சில்லுனு ஒரு அரட்டை

வாங்க! வாங்க! எல்லோரும் எப்படி இருக்கீங்க?.

ஒரு வழியா விசா கிடைச்சு, இந்தியா வந்திட்டோம். ஒரு மாசம் ஒரே கொண்டாட்டம்தான். வந்ததே வந்தோம்.. கையோட கார் டிரைவிங் லைசென்ஸ் வாங்கிட்டு வந்திடலாம்னு RTO ஆஃபிசுக்கு போனா காரோட விலையில பாதியை லஞ்சமா கேட்கிறாங்க. ரிஷி சொன்ன மாதிரி ஈ-கவர்னன்ஸ் வந்தா ஓரளவு குறையலாம். லைசன்ஸை அரிசோனாவிலேயே வாங்கிக்கலாம்னு கிளம்பி வந்தேன் சென்னைக்கு. இமெயில் பார்த்தப்போ.. அடடா! இது நம்ம சென்னையில்தானான்னு குதிச்சேன். சென்னை மேற்கு பகுதிக்கான RTO வில் லஞ்சமின்றி குறைவான நேரத்தில் லைசன்ஸ் வாங்க முடியும் என்ற மின்னஞ்சல் நான் உறுப்பினராக இருக்கும் யாகூ குழுமத்திலிருந்து வந்திருந்தது.

முழுவதும் கணினி மயமாக்கப்பட்டு, கனிவான ஊழியர்களோடு கலகலப்பாக கார்ப்பரேட் நிறுவனம் போல் இருந்தது. இந்த ஆனந்த ஆச்சரியத்திற்கு அடிகோலியவர் இந்த அலுவலகத்துக்குப் பொறுப்பாளரான திரு.கார்த்தலிங்கன். அப்துல் கலாம் அவர்களை பின்பற்றும் கார்த்தலிங்கன் அவர்களை ஊடகங்கள் ஒரு சிறு செய்தியில் கூட குறிப்பிடவில்லை. பரபரப்பான அடுத்தவரின் அந்தரங்கத்துக்கு தரும் முக்கியத்துவத்தை என்று நாம் விடப் போகிறோம்?

சென்னை போன்ற பெருநகரத்திலேயே செய்ய முடிந்த இந்த மாற்றம் நாடெங்கும் பரவ வேண்டும். எப்போதாவது சென்னை மேற்கு பகுதிக்குச் செல்ல நேர்ந்தால், ஒரு 10 நிமிடம் ஒதுக்கி, திரு.கார்த்தலிங்கனை பாராட்டத் தவறாதீர்கள்.

மனிதர்களில்தான் எத்தனை விதங்கள், நிறங்கள்? மூளையே பலவிதமான மனிதர்களுக்குக் காரணமா? உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன்.

மனித மூளை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை நிலாச்சாரலில் படிக்கப் படிக்க ஆச்சரியம் கூடியது:

https://www.nilacharal.com/ocms/log/07070810.asp

ஊருக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி அரிசோனாவின் பனிக்குவளையான பிளாக்ஸ்டஃப் போனோம். ஒரு பக்கம் வெயிலோ வெயில். இன்னொரு பக்கம் குளிரோ குளிர்னு இயற்கை செய்த கலவையான மாநிலம் அரிசோனா. ஒரு சில வாரங்களுக்கு முன்னால் செடோனா பத்தி எழுதியிருந்தேனே, அதுக்கு பக்கத்தில இருக்கு பிளாக்ஸ்டஃப்.

US Road

வெள்ளை வெளீரென்ற பஞ்சை யாரோ மெனக்கெட்டு ஊரெங்கும் போட்டதுபோல் போகும் வழியெங்கும் பனிக்கட்டிகள். இளையராஜா பாட்டைக் கேட்டுக்கிட்டு, மிதமான வேகத்தில் போனதே அற்புதம். வாகனங்கள் செல்லும் சாலைகளைத் தவிர, அனைத்து இடங்களிலும் இது என்ன கடல் அலையா, பனிக் கடலா எனக் கேட்கும் அளவுக்கு பனியோ பனி. இயற்கையை ரசிக்கும் போது மனதோடு மழைக்காலம்னு பாடணும் போல இருந்தது. ஆனா என் குரலைக் கேட்டு எல்லோரும் பயந்திருவாங்கன்னு கோவிந்தராஜனோட கவிதையை மட்டும் நினைச்சுக்கிட்டேன். நீங்களும் ரசிக்க:

https://www.nilacharal.com/ocms/log/04270915.asp

பனிச்சறுக்கு விளையாடுவதற்கென்றே தனியே ஒரு இடம். ஆறிலிருந்து அறுபது வரைக்குமானவர்கள் சறுக்கிக் கொண்டிருந்தனர். என் மகள் அங்கே சறுக்கியே ஆக வேண்டுமென அடம் பிடித்தாள். அதிவேகமாக இறங்கும் வளைவுகளைப் பார்த்து, நான் அனுப்ப மறுத்தேன். எங்களுடன் வந்திருந்த என் நண்பரின் அம்மா, "ஆறிலும் சாவு நூறிலும் சாவு.. பயப்படாம அனுப்புமா"ன்னு சொன்னாங்க. ‘ஒரு வயசிலும் சாவு, நூறு வயசிலேயும் சாவு’ன்னு சொன்னாக் கூட பிறந்ததிலிருந்து எப்போது வேண்டுமேனாலும் இறப்புன்னு எடுத்துக்கலாம். அது என்ன கணக்கு ஆறும், நூறும் எனக் கேட்டேன். (நாம புத்திசாலின்னு காட்டணுமில்ல…!!)

