‘வேர் இஸ் த பார்ட்டி?’ நிலாவுலதான் பார்ட்டி.
இப்படிப் பாடணும்னுதாங்க ஆசை… ஆனா பாருங்க, ஆசிரியர் குழு அடக்கியே வாசிச்சிட்டாங்க. 400 இதழ்கள்னா சும்மாவா? பெரிய விழா எடுத்து தோரணம் கட்டி, நமக்கு கட் அவுட் வச்சி, நாளைக்கு நாம செவ்வாய் கிரகத்திலருந்து பார்த்தாலும் தெரியற மாதிரி ஒரு நினைவு வளைவு கட்டி… ஹும்… என் கற்பனைக் கோட்டையை தொபுக்குன்னு இடிச்சுப் போட்டாங்க எங்க மக்கா. 500வது இதழுக்காவது சொர்ணாக்காவோட சேவையைப் பாராட்டி இதெல்லாம் செய்வார்களாக! (இல்லைன்னா, நீங்கள்லாம் சேர்ந்து இதையெல்லாம் செஞ்சிற மாட்டீகளா, ஹி.. ஹி…)
நிற்க… ‘வேர் இஸ் த பார்ட்டி’ பாட்டு கலக்கலா இருக்கில்லே? பாடகர் முகேஷோட எக்ஸ்ப்ரஷன்ஸ்தான் எனக்கு ரொம்ப பிடிச்சுதுங்க. ஆனா இந்தப் பாட்டைக் கேட்டா எங்கம்மாவுக்கு BP ஏகத்துக்கு ஏறிடும்… ‘எந்தக் கடங்காரன் இந்த மாதிரிக் குப்பையா எழுதிருக்கான்?’னாங்க. ‘வெள்ளி விழா’ கண்ட சிம்புதான்’ அப்படின்னேன். அமைதியாயிட்டாங்க. சிம்புவோட ஒப்பிட்டுப் பார்த்தா நம்ம புள்ளையோட ரவுசு கம்மிதான்னு சமாதானமாயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். எனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்த சிம்புவுக்கு டாங்ஸுபா.
இந்தப் பாட்டைப் பற்றி வலைபதிவர் சரவணகுமரன் சொல்றார், செம ஜாலியான பாட்டு இது. மப்புலே எழுதி, இசையமைச்சி, மப்புலேயே பாடுன மாதிரி இருக்கு.’
படப்பிடிப்பும் அப்படித்தான் நடத்திருப்பாங்க போலத் தெரியுது. வீடியோ க்ளிப் பார்த்தேன். ஷேம் ஷேம்!
குத்துப் பாடல்களுக்கு எதிரிகள் நிறையப் பேர் இருக்காங்க எங்கம்மா மாதிரி. ஆனா பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் என்ன சொல்றார்னா:
‘குத்துப்பாடல்கள் ஒரு பண்பாட்டின் தவிர்க்க முடியாத அம்சம். மக்களுக்கு உற்சாகமும் களியாட்டமும் எப்போதும் தேவையாகின்றன. நேரடியாக சாத்தியமில்லாவிட்டால் கூட கற்பனையில் தேவைப்படுகிறது. அதன் முக்கியமான கருவி குத்துப்பாட்டு.’
இதைப் பற்றி ஒரு பெரிய கட்டுரையே எழுதிருக்கார். மீதியை இங்கே போய்ப் படிக்கலாம்:
http://jeyamohan.in/?p=318
என் தோழி சாவித்ரிக்கு சிந்தன்னு ஒரு குட்டிப் பையன் இருக்கான். அவனுக்கு இப்பத்தான் ஒரு வயசு முடிஞ்சது. ஆனா அந்தக் குட்டி சரியா உக்கார ஆரம்பிச்சதுமே நாக்க முக்க பாட்டுக்கு உக்காந்த இடத்திலேயே ஆட ஆரம்பிச்சிடுச்சி. கொஞ்ச நாள் கழிச்சு ஃபேவரிட் பாட்டு டாக்ஸி டாக்ஸியா மாறிடுச்சு… இப்பா நடக்க ஆரம்பிச்சிட்டான்… ‘வேர் இஸ் த பார்ட்டி’க்கு ஒரே குத்துதான். இந்தக் குட்டியோட சைஸ் பார்த்து அவங்க பாட்டி வச்ச பேர் ‘பலூன்’… நல்லா இருக்கில்லே…
ஃபாரின்லருந்து வந்திருந்த என் கஸினோட சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம் சுத்திட்டிருந்தேன் பொங்கல் லீவுல. வயிறு புடைக்க விருந்துதான் எங்கே போனாலும் – ஏதோ அவ புண்ணியத்துல வாய்க்கு ருசியா நாலு நாள் சாப்பிட்டாச்சு (மம்மி முறைக்கிறாங்கோவ்).
