ரிஷி: "அண்ணனுக்கு ஜே! அகில உலக நாட்டாமைக்கு ஜே!"
ஸ்வர்ணா: "யார்ராது, நம்ம இருக்கற இடத்தில அண்ணனுக்கு ஜே போடறது?"
ரிஷி: "மன்னிச்சிக்குங்க, சொர்ணாக்கா… கூகுளுக்கு ஜே போடப் போனேங்க… பெரிய புராணம், சீறாப்புராணம், திருவிளையாடல் புராணம் வரிசையில் கூகுள் புராணம் எழுதலாம்னு இருக்கேன். ஜோ, ஜி3, நீங்க என்ன நினைக்கிறீங்க? (சொர்ணாக்கா ரேஞ்சே தனி. அவங்க ரேஞ்சுக்கு கூகிளெல்லாம் ஜுஜுபி!)"
ஜோ: "ஜிங் ஜா அடிக்க நான் தயார்"
ஜி3: "இதெல்லாம் நாம்ப வழக்கமா செய்யறதுதானே!"
ரிஷி: "நம் அரசியல் அண்ணன்கள் அடிக்கடி கூவும் ‘நிரந்தர முதல்வர்’ வார்த்தை, தேடுபொறி உலகில் தனியிடத்தைப் பிடித்து விட்ட கூகுளுக்குத்தான் சாலப் பொருந்தும்னு எங்க குலதெய்வம் பேச்சியாத்தா மேல அடிச்சு சொல்றேன். நீங்க என்ன சொல்றீங்க?"
ஸ்வர்ணா: "அட, அப்டின்னா 2011ல சரத்தும் 2016ல விஜயும் முதல்வராக முடியாதா? என்னப்பா, கொ.ப.செ பதவிக்கு மனு போட்டதெல்லாம் வேஸ்டா?"
ஜோ: "சொர்ணாக்கா, சரத்துக்கும், விஜய்க்கும் DEPOSIT(வைப்புத் தொகை) காலி. நீங்க வேற புளியங்கொம்பு தேடுறது நல்லது."
ரிஷி: "ஐயய்யய்ய.. நிப்பாட்டுங்கப்பா.. சீரியஸா பேசிக்கிட்டு இருக்கும்போது காமெடி பண்ணிட்டிருக்கீங்க. மேட்டருக்கு வாங்கப்பா.."
ஜி3: "நான் இதை வழி மொழிகிறேன். நம்முடைய எல்லா சந்தேகங்களையும் தீர்க்கும் கூகுளுக்கு ‘நிரந்தர முதல்வர்’ன்னு பட்டம் கொடுக்கிறதுல தப்பே இல்ல."
ஸ்வர்ணா: "நம் குழுவில் ஒரிஜினலாக எழுதிப் பேரெடுப்பவர்களும் இருக்கிறார்கள், ஒத்து ஊதியே பேரெடுப்பவர்களும் இருக்கிறார்கள். மக்களே, இதில் யார் யார் எந்தெந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதை உங்கள் தீர்ப்புக்கே விடுகிறேன்."
ரிஷி: "(மனதுக்குள்) இந்த பார்ட்டியை ஓரம் கட்னாத்தான் நம்ம கதை செல்லுபடியாகும். ரகசியமாக ஸ்வர்ணாவின் அலைபேசியை அழைக்கிறார்."
ஸ்வர்ணா அலைபேசியில்: "ஹலோ, ஸ்வர்ணா ஸ்பீகிங். ஹலோ, ஹலோ… என்ன கொடுமைடா இது, நான் பேசுறதுதான் எனக்குக் கேக்குது."
ரிஷி: "எங்கே, நம்பரைக் காட்டுங்க… அட, இது நம்ம சன் நியூஸ் சுகிதா நம்பர். உங்களை ஏதாவது பேட்டி, கீட்டி எடுக்கக் கூப்டிருப்பாங்க. நான் அவங்க பெர்சனல் நம்பர் தர்றேன். உடனே பேசிடுங்க, இந்த மாதிரி வாய்ப்பை எல்லாம் தவற விடாதீங்க."
நம்பரை வாங்கிக் கொண்டு ஸ்வர்ணா அகல,
ரிஷி: "யப்பா, ரெண்டு வரி கூட சொல்லலை அதுக்குள்ள கண்ணைக் கட்டுதே… சரி, மீதிக் கதையையும் சொல்லிருவோம்… 1996ல் லாரி பேஜ், சர்ஜி பிரின் என்ற இரு மந்திர வார்த்தைகள் உருவாக்கிய மாயாஜாலம்தான் கூகுள். இவர்களுக்கு அறிவே மூலதனம். கூகுல் ஒரு நிறுவனமாக உருவெடுக்கும் முன்பே ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்களை சம்பாதிச்சிருச்சினா பாருங்களேன்!
