ஹலோ ஃபிரெண்ட்ஸ்,
எல்லோரும் சந்தோஷமா தீபாவளி கொண்டாடி மகிழ்ச்சியா இருந்துருப்பீங்கன்னு நினைக்கிறேன். நான் எப்பவும் போல நல்லாவே கொண்டாடினேன். ‘ஏழு கழுதை வயசாச்சு. இப்பவும் பட்டாசு வெடிக்கணும்னு ஆசைப்படறியே’ன்னு கிண்டல் செய்தாலும் (வேற யாரு, எல்லாம் எங்க அம்மாதான். எனக்கு எதிர்ப்பு தெரிவிக்க வெளியில இருந்தெல்லாம் ஆள் வரனும்னு இல்லைங்க. எங்க அம்மா ஒருத்தர் போதும்!!) கொஞ்சம் கூட கவலைப்படாமல் என்ன மாதிரி எல்லாம் சீன் போட்டா காரியம் நடக்குமோ (வேறென்ன எல்லோருக்கும் தெரிஞ்ச வழிதான். ரொம்ப சோகமா முகத்தை வைச்சுக்கிறது. இந்த பட்டாசுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியதாயிருக்கு. ஹூம்…) அதெல்லாம் செஞ்சு ஒரு வழியா பட்டாசு வாங்கி வெடிச்சாச்சு. ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம். சின்ன குழந்தைங்க அல்லது பசங்க மட்டும்தான் பட்டாசு வெடிக்கணும்னு யாருங்க சட்டம் போட்டது? ரொம்ப டூமச்சாயிருக்கு…
2011 உலகக் கோப்பைக்குப் பிறகு நமக்குப் பல போட்டிகளிலும் ஏமாற்றத்தை மட்டுமே இந்தியக் கிரிக்கெட் அணி கொடுத்திட்டுருந்தது. நம்மைப் போன்ற பல இந்தியர்களுடைய அர்ச்சனைகளுக்கப்புறம் ஒரு வழியா போன வாரம் நடந்து முடிந்த இங்கிலாந்துடனான தொடரில் வெற்றி பெற்று கொஞ்சம் நம்ம மனசை குளிர வைச்சுட்டாரு தோனி அண்ணே! இப்படித்தான் என்னுடைய தங்கை நம்ம இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டனை சொல்லுவா. என்னையெல்லாம் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறைதான் ‘அக்கா’ன்னு கூப்பிடுவா. ஆனா தோனி அண்ணன் மேல மட்டும் எக்கசக்கப் பாசம்! முந்தைய சில போட்டிகளில் தோற்கும்போதே நம்ம கேப்டனுக்காக வக்காலத்து வாங்கிட்டு இருப்பா. இப்போ கேக்கவே வேண்டாம். ‘என்னவோ பெருசா திட்டினியே. எல்லாப் போட்டிகள்லேயும் இந்திய அணி தோற்குதுன்னு சொன்னியே. இப்போப் பார்த்தியா? 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது மட்டுமில்லாம 5 போட்டிகளிலும் அவுட்டாகாம விளையாடி இருக்காரு எங்க (?) தோனி அண்ணே. எல்லாப் போட்டிகளிலேயும் அவுட்டாகாம இருந்ததாலே அவருக்கு ஒரு பைக்கும் பரிசாக் கொடுத்திருக்காங்க தெரியுமா?’ அப்படீன்னு சொன்னா. சும்மாவே அவளுடைய தோனி அண்ணன் புராணம் தாங்காது. இப்போ கேட்கவே வேண்டாம்.
