வீட்டில் பிள்ளைகளுக்குக் கதைப் புத்தகம்/சிறுவர் இதழ் வாங்கிக் கொடுக்கும்படிச் சொன்னால் உடனே பெற்றோர்கள் சொல்பவை,
"உக்கும்! இருக்குற பாடப் புத்தகத்தையே படிக்கக் காணோம்."
"பாடப் புத்தகத்தைப் படிக்கவே நேரம் சரியா இருக்கு."
"இருவத்திநாலு மணி நேரமும் டி.வி பாக்கறதுக்கே நேரம் போதல. அதை விட்டா வீடியோ கேம். இது ரெண்டையும் தூக்கிப் போட்டுட்டு, அமைதியா உக்காந்து அதுவாவது கதைப் புத்தகம் படிக்கிறதாவது."
இப்படி ஏகப்பட்ட சலிப்புகள், கேள்விகள். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பதிலளிப்பதை விட, சிறுவர்களின் வளர்ச்சியில் படிக்கும் பழக்கம், குறிப்பாகச் சிறுவர் இலக்கியம் எந்த அளவுக்கு முதன்மைப் பங்கு வகிக்கிறது என்பதை ஆணித்தரமாக எடுத்துக்காட்டினாலே பெற்றோர்கள் இதன் தேவையைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.
மனித வளர்ச்சி புற வளர்ச்சி, அக வளர்ச்சி என இரு வகைப்படுகிறது. அவற்றுள் புற வளர்ச்சி பற்றி நமக்கே தெரியும், உடல் வளர்ச்சி. அடுத்ததான அக வளர்ச்சி மூன்று வகைப்படுகிறது. அவை,
• பண்பு வளர்ச்சி (Characteristic Growth).
• உளவியல் வளர்ச்சி (Mental Growth/Maturity).
• அறிவு வளர்ச்சி (Intelligence Growth).
இந்த மூன்று வளர்ச்சிகளுக்கும் சிறுவர் இலக்கியம் எப்படி உதவுகிறது என்பதைத்தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
பண்பு வளர்ச்சி:
"நீ முட்டாள்னு பேரெடுத்தாக் கூடப் பரவாயில்லை, அயோக்கியன்னு பேரெடுக்காம இருந்தாப் போதும்." – இது தொண்ணூறுகள் வரையிலான பெற்றோர்களின் வசனம். ஆனால், இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்தியாவில் உண்டான உலகமயமாக்கம், இந்தச் சமூகக் கோட்பாட்டையே அடியோடு மாற்றிவிட்டது. இப்பொழுதெல்லாம் பெற்றோர்கள், தங்கள் பிள்ளை கெட்டவன் எனப் பெயரெடுத்தால் கூடக் கவலையில்லை, அறிவாளியாகக் கருதப்பட்டால் போதும் என்கிறார்கள். ஆனால், எந்தக் காலத்திலும் எந்தச் சமூகமும் பண்பில்லாதவர்களை விரும்புவதில்லை என்பதே உண்மை. எந்தப் பன்னாட்டு நிறுவனமும் பெரிய அறிவாளி என்பதற்காக ஒரு கொந்தரை (Hacker) வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை.
மேலும், அந்தக் காலத்தில் ஒருவர் தவறு செய்தால் அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர் வாழும் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் வரைக்கும்தான் அது தெரிய வரும். ஆனால் இன்றைக்கு, இருக்கும் தொலைத்தொடர்பு வசதிகளால் உலகம் முழுவதும் அது பரவி விடுகிறது. ஒருவர் தன் பணியில் தவறு செய்தால் மேற்கொண்டு அவர் வேறெங்கும் பணியாற்ற முடியாதபடித் ‘தடைப் பட்டியலில்’ (Block list) சேர்க்கும் முறை இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. கடன் வாங்கித் திருப்பித் தராவிட்டாலும் வேறெங்கும் அவருக்குக் கடன் கிடைக்காதபடிச் செய்கிற தடைப் பட்டியலும் இருக்கிறது. இப்படி, தனிப்பட்ட வாழ்க்கை, பொது (பணி சார்ந்த) வாழ்க்கை என எல்லா நிலைகளிலும் ஒரு மனிதர் கண்காணிப்படுவதால் அந்தக் காலத்தை விட இந்தக் காலத்தில்தான் ஒரு மனிதர் கண்டிப்பாகப் பண்புடன் வாழ வேண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட பண்பு வளர்ச்சிக்கு, சிறு வயதிலேயே பிள்ளைகளிடம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது இன்றியமையாதது.
