சில்லுனு ஒரு அரட்டை

அன்பார்ந்த நெஞ்சங்களே!

நீங்கள் நினைப்பது சரிதான்! நான் புதுசுதான் இந்த அரட்டைக்கு! அனாமிகான்னா பெயரில்லாதவள்னு உங்களுக்கெல்லாம் தெரியும்தானே? பெயரில் என்ன இருக்குங்க? ரோஜாவிற்கு ‘ரோஜா’ என்று பெயர் வைத்ததால்தான் இந்த மணம், அழகு, வண்ணம் எல்லாம் வந்ததா என்ன? என்னோட தத்துவம் இல்லீங்க. ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியரோடது! இதே கருத்தத் தமிழ்க் கவிஞரும் ‘பேரு வெச்சாலும் வெக்காமப் போனாலும் மல்லி வாசம்’ன்னு எளிமைப்படுத்தியிருக்காருங்க. அதனால் பெயர் பற்றி யோசிப்பதை விட்டுட்டு விஷயத்தப் படிங்க. நான் பேசும் போது அடிக்கடி ‘அந்த விஷயம்’ ‘இந்த விஷயம்’னு டிராக் மாறி போய்டுவேன். கொஞ்சம் பொறுத்துக்கோங்க.

உலகப் பொருளாதாரத்துல வீழ்ச்சின்னு செய்தி வந்தாலும் வந்ததுங்க, அரபு நாடுகளில் ஒரே ‘ரிஸஷன்’ காய்ச்சல்தான்! இந்தியாவைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனா இங்கு நண்பர்கள் ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டாலும் சரி, தொலைபேசியில் பேசிக்கிட்டாலும் சரி, ‘எப்படி இருக்கீங்க’ என்று கேட்பதில்லை. ‘உங்க கம்பெனி நிலைமை எப்படி இருக்கு? எவ்ளோ பேருக்கு நோட்டீஸ் கொடுத்திருக்காங்க?’ என்றுதான் பேசிக்கறாங்க. எல்லாரோட கண்களிலும் மிரட்சி! இன்றைக்கு ‘ஆபீஸ்’ போய்விட்டு வந்தால் நிச்சயம் என்ற மனநிலைதான் எல்லாரிடமும் இருக்கு. இந்தப் பயத்துக்குக் காரணம் பாதி வதந்தின்னு சொல்லலாம். சரி, அதைப் பற்றி ஒபாமா கவலைப்படட்டும்! கடவுளுக்குப் பிறகு ஒபாமாவைத்தான் மக்கள் நம்பியிருக்காங்க! அரட்டை ரொம்ப சோகமாகப் போவது போல இருக்கு. டிராக்கை மாத்தலாம். உங்களுக்குத் தெரியுமா? அலிபாபா ‘ரிஸஷன்’ காரணமா திருடர்களின் எண்ணிக்கைய முப்பதாக ஆட்குறைப்பு செய்து விட்டானாம்!

எங்களுடைய நண்பர் ஒருவரையும் இந்த ‘ரிஸஷன்’ காய்ச்சல் பிடித்துக் கொள்ள, அவர் தன்னோட குடும்பத்தைத் தமிழ்நாட்டிற்கு அனுப்ப முடிவு பண்ணினாரு.. மகளை நல்ல பள்ளியில சேக்கணும்னு, தமிழ்நாட்டில இருக்கிற தன் உறவுக்காரங்களைக் கேட்டிருக்காரு. தினம் ஒரு செய்தி வருமாம். ‘இந்தப் பள்ளியில நிறைய டொனேஷன்’’; ‘இந்தப் பள்ளியில சேர்க்கை இல்ல’; ‘இந்தப் பள்ளியில குலுக்கல் முறை’; ‘இந்தப் பள்ளியில நுழைவுத் தேர்வு’ என்று மாத்தி மாத்தி சொல்ல நண்பர் தலையப் பிச்சுக்கிட்டு இருந்தாரு.

