்தும் விடுதலை அடைகிறான். அந்தத் தீர்த்தத்தின் பெயர் ‘பாபவிநாசினி தீர்த்தம்’.
ஸ்ரீராமருக்கும் இந்த பவானி அருளிய வரலாறு உண்டு. சீதையைத் தேடித் தேடிக் களைத்து போய்க் கண் கலங்கிய ராமருக்கு முன் பவானி தோன்றி, ஒரு பாறைமேல் கிடுகிடு என்று ஏறி, "தசரதபுத்ரா! உன் மனைவியை இந்தத் திசையில் சென்றால் மீட்கலாம்" என்று இலங்கை இருக்கும் திசையைக் காண்பித்தாளாம். அந்தப் பாறையில் அன்னையின் பாதங்கள் பதிந்திருக்கின்றன. அதைச் சுற்றியும் கோயில் எழுப்பி ‘கட்ஷீலா கோயில்’ என அழைக்கிறார்கள்.
கோயில் கருவறையில் நுழையத் திருப்பதிபோல் வளைத்து வளைத்துக் கம்பி கட்டி இருக்கிறார்கள். மாதா பவானி எட்டு திருக்கைகளுடன் சிம்மவாஹினியாகக் காட்சியளிக்கிறாள். அருகில் அவள் பக்தை அனுபூதியும் நிற்கிறாள். அன்னை பவானி திருமேனி முழுவதும் சாளக்கிராமத்தில் இருக்கிறது. மூன்றடி உயரமாக அவள் திருக்கரங்களில் சூலம் தாங்கி, காலடியில் அசுரன் கிடக்க, அந்தக் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. காலுக்கடியில் இருப்பது மகிஷனின் தலை.
அருகில் ஆதி மாதங்கி, விநாயகர், அன்னபூரணி ஆகிய திருவுருவங்களும் சாளக்கிராமத்தில் படைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கருவறையின் எதிரில் உருளும் கல் ஒன்று இருக்கிறது. அதைச் ‘சிந்தாமணி கல்’ என்கிறார்கள். மனதில் ஏதாவது நினைத்துக் கொண்டு இந்தக் கல்லின் மேல் கை வைக்க, அந்தக் காரியம் நிறைவேறிவிடுமாம். அதனால் அந்தக் கல்லைச் சுற்றியும் கூட்டம்.
கோயிலின் எதிரில் சிவன் சந்நிதி. அதில் இரண்டு பெரிய காண்டாமணிகள் கட்டப்பட்டுள்ளன. பலர் தங்கள் குடும்பச் சடங்குகளை இங்கு செய்கிறார்கள். சடங்கு நிறைவுறும் நேரம் இந்த மணிகளை அடிக்கிறார்கள்.
சிவனின் காவல் தெய்வம் காலபைரவர் பவானிக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
சத்ரபதி சிவாஜி கோயிலின் முகப்பு வாயிலில் நுழையமாட்டார். அவருக்கென்று கோயிலின் பின் புறம் தனி வாயில் உண்டு. அந்தப் பின்புறக் கதவு தற்போது மூடி வைக்கப்பட்டிருக்கிறது. அது வழியாக நுழைந்தால் ஒரு குகை வழியாக வெளியே சென்றுவிடலாம் எனத் தோன்றுகிறது. இந்தக் கோயிலுக்குக் குரு கோவிந்த சிங்கும் ஸ்ரீராமதாசும் அடிக்கடி வந்து ஆசி பெறுவார்களாம்.
ஷீரடி, நாசிக், பஞ்சவடி போன்ற திருத்தலங்களைத் தரிசிக்க நினைப்பவர்கள் அந்தப் பட்டியலில் இந்தக் கோயிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இங்கு அந்தளவுக்குத் தெய்வ சாந்நித்தியத்தை உணர முடிகிறது