வணக்கம் நண்பர்களே,
தமிழகத்தை கோடைமழை ஏமாற்றினாலும் பருவமழை சற்று தாமதத்துடன் ஆரம்பித்து விட்டது. உங்கள் ஊரில் மழை எப்படி இருக்கிறது? கடந்த வாரம் சென்னையில் மழை வெளுத்து வாங்கி விட்டது. கடந்த வாரம் இரண்டு நாள் விடாத மழையால் எங்கள் அலுவலகப் பகுதியில் வெள்ளம்.
வழக்கமாய் மழைநீர் தேங்காத இடங்களில் கூட முழங்கால் நனையும் அளவுக்கு மழைத் தண்ணீர் நிரம்பிவிட்டது. மேலே உள்ள இரண்டாவது படத்தில் ஆட்டோ ஒன்று தேங்கிய நீரில் சீறிப் பாய்கிறது. இது கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு பள்ளத்தில் சிக்கிக் கொண்டது வேறு கதை. மேலும் ஒரு சுவாரஸ்யமான படம் உங்களுக்காக…
நம்மை விட ஐந்தறிவுள்ள விலங்குகளுக்கு இயற்கையாகவே இந்த இயற்கை சீற்றத்தைப் பற்றிய அறிவு அதிகம்தான்! பாருங்கள், தினமும் சென்று வருகிற எங்களுக்கு இந்த சாலையில் உள்ள பள்ளங்களைக் கண்டறிவதற்கே கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இந்த நாய் எளிதாக பள்ளம் இல்லாத வழியைக் கண்டுபிடித்துச் செல்கிறது. அந்தப் படத்தில் உள்ள வண்டி ஓட்டுபவர் அந்த நாய் செல்லும் வழியை நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார். அடடா! இது நல்ல ஐடியாவா இருக்கே! என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டோம்.
சாலைகளில் தேங்கிவிட்ட மழைநீரை வெளியேற்றுவதற்கு ட்ரெயினேஜை திறக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தாலும் ஆங்காங்கே அவற்றைத் திறந்துவிட்டு நீர் தேக்கத்தைக் குறைக்கின்றனர் மக்கள்.
என்னதான் இன்று உலகம் அதிவேகமாக நவீன நிலையை அடைந்து வந்தாலும் அவற்றால் விளையும் இடையூறுகளும் அதிகமாகியே வருகின்றன. முன்பு ஊருக்கு ஒன்று இரண்டு தொலைபேசிகளாக இருந்து, பின் தெருவுக்கு ஒன்றாகி, வீட்டுக்கு ஒன்றாகி, இப்பொழுது ஆளுக்கு ஒன்று இரண்டு தொலைபேசிகள் வரை வந்துவிட்டது. இவையெல்லாம் விஞ்ஞானத்தின் வளர்ச்சிதானே!
சரி! இந்த மொபைல் துறை வளர்ச்சி நமக்கு எப்படி இடையூறாக இருக்க முடியும்? எந்த அளவுக்கு தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு அதன் கதிர்வீச்சின் தாக்கம் அதிகரிக்கும் என்கின்றனர். இன்றைக்கு மொபைல் ஃபோன்களுக்கு என பல நிறுவனங்களின் டவர்கள் இலட்சக்கணக்கில் பெருகிவிட்டன. இவற்றின் தாக்கம் நேரடியாக தெரியாவிட்டாலும் இவற்றின் பாதிப்பை நாம் ஏனோ மறந்துவிட்டோம், இல்லை சகிக்க பழகிவிட்டோம். என்ன பழகி விட்டோமா? ஆமா பின்னே! இதன் பாதிப்புகளை அறிந்திருந்தாலும் நம் வீட்டு மாடியில் டவர்களை நிறுவ அனுமதித்திருப்போமா?
எனக்குத் தெரிந்த ஒருவர் தன் வீட்டு மாடியில் மொபைல் டவர் ஒன்றை நிறுவியிருந்தார். ஆனால் டவர் நிறுவிய சில மாதங்களுக்குப் பின்பே, அதன் பலன் தெரிய ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக வீட்டில் இருந்த பெண்களை இதன் கதிர்வீச்சு பெரிதும் பாதித்திருக்கிறது. தலைவலியில் இருந்து வாந்தி மயக்கம் வரை அனைத்து உபாதைகளும் வந்துவிட்டன. குறிப்பிட்ட காலத்திற்கு என்று போடப்பட்ட ஒப்பந்தம் வேறு அவர்களை உடனே டவரை எடுக்க முடியாமல் தடுத்து விட்டது.