எந்த வீட்டில சாப்பிட்டாலும் என் கஸின் அவ தட்டை அவளேதான் கழுவி வைச்சா. எங்க அத்தை கூட, "வேலைக்காரி வருவா. கழுவாதே"ன்னாங்க. ஆனா அவ பிடிவாதமா, "வேலைக்காரியும் மனுஷிதானே. நம்ம எச்சில் தட்டை அவ ஏன் கழுவணும்?"னுட்டா. அத்தையும் நானும் அவளை வினோதமா பார்த்தோம். "எங்களுக்கு வேலைக்காரியெல்லாம் கிடையாது. வேற யாரோட தட்டையாவது நாம கழுவும்போதுதான் புத்தில உறைக்குது"ன்னு அவ சொன்னப்ப எனக்கு அவமானமா இருந்துது. கிராமத்தில எங்க பாட்டி வீட்டில பாட்டிக்கு வேலைக்காரி கூட கிடையாது. ஆனா வர்ற சொந்தக்காரங்க ஒருத்தர் கூட தட்டு கழுவுனதாவோ இலை எடுத்ததாவோ சரித்திரமே கிடையாது – என்னையும் சேர்த்துதான். எங்க பாட்டி வேற ரொம்ப சுத்தம் பார்க்கறவங்க. அவங்களுக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்னு தோணுச்சி. சின்ன விஷயமா நமக்குத் தெரியறது சம்பந்தப்பட்டவங்களுக்குப் பெரிய விஷயம்னு மரமண்டைக்கு உறைச்சது. இப்போ எங்கே போனாலும் நானும் தட்டை அலசியாவது வச்சிடறேனுங்கோ…
அப்புறம் அதே கஸின் (பேரைப் போடப்படாதுன்னு கண்டிஷன்) தி.நகர் நாயுடு ஹாலுக்கு ஷாப்பிங் போனா. பரிசா கொடுக்கறதுக்கு வேற வேற விதத்தில ரொம்ப ரசிச்சு ரசிச்சு 20 புடவை பக்கமா வாங்கினா. அந்தக் கடையில வேலை செய்த பல பொண்கள் விட்டேத்தியா எடுத்துப் போட, தாமரைங்கற ஒரு பொண்ணு மட்டும் ரொம்ப ஈடுபாட்டோட புடவை காமிச்சாங்க. அவங்ககிட்டேதான் நிறைய புடவை வாங்கினோம். கிளம்பும் போது என் கஸின், "ரொம்ப நல்லா வேலை செஞ்சீங்க. அதைப் பாராட்டணும்னு தோணுது"ன்னு சொல்லி ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினா. தாமரை, "நீங்க சொன்னதே பெரிசுங்க"னு சொல்லி வாங்கிக்க மறுத்துட்டாங்க. எனக்கே என் கஸின் செஞ்சது கொஞ்சம் ஆச்சரியமா இருந்தாலும் நானும் வாங்கிக்கச் சொல்லி ரெகமண்ட் செஞ்சேன். ஆனா தாமரை கடைசி வரை வாங்கிக்கவே இல்லை. தன்மானத் தாமரை வாழ்க! யாராவது தி.நகர் நாயுடு ஹால் போனா தாமரையைப் பார்த்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு வாங்க.
இதைக் கேளுங்க… நாயுடு ஹால்ல ஷாப்பிங் 8000 ரூபாய்க்கு. என் கஸின் விளையாட்டா, "டிஸ்கவுண்ட் ஏதும் இல்லையா?"ன்னு கேட்டா. பில் கலெக்டர் ரொம்ப கெத்தா, "இந்த மாதிரி கடைகள்ல எல்லாம் நீங்க இப்படிக் கேக்கக் கூடாதுங்க"ன்னார்.
முடிச்சிட்டு வெளியே வந்து ப்ளாட்ஃபார்ம் கடையில ஹேர் க்ளிப், கம்மல்னு ஏதேதோ பரிசுகளா வாங்கினா. 300 ரூபாயோ என்னவோ வந்தது. அந்தக் கடைக்காரர், "முப்பது ரூபா கழிச்சிட்டு மீதி கொடுங்க, மேடம்"னார். என் கஸின் நெகிழ்ந்து போயிட்டா. டிஸ்கவுண்ட் இல்லாம மொத்தப் பணத்தையும் கொடுத்துட்டு, "நல்லா இருங்க"ன்னு வாழ்த்திட்டு வந்தோம்.
பக்கத்திலேயே ஒரு பூக்காரம்மாகிட்ட பேரம் எதுவும் பேசமா பூ வாங்கவும் அவங்க அழகான ரெண்டு ரோஜாப்பூவைக் கொடுத்து, "வைச்சுக்கங்கம்மா"ன்னாங்க. பெரிய மனசு ஏழைகள்கிட்டே அதிகம் இருக்கோன்னு என்னை யோசிக்க வைச்ச நிகழ்ச்சிகள் இவை.
எடக்கு மடக்கான ஏழு கேள்விகள் கேட்டு யாரையாவது கலாய்க்கணும்னு தோணிச்சி. வாயாடி வைஷாலிகிட்டே யோசிக்க நேரமே தராம நான் கேட்ட கேள்விகளும் அவள் தந்த பதில்களும்:
1) ரகசிய சிநேகிதம்?
ஊறுகாய்
2) மறக்க விரும்பும் நிகழ்ச்சி?