ஏனெனில், பெரியவர்களாக இருந்தாலும் குழந்தைகளாக இருந்தாலும், நன்னெறிகளைக் கதைகள் வழியே புகட்டுவதுதான் நமக்குத் தலைமுறை தலைமுறையாக வழக்கம். அதுதான் வெற்றிகரமான வழியும் கூட. அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்துத்தான் தனக்கு வாய்மையின் மீது பற்று ஏற்பட்டதாகக் காந்தியடிகள் கூறியிருப்பது இதற்கு ஒரு நல்ல, நாம் அனைவரும் அறிந்த எடுத்துக்காட்டு. சலிப்பூட்டும் அறிவுரைகளாலோ, வெறுப்பூட்டும் கண்டிப்புகளாலோ, வலியூட்டும் தண்டனைகளாலோ தர முடியாத விளைவைக் கதைகள் தருகின்றன. கதை ஓட்டத்தில், போகிற போக்கில் விதைக்கப்படும் நன்னெறிக் கருத்துக்கள் பிஞ்சு நெஞ்சங்களில் ஆழப் பதிகின்றன. பண்பு மீறி, ஒழுக்கம் தாண்டி நடக்கக் கூடாது என்பதாக இல்லாமல், அப்படி நடக்க முடியாத அளவுக்கு இயல்பான தடைக் கற்களாக இவை உள்ளத்தில் நிலைபெற்றுவிடுகின்றன. முனைவர்.பூவண்ணன் போன்றோரின் சமூகக் கதைகளோ, வாண்டுமாமா போன்றோரின் மந்திர தந்திர, துப்பறியும் கதைகளோ, மாயாவி, மாண்டிரெக் போன்ற சண்டைக் கதைகளோ எதுவாக இருந்தாலும் ஏதேனும் ஒரு நன்னெறியை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கின்றன. எனவே, இன்னதுதான் என்றில்லாமல் ஏதோ ஒரு கதை படிக்கும் வாய்ப்பைக் குழந்தைகளுக்கு வழங்குங்கள். அவை கண்டிப்பாக உங்கள் குழந்தைகளைச் சிறந்த குடிமக்களாக்கும்!
உளவியல் வளர்ச்சி:
அறிவில் சிறந்திருப்பவர்கள் எல்லாரும் உளவியல்ரீதியாகவும் நல்ல வளர்ச்சியுடையவர்களாக இருப்பார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. இது தவறு! பெரிய அறிஞர்கள், திறமையாளர்கள் சிலர் சில நேரங்களில் சிறு பிள்ளைத்தனமாக முதிர்ச்சியில்லாமல் நடந்து கொண்டிருப்பதை வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது. அன்றாட வாழ்வில் கூட அப்படிப் பலரை நாம் சந்தித்திருப்போம்.
சிலர், ஆள் ஆறடி உயரம் இருப்பார்கள், மெத்தப் படித்திருப்பார்கள், இலக்கியம் முதல் கணிப்பொறி வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் மணிக்கணக்கில் பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒரு சிறு குழந்தை, அறிவாளித்தனமாகத் தன்னை மடக்கிவிட்டால், உடனே மட்டம் தட்டி உள்ளே போகச் சொல்லி விடுவார்கள். இது, அடுத்தவர் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத உளப்பாங்கு. அடுத்த தலைமுறை தன்னைத் தாண்டி வளர்வதை ஏற்க முடியாத உளநிலை. ஆளும் அறிவும் வளர்ந்த அளவுக்கு உள்ளம் வளரவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதற்குக் காரணம் பக்குவமின்மை, முதிர்ச்சியின்மை (Immaturity)! பெரும்பாலான படித்தவர்களிடத்தில் இதைப் பார்க்கலாம். ஆக, அறிவு வளர்ச்சிக்கும் உளவியல் வளர்ச்சிக்கும் தொடர்பில்லை என்பதையே இது காட்டுகிறது.