ஒரு மொபைல் டவருக்கு சுமாராக மாதம் ஏழாயிரம் முதல் பத்தாயிரம் வரை தருகின்றனராம். அல்லது மொத்தமாக வருடத்திற்கு இவ்வளவு என்று கொடுத்து விடுகின்றனராம். நகரங்களில் பத்தாயிரம் என்றால் கசக்கவா செய்கிறது!
சரி.. ஏன் கிராமத்திற்கு இந்த பாதிப்புகள் அதிகம் இல்லை என்று கேட்டால், அங்கே வெட்டவெளி அதிகம். தவிர, வானுயர்ந்த கட்டிடங்கள் எதுவும் இல்லை. ஆகவே டவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் நகரங்களிலோ 500 மீட்டருக்கு ஒரு டவர் நிறுவியாக வேண்டும். இல்லையென்றால் சிக்னல் பிரச்சினை வந்துவிடும். மேலும் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து விட்டதால் டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இதற்கு ஏதாவது தீர்வு கண்டால் ரொம்ப ரொம்ப நல்லது.
டிராஃபிக்… டிராஃபிக்… சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி,கொல்கத்தா இப்படி எங்க பார்த்தாலும் மக்கள் சந்திப்பதுசாலை நெரிசல். ஏன் நகரங்களிலெல்லாம் இந்த நிலை? இன்றைக்கு நகரங்களில் புதிதாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். தமிழ்நாட்டில் மட்டும் வருடத்திற்குப் பொறியியல் படிப்பு மட்டும் படித்து வெளிவருபவர்கள் கிட்டத்தட்ட 80,000 பேர். இவர்களில் 40% அதாவது 32,000 பேர் வேலை தேடி சென்னைக்கு குடிவருகின்றனர். மீதம் உள்ளவர்கள் கோயம்புத்தூர், திருச்சி போன்ற சிறு நகரங்களிலும் பெங்களூரு, புனே போன்ற நகரங்களுக்கும் வேலை தேடிச் செல்கின்றனர்.
இவ்வளவு மக்கள் பெருக்கத்திற்கும் ஏற்றார்போல் சாலை வசதிகளையும் மாற்றினால்தானே இந்த நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும். அதைத் தாமதமாக உணர்ந்துவிட்ட அரசும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்ததன் விளைவுதான் நாடு முழுவதும் இந்த தங்க நாற்கரசாலை.
மேலும், வருடா வருடம் சென்னைக்குப் படையெடுக்கும் இளைஞர் பட்டாளங்களை குறைப்பதற்கும் மதுரை போன்ற நகரங்களை தொழில் நகரங்களாக மாற்றி வருகின்றனர். இருந்தாலும் தற்போதைக்கு இந்த டிராஃபிக் பிணி மக்களை விடுவதாக இல்லை. அரசுக்கு ஏற்பட்டிருக்கும் சுமைகள் ஒருபுறம் இருக்க ஒரு சில மக்களிடம் அடாவடித்தனம் தெரியத்தான் செய்கிறது.
ட்ராஃபிக் சிக்னலில் ரெட் சிக்னல் விழுவதற்கு முன்பு வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்குரிய நேரத்தை வழங்குவதற்குதான் ஆரஞ்சு வர்ண சிக்னலை ஒளிர விடுகின்றனர். ஆனால் அப்பொழுதுதான் நம் அதிமேதாவிகள் சிலர் ஆக்ஸிலரேட்டர்களை முறுக்கிக் கொண்டு ரெட் சிக்னல் விழுவதற்குள் சென்றுவிட எத்தனிக்கின்றனர். இதனால் சிக்னல் விழுந்த பின்பும் கவனமாக பார்த்துதான் நடந்து செல்பவர்கள் செல்ல வேண்டியிருக்கிறது.
என் அலுவலக நண்பருடைய அண்ணன் ஒருவர் லண்டனில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு வந்திருந்தார். லண்டனில் எல்லாம் இப்படி இருக்காதாம், ரெட் சிக்னல் விழுந்த மறு வினாடி சிறு குழந்தைகள் கூட யார் துணையும் இல்லாமல் எந்த பயமும் இல்லாமல் ஜீப்ரா க்ராசிங் வழியாக எளிதாக கடந்து விடுவார்களாம். அவ்வளவு கட்டுப்பாடாம். ஆனால் நம் நாட்டில் யாரும் ஜீப்ரா க்ராசிங் வழியாகச் செல்ல முடியாது. ஏனென்றால் அந்த கோட்டைத் தாண்டிதான் நம் மக்கள் தத்தமது வண்டிகளை நிறுத்தி இருப்பர். லண்டன்வாசிகளே உங்க ஊர் டிராஃபிக்கைப் பத்தி கொஞ்சம் சொல்லலாமே!
