வணக்கம் நண்பர்களே!
யார் இந்த ‘ஜோ’, புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? வேற யாருமில்லைங்க, உங்க !? தாங்க.
மாலீக் நம்ம பேரைக் கண்டுபிடிக்க முடியாம, "நீங்க உங்க பேரை சொல்றதாவே இல்லையா?"ன்னு கேட்டுட்டார். அப்போ நான் சவாலில் வெற்றியடைஞ்சதாதானே அர்த்தம்.. ஆகவே இப்புது வருடத்திலிருந்து யாம் ‘ஜோ’ என்று அறியப்படுவோமாக!
புது வருடத்தில் உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி.. எல்லாருக்கும் இவ்வருடமும், இனி வரும் வருடங்களும் நலமாக அமையட்டும்!
புத்தாண்டுக்கு என்னென்ன பண்ணீங்கன்னு ரிஷி கேட்டிருந்தார்? இதைப் பண்ண மாட்டேன், அதைப் பண்ண மாட்டேன்னு இத்தனை வருஷம் எடுத்த எந்த முடிவும் பத்துநாள் தாண்டுனதில்லைன்னு அனுபவத்தில் தெரிஞ்சுகிட்டதால நான் இந்த வருஷத்திலிருந்து எந்த முடிவும் பண்ண மாட்டேன்னு ஒரு முடிவு பண்ணிருக்கேன்.. ஹி.. ஹி.. பிரச்சனையே இல்லை இனி..
அலுவலகத்துல வேலை பார்க்கிறோமோ இல்லையோ, புதுப்புது பொழுதுபோக்கெல்லாம் கண்டுபிடிச்சிட்டிருக்கோம். தூக்கம் வர்ற மாதிரி இருந்துச்சுன்னா (எனக்கு நாள் முழுக்க அப்படித் தான் இருக்கும்கறது வேற விஷயம்) உடனே ஒரு பேர் போன பாட்டோட வரிகளை மாத்திப் போட்டு விளையாட ஆரம்பிச்சிடுவோம். ஒவ்வொருத்தரோட கற்பனையும் வித்தியாசமா இருக்கும். அப்படி ஒருத்தர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாட்டு கீழ:
she color saw reden reden betel leaf.
she beauty tel words r not enough.
ada now now i want 5leaf.
என்ன பாட்டுன்னு கண்டுபிடிங்க பார்ப்போம். இப்படில்லாம் கிறுக்குத்தனம் பண்ணி சிரிக்கறது இறுக்கத்தைக் குறைக்க ரொம்பவே உதவுதுங்க.
கொஞ்ச நாள் முன்னாடி எங்க மாமா திடீர்னு இறந்துட்டாங்க.. அவருக்கு மூணு பெண் பிள்ளைங்க.. அத்தையும் கிராமத்துக்காரங்க.. மாமா இறந்து போனது ஒரு பக்கம் கவலைன்னா, கடன் ஏதும் இருக்கா என்னன்னு தெரியாம அத்தை என்ன பண்ணப் போறாங்களோன்னு நினைச்சுட்டே இருந்தோம். ஆனா மாமா அவங்களை அப்படிக் கைவிட்டுடலை. கொஞ்ச நாள் முன்னாடி தன் மூத்த பொண்ணைக் கூப்பிட்டு, வரவு செலவு கணக்கு, ஆயுள் காப்பீடு, நிலம், கடன் ஏதும் இல்லைங்கற தகவல் எல்லாம் சொல்லிருக்காரு. இத்தனை காலம் சொல்லாதவர் இப்பவா சொல்லணும், சொன்ன நேரம் இப்படி ஆயிடுச்சேன்னு எல்லாரும் அழுதாலும், அவர் சொன்ன தகவல் இப்போ அந்தக் குடும்பத்துக்கு எவ்வளவு ஆறுதலா இருக்கும்னு சொல்லத் தேவையில்லை.