இந்த நேரத்திலதான் ஒரு புதிய இணைய தளம் பற்றி எனக்குப் தெரிய வர, நண்பரிடம் சொன்னேன்.

www.pallikalvi.in

இந்த இணைய தளத்தைத் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்காங்க. இங்கே பள்ளிக்கூடத்தோட பெயர்கள் மாவட்ட ரீதியா கொடுக்கப்பட்டிருக்கு. என்ன மாதிரியான பாடத் திட்டம், என்னென்ன புத்தகம் என்று விலாவாரியா இருக்குங்க. நீங்களும் பாருங்க. அப்பாடி என் நண்பரோட தலை தப்பித்தது!

அந்த நண்பர், இந்தியாவுக்குப் போகப் போறோமேன்னு எங்களைத் தன் வீட்டுக்குக் கூப்பிட்டிருந்தாரு. நாங்களும் அந்த நகரில்தான் பல வருடங்களாக இருந்தோம். ஆனா இப்போ பக்கத்தில இருக்கிற இன்னொரு நகருக்கு வந்துட்டோம். கிட்டத்தட்ட நாலு வருஷங்களாயிடுச்சு. ஊரைப் பார்த்தது போலவும் இருக்கும், நண்பரப் பார்த்தது போலவும் இருக்கும்னு போனோம். என்ன மாதிரி மாற்றம்! எத்தனை கட்டிடங்கள்! ஒரு கட்டிடம் மாதிரி இன்னொன்றப் பாக்கவே முடியாது. என்ன அகலமான சாலைகள்! எப்போதும் பளிச்ன்னு அலம்பி விட்ட மாதிரி! எந்தத் தவறும் நடந்திடக் கூடாதுன்னு எல்லாத்துக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்! வீடியோ கேம்ல ஓடறா மாதிரி தலை தெறிக்க ஓடும் கார்கள்! எல்லாம் சரிதான். ஆனாலும் ஏதோ மிஸ்ஸிங்!

‘ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்—— ———-‘

கோடிட்ட இடத்தை நிரப்புங்க. சரியாக விடை சொல்பவர்களுக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியைத் தர வேண்டும். ராஜ்ஜியம் இல்லாததால் என் சொத்தில் பாதி தருகிறேன். என் சொத்து விவரத்தைக் கடைசியில் சொல்றேன்.

இப்படித்தான் இந்த எண்ண அலைகள் இங்கும் அங்கும் அலையுதுங்க. நாவல்களில் கூட இந்த மாதிரி எழுதுவாங்க. அதாவது ஒரு எழுத்தாளர் தன் நினைவலைகள வரிசைப்படுத்திக்கிட்டே வருவாரு. கடைசில பாத்தா அதுல ஒரு தொடர்பு இழை இருக்குங்க. அதை கண்டுபிடிப்பதே ஒரு த்ரில்! ரிஷி ஸ்டைல்ல சொல்லணும்னா, ‘படிச்சா கண்டுபிடிக்க முடியாது; படிக்க படிக்கத்தான் முடியுங்க.’ இதற்கு ‘நனவோடை உத்தி’ என்று பெயர். ‘stream of consciousness’ என்பதோட மொழிபெயர்ப்பு. தமிழ்ல ரொம்ப சிறப்பா எழுதியவர் லா.ச.ராமமிருதம் அவர்கள். அவரோட ‘த்வனி,’ ‘அபிதா’, ‘பாற்கடல்’ நாவல்லாம் படிச்சுப் பாருங்க. ‘ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பா இருந்தாங்களாம்’ என்ற வழக்கத்துலேந்து நிச்சயமா மாறி இருக்கும். அடடா! மறுபடி டிராக் மாறி விட்டேனே! இதனால்தான் நம்ம சித்த புருஷர்கள் ‘சும்மாயிரு’ என்று சொல்கிறார்கள்.