ஆம்! சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆன்டி பெச்டொல்ஷிம் ‘கூகுள் இன்கார்ப்பரேஷன்’ என்ற பெயருக்கு ஒரு இலட்சம் டாலருக்கான செக் கொடுத்தபோது அந்தப் பெயரில் கம்பெனியே இல்லை."
ஜோ: "நான் கூட ‘ஜோ பிரைவேட் லிட்.,’ ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். ‘சன்’ கிட்ட கேட்கலாமா?"
ஜி3: "ஜோ, நீங்க யார் கிட்ட கேட்கப்போறீங்க சன் பிக்சர்ஸ் நிறுவனமா இல்லை சன் மைக்ரோஸ் நிறுவனமா?"
ரிஷி: "இங்க அரசியல்லாம் பேசப்படாது, ஆமா"
ஜோ: "கவலைப்படாதீங்க, ஜி3.. ட்யூப் லைட்டுகளுக்குன்னு தனியா ஒரு வழிகாட்டி போடப்போறேன். அதில உங்க கேள்விகளுக்கு பதில் இருக்கும்."
ரிஷி: "வெறும் அரட்டையோட நிக்காம, கொஞ்சம் விஷயமும் சொல்ல விடுங்க, சகா. இல்லைன்னா நம்ம நக்கீரர் டாக்டர் சுப்ரமணியன் நறுக்குன்னு நாலு வரி எழுதிப் போட்ருவார்."
(சுப்ரமணியனின் பெயரைக் கேட்டதும் அனைவரும் அமைதியாகிறார்கள்)
ரிஷி: "அதுக்குப் பின்னாடி கூகுள் எடுத்த விஸ்வரூபம்தான் மக்களுக்குத் தெரியுமே! நம்ம விளம்பரங்களில் சொல்ற மாதிரி.. ‘ஹமாம்னா சுத்தம்; சுத்தம்னா ஹமாம்.. அது சரி மம்மி.. கூகுள்னா என்ன?’
கூகுள்னா எளிமை; எளிமைன்னா கூகுள். அப்படித்தானே?
சாதாரண வெள்ளைக் கலர் பேக்ரவுண்டு; கருப்பு, ப்ளூ கலர் டெக்ஸ்ட்.. லிங்க் பூராவும் அடிக்கோடு போட்டு.. என்னய்யா இது? பளிச்சினு ‘கூகுள்’ங்கிற பேர் மட்டும் அழகு வண்ணங்களில்."
ஜோ: "இது கூகுள் கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். தேவையில்லாத கச்சடாவே இருக்காது. தேடு பதில்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும். கடந்த வருடங்களில் கிறிஸ்துமஸுக்குக் குல்லா போட்ட கூகுள் கலக்கலா இருந்துச்சு."
ஜி3: "கிறிஸ்துமஸ் மட்டுமில்லாம தேங்ஸ் கிவி டே, ஹேலோவின் டேன்னு உலக பண்டிகைகளுக்கும் புதுசு புதுசா ஐக்கான் வைக்கிறாங்க."
ஜோ: "ஆமாமா, அவங்களோட எல்லா கலை வண்ணங்களையும் இங்க போய் பார்க்கலாம்: http://www.google-logos.com/
ரிஷி, இதைச் சொல்ல மறந்துட்டீங்களே.. இப்போ நம்ம ஜிமெயில் INBOX ஐக் கூட நமக்குப் பிடிச்ச மாதிரி GOOGLE THEMES மூலமா வண்ண மயமா மாத்திக்கலாம்."
ஜி3:"ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த ஜிமெயில் இன்பாக்ஸ் பல மொழிகள்ல இருக்கிறது தெரியுமா? இப்போல்லாம் மெயிலிங், சாட்டிங் எல்லாமே தமிழ்லதான் தெரியுமில்ல?"
அதைக் கேட்டபடியே உள்ளே நுழைந்த ஸ்வர்ணா:
ஜி3, கடலை போடறப்ப கூட பீட்டர் உடாம தூய தமிழ் பயன்படுத்துற உன் தாய்பொழிப் பற்று என்னைப் புல்லரிக்க வைக்குது. மருத்துவர் ஐயா தமிழ்குடிதாங்கியைக் கவர் பண்றதுக்கு ரூட் போடறாப்ல இருக்கே!