சிரிச்சுக்கிட்டே அவங்க சொன்ன விளக்கத்தைக் கேட்டு, அசந்து போயிட்டேன். குந்தியின் முதல் மகனான கர்ணன் யுத்தத்தின் போது இறந்து விடுவான் என அறிந்த குந்தி, அவனைக் காக்க வேண்டி, கண்ணனை வேண்டினாராம். அதற்கு கண்ணன் சொன்னதாய் ஒரு சுவாரஸ்யமான கதையைக் கூறினார் என் நண்பரின் அம்மா. கர்ணன் கவுரவர்களோடு இருந்தால் யுத்தத்தில் 100 பேரும் அழிக்கப்படும்போது அவனும் அழிக்கப்படுவான். கவுரவர்களை எதிர்த்து பாண்டவர்களோடு இணைந்து, ஆறாவது சகோதரனாய்ப் போரிட்டாலும், துரியோதனுக்கு துரோகம் இழைத்ததாய் சொல்லி துரியோதனால் கொல்லப்படுவான் எனக் கூறினாராம். அதனாலேயே ஆறிலும் சாவு, நூறிலும் சாவுன்னு சொல்றாங்களாம். இதே போல ‘அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே’ங்கற பழமொழிக்கான சரியான விளக்கத்தை அறிய:

https://www.nilacharal.com/ocms/log/07200908.asp

Snow nature    Snow nature

திரும்பி வரும் வழியில் மலையுச்சியில் நின்று கொண்டு, என்னவர் ‘ஹலோ’ எனக் கத்த, மலையும் எதிரொலித்தது. சட்டென எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வந்தது.

ஒரு அப்பாவும் மகனும் மலையுச்சிக்குப் போனார்களாம். உச்சியிலிருந்து தந்தை தன் மகனிடம், "நான் என்னை மிகவும் நேசிக்கிறேன்" எனக் கத்தச் சொன்னராம். மகனும் கத்த, மலை அதையே எதிரொலித்ததாம். மீண்டும், "நான் என்னை மிகவும் வெறுக்கிறேன்" என மகன் கத்த, மலை அதையே திரும்பச் சொன்னதாம். அதற்கு தந்தை கூறினாராம், "இந்த மலையைப் போலதான் நம்ம வாழ்க்கையும். நாம் நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும். கெட்டதை நினைத்தால் கெட்டதே நடக்கும்." என்று.

ஒரு சின்ன விஷயத்தில வாழ்க்கைத் தத்துவத்தையே சொல்லியிருக்கார் இல்லையா? உங்களுக்குள் உள்ள சக்தியைப் பற்றி, சித்ரா எழுதியிருக்கும் கட்டுரை நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும். படிச்சுப் பாருங்க:

https://www.nilacharal.com/ocms/log/08240916.asp

ஒரு மாசமா உறவினர்கள், நண்பர்கள் என ஒரே கூட்டமா, கொண்டாட்டமா இருந்ததில் நாள் போனதே தெரியலை. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்.

மீண்டும் சந்திக்கும் வரை,

அன்பாய் இருங்கள்,
ஆரோக்கியமாய் இருங்கள் எனக் கூறி போய் வருகிறேன்.

About The Author

7 Comments

  1. P.Balakrishnan

    வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் பலவற்றில் இலஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி நடவடிக்கையினால் கையூட்டு குறைந்துள்ளது. ஓட்டுனர் உரிமம் முறைப்படி வழங்குவதில் முறைகேடுகள் குறைந்துள்ளன. தரகர்மூலம் சென்றால் செலவு அதிகம்தான்.

  2. Rishi

    கார்த்தலிங்கன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். சென்னை போன்ற பணம் தாராளமாய் புழங்கும் பெருநகரங்களிலும் இப்படி கை சுத்தமாய் இருப்பது ஒரு மிகப்பெரும் தவம்தான்!!!

  3. Vijayakumar.R

    ரொம்ப நல்லா இருக்கு கவிதா இன்னும் எலுதவும்.

  4. Bala

    ஆறிலும் சாவு, நூற்றி ஒன்ரிலும் சாவு என்ரல்லவா சொல்லவேண்டும்?

  5. Dr. S. Subramanian

    பாலா, நீங்கள் மிகவும் துடுக்கானவர் என்று தெரிகிறது. அஞ்சிலும் சாவு நூறிலும் சாவு என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்!

  6. Dr. S. Subramanian

    I suggest the editor writes a note on top if some article is a re-run. That would save us from getting taken. This article is more than a year old. Pl do not test our memory.

Comments are closed.