சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

எல்லோரும் எப்படியிருக்கீங்க? நல்லாத்தான் இருப்பீங்கன்னு நினைக்கிறேன். கொஞ்சம் வேலை அதிகமாக இருந்தது மட்டுமில்லாமல் நான் வெளியூரும் போக வேண்டியிருந்தது. அதனால் சில வாரங்களாக அரட்டையடிக்க முடியலை. ஊர் எல்லாம் சுத்தி முடிச்சாச்சு. அதனாலே மறுபடியும் அரட்டையும் அடிக்க ஆரம்பிச்சாச்சு.

மலர் கண்காட்சி அப்படீங்கிற பேர்ல ஏற்கனவே போன வருஷம் உலகமகா பல்பு வாங்கினதாலே இந்த முறை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மலர் கண்காட்சி சம்பந்தமான விவரங்களை ஒரு தடவைக்கு பலமுறை சரி பார்த்துட்டு அப்புறமாக கண்காட்சிக்குப் போனோம். போன்ஸாய் மர வகைகளில் அரசமரம், ஆலமரம், கறிவேப்பிலை மரம், புளியமரம் இப்படி ஏகபட்ட மரங்கள் தம்மாதூண்டு சைஸ்களில் இருந்ததைப் பார்த்தேன். முதல் முறையாக போன்ஸாய் மரங்களைப் பார்த்ததாலே ஆர்வம¡ய் அதன் விவரங்களை சேகரிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு மரத்தின் வயது 20ல் இருந்து 40 வயது வரைங்கிற விஷயம் தெரிய வந்தபோது லேசாக மயக்கம் வரும் போல இருந்தது. அதில் மாதுளை மற்றும் நார்த்தங்காய் போன்ஸாய் மரங்களில் மரம் சைஸிற்கு தகுந்த மாதிரி பழங்களும் இருந்தது.

Alamaram Bonsai Arasamaram Bonsai
 Bonsai tree  Flower Boquet
 Fruit Bowl Flower Pen Stand 

அப்புறம் பழங்காலத்து கார்களை பார்வைக்கு வைத்திருந்தாங்க. வீட்டுத்தலைவரை அங்கிருந்து மீட்டுக் கொண்டு வருவதற்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு. ஹூம்… அதுக்கப்புறம் ஒரு வழியாக மலர் கண்காட்சிக்குள்ளே நுழைந்து மலர்களையும், மலர்களாலான அமைப்புகளையும் பார்க்க ஆரம்பிச்சோம். சரிந்த கூடையிலிருந்து கொட்டுவதாக அமைந்திருந்த மலர்கள், மூங்கில் கூடையில் இருந்த ரோஜாக்களாலான – ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி பழங்கள், மலர்களாலான – பியானோ, பென் ஸ்டாண்ட், ஏரோப்ளேன், படகு, உலர்ந்த மலர்களாலான பூங்கொத்துகள், பாகற்காய் டினோசர் இப்படி எங்கே பார்த்தாலும் கண்ணுக்குக் குளிர்ச்சியா அருமையான அனுபவமாக இருந்தது. அத்தனை புகைப்படங்களையும் இங்கே உங்களுடன் பகிர்ந்துக்க முடியலேன்னாலும் அதிலிருந்து சிலவற்றை இங்கே இணைச்சிருக்கேன்.

உங்களுக்கு நினைவிருக்கும்னு நினைக்கிறேன். சில வாரங்களுக்கு முன்பு நம்முடைய அரட்டையில் நீர்த் துளிகள் உதவியுடன் வரையப்படும் ஓவியங்கள் பற்றி சொல்லியிருந்தேன். அதென்னவோ தெரியலை மணலில், நீரில் வரையப்படும் ஓவியங்கள் அப்படீன்னால்லே ஒரு தனி ஆர்வம் தானா வந்துடுது. தொலைக்காட்சியில் மத்திய பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக வெளியிடப்பட்ட கைகள் மற்றும் விரல்கள் உதவியுடன் உருவாக்கின நிழல் நாடகத்தை பலமுறை ரசிச்சுப் பார்த்திருக்கேன். ஒரு நிமிடம் மட்டுமே வரக்கூடியதாகயிருந்தாலும் அதை உருவாக்கியவரின் படைப்பாற்றலைப் பாராட்டியே ஆகணும்:

http://youtu.be/zh5GYlhugJk

வாஷிங்டனில் உள்ள Pilobolus என்கிற நடன நிறுவனம் நிழல் வடிவங்களின் மூலம் பல புதிய நடன முறைகளை உருவாக்குவதில் முனைப்பாக இருக்காங்க. 40 வருஷங்களாக இந்தத் துறையில் இருக்கும் இவங்களுடைய நடனத்திற்காகவும், நடன வடிவமைப்பிற்காகவும் பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றிருக்காங்க. அவங்களுடைய நடனங்களிலே நிழலின் உதவியுடன் உருவாக்கிய ஒரு நடனம் ரொம்பவே அருமையா இருந்தது. நான் மட்டுமில்லாமல் நீங்களும் பார்த்து ரசித்திட நடனம் இடம் பெற்றுள்ள சுட்டியை இங்கே இணைச்சிருக்கேன்:

http://youtu.be/STK7AZ_Zs_E

கொலராடோவில் உள்ள குழந்தைகள் தங்களுடைய புது வருஷத்தை அமெரிக்கர் வாழ் இந்தியர் மானிக் சர்கார் உருவாக்கிய அனிமேஷன் படங்களைப் பார்த்துக் கொண்டாடுவார்களாம். இந்த நிகழ்ச்சி 1992ஆம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் PBS சேனலில் 2 மணி நேரத்திற்கு ஒளிபரப்பப்படுகிறதாம். ‘Animation of India’ என்ற பெயரில் வழங்கப்படும் இந்த அனிமேஷன் தொடரில் 4 படங்கள் இருக்காம். இவற்றில் 3 படங்கள் ஆங்கிலத்திலும் 1 படம் வங்காள மொழியிலும் (ஆங்கில வசன வரிகளுடன்) உள்ளதாம். இதில் உள்ள ‘தீபாவும் ரூபாவும்’ என்ற படத்திற்கு இந்தியாவின் முதல் அனிமேஷன் திரைப்படம் என்ற பெருமை உண்டாம். இவை எல்லாமே பஞ்ச தந்திர நீதிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட் வையாம். ஹூம்… சொல்ல மறந்துட்டேனே. இந்தப் படங்கள் எல்லாம் உருவாகக் காரணமான அனிமேஷன் பொறியாளரான மானிக் சர்கார் இந்தியாவின் தலை சிறந்த மேஜிக் நிபுனரான பி.சி.சர்காரின் மகனாம்.

இந்த செய்தியைப் படிக்கும் போது கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் படித்த நவீன கால பஞ்ச தந்திரக் கதை ஞாபகத்திற்கு வந்தது. முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் இருந்தாராம். அந்த ஊரின் ஆற்றின் ஓரமாக இருந்த ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து தன்கிட்டே இருந்த கம்பியூட்டரின் உதவியுடன் புரொகிராம்களை உருவாக்கி வாரயிறுதிச் சந்தையில் அதனை விற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார¡ம். ஒரு நாளைக்கு அவர் எப்பவும் போல் மரத்தில் அடியில் உட்கார்ந்து புரொகிராம்கள் எழுதிட்டு இருந்தார¡ம். எதிர்பாராதவிதமா கம்பியூட்டர் ஆற்றில் தவறி விழுந்துடுச்சாம். ஆற்றின் ஓரமாக உட்கார்ந்து தேவதையை வேண்ட ஆரம்பித்தானாம். 1 மாதத்திற்கு அப்புறம் தேவதையும் அவன் முன்னாடி வந்துதாம். தேவதையைப் பார்த்ததும் ரொம்பவும் சந்தோஷப்பட்டு தேவதைகிட்டே தன்னுடைய பிரச்சனையைச் சொன்னானாம்.