ஜி3: "நீங்க பொ.ப.செ ரூட்ல 2021ல முதல்வராகலாம்னு கனா காண்றீங்க, சொர்ணாக்கா. நமக்கெல்லாம் நேரா 2011 சி.எம் போஸ்டுதான் குறி."
இவர்களை மீண்டும் ஆஃப் செய்ய நினைத்த ரிஷி : "நிலா மெசேஜ் அனுப்பிருக்காங்க. இன்னும் பத்து நிமிஷத்தில அரட்டை ரெடியாகணுமாம். ஆளாளுக்கு வெட்டியா பெட்டி போடாம இருக்கீங்களா கொஞ்சம்?"
(வாயில் விரலைக் குறுக்காக வைத்து மௌனம் காக்கிறார்கள் அனைவரும்)
ரிஷி: "நான் சொல்ல வந்தது கரீக்கட்டா சொல்லிட்டே, ஜோ. அதுதான் கூகுள். நமக்கு என்ன தேவையோ அதக் கொடுத்தா போதும். அநாவசியமா ஜனங்க கண்களை உறுத்தக் கூடாதுங்கிற சிம்ப்ளிசிட்டி.ஒரு வார்த்தையைத் தேடினா ஓராயிரம் ரிசல்ட்டைக் கொண்டு வந்து கொட்டுது. குப்பைக்குள்ள காந்தத்தைக் கொண்டு போனா அத்தனை இரும்பு ஐட்டங்களும் கரெக்டா வந்து ஒட்டிக்குது இல்லையா.. அதுபோல! அதுலயும் நமக்கு வேண்டியத முதல் ரெண்டு பக்கங்களிலேயே அடுக்கிக் காட்டுறத என்ன சொல்ல?!"
இந்த அரட்டையை எழுதும்போது nilacharal அப்படினு தேடுனா, கோடிக்கணக்கான தளங்கள்ல அந்த வார்த்தை 89,200 பக்கங்களில் இருக்கு.. உனக்கு வேண்டியத எடுத்துக்கோ அப்படினு கொட்டி விட்டு அமைதியா இருக்கு. தேடுவதற்கு எடுத்துக்கொண்ட நேரமோ வெறும் 0.13 விநாடிகள்!!
ஜி3: (மனதுக்குள்) "ஆஹா… விஐயகாந்த் மாதிரி புள்ளி விவரங்கள் எல்லாம் அள்ளி விடுறாரே, முதல்வர் பதவிக்கு போட்டிக்கு வந்துடுவாரோ?"
ரிஷி: "தேடுபொறியோடு முடிஞ்சிருச்சா வேலை? நெனச்சதத்தான் சாதிச்சாச்சே.. அப்புறமென்ன..!"
கூகுள் இன்னிக்கு வெறும் சர்ச் எஞ்சின் மட்டுமல்ல..
வில்லுக்கு விஜய், மெயிலுக்கு ‘ஜிமெயில்’.
மக்களைச் சந்திக்க அழகான சந்தைக் கடை ‘ஆர்குட்’.
உறவுக்காரங்க மட்டும் பேசிக்கறதுக்கு ‘க்ரூப்’
நம்ம மனசுல பட்டத ஊர் மக்களுக்கு வலைவிரிக்க ‘வலைப்பூ’
ஸ்டில் கேமராவுல சுட்டதப் பதிவேற்ற ‘பிக்காசா’
வீடியோ விஷயங்களுக்கு ‘கூகுல் வீடியோஸ்’
விளம்பரிச்சு துட்டு சம்பாதிக்க ‘ஆட்சென்ஸ்’
இணையப் பக்கங்களை மேய, புச்சா வந்துக்கீற ‘க்ரோம்’
எந்த ஊரு எங்கே இருக்குனு பார்க்க, ‘மேப்ஸ்’
ஜோ: "அடுத்த பேரரசு படத்துக்கு உங்களை பாட்டெழுத கண்டிப்பா கூப்பிடுவாங்க, ரிஷி"
ஜி3: "வாரேவா சூப்பர் கவிதை … இதை எங்கே இருந்து சுட்டீங்கன்னு மட்டும் சொல்லுங்க ப்ளஸ்…"
ரிஷி: "ஹலோ.. எல்லாம் சொந்த சரக்குங்க.. மேலே சொன்னதோட முடியலை.. இன்னும் விஷயங்கள் போவுது.. ஜிடாக், காலண்டர், வெப்சைட் மொழிமாற்றம், எஸ்.எம்.எஸ்., மொபைல் கூகுள், கூகுள் எர்த், நியூஸ், டைரக்டரி, டாக்குமெண்ட்ஸ், ஸ்பிரெட்ஷீட்..
