மானேஜரிடமிருந்து அழைப்பு வந்திருப்பதாய்ச் சொன்னார்கள். போனான். புது மானேஜர். சின்னப்பையன். இவனுக்கு மருமகனாய் வரக் கொடுத்து வைக்காதவன்.
“சார் கூப்ட்டீங்கன்னு சொன்னாங்க.”
“ஆமா. கூப்ட்டேன். எத்தன வருஷம் சர்வீஸ்ப்பா ஒனக்கு?”
“ஆச்சு சார். முப்பத்தி மூணு வருஷம் ஓடிப் போயிருச்சு. அடுத்த வருஷம் ரிட்டயர் ஆயிருவேன்.”
“தட்ஸ் ஓக்கே. இப்ப நம்ம கம்ப்பெனில ஒரு புது ரூல் போட்டிருக்காங்க தெரியுமா? ஸப் ஸ்டாஃப் எல்லாருக்கும் கம்ப்யூட்டர் நாலட்ஜ் இருக்கணுமாம்.”
“ஆமா சார். சொன்னாங்க. அதுக்கு வாச்மேன் மட்டும் விதிவிலக்குன்னு சொன்னாங்க.”
“அந்த விதிவிலக்குக்கு நா விதிவிலக்கு வாங்கிட்டேன். நம்ம ப்ராஞ்ச்ல வாச்மேன்கூட கம்ப்யூட்டர் படிச்சிருக்கணும்.”
முருகையன் மண்டையில் ஒரு குண்டு விழுந்தது. “வாச்மேனுக்கு என்னத்துக்கு சார் கம்ப்யூட்டர்” என்று இழுத்தான்.
மானேஜரின் பதில் கறார் கண்டிப்புடன் வந்தது. “என்னத்துக்குங்குற கேள்வியெல்லாம் ஒனக்கு வேண்டாம். இது மானேஜ்மென்ட் பாலிஸி. நீ கீழ்ப்படிஞ்சிதான் ஆகணும். மூணு மாசம் டைம். அதுக்குள்ள நீ கம்ப்யூட்டர் பேஸிக்ஸ் படிச்சாகணும்.”
“சார், ஒரு வேள மூணு மாசத்ல முடியலன்னா?”
“கூடக் கொஞ்ச நாள் எடுத்துக்க, பரவாயில்ல. அதுக்காக நீ இப்படியே இழுத்துரலாம்னு பாத்தா, நடக்காது. வேல போயிரும். அப்புறம் ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் எல்லாம் கெடக்யாது.”
“சார், எனக்கொரு பொண்ணு கல்யாணத்துக்கு நிக்குது சார்.”
“பொண்ணப் படிக்க வச்சியா?”
“இஞ்ஜினியர் சார்!”
“வெரிகுட். அப்ப அவகிட்டயே நீ கம்ப்யூட்டர் கத்துக்கலாம்.”
“நா அந்தக் காலத்து எட்டாங்கிளாஸ் சார். எம் மண்டையில அதெல்லாம் ஏறாது சார்.”
“ரொம்ப நல்லது. அப்ப நீ நாளக்யே ரிஸைன் பண்ணிட்டு வீட்டுக்குப் போயிரலாம். இந்தா பார்ப்பா. ஒன்ன நா டிஸ்க்கரேஜ் பன்றேன்னு நெனக்யாத. எல்லாரும் செய்யும் போது நீயும் செஞ்சிட்டா என்னப்பா? நா என்ன ஒன்ன கம்ப்யூட்டர் ஸயன்ஸ்ல டிகிரியா வாங்கிட்டு வரச் சொல்றேன்? சும்மா ஆனா ஆவன்னா தானப்பா! ஒன்னால முடியும். நீ செஞ்சு காட்டு, ஸென்ட்ரல் ஆஃபீஸ்ல சொல்லி ரெண்டு வருஷம் எக்ஸ்டன்ஷன் வாங்கித் தர்றேன். எனிவே, டிஸைட் பண்ணி நீ நாளக்கிச் சொல்லு. இப்ப நீ போகலாம்.”
