ஹாய்! ஹாய்!! ஹாய்!!!
எல்லோரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கறதால நிறைய பேர் என்னை மறந்திருக்க வாய்ப்பிருக்கு. நான்தாங்க ஜி3. சொஞ்சமா அரட்டையடிப்பேனே. இப்போ உங்களுக்கு ஞாபகம் வந்திருக்குமே!
தொலைக்காட்சியில் புது வருட நிகழ்ச்சிகளில எந்த மாதிரியும் இல்லாம புது மாதிரியா ஏதாவது சிக்குமான்னு தேடினப்போ ஜெயா டிவியின் ‘டாப் 15 பாடல்கள்’ நிகழ்ச்சி கிடைச்சது. இதுல என்னனு கேக்கறீங்களா? விஷயம் இல்லாம சொல்வேனா. பாடல்கள் இடம் பெற்ற படம், பாடியவர்களின் விவரங்களோட பாடல் அமைந்துள்ள இராகம் பற்றியும், சிறப்பாக படம் பிடிக்க உதவிய ஒளிப்பதிவாளர்கள், திரைமறைவிலிருந்து உதவியவர்களைப் பற்றியும் விவரங்கள் சொன்னதோட அவர்களின் பேட்டியும் வந்தது. இது கண்டிப்பா புது மாதிரி தானே!
அதே போல் விகடன் பதிப்பகம் வழங்கிய ‘விகடன் விருதுகள் 2008’ம் வித்தியாசமா இருந்தது. வழக்கமாக வரும் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனரின் பட்டியலோடு, சிறந்த:
* ஒப்பனை
* டீவி – ஆண், பெண் தொகுப்பாளர்
* விளம்பரம்
* ரேடியோ – ஆண், பெண் தொகுப்பாளர்
விருதுகளும் இருந்தது. விருதுகள் பட்டியலின் நீளம் ஹனுமார் வாலோட போட்டி போட்டுச்சுனா பார்த்துக்கோங்க. ஆனால் இப்படி சின்ன சின்ன விஷயங்களையும் கவனிச்சு பாராட்றதும் நல்லாதான் இருக்கு…. இதெல்லாம் உங்ககிட்ட ஏன் சொல்றேன் தெரியுமோ… பாஸம்மாகிட்ட சிபாரிசு செய்து நமக்கும் விருது கிடைக்க ஏற்பாடு செய்வீங்கன்னு ஒரு நப்பாசைதான்.
டிசம்பர் மாதம் சென்னை, கேளம்பாக்கத்தில் இருக்கும் சிவசங்கர் பாபாவின் ‘சம்ரக்ஷ்ணா’விற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இயந்திரத்தனமான நகர வாழ்க்கைக்குப் பழகிட்ட எனக்கு அங்கே கிடைத்த அமைதி புது விதமான அனுபவமாக மட்டுமில்லாம மனதுக்கு இதமாகவும் இருந்தது. அங்கே நான் சந்திச்ச எல்லோரும் ரொம்ப அன்போடவும், கனிவோடவும் பழகினாங்க. தொலைபேசி மூலமாக மட்டுமே பரிச்சயமான நம்ம சங்கீதாவை நேரில் சந்திச்சதுல என்னுடைய மகிழ்ச்சி இரட்டிப்பாச்சு. அன்னிக்கு சனிக்கிழமையானதால் counseling hallல் பாபாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அங்கே இருந்தது என்னவோ கொஞ்ச நேரம்தான். ஆனால் இதுவரை எப்பவும், எங்கேயும், எதுக்கும் கிடைக்காத மனநிறைவு அன்னிக்கு அங்கே கிடைச்சது. பேச எனக்கு வார்த்தைகளே இல்லாது போனதால கண்களிலிருந்து கண்ணீர்தான் வந்தது.