கூகுல் ஆட்சென்ஸ் மாதிரி கலக்கலான ஐடியா வேறெதுவும் கிடையாது. எந்த வெப்சைட் பார்க்கிறோமோ, அந்தத் தளத்திற்கேற்றாற் போல, தளம் பார்க்கப்படுகிற ஊருக்கேற்றாற் போல விளம்பரங்களைக் காட்டுறதுதான் இதோட ஸ்பெஷாலிட்டி. சிவகாசியில உட்கார்ந்துக்கிட்டு மேட்ரிமோனியல் சைட் பாத்தா.. ஆட்சென்ஸ் விளம்பரத்துல சிவகாசி பொண்ணுங்களப் பத்தின விபரங்கள் வருது!"
ஜோ: "ஓ இதத்தான் நீங்க கூகுள்ல தேடுறீங்களா? உங்க தேடுதல் வெற்றியடைஞ்சு கூடிய சீக்கிரம் கல்யாணப் பத்திரிக்கை அனுப்ப வாழ்த்துக்கள்"
ஸ்வர்ணா: (மனதுக்குள்) "ஹைய்ய்யா, ஒருத்தன் ஒழிஞ்சான்…"
ஜி3: "நம்ம பசங்க இந்த மாதிரி விஷயங்கள்ல ரொம்பவே தெளிவா இருக்காங்க. இனிமே பேரைப் பார்த்து நான் யாரையும் நம்பமாட்டைன்பா"
ரிஷி: "(மனதிற்குள் – தேவையில்லாம வாயக் கொடுத்துப்புட்டோமோ! சப்ஜெக்டைத் தொடருவோம்)டாக்குமெண்ட்ஸ், ஸ்பிரெட்ஷீட்டெல்லாம் ஆன்லைன்ல எதுக்குக் கொண்டு வர்றாங்கன்னு கேட்டா.. எங்களுடைய அடுத்த குறியில ரொம்ப தெளிவா இருக்கோம். வெப்பையே ஒரு ஆபரேட்டிங் சிஸ்டமா மாத்தப் போறோம்ங்கிறாங்க. ஹார்டு டிஸ்கே தேவையில்ல.. எல்லாத்தையும் எங்க கூகுள்லயே வச்சுக்கங்கன்னு சொல்றாங்க!
ஹ்ம்ம்.. அதுவும் சரிதானே! உலகத்துல எந்த மூலையில இருந்து வேணும்னாலும் எடுத்துக்கணும்னா அது வெப்பில உட்கார்ந்திருந்தாதானே எடுக்க முடியும்?அம்புட்டு விஷயங்களும் இலவசம்ங்கிறதுதான் இதுல உயரமான விளக்கே.. அதாங்க..’ஹைலைட்டு’!"
ஜோ: "இதிலதாங்க எனக்கு ஒரு சந்தேகம். கடைசி வரை இலவசமாவே இருக்குமான்னு.. ஏன்னா, document, spreadsheet எல்லாத்துக்கும் இப்போ கோப்பளவு(file size) 500kb ன்னு மாத்திட்டாங்களே.."
ஸ்வர்ணா: "(ஆவேசமாக) என்ன இலவசம், ஏது இலவசம்? இலவசம் இலவசம்னு மக்களைப் பிச்சைக்காரங்களா ஆக்காதீங்கப்பா…"
ஜி3: "(கிண்டலாக) சொர்ணாக்காவுக்கு எப்பப் பார்த்தாலும் மக்கள் நினைப்புத்தான். மக்கள் மேல ரொம்பத்தான் பாசம்…"
ரிஷி: "ஷ்.. ஷ்… (கடிகாரத்தைக் காட்டுகிறார்) கவனிங்க.. கண்ணுங்களா.. அதுமட்டுமில்ல.. கூகுள் லேப்ஸ் அப்படினு ஒன்னு இருக்கு. நம்ம கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ் லேப் மாதிரித்தான் இதுவும். இப்போ என்னதான் வேலை நடந்துக்கிட்டு இருக்குங்கறது லேப்ஸ் போயிப் பார்த்தா தெரியுது.
புரொகிராம் எழுதறவங்களுக்கு சவாலான புராஜெக்டுகள்லாம் காத்துக்கிட்டு இருக்கு ஏ.பி.ஐ (Google API) அப்படிங்கற கான்செப்டுல."
