சில்லுனு ஒரு அரட்டை

வணக்கம் நண்பர்களே, சென்ற முறை ஆவிகளைப் பற்றி ஆராய்ந்தோம். இம்முறை கொசுக்களைப் பற்றி ஆராய்வோம் வாருங்கள்!

அப்பாடா! ஒரு வழியா கோடைகாலம் முடிஞ்சு மழைக்காலம் ஆரம்பித்தாகிவிட்டது(..?). பருவ மழை பெய்ய வேண்டிய காலத்தில் மழை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் கோயம்புத்தூரைச் சுற்றிலும் மட்டும் ஓரளவு சொல்லும்படியாக மழை பெய்துவிட்டது. மழையின் வருகை தள்ளிப் போனதால் இப்போது கொசுக்களின் வருகையும் தள்ளிப் போயிருக்கிறது. எங்கள் ஏரியாவில் (திருவான்மியூர்) இப்பொழுதுதான் கொசுக்கள் படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. அது சரி.. உங்கள் ஊர்களிலே எப்படி?

தற்போது பெரும்பாலான நோய்கள் கொசுக்கள் மூலமாகவே பரவி வருகின்றன. நாம் பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த லிக்விடேட்டர்களோ, மேட்களோ, கொசுவத்தி சுருள்களோ பெரிதாக ஒன்றும் கொசுக்களுக்கு தீர்வாகிவிடுவதில்லை. பழகிய பின்பு மீண்டும் அவை தம் கைவரிசையை காட்டுகின்றன. மேலும் இந்த சாதனங்கள் கொசுக்களைக் கொல்வதில்லை, மாறாக விரட்ட மட்டுமே செய்கின்றன என்பதால் கொசுக்களின் எண்ணிக்கையும் குறைவதில்லை.

கொசுக்களை முற்றிலும் ஒழிப்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தினர் ஒரு தீர்வை அளித்திருக்கின்றனர். அவர்கள் கூற்றுப்படி முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும். அதாவது கொசுக்களை அவைகளைக் கொண்டே அழிப்பது! அது எப்படி சாத்தியமென்று பார்ப்போம்.

பெரும்பாலும் மனிதர்களை கடிப்பது பெண் கொசுக்கள் மட்டுமே. அதுவும் அவைகளின் இனப்பெருக்கத்திற்கு இரத்தம் தேவைப்படுவதால் மட்டுமே. மற்றபடி ஆண் கொசுக்கள் நம்மை நெருங்குவது கூட கிடையாது. முதலில் ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் கலவி செய்கின்றன. அதன் பின்பு பெண் கொசுக்கள் முட்டையிடும் இடம் தேடி அலைவதுடன் அவற்றிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெற உயிரினங்களின் இரத்தத்தை நாடிச் செல்கின்றன. தேவையான இரத்தம் கிடைத்த பின்பு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று முட்டையிடுகின்றன. பெண் கொசுக்கள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டு குறுகிய காலத்திற்குள் பெருவாரியாக தங்கள் இனத்தை பெருக்கிக் கொள்கின்றன.

ஆகவே, விஞ்ஞானிகளின் பார்வை பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் பக்கம் திரும்பியது (அதை ஆம்லட் போடுவதற்கு அல்ல). அதன்படி புதிதாக உருவாகக்கூடிய முட்டைகளை அழித்துவிட்டால், உயிரோடு இருக்கும் மீத கொசுக்கள் சில நாட்களிலேயே இறந்து விடும். இதனால் கொசு வர்க்கமே முற்றிலும் அழிந்து விடும். இதற்கு முதலில் ஒரு ஆண் கொசுவிடம் இருந்து ஜீன்கள் எடுக்கப்படுகின்றன. பின்பு நம் தேவைக்கு ஏற்றபடி ஜீன்களில் மாற்றம் செய்து புதிய ஆண் கொசுக்களை உருவாக்க வேண்டும். இந்த செயற்கை ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் சேர்ந்து இனவிருத்தி செய்யும். பின்னர் வழக்கம்போல் பெண் கொசுக்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். ஆனால் பொறித்த குஞ்சுகள் லார்வா நிலையிலேயே அழிந்துவிடும். ‘லார்வா’ என்பது முட்டையிலிருந்து கொசு குஞ்சுகள் வெளிவரும் நிலை. இதனால் புது கொசுக்களின் உற்பத்தி குறையும். மேலும் இருக்கின்ற கொசுக்களும் சில நாட்களிலேயே இறந்து விடும். இதன் மூலம் குறைந்த நாட்களிலேயே முற்றிலும் கொசுக்களை அழித்துவிட முடியும்.

