எல்லாரும் நலம் தானே? பொங்கல்லாம் எப்படிப் போச்சு? புத்தாண்டில் என்னென்ன பண்ணீங்க? வழக்கம்போல அதுவும் ஒரு நாள் அப்படிங்கறீங்களா? ஆனால் நம்மில் நிறைய பேர் புத்தாண்டில் எந்த செயல் தொடங்கினாலும் நல்லதுன்னு நம்புறோம். அன்னைக்கு ஏதாவது நடந்தா வருடம் பூரா நடக்கும்னு நினைக்கிறோம். என் நண்பன் புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்குக் கிளம்பும்போது நல்ல காய்ச்சல். வருடத்தோட முதல் நாள் அன்னைக்கு மாத்திரை மருந்து எதுவும் சாப்பிடக்கூடாது, அதுக்கு முன்னாடி உடம்பு சரியாயிடணும்னு, வைத்தியரையே போய்ப் பார்க்காதவன் இந்தத் தடவை போய் ஊசியெல்லாம் போட்டுட்டு வந்தான். ஆனால் காய்ச்சல் விடுவேனான்னுடுச்சு. ஊரில் இருந்த நாலு நாளும் ஊசிதான். நினைக்கிறதெல்லாம் நடந்துச்சுன்னா அப்புறம் கடவுளை யார் நினைப்பா? இந்த மாதிரி நம்பிக்கைகள் படிச்சவங்க படிக்காதவங்கன்னு எல்லார்கிட்டயும் பரவிக்கிடக்கு. உங்க கிட்ட இந்த மாதிரி ஏதாவது நம்பிக்கைகள் இருந்தா பின்னூட்டப் படிவத்துல போட்டுவிடுங்க.
இந்த வருடப் பொங்கல் அன்னைக்கு நான் வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சிக்குப் போனேன் குடும்பத்தோட. வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருளும் இருந்துச்சு, ஆனா வாங்கத் தான் முடியலை. குதிரைக் கொம்புன்னுவாங்களே, அது போல விலை வச்சுருந்தா யார்தான் வாங்கறது? தள்ளுபடி விலைன்னு சொல்லி வெளிய விற்கிறதை விட அதிகமான விலையை சொல்றாங்க. இந்த மாதிரி கண்காட்சிகளில் வாங்கறதுக்கு முன்னாடி ஞாபகம் வச்சுக்க வேண்டியவை:
1. மின் சாதனங்களோ, உத்தரவாதம் உள்ள பொருட்களோ வாங்கும்போது, அத்தயாரிப்பு நிறுவனத்துக்கு உள்ளூரில் விற்பனைக் கூடம், பழுதுபார்க்கும் கடை இருக்குதுதான்னு உறுதிப்படுத்திக்கோங்க. கண்காட்சியோட டாட்டா காட்டிட்டுப் போயிடுவாங்க சில பேர்.
2. பேர் போன கடையோட பொருள்னா, வெளியில் அந்தப் பொருளோட விலையோட ஒப்பிட்டு, உண்மையிலேயே தள்ளுபடியான விலையான்னு விசாரிச்சு வாங்குங்க. விலையில் வித்தியாசம் இல்லைன்னா, அதைப் பொருட்காட்சியில் வாங்க வேண்டியதில்லையே.
3. நிறைய போலிகள் விற்பனைக்கு இருக்கும். அதனால ஒரு தடவைக்குப் பலமுறை யோசிச்சு வாங்குங்க.
4. பேரம் பேசுங்க. அதிக விலைப் பொருட்களை கண்காட்சியில் வாங்குவதைத் தவிர்த்துடுங்க.
5. கடைசி நாளில் போய் வாங்காதீங்க. வாங்கின பொருளை சரிபார்த்துட்டு ஏதாவது பிரச்சனைன்னா திரும்பப் போய் கேட்க வழி இருக்காது.