ஜோ: "சவாலா? அப்போ இது எனக்கில்ல.. மாலீக் உங்களைப் பத்தித் தெரியாம ரிஷி வம்புக்கிழுக்கிற மாதிரி இருக்கு. ஒரு கை பார்த்துடுங்க"
ரிஷி: "இதெல்லாம் போக..
இன்னைய தேதிக்கு ‘கூகுள்’ அப்படிங்கற வெப்சைட்டோட வெப் பக்கங்களின் எண்ணிக்கை மூணு கோடியே அறுபத்தெட்டு லட்சமா இருக்கு. மைக்ரோசாப்ட் கூட ரெண்டு கோடியே தொன்னூற்றி ஏழு லட்சங்கள்தான்!நிறுவனம் ஆரம்பிச்சு வெறும் பத்தே வருடங்கள்ல இமாலய வளர்ச்சி! (இமயமலைகூட சின்னதோ?!)"
ஜி3: "(மனதுக்குள்) சந்தேகமே இல்லை… புள்ளி விபரங்களோட இவன் முதல்வர் நாற்காலிக்குத்தான் காய் நகர்த்தறான்.."
ஜோ: "அம்மாடியோவ்.. இவ்ளோ பக்கங்களா? இமயம்தான்.."
ஸ்வர்ணா: "இதெல்லாம் ஒரு வளர்ச்சியா? இன்னும் ரெண்டு வருஷத்தில பாருங்க, இதையெல்லாம் ஓரம் கட்டிடும் சொர்ணாக்கா இங்க் (Sornakkaa Inc)"
ஜி3: "நம்பவே முடியலை ரிஷி. இதுல இருந்து என்ன தெரியுதுன்னா கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தா எதையும் சாதிக்கலாம். என்ன சரிதானே?"
ஸ்வர்ணா: "ஆஹா… ஜி3யின் பொன் மொழி நம்பர் 2939. எழுதிக்குங்க, மக்களே!"
ரிஷி: "ஓகே நண்பர்களே.. இன்னும் சொல்றதுக்கு மேட்டர் இருந்தாலும் கூட இருக்கற வெஜாக்களோட இம்சை தாங்க முடியலை. அப்புறமா தனியா மீட் பண்றேன்."
ஜோ: "ஓகே.. ரிஷி, சும்மா உங்களைக் கலாய்க்கணும்ங்கறதுக்காக, இடையில் நிறைய தொந்தரவு பண்ணிட்டேன். கூகுள் பத்தி தெரியாத நிறைய தகவல்கள் சொன்னீங்க.. ரொம்ப நல்லாருந்துச்சு… (என்ன ரிஷி, திடீர் பல்டி அடிக்கிறேன்னு பார்க்கறீங்களா? காலச் சக்கரம் சுழன்று நீங்க என் இடத்துக்கு வரும் போது கொஞ்சம் நல்லவிதமா சொல்லணுமேங்கற சுயநலம் தான்).."
இப்போ வாசகர்களுக்கு:
வாசகர்கள் அனைவரும் நிலாச்சாரலோட வெற்றி நடையில் 400வது வாரத்திலிருந்து 4000வது வாரம் தாண்டியும் கூட இருக்கணும்னு கேட்டுக்கறேன்.
ஸ்வர்ணா: "ஆமா, மகா ஜனங்களே… ஒபாமா பேரன் உங்களை ரொம்ப அன்பா கேட்டுக்கிட்டார்… அரை டவுசர் போட்ட பையன் எல்லாம் அரட்டை அடிக்க வந்துட்டானேன்னு கோவிச்சிக்கிட்டு நிலாச்சாரல் பக்கம் வராம இருந்திறாதீங்க… இதெல்லாம் அரசியல்ல சகஜமுங்கோ…"
ஜி3: "சொர்ணாக்கா.. இந்த வாரம் சூப்பரா சொதப்பினீங்க… மறந்துடாதீங்க அடுத்த வாரம்.."
அன்பர்களே, நாம்ப மறுபடியும் பார்த்தாலும் சரி, பார்க்கலைன்னாலும் சரி, பேசினாலும் சரி பேசலைனாலும் சரி, "நல்லாயிருப்போம், நல்லாயிருப்போம் எல்லோரும் நல்லாயிருப்போம்."”
2009-01-18 21:53:03.000000
2009-01-19 14:15:27.000000
2009-01-20 13:12:15.000000
2009-01-20 13:19:06.000000
2009-01-22 03:58:00.000000
2009-01-22 21:17:42.000000
2009-01-23 09:42:55.000000