இதற்கு லட்சக்கணக்கில் கொசுக்களை நாமே உருவாக்க வேண்டியிருக்கும். இருந்தாலும் இந்த யோசனை எப்படி இருக்கிறது? ஒத்துவருமா வராதான்னு சொல்லுங்களேன்.

என்ன..! ரொம்ப நேரமா கொசுக் கதையை சொல்லி அறுத்துட்டேனோ! அதுசரி.. உங்களுக்கு "சிதம்பர இரகசியம்" என்றால் என்னவென்று தெரியுமா? எங்கள் ஊரான விருதுநகரில் (வெயில் படம் எடுத்த ஊருதான்!) இருந்தபோது விஜய் டி.வியில் சிதம்பர இரகசியம் என்ற பெயரில் ஒரு நாடகம் வாரந்தோறும் ஒளிபரப்பினர். எனக்கு மிகவும் பிடித்த நாடகங்களிலே அதுவும் ஒன்று. ஆனால் அதன் பின்பாதியை என்னால் காணமுடியவில்லை. அதற்குள் சென்னை வாழ்க்கை ஆரம்பித்துவிட்டது.

என் அலுவலகத்தில் வேலை பார்த்த சிதம்பரம் ஊர்க்காரர் ஒருவரிடம் அந்த இரகசியம் பற்றி கேட்டேன். சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள நடராஜப் பெருமானுக்கு அருகில், சுவரில் ஒரு இயந்திரம் இருக்கிறது. அதையே ‘இரகசியம்’ என்கின்றனர். அதற்கு தீபாராதனை செய்யும்போது, அதன்மேல் அணிந்துள்ள பொன்னாலான வில்மாலையைக் காணலாம் என்றார். மேலும் நடைமுறை வாழ்வில் தெரியாத விஷயங்களை "அது சிதம்பர இரகசியம்" என்று சொல்வதுண்டு. உண்மையில் எதை அடிப்படையாக வைத்து அதை சொல்லியிருப்பார்கள் என்று தெரிந்திருந்தால் இங்கே பகிர்ந்துக்கோங்க.

அடுத்ததா, நம்ம அரசு கொண்டு வரப்போற சமச்சீர் கல்வி பற்றி என்ன நினைக்கிறீங்க? ஒருபக்கம் வரவேற்கத்தக்கதுதான். இதனால் கிராமப்புற மாணவர்களும் தங்கள் அறிவை நிரூபிக்க முடியும். மேலும் ஸ்டேட் போர்டுகளின் கல்வித்தரம் மேம்பட்டதாகிவிடும். ஆனால் இந்த கல்வி முறையால் தமிழ் கட்டாயமாக்கப்படும். மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் போன்றவற்றில் கற்பிக்கப்படும் இந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகள் ஒதுக்கப்பட்டுவிடும். ஸ்டேட் போர்டுக்கு சாதகமாகவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு சற்று பாதகமாகவும் அமையும் என்றாலும் பெரிய அளவில் மாணவர்களைக் கொண்டிருப்பது ஸ்டேட் போர்டுதான், இல்லையா?

