ஹலோ ஃபிரெண்ட்ஸ்,
எல்லோரும் சுகமாயிருக்கீங்கதானே? நான் இங்கே எப்பவும் போல ரொம்பவே நல்லா இருக்கேன்.
போன வாரம் சூரியகலாவும், ராதாவும் வெற்றிகரமா பெங்களூரில் இருக்கும் ‘Enable India’வின் பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பிச்சுட்டாங்க. ‘எதிர்பாராததை எதிர்பார்’ என்பது போல, கடைசி நேரத்துல சூரியாவிற்காக ஏற்பாடு செய்திருந்த மகளிர் விடுதியில ஒரு சின்னக் குழப்பம். வேற ஒரு விடுதி தேட வேண்டிய நிலை. ‘Enable India’வின் CCCT பயிற்சியின் நிர்வாகி சுரேஷ் அவர்களின் உதவியோட ஒரு சின்ன தேடலுக்கு அப்புறம் மற்றொரு மகளிர் விடுதியில இடம் கிடைச்சுது. அவருடைய உதவியும் வழிகாட்டுதலுமில்லாம என்னால் எதுவுமே செய்திருக்க முடியாது. சூரியா மற்றும் ராதா அவர்களுக்கான பயிற்சி சார்ந்த தொலைபேசி மூலமான நேர்காணலாக இருந்தாலும் சரி.. அவங்களுக்குத் தேவையான விடுதிகள் பற்றின விவரங்கள் சேகரிப்பது, அந்த விடுதிகள் நல்ல முறையில் இயங்குகிறதா என்று சரி பார்ப்பது இப்படி நிறைய விஷயங்களை சலிக்காது செய்தவர் திரு. சுரேஷ் அவர்கள். பொதுவாக ஒரு வேலையை நான் செய்ய ஆரம்பித்தால் அதை சரியாக செய்து முடிக்கும் வரை விடாது முயற்சி செய்வேன். அதே எண்ண அலைவரிசையில் அவர்களுமிருந்ததால் (Enable India), எல்லாம் நல்ல படியாக முடிந்தது. நிலா தன்னுடைய ‘மடை திறந்து’ல சொல்லியிருந்தது போல ரொம்பவே மனநிறைவோட இருக்கேன்.
சூரியாவின் பயிற்சி சம்பந்தமான தேடுதல் வேட்டையின்போது ஆரம்பத்துல எங்களுக்கு புது தில்லியின் ‘ஷர்தக் கல்வி அறக்கட்டளை’யின் பயிற்சி பற்றிய விவரங்கள் மட்டுமே தெரிய வந்தது. அந்தப் பயிற்சிக்கான நேர்முகத் தேர்வை அலைபேசியின் மூலமாக நடத்தினாங்க. அந்த தேர்வில் சூர்யாவும் தேர்ச்சியடைஞ்சாங்க. ஆனால் அங்கே மகளிர்க்கான தங்கும் விடுதிகள் பத்தின சரியான விவரங்கள் கிடைக்காததால சூரியாவால அந்தப் பயிற்சியில் சேர முடியாம ரொம்ப வருத்தபட்டாங்க. நான் எவ்வளவோ சொல்லியும் சூரியா சமாதானமாகாததால நான் அவங்களுக்கு ஒரு கதை சொன்னேன்.
"நம்மைப் போலவே பலவிதமான பிரச்சனைகளை வாழ்க்கையில் சந்தித்து தோல்வியடைந்த ஒரு மனிதர், ‘இனிமேல் என்னால வாழ்க்கையில போராட முடியாது. இவ்வளவு வருஷங்கள்ல எனக்குக் கிடைச்சதெல்லாம் தோல்விதான். இனியும் எதுக்கு நான் முயற்சி செய்யணும்?’னு நினைச்சாராம். இப்படி யோசனை செய்திட்டே அவருடைய வீட்டிலிருக்கும் பூங்காவிற்கு வந்து சேர்ந்தார். அப்போது அங்கே வந்த கடவுள், ‘இது மாதிரி எல்லாம் யோசிக்கக் கூடாது’ன்னு சொன்னாராம். இதைக் கேட்ட அந்த மனிதர், ‘நான் ஏன் முயற்சி செய்யனும்? நியாயமான ஒரு காரணம் சொல்லுங்க. அப்போ நீங்க சொல்றது போலவே கேட்கறேன்’னு சொன்னார்.
