வணக்கம் நண்பர்களே!
எப்படி இருக்கீங்க? ஊருல மழையெல்லாம் இருக்கா? சென்னையில் மழை கண்ணாமூச்சி விளையாடுது. சரி அதுவாது விளையாடட்டும். நகரத்திலிருக்கிற பிள்ளைகளுக்கு விளையாட ஏது நேரம்? கோலி, நொண்டி, கில்லி இது மாதிரி விளையாட்டெல்லாம் போற போக்கில் பழங்கதையாயிடும் போல. இன்னும் பத்திருபது வருஷத்தில் பண்டைகால(?) சிறுவர் விளையாட்டுகள்னு நிகழ்ச்சி (சென்னை சங்கமம் மாதிரி) நடத்துவாங்களோ என்னவோ..
பத்து அரட்டை எழுதறதுக்குள்ளயே திணறோ திணறுன்னு திணறியாச்சு. நம்ம ஆசிரியரம்மா என்னன்னா, கதை மேல கதையா எழுதி அதை புத்தகமாவும் வெளியிட்டு, அதை இரண்டு மாணவர்கள் அவங்க ஆராய்ச்சிப்படிப்புக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறதை நினைக்கும் போது.. இந்த அரட்டை மூலமா, ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
போன தடவை ஒரு கதை சொல்றேன்னு சொல்லிருந்தேனில்லையா? அது என்ன கதைன்னா, ஒரு முறை ஒரு அரசனும், மந்திரியும் பணியாட்களுடன் வேட்டைக்குப் போயிருக்காங்க. மந்திரிக்கு இறைபக்தி அதிகம். அவர் எல்லாமே நல்லதுக்குன்னு நினைக்கிறவர். காட்டில் வேட்டையாடிட்டிருக்கும் போது, அரசனுக்கு எதிர்பாராமல் ஒரு விரல் வெட்டுப்பட்டு துண்டாகி விடுகிறது. அப்போது மந்திரி எது நடந்தாலும் நன்மைக்கேன்னு சொல்றார். அரசனுக்குக் கோபம் வந்திடுது. மந்திரியை மண்ணுக்குள் தலை தெரிய புதைக்கச் சொல்லிடுறார். அதன்படி செய்துட்டு எல்லோரும் புறப்பட்டுக் கொஞ்ச தூரம் போயிருப்பாங்க, திடீர்னு மலைவாசிகள் வந்து அரசனைப் பிடிச்சுட்டுப் போயிடுறாங்க. சர்வ லட்சணம் பொருந்தியவர் அரசர்ங்கறதால அவரை தங்களோட தெய்வத்துக்குப் பலி கொடுக்கக் கொண்டு போறாங்க. அரசனுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. மந்திரி இருந்திருந்தா ஏதாவது புத்திசாலித்தனமா செய்திருப்பாரேன்னு வருத்தப்பட்டிட்டிருந்தார். குருசாமி வந்துட்டார். பலி கொடுக்கிறதுக்கு முன்னாடி மன்னரைத் தயார்படுத்த எல்லாம் செய்யும் போதுதான் தெரியுது, அவர் விரல் துண்டானது. காலங்காலமா இருந்து வர்ற நம்பிக்கையின் படி, அங்கஹீனர்களை இறைவனுக்குப் பலி கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி மன்னரை விடச்சொல்லிடுறார். மன்னர் தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடி வந்துடறார். மந்திரி சொன்ன மாதிரி, தன் விரல் துண்டானது கூட நன்மையா மாறி தன் உயிரைக் காப்பாத்தினதை உணர்ந்தார். திரும்ப மந்திரியை மீட்டு நாட்டுக்குத் திரும்புறார்.
எப்படியிருக்கு கதை? இது போலதாங்க, சாதாரணமா சின்னச் சின்னக் கஷ்டங்களும் பெரிசாத் தெரியும். ஆனா அது ஏதோ ஒரு பெரிய ஆபத்திலுருந்து நம்மைக் காப்பாத்தறதுக்காக வந்த துன்பமாக் கூட இருக்கலாம். அதனால ‘இதுவும் கடந்து போகும்’னு துன்பம் வரும்போது நினைச்சுக்கோங்க, எல்லாமே நல்லதுக்கா மாறும்.
