சில்லுனு ஒரு அரட்டை

ஹாய்! ஹாய்!! ஹாய்!!!

நிலாச்சாரல் வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.

நான் இங்கே நலம், அதேபோல நீங்க எல்லோரும் சூப்பரா இருக்கீங்கதானே? உங்க எல்லோர்கூடயும் மறுபடி அரட்டையடிக்கற நாளை ரொம்பவே ஆவலா எதிர்பார்த்துட்டு இருந்தேன். சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கே!

நண்பர்கள் ஹேமா, யூசுப், ரிஷி, மாலிக், ராதா மற்றும் பலரும் என்னுடைய அரட்டையை படிச்சு பாராட்டினதால இன்னும் உற்சாகம் வந்துடுச்சு.

ஸ்வர்ணாவின் பைக் ஹீரோ பத்தி படிச்சப்புறம் உங்களுக்காக அங்கே இங்கே தேடி சில விவரங்கள் சேகரிச்சேன். பொதுவா வண்டி ஓட்டும் போது உடன் கொண்டு செல்ல வேண்டிய, கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் :

•  லைசன்ஸ், ஆர்.சி புக், இன்ஷூரன்ஸ் சான்றிதழ், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் உங்ககிட்ட இருக்கணும்.
•  ஒரிஜினல் ஆவணங்கள் தேவையில்லை.
•  வேற்று மாநில வண்டியாக இருந்தால் சாலை வரி சான்றிதழ் அவசியம்.
•  டிராஃபிக் இன்ஸ்பெக்டர் கேட்டால் மட்டுமே உங்களுடைய ஆவணங்களைக் காண்பியுங்கள். டிராபிக் கான்ஸ்டபிளாக இருந்தால் தேவையில்லை.

சென்னையில் நடந்த நிலாச்சாரலின் படைப்பாளிகள் மற்றும் தன்னார்வலர்களோட மினி சந்திப்பு என்னிக்குமே மறக்கமுடியாத இனிய சந்திப்பா இருந்தது. இது வரை ஈ-மெயில் மூலமாக மட்டுமே தெரிந்த பலரை நேரில் சந்திக்கப் போறோம்ங்கிற நினைப்பே த்ரில்லிங்கா இருந்தது. படைப்பாளர்கள் மட்டுமில்லாம அவங்க குடும்பத்தினரையும் சந்திச்சதுல எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். சொர்ணாக்காவோட வெரி ஸாரி… ஸ்வர்ணாவோட அரட்டை படிச்சதுல இருந்து ஜம்புநாதன் ஸார் மற்றும் அவருடைய சகோதரர்கள் மேல தனி மரியாதை ஏற்பட்டிருந்தது. அண்ணன், தம்பி எல்லோரும் அன்னியோன்யமா இருக்கிறதைப் பார்த்து பிரமிப்பா இருந்தது. அவங்க எல்லோரும் என்கிட்ட காட்டின அன்பை என்னால மறக்கவே முடியாதுங்க.
வெங்கட் ரமணி ஸார்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, “உங்களுடைய ஆதிவாசிகள் பாஷை படிச்சுட்டு எனக்கு என்னுடைய சின்ன வயசுல நடந்தது ஞாபகம் வந்தது. அப்போல்லாம் குன்னக்குடி வைத்தியநாதன் கச்சேரின்னா அண்ணா, தம்பிகள் நாங்க எல்லோரும் சேர்ந்து ‘அய்யா ஜாலி, இன்னைக்கு குன்னக்குடி வைத்தியநாதன் கச்சேரின்னு’ சொல்லி சந்தோஷப்படுவோம்”னு சொன்னாரு. எவ்வளவு வயதானாலும் பசுமையான நினைவுகள் நம்ம மனசுல நீங்காம இருக்கற மாதிரி ஒவ்வொருத்தருக்குள்ளே இருக்கிற குழந்தைத்தனமும் மறையறதில்லை. என்னங்க நான் சொல்றது உண்மைதானே? ஒரு புது விதமான அனுபவமாக இருந்த இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பாஸம்மாவுக்கு நீலாம்பரி ஸ்டைல்ல ஒரு படையப்பா சல்யூட் போடலாமா?