பொதி மூட்டைகள் மாதிரி இருக்கும் புத்தகப் பைகளுடன் சின்ன சின்ன குழந்தைகளைப் பார்க்கும்போது எனக்கு ரொம்பவே வருத்தமா இருக்கும். இன்னும் தெளிவா சொல்லணும்னா எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள் படும்பாட்டை பல முறை நாம பேசியிருக்கோம். ரொம்பவே சுதந்திரமா ஆடிப் பாடி, விளையாடி சந்தோஷமா கழிக்க வேண்டிய வகுப்புகள் அவைகள்ங்கிறது என்னுடைய அபிப்பிராயம். ஜப்பான் நாட்டில் இருக்கும் ஃபூஜி (Fuji) கிண்டர்கார்டனில் குழந்தைகள் சுதந்திரமாக ஓடியாடி விளையாடுவதற்காகவே ஒரு புதுமையான அமைப்பை ஏற்படுத்தியிருக்காங்க. அது என்னன்னா… அந்த கிண்டர்கார்டனில் உள்ள ஜப்பானிய ஜெல்கோவா மரத்தைச் சுற்றி சுழல் படிக்கட்டுகளை ஏற்படுத்தியிருக்காங்க. இதற்கு ‘Ring Around a Tree’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மரத்துண்டுகளாலான இரண்டு அடுக்கு மாடியில் உள்ள இந்த சுழல் படிக்கட்டுகளின் மேல் மிருதுவான ரப்பர் பாய்களை விரிப்புகளாக கிடத்தியிருக்காங்க. குழந்தைகள் வேகமாக நடக்கும்போதோ அல்லது ஓடும்போதோ கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க இந்த ஏற்பாடு. இந்த கிண்டர் கார்டன் தொடங்குவதற்கு முன்பிருந்தே இந்த ஜெல்கோவா மரம் இருக்கிறதாம். (மரத்தோட வயது என்ன தெரியுமா? 50!) சாயந்திரம் பள்ளியின் பேருந்திற்காகக் காத்திருக்கும்போது கூட குழந்தைகள் இதில் விளையாடுகிறார்களாம். இதே மாதிரி அதிக சிரமமில்லாமல், செலவுமில்லாமல் நம்மிடமிருக்கும் சிறு சிறு விஷயங்களைக் கொண்டே குழந்தைகளுக்கான சூழலை ஏற்படுத்தலாம்.
சரி… கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோம். ஒவ்வொருக்குள்ளேயும் பலவிதமான திறமைகள் உண்டு. சில நேரங்களில் திறமைகள் வெளிப்பட தாமதமானாலும் அது பற்றிய விவரம் தெரியவரும்போது அதைப் பார்த்து நம்மால் அதிசயப்படாமல் இருக்க முடியறதில்லை. அது மாதிரியான ஒரு விஷயம்தான் நான் பார்த்த இந்த வீடியோ. எங்க வீட்டுலே எல்லாம் கொஞ்ச நேரம் சேர்ந்தாற்போல் தண்ணீரோடு விளையாடினாலே ஏகப்பட்ட டோஸ் கிடைக்கும். ஆனா அதுக்கெல்லாம் நான் கவலைப்பட்டதேயில்ல. இந்தக் காதுல வாங்கி உடனே அந்தக் காதுல விட்டுடுவேன். ஆனால் தண்ணீரில் விளையாடிக்கிட்டே இப்படி நிறைய ஜாலங்களும் செய்ய முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். நீங்களும் இந்த வீடியோவைப் பாருங்க. கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்.
http://www.forwardedemails.com/6642-amazing-art-on-water
உங்களுக்குள்ளேயும் இந்த மாதிரி திறமைகள் இருக்காப்பா? இருந்தா சொல்லுங்க.. நிலாச்சாரல் மூலமா உங்களுடைய திறமைகளை வெளிக் கொணர்ந்து ஒரு பாராட்டு விழா எடுத்துரலாம். என்ன ஓகேயா?
சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…
“
ஒரு கழுதையின் வயசு எத்தனை?
குத்து மதிப்பாக சொல்ல வேண்டுமானால் ஒரு கழுதையின் சராசரி வயது இருபத்து எட்டு
ஏழு கழுதை வயசு என்ற சொல்வழக்கு எப்படி வந்தது?அப்படி பார்த்தால்
கணக்கு உதைக்குமே…எனிவே தேங்க்ஸ் டாக்டர்.
அது ஒரு பேச்சுக்குத்தான் ஏழு கழுதை வயசு என்ற வழக்கு. ஒருவருக்கு வயதுக்கு மீறிய ஆசை இருந்தால் அப்படி சொல்வது வழக்கம். வயது முதிர்ந்தவர்களை ஜடாயு மாதிரி என்று சொல்வது போல