சரி நண்பர்களே! மீண்டும் அடுத்த அரட்டைக்கு ஒன்று கூடுவோம்.
அன்புடன்,
மாயன்.
“
நேற்று சென்னை திரும்பிய நான் மேலே கண்ட படங்களைப் போன்ற பல காட்சிகளைக் கண்டேன். மழை விட்டும் தூவானம் விடவில்லை.
அலைபேசிக் கோபுரத்திலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்கத்தைத் தடுத்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு என்று இனிமேல் பாடத்தான் முடியுமோ?
மாயன், ஷார்ட் & ஸ்வீட் ஆ முடிச்சுட்டீங்க.. சென்னை அண்ணாசாலையை மாதிரி சாலையா தேர்ந்தெடுத்து, மக்களுக்கு சிக்னலை மதிக்கறதை சொல்லிக் கொடுத்துட்டிருக்காங்க டிராஃபிக் போலீஸ். ம்ம்.. எல்லாம் போலீஸ்காரர் இருக்கற வரைக்கும் தான். அவர் கண்ணில் தட்டுப்படலையோ, நம்ம மக்களுக்குக் கேட்கவே வேணாம். ஆளறவங்களைக் குறை சொல்ற மக்கள் முதல்ல, தங்களைத் திருத்திக்கணும்.
அடைமழை பெய்யும் போது அசட்டையாக இருந்துவிட்டு கோடை வந்ததும் வறட்சி வந்து விட்டு விட்டது என்று கூறுவது இந்திய நாகரீகமா என்று எனக்குள் நினைத்துக் கொள்வதுண்டு. சிங்கப்பூரில் பலநாட்கள காலையில் கடும் வெயில் மாலையில் கடும்மழை பெய்வதுண்டு. ஆனால் அடுத்த நிமிடமே மழை பெய்ததற்கான அறிகுறி எதுவும் தெரிவதில்லை. சாலைகளில் வெட்டவெளியில் நீர் தேங்குவதில்லை, காரணம் வாய்கால்கள்தாம். மழை பெய்யும் போதே சர் என்று அத்தனை நீரும் வாய்கால் வழியோடி நீர்தேக்கங்களில் விழுத்துவிடும். இந்நீர் சுத்தப்படுத்தபட்டு குடித்தண்ணீராக விடப்படுகிறது. (இத்துடன் பக்கத்து நடுகளில் விலைக்கு வாங்கி குடிநீர் வழங்கப்படுகிறது)சாலை ஓரங்களில் அல்லூறு என்று அழைக்கப்படும் அகண்ட கால்வாய்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. இந்திய கிராமங்களில் கண்மாய்க்கு வரும் வழிகளில் வீடுகள் கட்டப்பட்டு வாய்கால்கள் இல்லாததால் வெள்ளப்பெருகேற்பட்டு அவதி ஏற்படுகிறது. அரசு செய்யட்டும் இல்லாமல் வீட்டோரக் கால்வாய்களை மக்களே கட்டி பெய்யும் நீரை வெளியே விட்டால் கால்வாய்களில் விட்டால் அங்கு கட்டப்பட்ட வீடுகள் மிதக்கும். கண்மாய்களில் நீர் பெருக்கம் இருக்கும் .இதுதானே காந்திகண்ட சுய ஆட்சி. உர்ரூக்கு ஊர் நேர் தேக்கம் இருந்தால் நல்லது என்பதை மக்கள் உணர வேண்டும்
ஊரெல்லாம் அடிச்சு ஊத்திக்கிட்டு இருக்கு மழை. நம்ம விருதுநகர் பக்கம் எட்டுப் பார்க்க மாட்டேங்குதே!! லேசா சாரல் மழை பெய்ஞ்சு காலையிலயும், சாயந்திரமும் வாசல் தெளிச்சு விடறதோட சரி..!
ஆமாம் ஜோ,
டிராஃபிக் போலீஸ் சற்று திரும்பிவிட்டாலே போதும் நம்ம ஆட்களுக்கு இதுதான் சாக்கு என்று விதிமுறையை காற்றில் பறக்கவிட்டுவிடுகின்றனர். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது” என்பது போல அவரவர்கள் மனதில்தான் இருக்கிறது.”
