அன்பார்ந்த நெஞ்சங்களே!
‘அனாமிகா அரட்டைன்னா ஒரு கதை, அதற்கு நடுவில் சில வெப்ஸைட் இருக்கும்’னு நீங்கள் அலுத்துக் கொள்வதற்குள் ‘மாத்தி யோசிக்கணுமே!’ மாறிக் கொண்டே இருப்பதுதான் மனிதனின் மாறாத தன்மை இல்லையா? சரி! முயற்சி பண்றேன்.
எப்படி இருக்கீங்க? கொளுத்தும் கத்திரி வெயில், சூடான தேர்தல் முடிவுகள், விறுவிறுப்பான ஐ.பி.எல் என்று கோடை விடுமுறை போவதே தெரியாமல் போய்க் கொண்டிருக்குங்க.
இந்த ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு செலவு, இவ்வளவு ஆதரவு, இவ்வளவு பாதுகாப்பு என்று எல்லா செய்திகளையும் பேப்பர்ல படிச்சிருப்பீங்க. இப்ப நான் அதைப் பத்தி பேசப் போவதில்லை. இந்த ஐ.பி.எல் மாட்சின் வரவேற்பைப் பார்க்கும் போது, நான் மாண்புமிகு மக்களோட மனமாற்றம் பற்றிதான் யோசிக்கறேங்க. முன்னெல்லாம் கிரிக்கெட்ன்னா ஐந்து நாட்கள் மாங்கு மாங்குன்னு விளையாடுவாங்க. ஐந்தாம் நாள் விளையாடும் போது முதல் நாள் விஷயம் மறந்தே போயிருக்கும். இந்த நிதானமான விளையாட்டு கட்டுப்படியாகாமல், ஒரு நாள் மேட்சுன்னு ஆக்கினாங்க. அதனால ஐந்து நாள் மேட்ச் படுத்துப் போயிடுச்சு.
மக்களுக்கு அன்னன்னிக்கு முடிவு தெரியணும் என்கிற ஆர்வம் காரணமா ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு. இப்போ மக்கள் என்ன ஃபீல் பண்ணறாங்கன்னா, காலையிலேந்து சாயங்காலம் வரைக்கும் பார்க்க பொறுமையோ நேரமோ இல்லை. அதனால இன்னும் கொஞ்சம் குறைக்க.. இருபது ஓவர் மாட்சாக மாறியது. சினிமா மாதிரி ஒரு மூணு மணிநேரம்தானே! அதுவும் மழை பெய்தால் ஐந்து ஓவர்தான்.
நமக்கு எல்லாமே இன்ஸ்டன்டா தேவைப்படுது. இன்ஸ்டன்ட் இட்லி, தோசை, புளியோதரை மாதிரி! இதுக்குக் காரணம் அவசர உலகம் என்று சொல்வதெல்லாம் சும்மாங்க. மக்கள் இப்போ சோம்பேறி இயந்திரமாக மாறிக்கிட்டு இருக்காங்க என்பதுதான் உண்மை! இந்தக் கருத்தை ஆதரிக்கிறவங்க கையைத் தூக்குங்க!
சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தியை உங்களோட பகிர்ந்துக்க விரும்பறேங்க. ஒரு மகனுக்கும் அப்பாவிற்கும் இடையே நடைபெறும் உரையாடல்.
"அப்பா என்னோட மாரத்தான் ரேஸ் ஓட வரியா?"
இதய நோயாளியான அப்பா, "சரி வரேன்"
இருவரும் ஓடுகின்றனர்.
அடுத்த வாரம் ஒரு நாள்..
"அப்பா இன்னிக்கும் மாரத்தான் ஓடணும் வரியா?"
"சரி"
இருவரும் ஓடுகின்றனர்.
அடுத்த வாரம் ஒரு நாள்..
"இன்னிக்கு என்னோட ‘அயர்ன்மேன்’ ரேஸ் வரியா?"
( ‘அயர்ன்மேன்’ ரேஸ் என்பது நீச்சல், சைக்கிளிங், மலை ஏறுதல், மாரத்தான் எல்லாம் சேர்ந்தது.)
"சரி கண்ணா"
இந்த உரையாடல் உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பையோ, அதிசயத்தையோ ஏற்படுத்தியிருக்காதுன்னு தெரியும்ங்க. இப்போ இந்த லிங்கில் இருக்கிற வீடியோவைப பாருங்க. இப்போ மீண்டும் படியுங்க.
http://www.youtube.com/watch?v=VJMbk9dtpdY
நல்லவேளை! அன்பு, பாசம், இரக்கம் எல்லாம் இன்னும் இன்ஸ்டன்ட் ஆகல.
அரட்டை ரொம்ப சென்டிமெண்டலா போகுதோ? மாத்தணுமே!
அரசியல் தலைவர்கள் மற்றும் விஐபிகள் கலந்துக்கிற கூட்டத்தில் புதுசா இந்த மாதிரி ஒரு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கணும்னு ஐடியா அண்ணாசாமி சொல்றாருங்க!
‘அக்கரைக்கு இக்கரைப் பச்சை’ன்னு முதல் முதல்ல சொன்ன அதிபுத்திசாலி யாருன்னு தெரியலீங்க. ஆனா எவ்வளவு சத்தியமான வார்த்தை என்பதை சமீபத்துல உணர்ந்தேங்க.