எங்கே விட்டேங்க. ஆம்! என் நண்பர் வீட்டுக்குப் போனோங்க. ரொம்ப நாள் கழிச்சுப் பார்த்ததால எல்லா விஷயங்களையும் பேசித் தீர்த்தோம். ஊருக்கு எடுத்துட்டுப் போகத் தேவையான பொருளெல்லாம் வாங்கிருந்தாங்க. ‘மைக்ரோ வேவ் ஓவனும்’ வாங்கியிருந்தாங்க. நாங்க வந்ததுக்காகவும், ஓவன் வந்ததுக்காகவும் சேர்த்து ‘மைசூர்பாகு’ செய்திருந்தாங்க. இங்கு நான் டிராக் விட்டு வெளியே வந்து கொஞ்சம் பேசணுங்க. மைசூர் பாகு என்பது பெண்மணிகளைத் திண்டாட வெச்சாலும் எல்லாரும் விரும்புற ஸ்வீட். எத்தனை ஜாக்கிரதையா பண்ணினாலும் பதம் தப்பிப்போய் கிட்டத்தட்ட சின்ன ஸைஸ் செங்கல் மாதிரி ஆயிடுங்க!

என் நண்பரின் மனைவி கொண்டு வர உள்ள போன போது, எனக்குக் கொஞ்சம் பதட்டமாவே இருந்தது. அவங்களோட மனம் புண்பட சந்தர்ப்பம் வாய்க்கக் கூடாதேன்னு வேண்டிக்கிட்டேனுங்க. அவர் கொடுத்ததை வாயில போட்டுக்கிட்டேன். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தோத்துப் போச்சு! அத்தனை சுவை ! பதம்! ‘எப்படி?’ என்று வியப்பு தாங்காம கேட்டேன். அவங்க சொன்ன பதில் இன்னும் இன்னும் வியக்க வச்சுதுங்க. “‘நிலாச்சாரல்’ என்ற வெப்ஸைட்டில், ஓவனில் எப்படி செய்வதுன்னு போட்டிருந்தாங்க. ரொம்ப எளிமையா இருந்தது”, என்று புகழ்ந்து கொண்டிருந்தாங்க.

www.nilacharal.com/ocms/log/09220802.asp

என்ன சொல்வது நான்! திக்குமுக்காடிப் போய்ட்டேன். அதுக்கப்புறம்தான் எனக்கும் நிலாச்சாரலுக்கும் உள்ள நட்பைப் பத்தி சொன்னேன். அவங்க ரொம்ப கோவிச்சுட்டாங்க. ‘ஏன் முன்னாடியே சொல்லல்லைன்னு’. பெயரோட அடையாளமே தேவையில்லன்னு நெனைக்கும் போது இதைப்பத்தி.. என்ன சொல்ல! ‘எல்லாம் இறைவன் செயல்!’ இந்த மாதிரி வசனத்தை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே! சரிதான்! டிராக் மாறப் போறேன் போலயிருக்கு!

உலகத் தமிழர்கள் எல்லாரையும் பெருமைப்பட வைத்த ஏ.ஆர். ரஹ்மான்தான் ஆஸ்கர் மேடையில இப்படிப் பேசினாருங்க. அந்த மேடையில, அந்த நாட்டு மக்கள் நடுவுல ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ன்னு தமிழில பேசின போது… என் உடம்பு சிலிர்த்துப் போச்சுங்க. ஆர்வக் கோளாறு காரணமா பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டி, பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரங்ககிட்ட சொன்னேன்னா பார்த்துக்கோங்க. எனக்கு மட்டுமில்லங்க, உலகத் தமிழர்கள் எல்லாருக்குமே இப்படித்தான் இருந்திருக்கும்.

உலகத் தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! கவிஞர் வைரமுத்துவும், ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருமுறை மலேசியாவுக்குப் போனாங்களாம். விழாவில ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடினாங்களாம். ஆனா அது ‘நீராரும் கடலுடுத்த’ என்ற நம்மோட வாழ்த்துப் பாடல் இல்லையாம். ஏன்னா அதில் எல்லைகள் குறிக்கப்பட்டிருக்காம். அதனால வைரமுத்து உலகத் தமிழர்களுக்காக ஒரு பொதுவான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ எழுதப் போறாராம். அதற்கு ‘ஏ.ஆர்.ஆர்.’ இசையமைக்க ஒத்துட்டிருக்காராம். கூடிய விரைவில நம் காதுகளுக்கு விருந்து இருக்குங்க. என்ன நரேன் விமர்சனம் செய்ய நீங்க தயாரா?