அப்பாவின் ஹார்ட் அட்டாக்
3) பிடித்த ஆண்? (கணவரைத் தவிர)
டான் (ஹி..ஹி… என்னோட நாய்)
4) அடுத்த பிறவியில்?
ஆணாகப் பொறக்கணும்
5) இதுவரை வெளிவராத ஒரு உண்மை?
இஞ்சினியரிங் படிக்கும்போது ஒரு சப்ஜெக்டில் ஃபெயில்
6) உன்னிடம் உனக்குப் பிடித்தது?
எதையும் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்
7) வாழ்க்கைக்கு மதிப்பெண்?
8/10
நாரதர் ரேஞ்சுக்கு கலகம் பண்ணலாம்னு பார்த்தா நாசூக்கா தப்பிச்சிட்டா!
என் ஃப்ரண்டுக்கு ரமேஷ்னு ஒரு ஃப்ரண்ட் இருக்கான்… அவனைப் போல நல்லவனை, வல்லவனை நாட்டில பார்க்கவே முடியாதுங்க… அவனுக்குப் பொண்ணு பார்க்கறாங்களாம். அதனால அவனைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு:
1. வாழ்க்கையின் முக்கிய இலட்சியம் அமைச்சராகிப் பெட்டி வாங்குவது. (அமைச்சவராவதற்கான நிதி மாமியார் வீட்டிலிருந்து வசூல் செய்யப்படும்)
2. அடுத்த இலட்சியம் கந்தை போலக் கசக்கிப் பிழியற தன் தற்போதைய மேனேஜரைத் தான் அமைச்சரான பின் தனக்குப் பி.ஏ.வாக்கி கவுண்டமணி செந்திலைத் திட்டறது போலத் திட்டுவது
3. கேர்ள் ஃப்ரண்ட்ஸ் அறவே கிடையாது. (அதுக்குக் காரணம் என்னன்னா கடலை போட கடலளவு ஆசை இருந்தாலும், அவனைக் கண்டதும் மலர்கள்லாம் தலை தெறிக்க ஓடறதுதானாம். ‘கடலை கைட்’ யார்கிட்டேயாவது இருந்தா கொஞ்சம் கொடுத்து உதவலாம்)
4. பயங்கர சிக்கனக்காரன். மிஸ்டு கால் எக்ஸ்பர்ட். ஒரு முறை அவர் மானேஜருக்கு மிஸ்டு கால் கொடுக்கறதுக்காக டயல் செய்யப் போயி கடைசி நம்பரைத் தப்பாப் போட்டுட்டான். அது அவரோட மனைவி மொபைலுக்குப் போயிருச்சு. அவங்க ‘கன்’னா ஒரு ரிங் வரவும் எடுத்துட்டாங்க. அவன் ஷாக் ஆகி, ‘ஐயோ எடுத்துட்டீங்களே! ரெண்டு ரூபா போச்சேன்’னானாம் முன்னே பின்னே தெரியாத ஒரு பெண்மணிகிட்டே – அதுவும் பாஸோட ‘பாஸ்’கிட்டே!
5. விஜயகாந்தோட தீவிர ரசிகர். (இதுக்கு மேல விளக்கம் எதுவும் தேவை இல்லை அல்லவா!)
சிறு குறிப்பு வாழ்க்கைக் குறிப்பாக மாறிவிடும் டேஞ்சர் தெரியறதால, இங்கேயே நிறுத்திக்கலாம். இப்பேர்ப்பட்ட பிள்ளையாண்டானுக்கு யாராவது பொண்ணு கொடுக்க விரும்பினா, தமிழ்மேட்ரிமோனியல் தளத்தை நாடவும். அல்லது சொர்ணாக்காவை அணுகவும்.
நிலாஷாப்ல டி.எஸ்.பியோட ‘ஆட்டிப் படைத்த அடால்ஃப் ஹிட்லர்’ மின்னூலுக்கு இனியன் வரதராஜா ஐந்து நட்சத்ரம் தந்திருக்கார்:
http://www.nilashop.com/product_reviews_info.php?products_id=443&reviews_id=26
ரொம்ப நல்ல விஷயம். மின்னூல்களை வாங்கி நீங்க ஊக்குவிச்சா இன்னும் நிறையப் பண்ணலாம்னு பாஸுக்கு ஐடியா இருக்கு. அதனால உங்க ஆதரவைத் தெரிவியுங்க மக்களே!
சரிங்க, போன முறை கருத்து கந்தம்மாவா உங்களுக்கெல்லாம் ரம்பம் போட்டதுக்கு பிராயச்சித்தம் தேடிக்கிட்டேன்னு நினைக்கிறேன்.
அடுத்தமுறை பார்க்கறவரை… ‘டேக் கேர்’
சியர்ஸ்!
“
நல்ல விசயங்கலை பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி.
Warm Regards
Hema Manoj.
பலூன் பாப்பா சூப்பர்.
super discount information!!!
தட்டு கழுவுறதுல எங்க வீடும் அப்படித்தான். என் கணவர் உட்பட. நல்ல விசயங்களை பகிர்வதில் நன்றி.