//சாலைகளில் வெட்டவெளியில் நீர் தேங்குவதில்லை, காரணம் வாய்கால்கள்தாம். மழை பெய்யும் போதே சர் என்று அத்தனை நீரும் வாய்கால் வழியோடி நீர்தேக்கங்களில் விழுத்துவிடும். இந்நீர் சுத்தப்படுத்தபட்டு குடித்தண்ணீராக விடப்படுகிறது. (இத்துடன் பக்கத்து நடுகளில் விலைக்கு வாங்கி குடிநீர் வழங்கப்படுகிறது)சாலை ஓரங்களில் அல்லூறு என்று அழைக்கப்படும் அகண்ட கால்வாய்கள் கட்டப்பட்டு இருக்கின்றன.//
வாவ்.. ஆனா இதைவிட நம் நாகரிகம் முன்னொறு காலத்தில் அபரிமிதமாக இருந்தது. அதைத்தான் கராப்பா நாகரிகம்”ன்னு சொன்னாங்க. அது எப்போது புதையுண்டு போனதோ, அப்போதே நம் நாகரிக உலகமும் புதைந்துவிட்டது.”
//ஊரெல்லாம் அடிச்சு ஊத்திக்கிட்டு இருக்கு மழை. நம்ம விருதுநகர் பக்கம் எட்டுப் பார்க்க மாட்டேங்குதே!! லேசா சாரல் மழை பெய்ஞ்சு காலையிலயும், சாயந்திரமும் வாசல் தெளிச்சு விடறதோட சரி..!//
நம்ம ஊர் வெயில்” படம் எடுத்த ஊராச்சே!!!”
//மழை விட்டும் தூவானம் விடவில்லை.//
ஆமாம் பாலா சார்! இன்னொரு விஷயம், முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்மாதான் ஆரம்பிக்குது. ஆனா நம்ம இடத்த நெருங்குறதுக்கு முன்னாடி அது என்னவோ நிஷா, தியான்னு புயலா மாறிடுது. பின்னே காற்ற மரிக்கிறதுக்கு ஒரு மரம், செடிகள கூடவிட்டு வைக்காம வெட்டியாச்சே. இந்த நாகரிக(??) மாற்றம் இளைய தலைமுறையினரை பாடுபடுத்தப் போகிறதோ தெரியவில்லை!!
சில ஆண்டுகளுக்கு முன்னால் அந்தமான் சென்றிருந்தபோது போர்ட்பிளேயர் சாலைகளில் இரவு 12 மணியானாலும், போக்குவரத்துக் காவலர்கள் இல்லாவிட்டாலும், சாலைகள் வெறிச்சோடிருந்தாலும் வாகனஓட்டிகள் ஒருவழிபாதை, யு டர்ன் போன்ற போக்குவரத்து விதிகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதைக் கண்டு வியந்துள்ளேன்.
உங்களுடைய கட்டுரைகள் படித்தேன். அருமையாக வடிவமைத்திருக்கிறீர்கள். இந்த டிராபிக் பற்றி சொல்லியிருந்தீர்கள். நிச்சயமான உண்மை. இந்த சிக்னலில் நிற்கும் போது இந்த மக்கள் செய்யும் அலும்பு இருக்கிறதே, பின்புறம் இருந்து கொண்டு காதைக் கிழிக்கும் அளவிற்கு ஒலி எழுப்புவது தாங்க முடியாத ஆத்திரமாக வருகிறது. இதற்கு என்ன வழி என்று தெரியவில்லை. தொடர்ந்து சமுதாய அக்கறை உள்ள செய்திகளை வெளியிடுங்கள். கலக்குங்கள். வாழ்த்துக்கள்.
உங்க கருத்துக்கு நன்றி சந்தோஷி.
//இந்த சிக்னலில் நிற்கும் போது இந்த மக்கள் செய்யும் அலும்பு இருக்கிறதே, பின்புறம் இருந்து கொண்டு காதைக் கிழிக்கும் அளவிற்கு ஒலி எழுப்புவது தாங்க முடியாத ஆத்திரமாக வருகிறது//
உண்மையிலேயே ஏர் ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருந்தம் யாரும் கேட்பதில்லை, குறிப்பாக ஃட்ராபிக் போலிஸ்களே இதை கண்டுகொள்வதில்லை. பெரும்பாலும் லாரிகளில்தான் இதை பயன்படுத்துகின்றனர்.