நொந்து போனான் முருகையன். காலையில் இருந்த உற்சாகம் எங்கேயோ போய் ஒளிந்து கொண்டது. எப்படா ட்யூட்டி முடியும் என்று காத்திருந்தான். ட்யூட்டி முடிந்ததும் தேவி வீட்டுக்குப் போக வேண்டும். அங்கே போய்ப் பேத்தியை பார்த்தால் அந்த பிஞ்சினுடைய மழலை இந்த மனவேதனையைக் கொஞ்சம் தணிக்கும்.
தன்னுடைய குழந்தைக்கு தேவி, அம்மாவின் நினைவாய் பத்மினி என்று பெயரிட்டிருந்தாள். பீக் அவரில் பஸ்ஸுக்குக் காத்திருந்து, தேவியின் வீட்டை அடைந்தபோது நன்றாய் இருட்டி விட்டிருந்தது.
அப்பாவைப் பார்த்ததும் தேவி முகம் மலர்ந்து வரவேற்றாள்.
“அப்பா… வாங்கப்பா, என்னப்பா திடீர்னு வந்து நிக்கிறீங்க! நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும்ப்பா. சரோ ஃபோன் பண்ணி சொல்லிட்டா. கங்ராட்ஸ்ப்பா! இப்பவாவது தோணிச்சே ஒங்களுக்கு. அவரும் சந்தோஷப் பட்டார்ப்பா. பப்பிட்ட தான் இன்னும் சொல்லல. பப்பி ஓடி வா, யார் வந்துர்க்கான்னு பாரு. தாத்தா டீ! பப்பி, ஒனக்கு ஒரு பாட்டி வரப்போறாங்க தெரியுமா?”
தேவியின் புளகாங்கிதம் பிரவாகமெடுத்து முருகையனைத் திக்குமுக்காட வைத்தது. தாத்தா. தாத்தா என்று ஓடி வந்து பப்பி இவனைக் கட்டிக் கொண்டது. இந்தக் கதகதப்பான சூழலில் தன்னுடைய கம்ப்யூட்டர் பிரச்சனையை எப்படி ஆரம்பிப்பது என்று முருகையனுக்குப் புரியவில்லை.
அவனுடைய முகத்தில் ஓடிய சோக ரேகையைப் பார்த்து தேவியே கேட்டாள், “ஏம்ப்பா ஒரு மாதிரி இருக்கீங்க” என்று.
ஆஃபீஸில் நடந்த கம்ப்யூட்டர் கதையை மகளிடம் ஒப்பித்தான் முருகையன். “கால்க்குலேட்டர் கூட ஒழுங்கா போடத் தெரியாது. நா எந்தக் காலத்துலம்மா கம்ப்யூட்டர் கத்துக்கறது! அந்தப் புது மானேஜர் வீம்புக்கு என்ட்ட வம்பு பண்றாம்மா. ரிட்டயர் ஆறதுக்கு முந்தியே என்ன வீட்டுக்கு அனுப்பிச்சிட்டுக் கம்பெனிக்கி நாலஞ்சு லச்சம் மிச்சப்படுத்திக் குடுத்து நல்லபேர் வாங்கணும்னு பாக்கறான்.”
தேவி யோசனையானாள். பிறகு சொன்னாள்:
“இல்லப்பா. நீங்க நெனக்கிறது தப்பு. ஒங்க மானேஜர் ஒங்க மேல நெறய நம்பிக்க வச்சிருக்கார். ஒங்களுக்கு நல்லது செய்யணும்னுதான் நெனக்கிறார். நீங்க கம்ப்யூட்டர் கத்துக்கிட்டா ஒங்களுக்கு ரெண்டு வருஷம் எக்ஸ்டன்ஷன் தர்றேன்னு சொல்றாரேப்பா, அத ஏன் நீங்க பயன்படுத்திக்கக் கூடாது?”
“அம்மா, நா ஒரு எட்டாங்கிளாஸ்ம்மா. நானாவது கம்ப்யூட்டர் படிக்கிறதாவது! கனவுல கூட நடக்காது.”
“ஏம்ப்பா நடக்காது? இந்த யூ கே ஜிக் குட்டியே கம்ப்யூட்டர் முன்னால ஒக்காந்து பட்டனத் தட்டிட்டிருக்கே, அப்ப எட்டாங்கிளாஸால ஏம்ப்பா முடியாது? ஒங்களால முடியும், இத ஒரு சவாலா ஏத்துக்கிட்டு செஞ்சி காட்டுங்கப்பா.”