6. சில பொருட்கள் கண்காட்சியில் மட்டும்தான் கிடைக்கும் – உள்ளூரில் கிடைக்காது. அப்படி ஏதாவது பொருட்கள் இருந்தா தேவைக்கேற்ப வாங்குங்க. நான் கூட ஊட்டி மாவட்டத்து குடிசைத் தொழில் பொருட்கள், பாகிஸ்தான் ஆனிக்ஸ் கல்லில் செய்த கலைப் பொருட்கள், ஒரிசா பஞ்சுப் பொதிப் போர்வைன்னு வாங்கினேன். எல்லாம் மலிவான, தரமான பொருட்கள்.
சரி போதும், இதோட நிறுத்திக்குவோம். அடுத்து சூரிய கிரகணத்தைப் பத்திப் பேசணும்ல. இந்த கங்கண (வளையல்) சூரிய கிரகணம் இருக்கே, இனி அடுத்து 1033 வருடம் கழிச்சு தான் நடக்குமாம். இங்க சென்னைல 90 சதவீதம் தெரிஞ்சது. ஏனோ தொலைக்காட்சியில் பார்க்க மனசு வரலை. பிர்லா கோளரங்கத்தில் கூட்டம் மொய்க்கும். என்ன பண்றதுன்னு யோசிச்சப்போதான் நம்ம கூகுள் அண்ணன் ஞாபகம் வந்தாரு. அவர் தயவில் நானும் ஒரு சின்ன விஞ்ஞானியாயிட்டேன். எங்க வீட்டுப் பின்னாடி வெள்ளை அட்டையில் சூரியனோட பிரதிபிம்பத்தை பிரதிபலிக்க வச்சுப் பார்த்த அனுபவமே அலாதியா இருந்துச்சு. அந்தப் புகைப்படங்களை தான் நீங்க இங்க பார்க்கறீங்க.
எப்படி இருக்கு? கூகுளில் தேடியெடுத்த தளத்தோட முகவரி:
http://www.exploratorium.edu/eclipse/how.html
கூகுளில் சில சமயம் வித்தியாசமான தகவல்கள் கூட கிடைக்கும். அந்த மாதிரிக் கிடச்ச ஒரு முகவரி தான் இது:
http://www.youtube.com/watch?v=EVNIdyutsyA
ஒரு தமிழன் வெளிநாட்டவர்களை தன் நகைச்சுவைப் பாடல்களால ஆடவைக்கறதைப் பார்த்தப்போ, இதை உங்களோட பகிர்ந்துக்கணும்னு தோணுச்சு. பார்த்துட்டு சொல்லுங்க எப்படியிருக்கு வில்பர் சர்குணராஜோட பாடல்கள்னு.
புதிர்கள்ல நிறைய வகைகள் இருக்கு. படப்புதிர், செய்கைப் புதிர், விடுகதை, செய்யுள் புதிர், கதைப் புதிர்னு… நல்ல பொழுது போக்கான படப்புதிர்கள் நிறைய இங்க இருக்கு:
https://www.nilacharal.com/poonchittu/poonchittu_index.html
நான் சொல்லப் போறது கதைப் புதிர்:
ஒரு பெரிய செல்வந்தனுக்கு இரண்டு பசங்க. அவருக்கு வயசாயிடுச்சு. அவர்கிட்ட இருந்த ஒரு விலையுயர்ந்த மாணிக்கக் கல்லை யார்கிட்ட ஒப்படைச்சு பார்த்துக்க சொல்றதுன்னு யோசிச்சார். இரண்டு பசங்களையும் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு குதிரையைக் கொடுத்துட்டு ஒரு போட்டி வச்சார். இரண்டு பேர்ல, யாரோட குதிரை, அவர் சொல்ற இடத்துக்குக் கடைசியா வருதோ, அவங்களுக்கு தான் மாணிக்கக் கல்லுன்னு சொல்லிட்டார். குதிரையை பின்னோக்கி செலுத்தக் கூடாதுங்கறதும், நிறுத்தக் கூடாதுங்கறதும் போட்டி விதிகள். போட்டி ஆரம்பமாயிடுச்சு. வேகமா குதிரையை ஓட்டினாலே, அந்த இடத்துக்குப் போய் சேர ஒரு நாள் ஆகும். மெதுவா நிற்காம வேற போகணும். இரண்டு பேரும் எறும்பு ஊருற மாதிரி குதிரையை நடத்துனாங்க. நாளும் பொழுதும் ஓடுச்சு. இரண்டு பேரும் சோர்வானதுதான் மிச்சம். என்ன செய்யறதுன்னு தெரியாம அவங்க முழிச்சப்போ ஒரு முனிவர் அவங்க போற வழியில் வந்தார். இவங்ககிட்ட இப்படி மெதுவாப் போறதுக்கு என்ன காரணம்னு கேட்டுத் தெரிஞ்சுகிட்ட அவர் அவங்ககிட்ட ஒரு வழி சொன்னார். அதைக் கேட்டதும் இரண்டு பேரும் போட்டி போட்டுட்டு குதிரையை வேகமா செலுத்துனாங்க. அப்படி என்னதான் சொன்னார் அந்த முனிவர்?