அந்த மனிதரின் வீட்டிலிருக்கும் பூங்காவிற்கு அவரை அழைத்துச் சென்ற கடவுள், தோட்டத்தின் ஓரத்திலிருந்த ஒரு சாதாரண மரத்தையும், மூங்கில் மரத்தை காட்டினாராம். ‘சாதாரண மரத்துக்கான விதையையும், மூங்கில் மரத்துக்கான விதையையும் ஒரே நாளில் நான் விதைத்தேன். இரண்டையுமே நான் ஒரே விதமாக பராமரித்தேன். சாதாரண மரத்தின் விதை சில நாட்களிலேயே முளைத்தது. ஆனால் மூங்கிலின் விதையிலோ எந்தவித மாற்றமுமில்லை. ஆனாலும் என்னுடைய பராமரிப்பு தொடர்ந்தது. சில நாட்கள் சில மாதங்களானது. சாதாரண மரத்தின் விதையின் முளை நன்றாக வேர்விட்டு செடியாக வளர்ந்திருந்தது. மூங்கில் விதையில் எந்தவிதமான முன்னேற்றமுமில்லை. பொதுவாக மூங்கில் மரம் மற்ற மரங்களைக் காட்டிலும் வேகமாக வளரக்கூடியது. ஆனால் இந்த மூங்கில் மரத்திற்கான விதையில் மாற்றமில்லை. இருந்தும் என்னுடைய பராமரிப்பில் எந்தவித மாற்றமுமில்லாமல் தொடர்ந்தேன். மாதங்கள் வருடங்களானது. முதல் வருடம்… இரண்டாம் வருடம்… மூன்றாவது வருடம்… நான்காவது வருடம்… ஐந்தாவது வருடம்… மற்றொரு மரம் நன்றாக வளந்துவிட்ட இந்த நேரத்தில், மூங்கில் விதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. ஆறே மாதத்தில் மூங்கில் மரம் அதன் அருகிலிருக்கும் மரத்திற்கு இணையாக நன்றாக வளர்ந்துவிட்டது. மற்ற மூங்கில் மரங்களைக் காட்டிலும் உறுதியான வேர்களுடன் கூடிய மரமாக வளர்ந்திட அதற்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டது. இதுவரை என்னுடைய படைப்புகளுக்கு அதனால்/அவர்களால் எதிர்கொள்ள முடியாத சோதனைகளை நான் கொடுத்ததில்லை. அது போலவே உன் வாழ்வில் நீ எதிர்கொள்ளும் சவால்கள் உன்னுடைய திறமைகளை வெளி கொண்டுவருவதற்காக என்பதை புரிந்து கொள்ளவேண்டும். எனக்கு அந்த மூங்கில் விதையின் மேல் நம்பிக்கையிருந்தது. என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அருமையான மூங்கில் மரம் உருவானது. உன்னிடமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உன்னுடைய நேரம் வரும்போது மற்றவர்களைக் காட்டிலும் நீ நன்றாக வளர்வாய். நான் உன்னை நம்பும் போது, நீயும் உன்னை நம்பலாமே?’ன்னு கேட்டாராம் கடவுள். கதையில் சொன்னதுபோல உனக்கான நேரம் வரும், உனக்கான வாய்ப்பு வரும்"னு அவங்ககிட்டே சொன்னேன். அதே மாதிரி அதற்கான நேரமும், வாய்ப்பும் வந்தன!
இது சூரியாவுக்கு மட்டுமில்லேங்க நம்ம எல்லோருக்கும் பொருந்தும். (என்னையும் சேர்த்துதான் சொல்றேன்!)
போன வாரம் வெளியான திரு. வெங்கடேசன் அவர்களோட அலைபேசி உரையாடலை கேட்டிருப்பீங்க. வேறொரு சமயத்தில் அவருடன் பேசும்போது, அவருடைய வாழ்வினில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி சொல்லியிருந்தார். சென்னையில் உள்ள பார்வைற்றோருக்கான பள்ளியில் சேர்ந்து +1 மற்றும் +2 படிப்பதற்கான முயற்சி நடந்தபோது அவருடைய உறவினர் ஒருவர் ‘பார்வை நல்லாயிருப்பவர்களாலேயே சரியா படிக்க முடியறதில்லை. அப்படியிருக்கும்போது இவரால எப்படி முடியும்? அதுவும் இவ்வளவு தூரம் செலவு செய்வது வீண்விரயம்’ன்னு சொல்லியிருக்காங்க. அதே மாதிரி அவர் ‘கிருஷ்ணமூர்த்தி அண்ட் கோ’வில் தொலைபேசி இயக்குபவராக வேலையில் சேர்ந்த போது மீண்டும் அதே உறவினர் ‘பரிதாபப்பட்டு வேலை கொடுத்திருக்காங்க. அதனால சம்பளமெல்லாம் எதிர்பார்க்காதீங்க’ன்னு சொல்லியிருக்காங்க. என்னதான் அவருடைய உறவினர் தைரியம் இழக்கும் வகையில பேசினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாத வெங்கடேசன் சார், விடாது முயன்று இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறார். அத்தோடில்லாமல் அவரைப் போன்ற பார்வையற்றவர்களுக்கான படிப்பு, பயிற்சி, தொழில்நுட்பம் சம்பந்தமான விஷயங்களில் வழிநடத்துகிறார். அவர் இந்த நிகழ்வை என்னோட பகிர்ந்துக்கிட்ட போது, எனக்கு நம்முடைய நிலாச்சாரலில் வெளிவந்த (வை.கோபாலகிருஷ்ணன் அவருடைய) ‘சிகரத்தை எட்டிய சிறிய தவளை’ படைப்புதான் ஞாபகத்திற்கு வந்தது.
https://www.nilacharal.com/ocms/log/06300808.asp
மற்றவர்களுடைய பேச்சு/வார்த்தைகள் நம்பிக்கையிழக்கும் வகையில் இருக்கும்போது அந்த காது கேட்காத தவளையா மாறிடணும் போலிருக்கு! இது மாதிரியான நிறைய படைப்புகள் நம்முடைய நிலாச்சாரலில் இருக்கு. படிச்சுப் பாருங்க.. சுவாரஸியமான விஷயங்கள் பலதும் தெரிஞ்சுக்குவீங்க.
சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடன் பத்திரிக்கையில ‘விகடன் மாணவ பத்திரிக்கையாளர் கூட்டுப்பயிற்சி முகாம் 2011’ பத்தின செய்தி படிச்சேன். வருஷா வருஷம் அவங்க இந்த முகாமை நடத்தறதும் நான் அதைப் பார்த்து ஏங்கறதும்… ஹூம்… இது மாதிரியான பத்திரிக்கையாளர்கள் பயிற்சி முகாம்களில் பங்கேற்கணும்கிறது என்னுடைய நீண்ட நாள் ஆசை. நெம்பவே தேடிப் பார்த்துட்டேன். ஆனா இது மாதிரியான பயிற்சிகள் எப்பவும் எங்கேயும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தறாங்க. இது மாதிரியான முகாம் நடத்தறவங்க என்னை மாதிரியான ஆர்வக் கோளாறுகளைப் பற்றியும் கொஞ்சமா நினைச்சுப் பார்க்கலாம். இங்கே நிலாச்சாரலில் நம்முடைய ‘சில்லுனு ஒரு அரட்டை’யாகட்டும், ஒலி வடிவ நேர்காணலாகட்டும்.. எந்த விதமான பயிற்சியில்லாம எனக்கு தெரிந்ததை வைத்து செய்திட்டிருக்கேன். ஆனால் கொஞ்சம் பயிற்சியிருந்தா இன்னும் நல்லா செய்யலாமேன்னு பலமுறை நினைக்கறதுண்டு. பயிற்சி முகாம்கள் நடத்துறவங்க யாராவது என்னுடைய இந்த விண்ணப்பத்தை ஏத்துக்குவாங்களா?
இந்த வாரம் எனக்கு கிடைச்ச படிப்பு சம்பந்தமான விவரம் பொதுத்துறை சேவை தேர்வு (Civil Service Exams) சம்பந்தமானது. கிரஸெண்ட் ஐ.ஏ.ஸ் மற்றும் தொழில்துறை கழகமும் (Crescent IAS & Career Guidance Academy), பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகமும் (B.S. Abdur Rahman University) இணைந்து 2012ஆம் ஆண்டின் பொதுத்துறை சேவையின் முன்னோட்டம் (Preliminary) மற்றும் முதன்மை (Main) தேர்வுகளுக்கான பயிற்சியை இலவசமா வழங்கவிருக்காங்க. இதில் பட்டதாரிகள் மட்டுமில்லாம பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்பின் இறுதியாண்டில் இருக்கும் மாணவர்களும் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
Crescent IAS & Career Guidance Academy
044-22751155, 9444180756
Email: iascga@bsauniv.ac.in
கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோமா? ஒருநாள் என்னவோ தெரியலை.. கொஞ்சம் அசுவாரசியமா இருந்தது. எப்பவும் எனக்கு கை கொடுக்கும் இணையத்துல ஏதாவது சுவாரஸியமான விஷயம் கிடைக்குமான்னு தேடினப்போ எதேச்சையா இந்தியாவைச் சேர்ந்த சுதர்ஷன் பட்னாயக் என்ற மணல் கலைஞரின் படைப்புகளைப் பார்த்தேன். அவருடைய எல்லா படைப்புகளும் கலைநயத்தோட இருந்தன. எந்தவித முறையான பயிற்சியில்லாம விடாது முயற்சி செய்து இவ்வளவு அழகான படைப்புகளை உருவாக்கியிருக்கார்னு தெரியவரும்போது அவரைப் பாராட்டாம இருக்க முடியலை. அவருடைய படைப்புகள்ல எனக்கு காந்தியின் இந்த மணல் சிற்பம் பிடிச்சிருந்தது. அவருடைய மற்ற படைப்புகளைப் பார்க்க உங்களுக்கு விருப்பமிருக்கா? கீழேயிருக்கும் சுட்டியில் போய்ப் பாருங்க.
சரிங்க நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரலாமா? டா டா… பை பை… ஸீயூ…
“
அன்பு யஷ்!
சுதர்ஷன் பட்நாயக்கின் மணல் சிற்பங்கள் சிலவற்றை ஏற்கெனவே பார்த்திருந்தாலும், தொகுப்பிலிருந்த சில சிற்பங்கள் மிகவும் அழகாயிருந்தன. அதிலும் படுத்திருக்கும் பெண்ணின் சிலை சூப்பர்! சுட்டியைக் கொடுத்ததற்கு நன்றி யஷ்!
🙂