ரெண்டு வாரம் முன்னால ஹேமா 2012 பற்றி நம்ம கருத்தைக் கேட்டிருந்தாங்க இல்லியா? மதுரை ஆதீனம் பூமியின் இறுதி நாள் 2012, டிசம்பர்-21 என்று அடித்துக் கூறியுள்ளார். எது எப்படியோ காலங்காலமாக பூமி அழியவிருக்கிறது என்றுதான் கூறிவருகிறோம். ஆனால் அது நடந்தபாடில்லை. சரி.. அதைவிடுங்கள். "ஆதீனம்" என்பதற்கு யாராவது விளக்கம் சொல்லுங்களேன்!

எனக்கு சித்தவைத்தியத்திலே ரொம்ப ஆர்வம் உண்டு. மலைப்பகுதியில உள்ள அடர்ந்த காட்டுக்குள்ள போய் ஒரு கூடாரம் அமைச்சு மூலிகை ஆரய்ச்சி பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. ப்ச்.. என்ன பண்றது! ஒரு பொறியியலாளரா ஆகித் தொலைச்சிட்டேனே!

எனக்கு அப்போ எட்டு வயது இருக்கும். கீழே விழுந்து கல்லில் அடி பட்டதில் முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் புண்ணாகியிருந்தது. எளிதாக ஆறிவிடும் என்று நினைத்து அம்மாவிடம் சொல்லாமல் விட்டுவிட, விட்டவனை புண் வாட்டியெடுத்துவிட்டது. அதன்பின்பு வீட்டு வைத்தியம் தொடங்கியது. தினமும் காலையில் குளித்து முடித்து பள்ளிக் கூடத்துக்குக் கிளம்பும் தருவாயில் காலின் புண்ணில் உள்ள சலத்தை பிதுக்கியெடுப்பார்கள். பின் பச்சிலையை அரைத்து, வதக்கி ஒத்தடம் குடுத்து அதை அப்படியே கட்டிவிடுவார்கள்.

மாலை வீட்டுக்கு வந்தவுடன் கட்டை அவிழ்த்துவிட்டு சற்று நேரம் அங்குமிங்கும் திரிவேன். இரவு மீண்டும் பச்சிலை வைத்தியம். ஆனால் கிட்டதட்ட இரண்டு வாரங்களாகியும் புண்ணில் எந்த மாற்றமும் இல்லை. இப்போது மஞ்சள் பவுடர், சல்ஃபானின் மற்றும் தென்னமரக்குடி எண்ணை அனைத்தையும் போட்டாகிவிட்டது. ஆனால் ஒரு முன்னேற்றமும் இல்லை.

பத்தியமிருப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்றார்கள். அதன் பின்பு உப்பில்லாத வெறும் கஞ்சி, கஷாயம், கானாப்பயிறு மற்றும் நல்லெண்ணை ஊற்றிய குலைந்த சாப்பாடு என்று நாக்கு வெறுத்துவிட்டது. ஆனால் பச்சிலை வைத்தியத்தையும் விடவில்லை. சரியாக ஒரு வாரம்தான்! குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் தெரிய, அதன் பின்பு சாப்பாட்டு முறையும் கொஞ்சம் தளர்ந்தது. பச்சிலைக்கு பதில் தென்னமரக்குடி எண்ணை மட்டும் தினந்தோறும் காலை மாலை போடப்பட்டது. அடுத்த சில வாரங்களில் அந்த இடத்தில் மிஞ்சியது தழும்பு மட்டுமே, இப்போது அதுவும் தெரியவில்லை. இப்பொழுது யார் பச்சிலையும், தென்னமரக்குடி எண்ணையையும் பயன்படுத்துறாங்க?

சரி அன்பர்களே, பேச்சு என்று வந்துவிட்டால் நேரம் போவதே தெரியாமல் பேசலாம். நண்பர்களின் அரட்டை அவ்வளவு சுவாரஸ்யமானது. இருந்தாலும் இப்பொழுது விடைபெற்று மீண்டும் சந்திப்போம்!

அன்புடன்,
மாயன்.

About The Author

16 Comments

  1. P.Balakrishnan

    புண்ணின் மேல் மஞ்சள், துத்தி இலை வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.