யோசிங்க. அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது
உங்கள் ஜோ
“
மாதப் பிறப்பன்று (தமிழ்) எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது; அமாவாசையில் முகம் மழித்தல் கூடாது; ஆண்கள் அரைஞாண் கட்டாமல் இருக்கக் கூடாது; ஒருவருக்கு மட்டும் சமைத்துக் கொள்ளக் கூடாது; சாப்பாட்டுப் பானையை சுத்தமாக வழித்துவிடக் கூடாது; உண்ணும்போது அடிக்கடி நீர் பருகக் கூடாது; இரவு உணவில் கீரை, தயிர் சேர்க்கக் கூடாது; பிறரைப் பார்கவைத்து நாம் மட்டும் தின்னலாகாது; …..இப்படிப் பல செய்திகள் உண்டு.
நன்றி பாலா. எல்லாமே அர்த்தமுள்ள நம்பிக்கைகளாயிருக்கின்றன.
அந்த முனிவர் அண்ணனின் குதிரையை தம்பியும், தம்பியின் குதிரையை அண்ணனும் செலுத்துமாரு கூறினார். இதனால் தம்பி முன்னால் சென்றால், போட்டியின் படி அண்ணன் செலுத்தும் தன் குதிரை மெதுவாக வந்து தான் வெற்றி பெறுவான். இவ்வாறு எண்ணி இருவரும் வேகமாக சென்றனர். சரியா ஜோ அவர்களே?
சரிதான் பாலசுந்தர் அவர்களே! இதைத் தான் Reading between lines” என்று கூறுவார்கள்.
எதற்கு இந்த அவர்களே எல்லாம். ஜோ என்றே குறிப்பிடுங்கள்.”
வணக்கம் ஜோ! ரொம்ப சரியா சொன்னீங்க! இந்த ஆடித்தள்ளுபடி, புத்தாண்டு தள்ளுபடி என்று மக்களின் மோகம் அதிகமாகவே உள்ளது. இது எப்பொழுது மாறுமோ? அதே போல் நம்ம ஊர் மக்கள் பொருட்காட்சியில் வாங்கும் பொருள் என்றால் அதை ரொம்ப பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால் ஆராய்ந்து பார்க்கையில் அவர்கள் எந்த அளவிற்கு ஏமாற்றப் படுகிறார்கள் என்று தெரிவதில்லை. அப்புறம் சூரியகிரகணம் நம்ம ஊர் இராமநாதபுரத்திலும் நன்றாக தெரிந்ததாம். சொன்னார்கள். நானும் கோவையில் எக்ஸ்ரே வச்சு பார்த்தேன். நன்றாக தெரிந்தது. அப்புறம் புதிர் கதைக்கு சகோதரர் பாலசுந்தர் செந்தில்வேல் அவர்கள் விடை சொல்லி விட்டார்கள். அப்பப்ப நம்ம ஊர் பெண் என்பதை நிரூபிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
வியபரதுல இருகரவங்கலுக்கு தெரியும் தல்லுபடி நா என்னனு இருன்தும் அவர்கல் குடும்பதார்கலஎ நம்பமாடார்கல் என்ன செய முட்டால் உலகம்