ஒரு அளவுக்கு டிராக் மாறாம வந்துட்டேன்னு நெனைக்கிறேன். எங்கேயோ தப்பு தப்பா போவதற்கு முன்னால முடிக்கணும். ஒரு சின்ன கேள்விங்க.

ஒரு பொண்ணு மலை உச்சியில நின்னுட்டு தன்னோட அப்பாவைத் தள்ளி விட தயாரா இருக்காளாம். அப்படின்னா அவ பெயர் என்னங்க?

யோசிங்க.. யோசிங்க.. யோசிச்சிட்டே இருங்க!

என் காலேஜ் ப்ரொபசர் சொன்ன மாதிரி உங்களை யோசிக்க வெச்சுட்டேனா? என்ன சொன்னாருன்னு நீங்க கேக்கலேன்னாலும், நான் சொல்ற மூடில் இருக்கேங்க. மாணவர்களோட கற்பனைத் திறனை வளர்க்கணும்னு எங்க ப்ரொபசர் ஒருநாள் வகுப்புல “நீங்க ஏதாவது கட்டுரை, கதை, கவிதை எழுதி என்கிட்ட காட்டுங்க. திருத்தங்கள் செய்து தரேன்”னு சொன்னாரு. விடுவோமா? ‘நாலு வரி’ன்னா கவிதை, ‘பத்து வரி’ன்னா கதைன்னு எழுதித் தள்ளிட்டோம். நொந்து போன அவர், ‘கட்டுரையோ, கவிதையோ, கதையோ எதுவா இருந்தாலும் படிச்சு முடிச்சதும், ‘நெக்ஸ்ட்.. நெக்ஸ்ட்’ என்று அடுத்ததைத் தேடி ஓட விடாம வாசகர்களைக் கட்டிப் போட்டு அதைப்பத்தியே யோசிக்க வெக்கணும்னு’னு சொன்னாருங்க. வாத்தியார் சொல்லைக் காப்பாத்திட்டேனா?

மறந்துட்டேனே.. என் சொத்து விவரம்! ‘நான் சொத்தா நெனைக்கிறது உங்க அன்பைத்தானுங்க உங்க அன்பைத்தானுங்க’ (பாட்டாவே பாடலாம்!)

வாழ்க! வளர்க! அன்பே சிவம்!

About The Author

10 Comments

  1. subi

    ரொம்ப நல்ல இருக்குங்க.ஜில்லு ரொம்ப ஜாலியா இருக்கு.

  2. subhashini

    A nice one, was interesting and the style was a casual one which made it more interesting to read.

  3. maleek

    அஹ்லன் வ சஹ்லன்
    ட்ராக்மாறாமிகான்னு வெச்சிருக்கலாம்!
    ஒங்க சொத்துமதிப்பு அளவுக்கு அதிகமா இருக்கு,
    ரெய்டு கிய்டு வரப்போறாங்க!

  4. Dr. S. Subramanian

    Here is a name for the girl who wants to roll her father down the hill.
    DharaNi who dumped her daddy down the hill””

  5. Dr. S. Subramanian

    As for A R Rahman at the Academy Awards ceremony, he made us (ThamizhargaL) all proud by speaking the few words in Thamizh ellAp pughazhum iRaivanukkE”. In addition to his modesty he stood by his mother-tongue. I had goosebumps when he spoke those Thamizh words.”

  6. Ramesh

    Truly it goes with the current sceanrio superbly woven like a costly silk saree. Well said THERE IS NO PEACE OF MIND but this article endeavoured to give PEACE & RAY OF HOPE.

    GOOD WORK

  7. Anameka

    Sorry sir that is not Dharani.hope somebody will come ur with correct answer.thank you all for your valuble comments

  8. C.PREMALATHA

    உங்க சொத்தில் எங்களுக்கு பங்கு உண்டா? அனாமிகா!

Comments are closed.