இன்னொரு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள், பழக இனிமையானவர்களாக இருப்பார்கள். முன் பின் தெரியாதவர்களிடம் கூடச் சிரித்துச் சிரித்துப் பேசுவார்கள். எதைச் சொன்னாலும் நம்புவார்கள். எதைக் கேட்டாலும் தூக்கிக் கொடுத்து விடும் தாராள உள்ளம் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்களால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்காது என நாம் நினைப்போம். ஆனால், நெருங்கிப் பழகினால்தான் தெரியும். பண்பில் எப்படிக் குழந்தை போல் இருக்கிறார்களோ பழக்கத்திலும் அப்படியேதான் நடந்து கொள்வார்கள். சின்னஞ் சிறிய விடயங்களுக்கெல்லாம் சிறு பிள்ளை போல் அடம் பிடிப்பார்கள். நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு தங்கள் நம்பிக்கைகளையும், முடிவுகளையும் அடுத்தவர் மீது திணிப்பார்கள். அடுத்தவர்களின் சூழ்நிலை புரியாமல் உப்பு பெறாத விடயத்துக்கெல்லாம் முகத்தை முறித்துக் கொண்டு போவார்கள். தங்கள் வெகுளித்தனத்தால் தானும் துன்பப்பட்டு அடுத்தவர்களையும் இன்னல்படுத்துவார்கள். இப்படிப்பட்டவர்களால் வாழ்க்கையே இழந்தவர்கள் கதையெல்லாம் உண்டு. அடிப்படையில் இவர்கள் நல்லவர்கள்தாம். ஆனால், வயதுக்கும் தகுதிக்கும் ஏற்ற முதிர்ச்சியின்மைதான் இவர்களின் சிக்கலும். பண்புக்கும் உளவியல் வளர்ச்சிக்கும் கூடத் தொடர்பு கிடையாது என்பது இவர்கள் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பாடம்.
உளவியல் வளர்ச்சி என்பது தனிப்பட்டது. அறிவு, பண்பு நலன் ஆகியவற்றுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பொறுமை, விடாமுயற்சி, விட்டுக் கொடுத்தல், பெருந்தன்மை, பக்குவம், முதிர்ச்சி போன்றவை இதில் அடங்கும். இத்தகைய பண்புகளை எடுத்துக்காட்டுகிற, இவற்றின் பெருமை பேசுகிற கதைகள்தாம் இவற்றைச் சிறு வயதிலேயே உள்ளத்தில் ஊன்றும். ஆனால், இப்படிப்பட்ட கதைகளைச் சொல்கிற நன்னெறி வகுப்புகளோ, தாத்தா – பாட்டிகளோ இல்லாத இன்றைய சமூக அமைப்பில், பெற்றோருக்கும் கதை சொல்ல நேரமும் திறனும் இல்லாத நிலையில் கதைப் பொத்தகங்களும், சிறுவர் இதழ்களுமே ஒரே வழி.
அறிவு வளர்ச்சி:
திறமை, நிறையத் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது ஆகியவற்றைத்தான் அறிவு என நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
திறமையை நாமாகத்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை பிறவியிலேயே இருக்கிறது. அடிப்படை அறிவு குறைவான பலர் கூட ஏதாவது ஒரு துறையில் நிகரற்ற திறமையுடன் திகழ்வதைப் பார்க்கிறோம். எனவே, திறமையை அறிவு என எடுத்துக்கொள்ள முடியாது.
அதே போல், உலகிலேயே மிகவும் அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கும் மனிதராக இருந்தாலும் அவரை விடப் பன்மடங்கு தகவல்களை எளிய ஒரு நினைவட்டையால் (Memory Card) சேமித்து வைத்துக்கொள்ள முடியும். எனவே, இதையும் அறிவு எனச் சொல்ல முடியாது.