சின்னச் சின்ன விஷயங்களையும் ரசிச்சு வாழணும்ங்கறது என்னுடைய அபிப்பிராயம். இயந்திரமயமான இந்த நகர வாழ்க்கையிலும் ரசிக்கக் கூடிய விஷயங்கள் நிறைய இருக்கு. இயற்கையை மட்டும் விட்டு வைப்பேனா என்ன? இப்போ நான் உங்ககிட்ட சொல்லப்போறது வானத்தில் உலா வரும் நிலாவைப் பற்றி. நவம்பர் மாதம் கடைசி வாரத்துல ஒரு நாள், பிறை நிலா பக்கத்துல இரண்டு நட்சத்திரங்கள் இருந்த அமைப்பைப் பார்த்தா கடிகாரத்துல மணி 3 மணி 55 நிமிடங்கள் காட்டுவது போல இருந்தது. (காலையா.. மாலையான்னு கேட்டு வம்பு பண்ணாதீங்க) இவ்வளவு அழகா இருக்கேன்னு ஆச்சர்யப்பட்ட எனக்கு அடுத்த வாரம் இன்னொரு அதிசயம் காத்துட்டிருந்தது. நாம எல்லோரும் ஈ-மெயில், சாட்டிங்கில் உபயோகிக்கும் ஸ்மைலி போன்ற அமைப்பு வானத்துலப் பார்த்தேன். என்னங்க நம்ப முடியலியா… இந்த மாதிரி நீங்க சொல்லுவீங்கன்னு தெரிஞ்சு தான் போட்டோ எடுத்து வைச்சிருக்கேன். அதைப் பார்த்தா ஒத்துக்குவீங்கதானே?

 

இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க !!!

சமீபத்துல என் தோழி கவிதா வீட்டுல கிரஹப்பிரவேசம் நடந்தது. போகாம இருந்தா கவிதாவின் கோபத்துக்கு ஆளாகிடுவோம்ங்கற பயத்துல போயிருந்தேன். அப்போ அங்க ஹோமம் பண்ணின சாஸ்திரிகள் அங்க இருக்கறவங்க கேட்ட சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இருந்தாரு. விஷேச நாட்கள்ல வாசல்ல ஏன் மாவிலை கட்றாங்கன்னு எனக்கு இருந்த சந்தேகத்தைக் கேட்டேன். மாவிலைகளிருந்து வெளிவரும் பால் சிறந்த கிருமி நாசினியா செயல்படுதாம். மங்களகரமாக மட்டுமில்லாம நோய்களையும் எதிர்க்கிறதாலேயும் மாவிலைகளை தோரணங்களாக உபயோகப்படுத்துறோம்னு அவர் சொன்ன விளக்கம் புதுசா இருந்தது. இந்த மாதிரி விஷயங்கள் உங்களுக்குத் தெரிஞ்சா என்னோட பகிர்ந்துக்குங்களேன்.

கணக்கு ரொம்ப பிடிச்ச பாடம்கிறதாலேயோ என்னவோ தெரியலை.. எண்கள் மேல எனக்குத் தனி பிரியம் உண்டு. அதுவும் ரைமிங்கான எண்கள்னா கேட்கவா வேணும்… பல வருஷங்களுக்கு முன்னாடி நடந்த ஒரு நிகழ்ச்சி இது. முதன்முதலா நான் சென்னைக்கு என்னுடைய மாமா வீட்டுக்குப் போயிருந்தேன். லீவு நாளுங்கிறதால மகாபலிபுரம் போகலாமேனு குடும்பத்தினர் எல்லோரும் கால் டாக்ஸிலயும் நான் மாமாவுடன் பைக்ல வர்றதுன்னும் முடிவாச்சு. சுறுசுறுப்பா எல்லோருக்கும் முன்னாடியே நான் ரெடியாகிட்டேன். பொழுது போகாம வாசலில் நின்னுட்டு இருந்தப்போ கார் மேல இருந்த கார் கம்பெனியின் நம்பரை விளையாட்டா மனப்பாடம் பண்ணினேன். அதேபோல் காருடைய எண்ணையும் விதவிதமா கூட்டல், கழித்தல் எல்லாம் செய்து விளையாடிட்டு இருந்தேன்.

