ஹலோ ஃபிரெண்ட்ஸ்,
எல்லோரும் நல்லா இருக்கீங்களா? இந்த வாரம் அரட்டைக்கு ‘நோ’ சொல்லப்போறேன். கடந்த வாரம் ஆரம்பித்த நவராத்திரிக்காக எங்க வீட்டுல வைத்திருக்கும் கொலுவிற்கு உங்க எல்லோரையும் வாங்க வாங்கன்னு அன்போட வரவேற்கிறேன். (கண்டிப்பா சுண்டல் உண்டு!) ஆனா நீங்க எல்லோரும் ரொம்பவே பிஸியானவங்க. வந்து பார்க்க நேரமிருக்குமான்னு தெரியலை. அதனால் எங்க வீட்டு கொலுவில் வீற்றிருக்கும் பொம்மைகளை பார்த்து ரசித்திட உங்க எல்லோருக்கும் புகைப்படங்கள் வழியாக ஒரு உலாவிற்கு ஏற்பாடு செய்திருக்கேன்.
போன முறை கோவை வந்து ஒரு மாதமே முடிந்திருந்த நிலையில சரியான முறையில் பொம்மைகளை அடுக்கி அழகு பார்க்க முடியலை. அதுக்கெல்லாம் வட்டியும் முதலுமா, இந்த முறை சில மாதங்களுக்கு முன்பிருந்தே சரியான வகையில் திட்டமிட முடிந்தது. பொம்மைகள் வைத்திட தேவையான படிகள் செய்து, பொம்மைகளை தேடித் தேடி வாங்கி, இதோ ஒரு அழகான நவராத்திரி கொலு தயார். ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுன்னு நீங்க எல்லாம் உங்க மனசுல நினைக்க ஆரம்பிச்சுட்டதால, நம்ம புகைப்படங்களின் உலாவைத் தொடங்கலாம்.
ஒவ்வொரு படியிலேயும் என்னென்ன பொம்மைகள் இருக்குன்னு பார்க்கலாம் வாங்க….
படியில நடுநாயகமா அன்னபூரணி அமர்ந்திருக்காங்க. அவங்களுடைய வலது மற்றும் இடது பக்கங்களில் காயத்ரி தேவி, சரஸ்வதி, பராசந்தி, லக்ஷ்மி அமர்ந்திருக்காங்க. இடது பக்கத்தில் சின்ன கிருஷ்னரும் தவழ்ந்திட்டிருக்கார். படியின் ரெண்டு ஓரங்களிலும் தசரா புகழ் யானைகளில் லக்ஷ்மி அமர்ந்து அருள் புரிஞ்சிட்டிருக்காங்க. அன்னபூரணி முன்பு ஒரு ஜோடி லவ்பேர்ட்ஸ் வைக்கப்பட்டிருக்கு.
ஒரு புறத்தில் அர்த்தனாரீஸ்வர், பிள்ளையார் மற்றும் முருகரின் பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கு. மறுபுறத்தில் அஷ்டலக்ஷ்மிகள் அமர்ந்திருக்காங்க.
ஒரு புறத்தில் குபேரன் மற்றும் அவருடைய மனைவிக்கு லக்ஷ்மி அருள் புரிய, இன்னொரு புறத்தில் பெருமாள் மற்றும் தாயார் அமர்ந்திருக்காங்க. இவங்களுக்கிடையில் ஆதிசேஷன் படுக்கையில் ஆனந்த சயனத்திலிருக்கார் பள்ளி கொண்ட பெருமாள். கூடவே தஞ்சாவூர் பொம்மை தனக்கு தெரிந்த நடனத்தை ஆடறாங்க.
கயிலையில் சிவன் மற்றும் பார்வதி அமர்ந்திருக்க, சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறிகள் ஆறு குழந்தைகளாக தாமரையில் தவழ்ந்திருக்க, குழந்தைகளைப் பராமரிக்கும் ஆறு கார்த்திகைப் பெண்களும் உடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு அருகில் அண்ணாமலையாரும், உண்ணாமலையாரும் அமர்ந்துள்ளனர். அவர்கள் முன்பு இருக்கும் பீங்கான் யானைகள் அவர்களை வணங்குகின்றன.
கிருஷ்ண லீலை – இதில் வசுதேவர், கிருஷ்ணர் பிறந்ததும் அவரைக் கூடையில் வைத்து எடுத்துச் செல்லும் போது ஆதிசேஷன் குடை பிடிப்பது, மரத்தைப் பிளந்து தேவருக்கு மோட்சம் அளித்தது, வெண்ணையைத் திருடி தின்னும்போது யசோதையிடம் மாட்டிக் கொள்வது, உறியிலிருந்து வெண்ணையை திருடும் கிருஷ்ணர், காலிங்க நர்த்தனம், கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல், வசுதேவர் மற்றும் தேவகியை சிறையிலிருந்து விடுவித்தல் என்று பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
கீழே ஒரு சின்ன ஊரை ஏற்படுத்தியிருக்கேன். அந்த ஊரில், நிறைய மரங்களுடனான பிள்ளையார் கோவில் இருக்கு. கோவிலின் வாசலில் தம்பதி சமேதரின் கடையில் அரிசி, பருப்பு, புளி, மிளகாய் மற்றும் பூக்கள் விற்பனைக்கிருக்கு.
அதற்கடுத்து பள்ளி மற்றும் மற்றும் குழந்தைகளுக்கான பூங்காவை அமைத்திருக்கேன்.
பள்ளி, பூங்காவிற்கு எதிரில் தனித் தனி வீடுகள் உள்ள குடியிருப்பு இருக்கு.
அதுக்கப்புறம் ஒரு வீட்டில் உழவரும் அவருடைய மனைவியும் ஆடு, மாடு, கோழி போன்ற செல்லப் பிராணிகளுடன் வாழ்ந்துட்டிருக்காங்க. அவங்க வீட்டு வாசலில் ரெண்டு பேர் பல்லாங்குழி விளையாடறாங்க.
கடைசியாக இருக்கும் மலையின் உச்சியில் கோவில் இருக்கு. மலையின் அடிவாரத்தில் பிள்ளையார் சிலைகள் வாத்தியங்களுடன் கச்சேரி செய்துட்டிருக்காங்க.
இந்த பொம்மைகள்ல – பல்லாங்குழி மற்றும் விளையாடும் நபர்கள் அப்புறம் பிள்ளையார் கச்சேரி செட் நான் வடிவமைச்சேன்.
என்னங்க கொலு எப்படியிருக்கு? நல்லாயிருந்ததா?
சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…
“
அற்புதம் நவராத்திரியை இப்படி கொண்டு வந்ததற்கு ரொம்ப நன்றி. கொலு எப்படி வைப்பது என்று நினைத்த எனக்கு இப்படி ஒரு காட்சியா???? கொஞ்சம் சிரமம் முயற்சி செய்யலாம்