மனிதனின் உண்மையான அறிவு என்பது கற்பனைத் திறன். அறிவியலாளர்களும் மருத்துவர்களும் ‘அறிவு’ என ஒப்புக்கொள்வது அதைத்தான். ‘அறிவுச் சோதனை’களின்பொழுது (I.Q test) முதன்மையாக அளவிடப்படுவது ஒரு மனிதரின் கற்பனைத் திறன்தான். (நன்றி: சுஜாதா – தலைமைச் செயலகம்). அப்பேர்ப்பட்ட கற்பனைத் திறனை வளர்ப்பதில் கதைகளுக்கு நிகர் வேறு எதுவுமே இருக்க முடியாது என்பதை எதிர்க் கருத்து கொண்டவர்கள் கூட மறுக்க முடியாது எனவே நம்புகிறேன்.
இன்றைய குழந்தைகளுக்குக் காணொலி ஆட்டம் (வீடியோ கேம்), தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியவற்றைத் தவிர வேறு பொழுதுபோக்குகளே இல்லை. காணொலி ஆட்டங்களும் மூளைக்கு நிறையவே வேலை கொடுக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவை கற்பனைத் திறனை ஊக்குவிக்கின்றனவா என்பதைப் பெற்றோர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
சாக்கலேட்டு மரங்கள், எரிமலை வாய்ப் பேய்கள், நினைத்ததை நினைத்தவுடன் தரும் குட்டித் தேவதைகள், இறக்கை முளைத்த குதிரைகள் (இங்கு உங்களுக்கு வேறு ஏதாவது நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை) என வேறெந்த ஊடகத்திலும் (பொம்மைப்படத் தொலைக்காட்சிகளில் கூட) இன்னும் பார்க்க முடியாத விந்தை உலகத்தை நம் (மனக்)கண்முன் கொண்டு வரும் சிறுவர் கதைகள்தாம் குழந்தைகளின் கற்பனைத் திறன் எனும் அறிவுக் கோயிலுக்கான திறவுகோலை இன்னமும் கைவசம் வைத்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது.
கற்பனைத் திறனின் அடுத்த கட்டம், அறிவின் உச்சம் உருவகத் (Visualization) திறன். காட்சி வடிவத்தில் ஒன்றைக் கற்பனை செய்து பார்க்கும் திறன்தான் அறிவின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகிறது.
அந்தத் திறனை வழங்குவதில் தன்னிகரற்று விளங்குபவை எழுத்து வடிவக் கதைகள்தாம்! ஒரு கதையைப் படிக்கும்பொழுது, படிக்கப் படிக்க அதில் நடைபெறும் நிகழ்ச்சிகள் நம் உள்ளத்தில் காட்சியாக ஓடுகின்றன. இப்படியோர் அனுபவத்தை வேறெந்தப் பொழுதுபோக்கும், முயற்சியும் நமக்கு அளிப்பதில்லை. கதையை, கேட்கும்பொழுது கூட இப்படி ஓர் அனுபவம் கிடைக்கும் என்றாலும் படிக்கும்பொழுது ஏற்படும் அதே அனுபவம் அதைவிட அழுத்தமானதாகவும், தொடர்ச்சியானதாகவும் இருப்பது கண்கூடு. எனவே, தொடர்ச்சியாகக் கதைகள் படிப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமின்றிப் பெரியவர்களுக்கும் உருவகத் திறன் (Visualizing Skill) மேம்படும் என்பது உறுதி! இது குறிப்பாகப் படைப்பாளிகளுக்கு இன்றியாமையாத திறன் என்றாலும் அவர்களுக்கு மட்டுமில்லாமல் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் அறிவுநிலையை மேம்படுத்திக்கொள்ள இஃது உதவும் என்பதில் ஐயமில்லை.
இன்றைய சூழ்நிலையில், காணொலி ஆட்டம், திரைப்படம், தொலைக்காட்சி என அடுத்தவர்களின் மூளையில் தோன்றிய காட்சிகளையே தொடர்ந்து உள்வாங்குவதால் சொந்தமாக உருவகம் (Visualize) செய்து பார்க்கும் திறனே இன்றைய குழந்தைகளுக்கு இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது. எனவே, அந்தக் காலத்தை விட இன்றைக்குத்தான் குழந்தைகள் கதை படிக்க வேண்டியதன் தேவை பன்மடங்கு கூடுதலாக இருக்கிறது. ஆனால், நிலைமையோ தலைகீழ். அந்தக் காலத்தில்தான் குழந்தைகளிடம் கதை படிக்கும் பழக்கம் இருந்தது. இன்றைக்கு அது கொஞ்சமும் இல்லை. இஃது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்!