அரசனைப் பத்திப் பேசும்போதுதான், சமீபத்தில் பார்த்த ‘மகதீரா’ங்கற தெலுங்குப் படம் ஞாபகத்துக்கு வருது. அருமையான படம். அருந்ததி எடுத்த ராஜ மெளலிதான் இந்தப் படமும் எடுத்திருக்கார். புனர் ஜென்மக் கதை. ப்ரின்ஸ் ஆஃப் பெர்சியா (prince of persia – latest version) விளையாட்டு எல்லாருக்கும் தெரியும். அதுல அந்த இளவரசன் போட்டிருக்க கவசம், கேடயம் மாதிரி உடை வடிவமைச்சிருக்காங்க கதாநாயகனுக்கு (சிரஞ்சீவி மகன் தாங்க கதாநாயகன்). சண்டைக்காட்சிகளும், வாள் வீச்சும் கிட்டத்தட்ட அந்த விளையாட்டில் வர்ற மாதிரியே இருக்கு. செமயா இருக்கு. அந்தப் படத்திலிருந்து ஒரு பாடல்:
http://www.youtube.com/watch?v=kAdVYVRsXNE&NR=1
(தெலுங்கெல்லாம் தெரியுமான்னுல்லாம் கேட்கக் கூடாது. எனக்குத் தெரிஞ்ச இரண்டே மொழி தமிழும், அரை குறை ஆங்கிலமும்தான். காட்சியமைப்புகளை வச்சுப் புரிஞ்சுக்கிறதுதான். அது மாதிரி நல்ல இசை எங்கருந்தாலும் கேட்டு ரசிப்பேன்)
என் நண்பன் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பிருந்தான். கிட்டத்தட்ட எல்லாருமே இதே மாதிரிதான் நினைப்போமோன்னு தோணுச்சு.. நீங்க படிச்சுப் பார்த்து சொல்லுங்களேன்.
//அன்புள்ள சம்பளமே!
இந்த மாதம் நீ என்னிடமே தங்கி விடு. போன மாசம் ரொம்ப சீக்கிரம் என்னை விட்டுப் போய்ட்ட, 29 நாள் காத்திருந்தும், என்னால உன்னை சரியா கவனிக்கக் கூட முடியலை. நான் என்ன தப்புப் பண்ணிருந்தாலும் என்னை மன்னிச்சுக்கோ. நிச்சயமா இனி உன்கிட்ட நல்லபடியா நடந்துக்குவேன்.//
இந்த மாசம் பணம் தங்கறது கஷ்டந்தாங்க. வரிசையா பண்டிகையா வருதே. ஆனா இந்தச் செலவும் சந்தோஷச் செலவு தானே.. (மந்திரி சொன்ன மாதிரி)
முதல்ல வர்றது ரம்சான்.. மாலீக், ரம்சான் வாழ்த்துக்கள். உங்க வீட்டுக்குக் கூப்பிட முடியாது எங்களை..(ரொம்ப தூரத்தில் இருக்கீங்கள்ல) நோன்புக் கஞ்சி எப்படி செய்றதுன்னு வீட்ல கேட்டு சொல்லுங்களேன். ரொம்ப வருஷமாச்சு குடிச்சு.. சொல்வீங்க தானே?
கதையோட கருத்து சொல்றது ரொம்ப நல்ல விஷயந்தாங்க. அப்பதான் கொஞ்ச நாளாவது மனசுல தங்குது. இந்தக் கதையும் அப்படித்தான்..
ஜெர்மனிக்காரர் ஒருவர் சிற்ப வேலை நடந்து கொண்டிருந்த ஒரு கோயிலுக்குப் போனார். அங்க ஒரு சிற்பி கடவுள் சிலை வடிச்சிட்டிருக்கார். அவர் பக்கத்தில் அதே மாதிரி இன்னொரு சிலை இருந்துச்சு. நம்ம ஆளுக்கு ஒரே ஆச்சரியம், எதுக்குடா இரண்டு சிலைன்னு.. சிற்பிகிட்ட கேட்டார் "இரண்டு சிலை தேவைப்படுதா?"
