ஹாலோ ஃபிரெண்ட்ஸ்,
எல்லோரும் சுகமா இருக்கீங்களா? நான் இங்கே எப்பவும் போல நலமாவே இருக்கேன்.
ஏகத்துக்கும் வெயில் கொளுத்துதேன்னு நாம எல்லோரும் வருத்தப்பட்டது வருண பகவானுக்கு கேட்டுடுச்சுப் போல… இடி, மின்னலோட பெய்த மழையால வெப்பத்தின் அளவு கொஞ்சமா குறைஞ்சிருக்கு. இன்னும் கொஞ்சம் மழை பெய்தாலும் நல்லாவே இருக்கும்.
தீபாவளி கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துல வந்துக்கிட்டேயிருக்கு… எல்லோரும் உங்களுடைய ஷாப்பிங் எல்லாம் முடிச்சிட்டீங்களா? தீபாவளி அன்னிக்கு வெளியாகும் திரைப்படங்கள்ல எதுக்கு போறதுன்னு முடிவு செய்துட்டீங்களா? உங்களுக்கு தீபாவளி அப்படீன்னு சொன்ன உடனே நினைவுக்கு வரும் விஷயம் என்னவாயிருக்கும்? சொல்லுங்க… புதுத் துணி, பட்டாசு, இனிப்புகள் இப்படி நிறைய விஷயங்கள் இருந்தாலும் எனக்கு எங்க அப்பா வாங்கிட்டு வரும் ஆனந்த விகடன், குமுதம் வெளியிடும் தீபாவளி மலர்கள்தான் எனக்கு உடனே ஞாபகத்துக்கு வரும். இப்போ தினசரிகள், வாரப் புத்தகங்கள், நாவல்கள் இப்படி எல்லாமே மின் புத்தகமாகக் கூட கிடைக்குது. அப்போ எங்க வீட்டுல வாரப் புத்தகங்கள் எப்போவாவதுதான் வாங்குவோம். ஆனா தீபாவளி மலர்கள் வாங்க எங்க அப்பா தவறினதேயில்லை. இந்தப் புத்தகங்கள் மூலமாக நிறைய எழுத்தாளர்களை, ஓவியர்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைச்சுது. நடுவில் சில வருஷங்கள் தீபாவளி மலர்கள் வாங்கும் பழக்கம் விட்டுப்போயிருந்தாலும் இந்த வருடத்திலிருந்து மீண்டும் தீபாவளி மலர்களை வாங்க முடிவு செய்திருக்கேன். அது மட்டுமில்லாம சில வருடங்களுக்கு முந்தைய தீபாவளி மலர்களை முக்கியமா 90களில் வெளிவந்த புத்தகங்களை சேகரிக்க முடிவு செய்திருக்கேன்.
போன வாரம், எங்கள் வீட்டின் கதவைத் தட்டும் ஆட்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அவங்களும் எல்லோரும் இப்பவே எங்களை நல்லா ஒரு முறைப் பார்த்துக்குங்க. இந்த வாய்ப்பை விட்டா இன்னும் பல வருஷத்துக்கு எங்களை பார்க்க முடியாதுன்னு சொல்றது போல ஒவ்வொரு வீடாப் போய் வணக்கம் போட்டுட்டு இருந்தாங்க. எல்லாம் நம்ம உள்ளாட்சித் தேர்தலுக்காக கட்சிகள் மேற்கொண்ட வாக்கு சேகரிப்பு (வேட்டை) பத்திதான் சொல்லிட்டு இருக்கேன். ஒவ்வொரு கட்சியில இருந்தும் வரும் அஞ்சு அல்லது ஆறு பேரும், பெருசா கும்பிடு போட்டு, ‘கண்டிப்பா எங்களுக்கே ஓட்டுப் போடுங்க. எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க. படிச்சவங்க நீங்க யோசிச்சு ஒரு நல்ல முடிவெடுங்க. உங்க தொகுதிக்கு தேவையான எல்லா தேவைகளையும் நாங்க செய்து தரோம்’ அப்படீ இப்படீன்னு என்னனென்னவோ சொன்னாங்க. ஆட்சியிலிருக்கும் கட்சியில் தொடங்கி தனித்து போட்டியிடும் சுயேட்சை போட்டியாளர்கள் வரை எல்லோருமே இந்த ஓட்டு வேட்டையில் பங்கெடுத்துக்கிட்டாங்கன்னு நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. அடுத்து நடந்ததை கண்டிப்பா நான் எதிர்பார்க்கவேயில்லை.
எங்க வீட்டில் தொலைபேசி இருந்தாலும் பெரும்பாலும் அழைப்புகள் அலைபேசிகள் மூலமாகவே வருவது வழக்கம். அதனால முந்தாநாள் காலங்கார்த்தால தொலைபேசி அடிக்கவும், யார் இந்த நேரத்துல கூப்பிடறாங்கன்னு யோசனை செய்துகிட்டே போனை எடுத்தா… "வணக்கம் நான் இந்தத் தொகுதியில் ____ கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பேசறேன். என்னுடைய பெயர் ____. என்னை வெற்றி பெறச் செய்தால்…." அப்படீன்னு ஆரம்பிச்சாரு பாருங்க… ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செய்தியைத்தான் சொல்லியிருந்தாங்க. அந்த நேரத்துல எனக்கு ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்துல வரும் டயலாக்தான் நினைவுக்கு வந்துது. ‘Technology has improved very much!’