  2. Dr. S. Subramanian

    1. With respect to mosquito elimination, the strategy to tinker with the genes of the male, produce more of them and outpopulating the wild ones with the genetically modified ones is a workable one. One tactic should be to make a lot of male mosquitoes sterile and produce a lot of them and release them in the environment so that they will compete with the virile ones for the female. If enough sterile ones are there there will not be as many productive matings and hence the mosquito population would be reduced. Another strategy is to tinker with the sex chromosome of the male so that after they mate with the female and when the eggs hatch the growth factors would be inhibited and the larvae would die. Intensive science? Yes.
    2. AdhInam. One meaning for this word is right of inheritance or possession”. But usually the saivite monasteries have been called by that name for ages.”

  3. Rishi

    //புண்ணின் மேல் மஞ்சள், துத்தி இலை வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.//

    எனக்கு இந்த அனுபவம் இருக்கிறது. பாதத்தின் அடியில் சிறிய கரண் போன்று ஒன்று உருவாகி வலித்துக் கொண்டே இருந்தது. மாலையில் துத்தி இலை வைத்துக் கட்டி விட்டு காலையில் எடுத்துப் பார்த்தால் கரணை துத்தி இலை தின்று விட்டிருந்தது. பைசா செலவில்லாமல் வைத்தியம் முடிந்தது. மாலையில் அதைச் செய்வதற்கு முன்னால் டாக்டரிடம் போய் கன்ஸல்ட் செய்ததில் அவர் ஆபரேட் செய்து எடுத்து விடலாம் என்றார். எப்படியும் முன்னூறு ரூபாய் செலவழியும் போலத் தெரிந்தது. இதை முயற்சித்துப் பார்த்ததில் கால்மேல் பலன்!!

  4. maayan

    நன்றி பாலு சார். மஞ்சள் ஒரு கிரிமி நாசினி, ஆகவே அவை புண்களுக்கு சிறந்த தீர்வுதான். நாங்க துத்தி இலையை பயன்படித்திப்பார்த்ததாக நினைவில்லை. அதுவும் பச்சிலை போன்றுதான் என்று நினைக்கிறேன்.

  5. maayan

    மிக்க நன்றி சுப்ரமணியன் சார், இரண்டுமே கொசுக்களை முற்றிலும் ஒழிப்பதற்கு ஒரு நல்ல தீர்வாகத்தான் இருக்கும். முன்னவற்றில் கொசுக்களை உருவாகாமலே அழிப்பதும், பின்னவற்றில் உருவான கொசுக்களை அழிப்பதும் சாத்தியம்தான்.

  6. Jo

    சமச்சீர் கல்வி முறை கட்டாயம் தேவை. இதனால் அனைத்து தட்டு மக்களுக்கும் தரமான கல்வி போய்ச் சேரும். கல்வியின் பெயரால் கொள்ளையடிப்பதும் குறையும். தமிழகத்தைத் தவிர அனைத்து அண்டை மாநிலங்களிலும் அவரவர் தாய்மொழி கற்காமல் ஒருவரும் பள்ளிப்படிப்பை முடிக்க இயலாது. அவர்கள் அதனால் மற்ற மொழித் திறமைகளைப் பெறவில்லையா என்ன? ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மூன்று மொழிகள் கட்டாயம் தெரிந்திருக்கும். கர்நாடகாவில் கன்னடம், தமிழ், இந்தி, ஆங்கிலம் நான்கும் அறிந்தவர் பலர். தாய்மொழியைக் கட்டாயமாகக் கொண்டுள்ளனர் இவர்கள். தமிழகத்தில் தாய்மொழி கட்டாயமில்லை. அதனால் மற்ற மொழியில் புலமை பெற்றுள்ளனரா என்றால் அதுவுமில்லை – ஆங்கிலத்தைத் தவிர. ஆக மொத்தத்தில் சமச்சீர் கல்விமுறை கொண்டு வருவதால் இழப்பொன்றுமில்லை. வரவு மட்டுமே. மேலும் வெறும் பள்ளிக் கல்வியை மட்டுமே வைத்து யாரும் வேற்று மொழியைக் கற்றறியவும் முடியாது என்பதும் உண்மை.