நம்மளோட தமிழ் கூறும் நல்லுலகத்துல செல்போனின் பயன்பாடு பற்றி எல்லாருக்கும் தெரியுங்க. தெரிஞ்சுக்கலேன்னா, நிலாச்சாரல்ல பத்மநாபன் சார் அவங்க ரொம்ப சிறப்பா எழுதியிருப்பதை இங்கு கிளிக் செய்து பார்த்துக்கங்க.
https://www.nilacharal.com/ocms/log/03020903.asp
சரி.. மேட்டருக்கு வரேன். சமீபத்துல அப்பலோ மெடிக்கல் டீம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்காங்க. செல்ஃபோனில் மைக்ரோவேவ் இருப்பதும், அது தீங்கு விளைவிக்கக் கூடியதுன்னு பலர் சொல்லியும், செல்லும் கையுமாகத்தான் இருக்கிறோம். அதனால் மஹாஜனங்களே! குறைந்தபட்சம் இடது காதில் செல்லை வைத்து பேசுங்கள்! வலதுகாதில் வைத்துக் கொண்டு பேசினால் மைக்ரோவேவ் நேரடியாக மூளையைப் பாதிக்ககூடிய அபாயம் இருக்காம்!
யாரங்கே! அறிவியல் மேதைகளை சபைக்கு அழைத்து தெளிவான விளக்கம் கூறச் சொல்லுங்கள். சிறந்த விளக்கத்திற்குத் தக்க சன்மானம் உண்டு என்றும் அறிவியுங்கள்!
வாழ்க்கை வசதி, விஞ்ஞானக் கண்டுபிடிப்பு அது இதுன்னு நாம் மேற்கு நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள்!.. அதையும் தெரிஞ்சுக்குங்க!
நம்ம ஊரப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு முட்டுச்சந்திலும், பிஸியான நாலு ரோட் மத்தியிலும் இருக்கும் கடவுள் பிள்ளையாருதாங்க. எவ்வளவு அவசரமா அலுவலகம் போனாலும், காலேஜ் போனாலும், ஸ்கூல் போனாலும், மார்க்கெட் போனாலும் எது பண்ணப் போனாலும் பிள்ளையாருக்கு முன்னால நின்னு குட்டிக்கிட்டு தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்திருப்போம். இன்னும் சொல்லப் போனா பல் தேய்க்கிறா மாதிரி, குளிக்கிறா மாதிரி, இயல்பான ஆனா தவிர்க்க முடியாத ஒரு செயலுங்க இது. இதை மேல்நாட்டு மக்கள் கத்துக்க எவ்வளவு பிரயத்தனப் படறாங்கன்னு பாருங்களேன். இதுக்குப் பேர் சூப்பர் யோகான்னு சொல்றாங்க. உடம்புக்கு ரொம்ப நல்லதாம். நீங்களே பாருங்களேன்!
http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs
என்ன கொடுமை சார்!
இத்தனை ஊக்கம் கொடுத்து எழுதச் சொல்லி, இத்தனை சுதந்திரமா ‘மாத்தி யோசிக்கணும்’னு சொல்லி, ஏதேதோ பேச அனுமதிக்கின்ற எங்கள் எடிட்டர் பத்தி நான் சொல்லலேன்னா நான் நிச்சயம் அடுத்த ஜென்மத்தில் எண்ணெய் சட்டிலதான் வறுத்தெடுக்கப்படுவேங்க. அவங்களுடைய விளம்பரமில்லாதத் தமிழ் சேவை எனக்கு வியப்பைத் தருகிறது. அதைப் பற்றி நீங்களும் தெரிஞ்சுக்க இங்கே பாருங்க.
http://video.google.com/videoplay?docid=8814651002352739039
அம்மாவின் கலப்படமில்லாத சுத்தமான அன்பை வெளிப்படுத்தும் ஒரு கவிதையோடு அரட்டையை முடிக்கிறேங்க. மெயிலில் வந்த கவிதை. மொழிபெயர்ப்பு அடியேனுடையது. ஃபீலிங் குறையாம இருக்கான்னு படிச்சுப் பார்த்து சொல்லுங்க.
கொட்டும் மழையில்
ஆட்டம் ஆடி நனைந்து
வந்தேன் நான்!
‘குடை கொண்டு செல்லாதது
உன் பிழை’ என்றான் அண்ணன்!
‘மழை நிற்கும் வரை பொறுத்திருக்கக்
கூடாதா’ அக்காவின் கேள்வி!
‘நோய் வந்தால் தெரியும்’
பற்களைக் கடித்த அப்பா!
ஆனால் அம்மா..
புடவையால் என் தலையைத் துடைத்த படி
திட்டிக் கொண்டிருந்தாள்,
…
…
என்னையல்ல..
மழையை!!
வாழ்க! வளர்க! அன்பே சிவம்!
(Disclaimer : The images in this article are collected from various resources on the web. If there is any copyright violation, please inform the administration. Corrective actions will be taken.)
“
நல்ல செய்திகளை கூறி அறிவைத்தட்டிய நீங்கள், இறுதியில் நல்ல கவிதையைக் கூறி இதயத்தையும் தட்டிவிட்டீர்கள். வாழ்க நீங்கள்! வளர்க உங்கள் பணி! நன்றி!
காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு. கொண்டு வந்தாலும் வராவிட்டலும் தாய்-என்றெலாம் கூறுவார்கள், அன்னயின் அன்பே அலாதியானதுதான்.- அரிமா இளங்கண்ணன்
திருமதி. நிலா (மதி என்றாலும் நிலா தான்)அவர்களின் நேர்காணல் நிகழ்ச்சி வாயிலாய் மேகத்திரைக்குப் பின் மறைந்திருந்த நிலவை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. இந்தியாவில் நாங்கள் செய்யாததை இங்கிலாந்திலிருந்து நீங்கள் செய்வது தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியின் கனவு மெய்ப்படவேண்டும் என்ற தணியாத வேட்கைதான் என உணரமுடிகிறது.வாழ்த்துகள்!-அரிமா இளங்கண்ணன்”