சிற்பி, "இல்லை, ஒரு சிலைதான் தேவை, ஆனா முதல்ல செய்தது கடைசி கட்டத்தில் சிதைஞ்சிடுச்சு. அதனாலதான் புதுசா செய்திட்டிருக்கேன்."
ஜெர்மன்காரர் முதல் சிலையை ஆராய்ஞ்சு பார்க்கிறார். ஒரு குறிஅயும் தெரியல. ‘என்ன குறை?’சிற்பிகிட்ட கேட்டார்.
சிற்பி, "மூக்குப் பகுதியில் ஒரு கீறல்." நிமிர்ந்து கூட பார்க்காம பதில் சொல்லிட்டு தன் வேலையில் மூழ்கிட்டார்.
ஜெ, "சிலை எங்க நிறுவப் போறீங்க"
சிற்பி, "இருபதடி உயரத் தூண் மேல"
ஜெ, "அவ்ளோ உயரத்திலிருந்தா இந்தச் சின்னக் கீறல் யாருக்குத் தெரியப் போகுது?"
சிற்பி நிமிர்ந்து பார்த்து சிரிச்சுக்குட்டே சொல்றாரு, "எனக்குத் தெரியுமே.."
இந்தக் கதை சொல்லும் கருத்தென்னன்னு நீங்கதான் எனக்கு எழுதியனுப்பப் போறீங்க.
சரி இப்பக் கிளம்பறேன்..விடை பெறுவதற்கு முன்னாடி, சின்னக் குழந்தைகளுக்காக நல்ல தமிழ்ப் பாடல்களோட இந்தக் குறுந்தகடு :http://www.nilashop.com/product_info.php?products_id=470.
கவிதா, உங்க சுட்டிப் பெண்ணுக்கு ரொம்பப் பிடிக்கும்னு நினைக்கிறேன்.
அன்புடன் விடைபெறுவது,
உங்கள் ஜோ”
திருவள்ளுவரின் கருத்துப்படி சிலையை சரியாக வடிவமைத்துள்ளேன் என்ற பொய்யான எண்ணமே சிற்பியின் நெஞ்சைச் சுடும். ரிஷி கூறும் கட்டட மேற்பார்வையாளர் பிறர் குறை கண்டுபிடித்ததும் உடனே திருத்தினார்; சிற்பியின் குறை அவருக்கு மட்டுமே தெரிந்து திருத்தினார். சிலர் தாமாகவே திருந்துவார்கள்; சிலர் பிறர் சொல்லித் திருந்துவர்கள்.எப்படியும் திருந்தாதவர்கள் வரைமுறையை மீறுபவர்கள். அவர்களால் அவர்களுக்கு மட்டுமே லாபம்.
ஜோ,
சிலையை பற்றி நீங்க சொன்ன கதையின் பாங்குக்கு, பாலு சார் சொன்ன கருத்து மிகச்சரின்னு நினைக்கிறேன். ஆனா உண்மையிலே உடைந்த அல்லது கீறல் விழுந்த சிலைக்குப் பின்னாடி ஒரு அறிவியல் நுட்பம் உள்ளது. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன், பொதுவாக உடைந்த சிலைகளுக்கு நம்மால் சக்தியூட்ட முடியாது. அப்படி சக்தி ஏற்றினாலும் தங்காது, மீண்டும் சாதாரண கல்லாக மாறிவிடும்.
சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலின் கும்பாபிஷேகத்துக்கு முன்பு கூட அங்கு ஒரு சிலை பலுதடைந்திருப்பதால் கும்பாபிஷேகத்தையே நடத்தக்கூடாது அல்லது தள்ளிப்போடவேண்டும் என்றது நமக்கு ஞாபகம் இருக்கும். ஆனாலும் பழுதடைந்தசிலையை சரி செய்து விட்டு மீண்டும் உருவேற்றினால் அதன் சக்தி குறையாது என்பது அனுபவப்பூர்வமாக சாஷ்திரம் கண்ட உண்மை. இராமகிருஷ்ணர் கூட காளி கோவிலில் இருந்த இராக்காந்தர் சிலையை செப்பனிட்டுதான் பூஜை செய்தார்.
இருந்தாலும் புது சிலை என்று வரும்போது கண்டிப்பாக அது நல்ல நிலைமையில் இருப்பதுதான் உசிதமானது!.
நல்லா சொன்னீங்க பாலா சார். இன்னொரு கருத்தும் இருக்கு.. செய்வன திருந்தச் செய் – இந்த எண்ணம் அடுத்தவர்கள் பாராட்டறதால வருவதில்லை. அது உள்ளிருந்து வருவது. அப்பழுக்கற்ற வேலை பிறர் போற்ற இல்லை, தன்னுடைய திறத்தை வெளிப்படுத்தவும், திருப்திக்காகவும் உழைக்கும்போது தான் வெளிப்படுகிறது.
மாயன், நீங்க சொன்ன சிலைகளைப் பற்றிய தகவல் நல்லாருக்கு. நானும் கேள்விப்பட்டிருக்கேன் உடைந்த சிலைகளைப் பற்றி.
சம்பள கதை நல்லா இருக்கு ஜோ. மாயன் உங்களோட சிலை பற்றிய தகவலுக்கு நன்றி!.
//அப்பழுக்கற்ற வேலை பிறர் போற்ற இல்லை, தன்னுடைய திறத்தை வெளிப்படுத்தவும், திருப்திக்காகவும் உழைக்கும்போது தான் வெளிப்படுகிறது.//
அருமையான வாசகம் ஜோ.
நோன்புக்கஞ்சியை ஞாபகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி ஜோ. இது ரம்ஜான் மாதம் என்பதையே மறந்து விட்டேன். கஞ்சி சாப்பிட்டு நான்கு வருடங்களாகி விட்டது. நண்பர் ரபீக் பாய் வீட்டுக்குப் போயிடவேண்டியதுதான்.
சிற்பி கதை அருமை. முழுநீளக் கட்டுரை சொல்ல வேண்டிய கருத்தை போகிற போக்கில் ஒற்றை வரி சொல்லிச் செல்கிறது!
நிலாவின் புத்தகம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் செய்தியை நான் சொல்வதாக இருந்தேன். அதற்குள் ஜோ முந்தியாச்சு! யோவ்.. பந்திக்கு மட்டும் முந்துங்கப்பா!
//ஜெர்மன்காரர் முதல் சிலையை ஆராய்ஞ்சு பார்க்கிறார். ஒரு குறிஅயும் தெரியல. என்ன குறை? சிற்பிகிட்ட கேட்டார். //
குறையிலேயே ஒரு சின்ன குறை இருக்கிறதே!!
நோன்புக்கஞ்சிப்பற்றி உங்களுக்குத்தெரிந்திருப்பது ஆச்சரியம் கலந்த சந்தோஷம்.முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் பெருநகரங்களில் பிரத்யேகமாகத்தயாரிக்கப்படுவதால் இதன் ருசி இன்னும் அலாதியானது.துபாயில் உள்ள இந்திய பள்ளிவாசல்களில் கஞ்சிக்காக வரும் அரபிகளின் வருகை பண்மடங்கு அதிகரித்திருப்பதாக நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.(ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ஒரு கஞ்சிக்கு வழி இல்லாத அமெரிக்காவை எதில் சேர்ப்பது?)செய்முறைத்தெரிந்தவுடன் உங்களுக்குத்தெரிவிக்கிறேன் .வாழ்த்துகளுக்கு நன்றி ஜோ.
நன்றி Hema.. ரிஷி, குறையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.. திருத்திடுறேன்..
ரொம்ப நன்றி, மாலீக்.. அமெரிக்காவில் இந்த கஷ்டம் வேறயா?