எல்லாம் சரி, நான் கோவைவாசியா? என்னால் கோவையில் வோட்டு போட முடியுமான்னு யாருமே கேட்கலை. நானும் உண்மையைச் சொல்லலை.
வேட்பாளர்கள் இந்த மாதிரி வந்து ஓட்டு கேட்கும்போது எனக்கு ‘மாயா பஜார்’ படம்தான் ஞாபகத்துக்கு வருது. அரசியல் பேசிட்டு இருந்த நான் திடீர்னு ‘மாயா பஜார்’ படத்திற்கு தாவிட்டேனேன்னு யோசிக்கிறீங்களா? பொறுமை… பொறுமை… முழுக்கப் படிச்சா நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கே புரியும். படம் முழுக்கவே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல எனக்கு ரொம்பவே பிடிச்ச scene எது தெரியுமா? ‘கல்யாண சமையல் சாதம்’ பாடல்னு சொல்லிவேன்னு நினைச்சீங்களா. அதுதான் கிடையாது. இந்திரபிரஸ்தத்தின் கிரஹப்ரவேசத்திற்கு போய் வரும் கிருஷ்ணர் மூலமாக அபிமன்யூ வத்சலாவுக்கு ‘ப்ரியதர்ஷினி’ என்கிற பரிசையும், தருமர் பலராமருக்கு ‘சத்ய பீடம்’ங்கற பரிசையும் கொடுத்தனுப்பியிருப்பாரு. ‘ப்ரியதர்ஷினி’ பேழையை யார் திறந்து பாத்தாலும் அதுல அவங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்களோ/பிடிச்சதோ தெரியும். அதாவது யார் மனசுல யாரு அல்லது என்னன்னு தெளிவா படம் பிடிச்சு காண்பிச்சுடுமாம். (வத்சலாவுக்கு அபிமன்யு தெரிவாரு, பலராமருக்கு அவருடைய ப்ரிய சிஷ்யனான துரியோதனன் தெரிவாரு. அந்த பேழையை கிருஷ்ணர் திறந்து பாக்கும்போது அர்ஜுனன் தான் தெரிவாருனு எல்லோரும் நினைச்சுட்டு இருக்கும்போது அதுல சகுனி தெரிவாரு. ஆச்சச்சர்யத்தோட எல்லோரும் பாத்துட்டு இருக்கும் போது கிருஷ்ணன் ‘சகுனி என்ன சதி பண்ணுவாருன்னு நான் யோசிக்கறதும் நான் என்ன செய்வேன்னு சகுனி யோசிக்கறதும் எங்களோட விதி’ன்னு பதில் சொல்லுவாரு.) அதே மாதிரி ‘சத்ய பீடம்’ மேல யார் ஏறி பேசினாலும் உண்மையைத்தான் பேசுவாங்களாம். ‘ப்ரியதர்ஷினி’யும், ‘சத்ய பீட’மும் இப்போவும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். ஹூம்…
போன வாரம் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸின் புரொஃபைலுக்காக விவரங்கள் சேகரிக்கும்போது பிக்சார் மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனங்கள் இணைந்து தயாரித்த அனிமேஷன் திரைப்படங்களின் பட்டியலில் டாய் ஸ்டோரி, ராட்டடூயீ (Ratatouille), வால்-ஈ (Wall-E) போன்ற படங்கள் இருப்பது தெரிய வந்தது. வால்-ஈ படம் என்னுடைய ஆல்டைம் ஃபேவரெட். அதே மாதிரி ராட்டடூயீ (Ratatouille) படமும் எனக்கு பிடிக்கும். நமக்கு தெரிஞ்சு எலிகள்னாலே திருடி சாப்பிடறதுதான் நினைவுக்கு வரும். ஆனா இந்தப் படத்துல ஒரு எலி எப்படி தன்னுடைய சமையல் திறமையால ஒரு பெரிய ஹோட்டலுக்கே தலைமை சமையல்காரர் ஆகுதுங்கறதுதான் கதை. ரொம்ப நகைச்சுவையாவும், சுவாரஸியமாகவும் படமாக்கியிருக்காங்க. வாய்ப்பு கிடைச்சா பாருங்க கண்டிப்பா பிடிக்கும்.
இந்த வாரம் கடைசி கட்டி மாம்பழம், குட்டீஸ் ஸ்பெஷல். பொதுவா குழந்தைகளை பாடப் புத்தகங்களை படிக்க வைக்கிறதுக்குள்ளே அம்மாக்கள் படும் பாட்டை சொல்லி மாளாது. இதுமாதிரியான அம்மாக்களுக்கு உதவறதுக்காகவே இணையத்துல பல பாடங்களுக்கான வீடியோக்கள் கிடைக்குது. உதாரணமா, கீழே இருக்கும் சுட்டியில் குழந்தைகளுக்கான பாடங்கள் எளிமையான வீடியோக்களாக கிடைக்குது. கண்டிப்பாக உங்க குழந்தைங்க ஜாலியாகவே பாடங்களைப் படிப்பாங்க.
சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…
“
Ada namma lie detector ” patthi intha pulla pasuthupa…..
athu antha nallaye irunthutha……namma thathalam yaru……
Intha pulliku thariyala pa nangha athulaum ootya kandupudipomulla………..
eapudiiiiiiii—-Vera yaru unga veetuku call panuna unga veetu viruthalithan.”