பழைய பஞ்ச தந்திர கதைகளில் வந்தது போலவே தேவதையும் அவனுடைய நேர்மையை சோதிக்க நினைச்சு, அவன்கிட்டே ஒரு தீப்பெட்டியை காண்பித்து, "இது உன்னுடையதா?" அப்படீன்னு கேட்டுதாம். ஏமாற்றத்தாட இஞ்சினியர் "இல்லை"ன்னு சொன்னானாம். அடுத்து தேவதை கால்குலேட்டரைக் காண்பித்து "இது உன்னுடையதா?" அப்படீன்னு கேட்டுதாம். மறுபடியும் ஏமாற்றத்தோட இஞ்சினியர் "இதுவும் இல்லை" அப்படீன்னு சொன்னானாம். கடைசியா தேவதை அவனுடைய கம்பியூட்டரையே காண்பித்து "இது உன்னுடையதா?" அப்படீன்னு கேட்டுதாம். ஓரு பெரிய பெருமூச்சோட "ஆமாம்" அப்படீன்னு சொன்னானாம். அவனுடைய நேர்மையைப் பார்த்து ரொம்பவும் சந்தோஷப்பட்ட தேவதை அவனுக்கு மூண்றையுமே கொடுக்க நினைத்தபோது, அந்த இஞ்சினியர் கோபத்தோட"உனக்கு பஞ்ச தந்திர கதைகளே தெரியலையே? என்னுடையதைவிட சிறந்த கம்பியூட்டர்களை காண்பிக்கணும்னு உனக்கு தெரியாதா?" அப்படீன்னு கேட்டானாம். உடனே தேவதைக்கு கோபம் வந்து, "அட அறிவு கெட்டவனே! அது எனக்கு தெரியும். இன்னும் பல ஆயிரம் வருஷங்களுக்கு அப்புறம் வரக்கூடிய நவீன கம்பியூடர்களைத்தான் நான் உனக்கு காண்பிச்சேன். உன்னுடைய தொழிநுட்ப அறிவுக்கு இந்த கம்பியூட்டரே ஜாஸ்தி" அப்படீன்னு சொல்லி அவனுடைய கம்பியூட்டரையும் சேர்த்து எடுத்துட்டு மறைந்துடுத்தாம்.

சரி… கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோம். கீழேயுள்ள சுட்டியில் இருக்கும் வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தபோது, ‘என்ன ஒருத்தர் பிச்சையெடுத்துட்டிருக்கார். இதில் அப்படி என்ன இருக்குன்னு இதனுடையப் பின்னூட்டங்களில் மிகவும் உணர்ச்சிமயமான வீடியோக்களில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டிருக்காங்க’ன்னு யோசிச்சேன். ஆனால் வீடியோவை முழுவதுமாப் பார்த்தப்புறம்தான் காரணம் புரிஞ்சுது. வீடியோவின் ஆரம்பத்தில் வரும் பலகையில் இருக்கும் ‘Change?’ என்ற வார்த்தைக்கு ‘சில்லறை இருக்கா?’ என்ற அர்த்தத்தில் ஆரம்பித்து ‘சிறு சிறு உதவிகள் மூலமாக மற்றவர்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தலாமே?’ என்று கேட்பது போல் அமைந்திருக்கு. நம்முடைய சிறு சிறு செயல்களின் வழியாகக்கூட அடுத்தவங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படுத்தமுடியும் அப்படீங்கிற கருத்தை ரொம்பவும் அருமையாகவும், எளிமையாகவும் படம்பிடிச்சிருக்காங்க.

http://youtu.be/9DXL9vIUbWg

சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author

1 Comment

Comments are closed.