கார் கிளம்பியதும் பின்னாடி நாங்க பைக்ல பின் தொடர்ந்தோம். கொஞ்ச தூரம் போனவுடனே என்னவென்று தெரியாத காரணத்தால் பைக் நின்னுபோச்சு. ரொம்ப நேரம் முயன்றும் வண்டி ஸ்டார்ட் செய்ய முடியலை. மாமா என்னை கீழே இறங்கச் சொல்லி வண்டியை ஆராய்ஞ்சார். கொஞ்ச நேரத்துல வண்டியும் ஸ்டார்ட் ஆச்சு. நான் கீழே இறங்கினதை மறந்து போய் என்னை விட்டுட்டு மாமா கிளம்பிட்டாரு. எனக்கு அந்த புது ஊர்ல என்ன செய்யறதுன்னு தெரியலை, அப்புறம்தான் கார் கம்பெனியின் ஃபோன் நம்பரும், கார் எண்ணும் நினைவுக்கு வந்துச்சு. பக்கத்துல இருந்த டெலிபோன் பூத்துக்கு போய் என்னுடைய நிலைமையை சொன்னேன். அவங்களும் மனிதாபிமானத்தோட ஃபோன் செய்துக்க அனுமதிச்சாங்க. கார் கம்பெனிக்கு ஃபோன் செய்து இந்த கார்ல போறவங்களுக்கு வயர்லெஸ் மூலமா விவரம் தெரிவிக்கச் சொன்னேன். அவங்களும் எங்க குடும்பத்தினருக்கு விவரம் சொல்லி நான் இருந்த இடத்துக்கு வரவழைச்சாங்க. என்னோட புத்திசாலித்தனத்தைப் பாராட்டின அதே நேரத்தில எங்க மாமாவை எல்லோரும் பயங்கரமா கிண்டல் செய்தாங்க. இப்பவும் மாமாவும், அத்தையும் சேர்ந்து வெளியில போகும்போது நீங்க கூட வர்றதை மாமாவுக்கு அடிக்கடி நினைவு படுத்துங்கன்னு அத்தைகிட்ட சொல்லி கலாட்டா செய்யறதுண்டு. எங்கள் குடும்பம் கலாட்டா குடும்பம்.

கல்யாணங்களுக்கு வரும் பெண்களுக்கு ரவிக்கைத் துணிகள் கொடுப்பது வழக்கம். பல சமயங்களில் நல்ல தரமான துணிகளா இருந்தும் உபயோகிக்க முடியாமல் போகுதேன்னு வருத்தப்படறீங்களா? கவலையை விடுங்க. 2 (அ) 3 பிளவுஸ் பிட்ஸ்களை சேர்த்து குழந்தைகளுக்கு ஃபிராக் தைக்கலாம். குழந்தைகளும் புது டிரஸ் பார்த்து ரொம்ப குஷியாகிடுவாங்க. என்ன சொல்றீங்க?

சில நாட்களுக்கு முன்பு, விஜய் டி.வி.யில ‘காபி வித் அனு’ நிகழ்ச்சியில், சோவும் மௌலியும் சந்திச்சு உரையாடினதைப் பார்த்தேன். யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி விமர்சிக்கும் தன்மை, இயல்பான நகைச்சுவை உணர்வு, அரசியலில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு இப்படி சோவின் பல பரிணாமங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். சின்ன வயசில அவருடைய ‘துக்ளக்’ படத்தை ஆடியோ கேஸட் வடிவிலே கேட்டு ரசிச்சது நினைவுக்கு வந்தது. மறுபடியும் கேக்கலாம்னு அங்கே இங்கே தேடி, வீட்டைக் கலைச்சுப் போட்டதுதான் மிச்சம். எங்கேயும் கிடைக்கலை. கடைசியிலே நிலாஷாப்ல சோவின் 5 படங்களை டிவிடி வடிவுல பார்த்ததும் ஜாக்பாட் அடிச்ச சந்தோஷம் எனக்கு. சோ ரசிகர்கள் யாராவது இருக்கீங்களா? உங்களுக்கும் வேணுமா? 