மறுநாள் காலை ‘சம்ரக்ஷ்ணா’வை சுற்றிப் பார்க்க கிளம்பினேன். அங்கே பல ஆச்சர்யங்கள் எனக்காக காத்திட்டுருந்தது. உள்ளே போகும் வழியெல்லாம் ராமாயணத்தின் நிகழ்வுகள் உரையாடல்களுடன் படமாக வரையப்பட்டிருந்தன. கதை மட்டுமில்லாம செம்பருத்தி பூ, கண், மூளை, பீரியாடிக் டேபிள் (Periodic table), சூரிய மண்டலம் போன்ற அறிவியல் வரைபடங்களும் இருந்தன. ஆச்சர்யத்தோட நான் பார்த்த அடுத்த விஷயங்கள் – நவராத்திரி கொலுவில் மட்டுமே பார்த்து பழகிய மரப்பாச்சி பொம்மைகள், இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு இந்த இராசி என்ற விவரங்களுடன் வடிக்கப்பட்டிருந்த கற்கள்னு இப்படி அடுக்கிட்டே போகலாம். சம்ரக்ஷ்ணாவின் இயற்கை சூழல், அங்கிருக்கும் மக்கள் இததற்கெல்லாம் மேலாக பாபா வாழும் இடம் என்பதற்காகவே அங்கே சென்று வாழும் நாளை ரொம்பவும் ஆவலோட எதிர்பார்த்து காத்திருக்கேன்.
![]() |
![]() |
![]() |
![]() |
கோல்டன் க்ளோப் விருது, இங்கிலாந்தின் பாஃடா விருது, ஆஸ்கார் பரிந்துரை – இப்படி விருதுகளும், பாராட்டுக்களும் ஒரு பக்கம் குவிந்த வண்ணமிருந்தாலும், தன்னடக்கத்துடன் இருப்பது எப்படீங்கிறதை நம்ம ஏ.ஆர்.ரஹ்மான்கிட்டதாங்க கத்துக்கனும். "ஒவ்வொரு படத்திற்கும் எப்படி அற்புதமா இசையமைக்க முடியுது"ங்கிற கேள்விக்கு, "முதல் படத்திற்கு இசையமைக்கும் போது எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சேன். அதே போல் ஒவ்வொரு படத்திற்கு இசையமைக்கும் போதும் நினைக்கிறேன்," அப்படின்னார். ரொம்ப இம்ப்ரஸ் ஆகி நிலாஷாப் போய் ஏ.ஆர்.ரஹ்மானுடைய பாடல் தொகுப்பை வாங்கினேன்:
http://www.nilashop.com/product_info.php?products_id=774
கவிதைகள்ன்னு எடுத்துக்கிட்டா எத்தனையோ விதம் இருக்கு. மா.மதயானையின் நகைப்பாக்களாகட்டும், ரூசோவின் காதல் கவிதைகளாகட்டும் ரொம்ப எளிமையாவும், மனதை கவரும் வகையிலும் இருக்கு. எனக்கு கவிதைகள்னா ரொம்ப இஷ்டம். இணையத்தில் அங்கே இங்கே தேடித்தேடி படிப்பேன்னா பார்த்துக்குங்களேன். பாடத்தை என்னிக்காவது இப்படி படிச்சிருக்கியான்னு எங்க அம்மா கேக்கறாங்க. பதில் தெரிஞ்சுகிட்டே யாராவது கேள்வி கேப்பாங்களா? சரி நம்ப விஷயத்துக்கு வருவோம். நிறைய தடவை ஹைக்கூ கவிதைகள் படிச்சு அர்த்தம் புரியாமல் முழிச்சதுண்டு. சரி நமக்கு அந்தளவுக்கு ஞானமில்லேன்னு என்னை நானே சமாதானப் படுத்திக்குவேன். ஆனால் போன மாதம் ஷங்கர் நாரயணன் சார் தன்னுடைய ஹைக்கூ கவிதைத் தொகுப்பான ‘கடவுளின் காலடிச் சுவடுகள்’ அனுப்பியிருந்தார். அதில் அவருடைய முன்னுரை படிச்சேன். ஹைக்கூ சம்பந்தமா எனக்கு இருந்த சந்தேகங்கள் எல்லாம் தெளிவாச்சு. அவர் என்ன சொல்றார் பாருங்க:
"ஹைக்கூவில் ஒரு விஷயம் – எல்லா ஹைக்கூக்களும் அனுபவ பாவனை சுமந்தவை. வாசித்த உடனே அவை உள்ளே சாறு இறக்கி விடும் என்று எதிர்பார்ப்பது முறையல்ல. அது அறிவின் திமிர்! பிறன் அனுபவம் தன்னனுபவமாக உணரக் கூடாமல் போகலாம். காலம் சட்டென கதவைத் திறந்து திடீரென்று புதிய தரிசனங்களைக் காட்டக் கூடும். அப்போது தானே இந்த ஹைக்கூ கவிதைகள் உள்ளே அலையெழும்பும்."