  7. Hema

    மாயன் கேட்ட கேள்விக்கெல்லாம் யாரவது(ஜோ எங்கயாவது இருந்து சுட்டுட்டு வாங்களேன்) பதில் சொல்லுங்களேன் ப்ளீஸ்…எனக்கும் சிதம்பர ரகசியம் தெரிச்சுக்க ஆவலா இருக்கு!!! ரகசியத்தை சொன்ன மண்ட வெடிக்காதுதான மாயன்???

  8. maayan

    //ரகசியத்தை சொன்ன மண்ட வெடிக்காதுதான மாயன்???//
    அந்த காலத்துல இரகசியத்த வெளியிட்ரக்கூடாதுன்னுதான் அப்பிடி சொன்னாங்கெளோ?(வடிவேலு பாணியில்)

  9. Rishi

    சிதம்பர ரகசியம் :
    இதுதானா என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. கேள்விப்பட்டதைச் சொல்கிறேன்.
    சிதம்பர ரகசியம் இருக்கிறது என்று சொல்லுமிடத்தில் ஒன்றுமே இல்லை. வெளியே திரை மறைத்திருக்கிறது. திறந்து பார்த்தால் ஒன்றுமே இல்லை. மனமயக்கும் உலக மாயைகளை விலக்கிப் பாருங்கள்; உள்ளே ஒன்றுமே இருக்காது என்பதுதான் சிதம்பர ரகசிய என்று சொல்கிறார்களாம்.

    ரகசியத்தைச் சொன்னா மண்டை வெடிக்காது.. கேட்கலேன்னா தான் நமக்கு வெடிக்கும்!!

    தத்துவத்தைக் கேட்பவனும் மனிதன்; சொல்பவனும் மனிதன் எனும்போது அங்கு ஆச்சரியங்களுக்கு இடமில்லை…!

  10. Rishi

    எனக்கென்னவோ குருகுல கல்விமுறைதான் பிடித்திருக்கிறது!!

  11. maayan

    ரிஷி,
    எனக்கும் குருகுல கல்விமுறைய நாம இழந்துட்டோம்ன்னுதான் வருத்தமா இருக்கு. அப்போ இருந்த கல்விமுறையில், ஐந்து வயது வந்தவுடன் தன் குழந்தைகளை குருவிடம் ஒப்படைத்து விடுவர். அதன்பின்பு பருவவயதை அடைந்தபின்பு குருவே அவர்களுக்கு சோதனை வைப்பார். அதில் பெறும் அனுபவத்தைப்பொருத்து குருகுல கல்வியை அவன் தொடர்வதா? இல்ல அவனது சக்தி ஊற்றுக்கு தகுந்தவாறு சன்யாசம் அளிக்கவா? இல்ல சம்சாரக்கடலில் தள்ளவா என்று குருவே ஊகிப்பார். அன்றைய குருவையும் இன்றைய குருவையும் நினைக்கும்போது, ஒரு நல்ல கல்விமுறையை இழந்துவிட்டோம் என்றே தெரிகிறது!

  12. Rishi

    துத்திச் செடிகள் குப்பை மேடுகளில் கூட வளர்ந்து கிடக்கும். மஞ்சள் வண்ணத்தில் பூ பூக்கும். பூவில் வாசனை எதுவும் இருக்காது. பார்ப்பதற்கு அரச மர இலை போன்றிருக்கும்.. சற்று மென்மையாக இருக்கும்.

  13. ramesh

    சிதம்பர ரகசியம் தெரிய வேன்டும் என்றால் நக்கீரன் வெலியிட்ட எங்கு போகிறது இந்து மதம் 1 படிக்கவும்.

Comments are closed.