http://www.nilashop.com/product_info.php?products_id=563

சரிங்க எக்கசெக்கமா அரட்டை அடிச்சாச்சு. புதுசா ரிலீஸாயிருக்கும் கார்டூன் திரைப்படம் ‘மடகாஸ்கர்’ பார்க்கப் போறேன். திருட்டு விசிடி எல்லாம் இல்லாம நல்ல பெண்ணா தியேட்டர்ல போய் பார்க்க போறேனாக்கும். இப்படியே கார்டூன் படமா பார்த்துட்டு இருந்தா கூடிய சீக்கிரம் உனக்கு ஸ்கூல்ல அட்மிஷனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்னு எடிட்டரம்மா சொல்றாங்க. பார்க்கறதுதான் பார்க்கறீங்க.. L.K.G, U.K.G. அந்த மாதிரி ஸ்கூலா பாருங்கன்னு சொல்லியிருக்கேன். குழந்தைகளோட சேர்ந்து குழந்தைங்களாவே வாழறதும் இன்னும் நல்லாயிருக்குமே. எப்படி என்னோட ஐடியா?

நாம்ப மறுபடியும் பார்த்தாலும் சரி, பார்க்கலைன்னாலும் சரி, பேசினாலும் சரி பேசலைனாலும் சரி, “நல்லாயிருப்போம், நல்லாயிருப்போம் எல்லோரும் நல்லாயிருப்போம்.”

*****

(ஒரு விபத்தில் சிக்கி காயத்ரியின் தாய் வசந்தி சுப்ரமணியன் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்காக பிரார்த்தனை செய்யும்படி நிலாக்குடும்பம் வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
– நிலா, ஆசிரியர்)

About The Author

8 Comments

  1. Hema Manoj

    Dear Gayathri,

    God is with us. Mother will get well soon. Do not worry.

    You have shared many different things this time. Moon photos and explanation are cute and creative. Everyone should enjoy. keep your sharing spirit shine always.
    Warm wishes
    Hema Manoj.

  2. maleek

    உங்கள் அம்மா குணமடையவும்,ஆரோக்கியத்துடன் நலமே வீடு திரும்பவும் பிரார்த்திக்கிறேன்.நீங்கள் செய்யும் பிரார்த்தனைகளில் மற்றவருக்காக
    செய்யும் பிரார்த்தனையே சிறந்தது.”-முகம்மது நபி.”

  3. Prabu

    dear gayathri.. however good or bad a situation is, it will change. Hope u know this. So your mother ll get well soon. This part of ur effort is nice…carry on..best wishes…
    -regards.
    prabu

  4. Dr. S. Subramanian

    கிரஹப்பிரவேசம் இல்லை. அது க்ருகப்பிரவேசம். க்ருகம் என்றால் வீடு என்று அர்த்தம். க்ரகம் என்றால் கோள் (அதாவது ப்ளானெட் என்று சொல்வார்களே அது தான்.)
    I could not get the Thamizh letter ha” here. Read “ka” as “ha”

  5. Dr. S. Subramanian

    >>மங்களகரமாக மட்டுமில்லாம நோய்களையும் எதிர்க்கிறதாலேயும் மாவிலைகளை தோரணங்களாக உபயோகப்படுத்துறோம்னு அவர் சொன்ன விளக்கம் புதுசா இருந்தது. இந்த மாதிரி விஷயங்கள் உங்களுக்குத் தெரிஞ்சா என்னோட பகிர்ந்துக்குங்களேன்.

  6. lakshmi

    G3,
    My prayers for your mother to get well soon.
    Another reason for tying mango leaves and banana shrubs is that when there is a large gathering (functions), more carbondioxide that we release is absorbed by the plants.

  7. C.PREMALATHA

    தாய் சந்தோஷியின் ஆசியில், உங்கள் அம்மா நலமடைய வேண்டுகிறோம்.

Comments are closed.