பொதுவாக ஒரு இடத்துக்குப் போனா அந்த இடத்தைப் பற்றி முழு விவரமும் தெரிஞ்சுக்கணும்னு நினைப்பேன். (சென்னை) பாடியில் உள்ள திருவலிதாயம் கோவிலில், குரு பகவானின் பாவங்கள் நீக்குவதற்காக சிவ பெருமான் திருவலீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பாடின்னு அந்த இடத்துக்கு பெயர் வர காரணம் என்ன தெரியுமா? பாண்டியர்கள் வேற்று நாட்டவர்களின் மீது படையெடுத்துப் போகும் போது இடையே இங்கு தங்கியிருந்தாங்களாம். அதனால் ‘படை வீடு’ன்னு பெயர் வந்தது. படை வீடுகளில் எழுப்பப்படும் அம்மனை படைவீட்டம்மன்னு சொல்றது வழக்கமாம். நாளடைவில் மறுவி ‘படை வீடு’ ‘பாடி’யாகவும், ‘படை வீட்டம்மன்’ ‘படையம்மன்’னும் ஆகியதாம்.
அதேமாதிரி ராமனைப் பிரிந்து சீதை காட்டில் வால்மீகி ஆஸ்ரமத்தில் வாழ்ந்த இடம்தான் இன்றைய கோயம்பேடு. காட்டில் உள்ள கொடிய மிருகங்களின் தாக்குதலில் இருந்து தப்பித்திட ஆஸ்ரமத்தைச் சுற்றி இரும்பாலான வேலி அமைத்திருந்தார்களாம். கோயம்பேடு என்றால் இரும்பாலான வேலி என்று அர்த்தமாம். கோயம்பேட்டுக்கும் அதன் அருகில் இருக்கும் அமிஞ்சிக்கரைக்கும் ஒரு சம்பந்தமுண்டு. அது என்ன தெரியுமா? ராமரின் அஸ்வமேத யாகத்தின் குதிரையை வால்மீகி ஆஸ்ரமத்தில் இருந்த லவா, குசா இருவரும் பிடித்து வைத்தனர். இன்றைய கூவம் அன்றைய பாலாற்றின் கரையில் அமர்ந்து மறுகரையில் இருந்த வால்மீகி ஆஸ்ரமத்தைப் பார்த்தாராம். ராமர் ‘அமர்ந்த கரை’ நாளடைவில் அமிஞ்சிக்கரையானது. என்னப்பா உங்களுக்கும் இந்த மாதிரி தகவல்கள் தெரியும்தானே? எனக்கு சொன்னா நானும் தெரிஞ்சுக்கறேன். பின்னூட்டத்துல எப்போ எழுதுவீங்கன்னு பார்த்துட்டிருப்பேன்.