“புரியாமப் பேசாதேம்மா. எனக்கு வயசென்ன தெரியுமா? அம்பத்தேழு.”
தேவி கொஞ்ச நேரம் மௌனமானாள். பிறகு குரலைத் தணித்துப் பேசினாள். “அப்பா, நா ஒண்ணு சொன்னா, தப்பா எடுத்துக்க மாட்டீங்களேப்பா?”
“சொல்லும்மா.”
“அப்பா… வந்து… அம்பத்தேழு வயசுல கல்யாணம் பண்ணிக்கலாம்ங்கற போது, அம்பத்தேழு வயசுல கம்ப்யூட்டர் ஏம்ப்பா கத்துக்கக்கூடாது?”
நெத்தியடி. செமத்தியான நெத்தியடி.
மடியிலிருந்த குழந்தையை இறக்கி விட்டுவிட்டு முருகையன் ரெண்டு கைகளாலும் கன்னங்களுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு தலை கவிழ்ந்து உட்கார்ந்தான்.
“அப்பா, ஸாரிப்பா. ஒங்க மனச நோகப் பண்ணிட்டேனாப்பா? கொஞ்சம் படுக்கறீங்களாப்பா” என்று தந்தையின் தலையை இதமாய் வருடிக் கொடுத்தாள் தேவி.
“கொஞ்ச நேரம் நா தனியா இருக்கேம்மா” என்று முருகையன் மகளின் கையை எடுத்து விட்டான்.
தேவி அங்கிருந்து அகன்றாள். “நா கிச்சன்ல இருக்கேம்ப்பா. நீங்க இருந்து சாப்ட்டுட்டுப் போங்க. பப்பி, தாத்தாகூட சமத்தா வௌயாடிட்டிருக்கணும் என்ன?”
அந்தக் குழந்தை முருகையனின் கைகளுக்குள்ளே புகுந்து கொண்டு மேவாயைப் பிடித்து தலையை நிமிர்த்தியது.
“ஏந்தாத்தா அழுவுறீங்க?”
தன்னுடைய கண்ணீரை அந்தச் சின்ன அரும்பு பார்த்து விட்டது முருகையனுக்கு வெட்கமாயிருந்தது.
கைக்குட்டையை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டான். குழந்தை அவனுடைய மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டது. அவனுடைய கன்னங்களைத் தன்னுடைய பிஞ்சுக் கரங்களால் ஏந்தி அவனுடைய கண்களில் நேராய்ப் பார்த்துச் சொன்னது.
“தாத்தா, அழுவாதீங்க தாத்தா, நா ஒங்களுக்கு கம்ப்யூட்டர் சொல்லித் தாறேன் தாத்தா.”
முருகையன் ஸ்தம்பித்துப் போனான். கட்டுப்பட்டிருந்த கண்ணீர் திரும்பவும் முட்டிக்கொண்டு வந்தது. கண்களைத் துடைக்கும் பிரக்ஞைகூட இல்லாமல் குழந்தையை வாரியெடுத்து, ரெண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தங்களைப் பொழிந்தான்.
“ஒன்ட்டயே நா கம்ப்யூட்டர் கத்துக்கிறேன் பத்மினி, பத்மினீ என் பத்மினீ!” உணர்ச்சிகள் சமனப்பட்ட பின்னால் குழந்தையை மடியில் இருத்திக் கட்டிப் பிடித்துக் கொண்டு சிரித்தான். அவனோடு சேர்ந்து குழந்தையும் சிரித்தது. பிறகு கேட்டது, “பாட்டி எப்ப வரும் தாத்தா?”
முருகையன் அழுத்தமாய்ச் சொன்னான், “ஒனக்குப் போட்டியா இன்னொரு பாட்டியா? நீ தாண்டி பத்மினி எனக்குப் பாட்டி.” திரும்பவும் முத்த மழை.
இவனுடைய பத்மினி மேலேயிருந்து பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது.
(கவிதை உறவு, 26ம் ஆண்டுமலர், 2008)