இதை எதுக்கு சொன்னேன்னா, நிலையில்லாத வாழ்க்கை இது.. நாம பணத்தை பல இடங்களில் முதலீடு செய்றோம். ஆனா என்னன்ன பண்ணிருக்கோம்ங்கற கணக்கு வழக்கு எதுவும் வீட்டுல உள்ளவங்களுக்குத் தெரியாது… நம்ம குடும்பத்தைக் கொஞ்சம் யோசிச்சு, வீட்டில் பொறுப்பா இருக்கிற யார்கிட்டயாவது பண நிலவரம் சொல்லி வைக்கலாமே.. இல்லை ஒரு தினக்குறிப்பில் இந்தத் தகவல் எல்லாம் எழுதி வைக்கலாமே.. எவ்வளவோ உபயோகமா இருக்கும்.. நட்பின் அடிப்படையில் ஒரு அறிவுரை: 50 வயசுக்கு மேல பார்த்துக்கலாம்னு நினைக்காம, இப்பவே இதை செய்யணும்…
பொங்கல் வருது. தமிழர் திருநாள். நீங்க எப்படிக் கொண்டாடப் போறீங்க? சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டுக்குள்ளேயே பொங்கல் வைச்சுடுவோம். சின்ன வயசில வீட்டு முற்றத்துல பொங்கல் பானை, துணைப் பானை, வெண் பொங்கல் பானைன்னு வச்சு ஓலைப் புகையில் கண்ணைக் கசக்கி, குலவையிட்டு… ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்.. தென்காசியில, எல்லாப் பொங்கலுக்கும் அண்ணன், தன் தங்கச்சிங்களுக்கு சீர் செய்வாங்களாம்.. குறைஞ்சது பத்து ரூபாயும், பின்னல் மாதிரி திரிச்ச விளக்குத் திரியும் குடுப்பாங்களாம். அதை வச்சுத் தான் தங்கச்சிங்க (கல்யாணம் பண்ணிப் போனாலும்) பொங்கல் அன்னைக்கு வீட்டில் விளக்கேத்துவாங்களாம். அடுத்த நாள் மீந்த திரியை ஆற்றில் விடுவாங்களாம். என்னைக்கும் உனக்கு நான் இருக்கேன்னு அண்ணன் தங்கச்சிக்கு சொல்றதா அர்த்தமாம். கேள்விப்பட்டப்போ ஆச்சரியமா இருந்துச்சு.. எவ்வளவு அர்த்தம் மிகுந்த வழக்கங்கள்லாம் நம்ம ஊர்கள்ல இருக்கு.. இது மாதிரி நிறையத் தெரிஞ்சுக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசைங்க.. உங்க ஊர்ப்பக்கம் இருக்கிற வழக்கங்களைப் பத்தி எழுதிப் போடுங்களேன்..
போன முறை ஒரு கேள்வி கேட்டிருந்தேன்: //பூமியில் விளையற கிழங்கு வகைகள்ல மனிதனுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கிழங்கு எதுன்னு தெரியுமா? ……………………… //
ரிஷி சரியா பதில் சொல்லிட்டார். அவர் எழுதின பதில் கீழே:
//ஹைய்யா… கோடிட்ட இடம் நிரப்பி ரொம்ப நாளாச்சு. இதோ ஆன்ஸர்.
கருணைக்கிழங்கு தானே அது.
பொதுவா, பூமிக்கடியில விளையிற எதுவுமே அதிக நல்லதில்லைதான். வாய்வு, மந்தம் மற்றும் சில விஷயங்களைக் கொடுக்கக் கூடியது. ஆனால் எனக்குத் தெரிந்து கருணைக் கிழங்கு எந்த கெடுதலும் செய்வதில்லை. மூலத்திற்கும் நல்லது. புதிய கிழங்கை சமைத்தால் தொண்டையில் அரிக்கும். பழைய கிழங்கு வாங்கி சமைப்பது நல்லது. சித்தப்பா காய்கறிக் கடை வைத்திருப்பதால் கறந்த விஷயங்கள் இவை.//
ரொம்ப நன்றி ரிஷி….