கவிதா, வந்த உடனே உங்க வேலையைக் காட்டீட்டீங்களே? சும்மா கிண்டலுக்காக நாங்க சொர்ணாக்கான்னு பேரை மாத்தினோம். அதுக்காக நீங்க அவங்களை தாதாவாக்கீட்டீங்களே. சும்மாவே அவங்களை கையிலே பிடிக்க முடியாது, இப்போ கேட்கவே ண்டாம்… இதெல்லாம் போதாதுன்னு உடன் பிறவா சகோதரி அது இதுன்னு சொல்லி என்னையும் வம்புக்கு இழுக்கறிங்க. நிஜமா இந்த ஆட்டத்துக்கு நான் வரலை. நான் மட்டும் ஏதோ அப்போ அப்போ கொஞ்சம் உள்நாட்டு கலகம் செய்துட்டு இருந்தேன். அதுக்கும் போட்டியா? உங்களுக்கே இது நியாயமா இருக்கா?
அரட்டை சுவாரஸ்யத்தில அம்மாவுக்கு உடம்பு எப்படி இருக்குன்னு உங்ககிட்டே சொல்ல மறந்துட்டேன், பாருங்க. கடவுளின் அருள், உங்க எல்லோருடைய பிரார்த்தனைகளுக்கும் பலனா அபாய கட்டத்தைத் தாண்டிட்டாங்க. இன்னும் சில மாதங்களில் முழுமையா குணமடைஞ்சிருவாங்கன்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. அம்மாவுக்குத்தான் பொறுக்கலை, நிலாச்சாரலுக்கு கதைகள் டைப் செய்யற வேலையை திரும்ப ஆரம்பிக்கறேன்னு ஒத்தக் கால்ல நிக்கறாங்க. நல்லதை நினைப்போம்… நல்லதே நடக்கும். உங்க எல்லோருடைய அன்புக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
சித்ரா, எம்பிராய்ட்ரி சம்பந்தமான கேள்வியை அம்மா காதுல போட்டுட்டேன். நலமானதும் சொல்லித் தாறாங்களாம். சரிங்க, கடமை அழைக்கிறது. வருஷத்துல கொஞ்ச நாள்கூட வேலை செய்யலேன்னா வீட்டுக்கு அனுப்பிடுவேன்னு ஆபீஸ்ல ஓவரா ஸீன் காமிக்கிறாங்க. சரி சரி ரொம்ப கெஞ்சி கேக்றாங்களேன்னு நானும் போய் கொஞ்சம் ஸீன் போடறேன்.
நாம்ப மறுபடியும் பார்த்தாலும் சரி, பார்க்கலைன்னாலும் சரி, பேசினாலும் சரி பேசலைனாலும் சரி, "நல்லாயிருப்போம், நல்லாயிருப்போம் எல்லோரும் நல்லாயிருப்போம்."”
Dear Gayathri,
Thank you so much for sharing your experience about Samratchana. Historical news about many places of chennai are very interesting. Please write more about this. Prayers for your mother.
Cheers
Hema Manoj.
அரட்டையுடன் விவரங்களும் சொன்னதற்கு பாராட்டுக்கள்!
அந்தக்கவிதைத்தொகுப்பிலிருந்து சில கவிதைகளை வெளியிட்டு இருக்கலாம்.
மயிலையில் உள்ள முண்டக கண்ணி அம்மன் கோவிலை முண்டகண்ணி அம்மன் என்று தவறாக பலர் சொல்கின்ட்ர்னர் – முண்டகம் என்றால் தாமரை, தாமரை போன்ட்ர கண்ணுடையவள்.
கயத்திரிக்கு மிகுந்த பாரட்டுக்கள் தொரியத பல விஜயங்களை தொரியபடுத்தியதற்க்கு. இது எல்லாம் எப்படிம்மா தான வருது இல்லை
சரி வேலை முடித்து விட்டு சிக்கிரம் வருங்கள் அடுத்த தகவலுக்கு காத்துக் கொண்டு இருப்போம் இல்ல
ஒ.கே. காயத்ரி, நன்றி. எல்லோரும் நல்லா இருப்போம்.
>>அதேமாதிரி ராமனைப் பிரிந்து சீதை காட்டில் வால்மீகி ஆஸ்ரமத்தில் வாழ்ந்த இடம்தான் இன்றைய கோயம்பேடு.