இனி தகவல் நேரம்:
பொங்கலுக்குக் கோலம் போட்டு அசத்த நினைக்கும் பெண்களுக்கு: http://www.nilashop.com/product_info.php?cPath=64&products_id=442
(உங்க தெருவில் நடக்கும் கோலப் போட்டியில் வெற்றி பெற்றா எனக்கொரு பங்கு தந்துடணும்)
இப்போதான் அடுப்படியில் காலடி எடுத்து வைக்கும் அம்மணிகளுக்கு: https://www.nilacharal.com/tamil/manam_279.asp
எல்லாமே பெண்களுக்குத்தானா? எங்களுக்குல்லாம் ஒரு தகவலும் கிடையாதான்னு கேட்கும் ஆண்களுக்கு:
இறந்தபின்பும் SIGHT (உங்களுக்குத் தான் அர்த்தம் தெரியுமே!) அடிக்கணுமா?
.
.
.
.
.
.
"கண் தானம் செய்யுங்கள்!"
(அடிக்க வராதீங்க.. ஒரு நல்ல செய்தியை எப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு பாருங்க.. நீங்களும் நிறைய பேருக்கு அனுப்பி வைங்க..)
அப்புறம் இன்னொன்னுங்க.. நீங்க எழுதற பின்னூட்டத்துக்கெல்லாம் பதில் எழுதுவேங்க.. அதுவும் அந்தந்த அரட்டைக்குக் கீழேயே வெளியாகும். எப்ப வந்தும் பார்த்துக்கலாம். எப்படி என்னோட பழங்கதையெல்லாம் பார்க்கறதுன்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப சுலபம், கீழே ‘ஜோ அவர்களின் இதர படைப்புகள்’ மேல சொடுக்கினா போதும்..
இப்போது அன்புடன் விடைபெறுவது
உங்கள் அபிமான ஜோ
(நிகழ்ச்சி தொகுப்பாளர் மாதிரி சொல்லிப்பார்க்கலாமேன்னுதான். ‘அபிமான ஜோ ன்னு நாங்க சொல்லணும்’னு நீங்க பல்லைக் கடிக்கிறது இங்க கேட்குது.. சரிங்கப்பா சின்னப் பையன்னு விட்டுடுங்க)
நிலாச்சாரல் வாசகர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
என்றும் அன்புடன்
ஜோ
“
வாரணம் ஆயிரம் படத்துல வரும் அஞசலை பாட்டுத்தானே! நீங்க ஆங்கிலத்தில் சொல்லியிருப்பது.
சரியா சொல்லிட்டீங்க கவிதா.. நீங்களும் இந்த மாதிரி அறிவுபூர்வமா(!?) ஒரு பாட்டை மொழிபெயர்த்துட்டீங்கன்னா எங்க கூட்டத்துல சேர்த்துக்குவோம்..
எப்படி உங்களாலேயே உங்க பெயரை சொல்ல வெச்சேன்!எப்படி நம்ப..?நீங்க
கேட்கிற கேள்விகள் ரொம்ப ஈஸியா இருக்கிறதால ரிஷியும்,கவிதாவும் நமக்கு
முந்திக்கிறாங்க.கொஞ்சம் டஃப்பா கேளுங்க ஜோ.உதாரணத்துக்கு இப்படி
இருக்கலாம்:ஒரு நூரு ரூபா நோட்டு பெருசா இல்ல ரெண்டு அம்பது ரூபா நோட்டு
பெருசா?
Nice article. Thanks for useful suggestions. All brothers please read this article.
warm regards
Hema Manoj.
மாலீக்.. குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டலை. 1 + 1 = 2 சரியா தவறா? இந்த மாதிரி கேள்வி கேட்டா சரியா இருக்குமா? நீங்க கொஞ்சம் எழுதி அனுப்பினா, உபயம்: மாலீக்னு உங்க பேர் போட்டுடுவோம்.
நன்றி ஹேமா.. தொடர்ந்து நல்ல தகவல்கள் தர முயற்சிக்கிறேன்.