இப்படி, மனித வளர்ச்சியின் தலையாய மூன்று நிலைகளில் மட்டுமில்லாமல் ரசனை வளர்ச்சி, குழந்தைகளைக் குழந்தைகளாக வைத்திருத்தல் ஆகியவற்றிலும் சிறுவர் இலக்கியங்கள் ஆகச் சிறந்த பங்காற்றுகின்றன.
பிற உயிரினங்களுக்கும் நமக்கும் இடையிலான முதன்மையான சில வேறுபாடுகளில் ஒன்று ரசனை. அஃது இல்லாதவர் மனிதப் பிறவியே இல்லை. இலக்கியம், ஓவியம், இசை, அறிவியல், விளையாட்டு என ஏதாவது ஒரு ரசனை மனிதர் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது! அப்படிப்பட்ட ரசனை உணர்ச்சியை ஏற்படுத்துவதிலும் வளர்ப்பதிலும் சிறுவர் இலக்கியங்களின் பங்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சாகசம் என்கிற ஒரே ஒரு கருப்பொருளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட காணொலி விளையாட்டுகளும், பெரியவர்களை மட்டுமே கணக்கில் கொண்டு உருவாக்கப்படும் நம் திரைப்படங்களும் ஒருபொழுதும் நம் குழந்தைகளின் ரசனைக்குச் சரியான தீனியை அளிக்க முடியாது.
இப்படி, வயதுக்கேற்ற ரசனையும் சீரிய பொழுதுபோக்குகளும் அறிமுகப்படுத்தப்படாததுதான் இன்றைய குழந்தைகள் வயதுக்கு ஒவ்வாத பாலுணர்ச்சி முதலான தேவையில்லாத ஈர்ப்புகளில் சிக்கிக் கொள்ளக் காரணம் என்பது உளவியல் அடிப்படையிலான உண்மை!
எனவே, உங்கள் குழந்தை சிறந்த மனிதர் ஆக, முழுமையான உளவியல் வளர்ச்சி அடைய, சிறப்பான அறிவாளி ஆக, அதே நேரம் அந்தப் பிஞ்சு நெஞ்சத்தில் எந்த நஞ்சும் கலக்காமல் குழந்தைப் பருவத்தை முழுமையாகத் துய்க்க (அனுபவிக்க) மொத்தத்தில் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையச் சிறுவர் கதைப் புத்தகங்களையும், சிறார் இதழ்களையும் தவறாமல் வாங்கிக் கொடுங்கள்!
முதலில் அவர்கள் அவ்வளவாக ஈடுபாடு காட்ட மாட்டார்கள்தாம். கவனத்தைக் கவரக் கூடிய பிற காட்சி வடிவப் பொழுதுபோக்குகளிலிருந்து வறட்சியான இந்த எழுத்து வடிவப் பொழுதுபோக்குக்கு மாற அவர்களுக்குக் கொஞ்சம் நேரம் தேவைப்படும்தான். அதைக் கொடுக்கத் தயங்காதீர்கள்! அவர்கள் படிக்காவிட்டாலும் தொடர்ந்து சிறுவர் கதைப் பொத்தகங்களை வாங்கி அவர்கள் கண்ணெதிரே காட்சிப்படுத்திக் கொண்டே இருங்கள். அல்லது, உங்கள் பகுதி இதழ் விற்பனையாளரிடம் சொல்லித் தவறாமல் வீட்டில் ஏதேனும் ஒரு சிறுவர் இதழ் வந்து விழுந்துகொண்டே இருக்கும்படிச் செய்யுங்கள்! "தொடர்ந்து வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்களே, ஆனால் நாம் இன்னும் ஒன்றைக் கூடப் படிக்கவில்லையே" எனும் உறுத்தல், சிறுவர் இதழ்கள்/பொத்தகங்களின் வண்ணமிகு வடிவமைப்பு, இயல்பாகவே புதியவற்றை நோக்கி ஈர்க்கப்படும் குழந்தைகளுக்குரிய இயல்பு போன்ற பல காரணிகள் விரைவிலேயே அதை நோக்கி அவர்களைத் தள்ளும். இல்லாவிட்டால், நீங்களே கொஞ்ச நேரம் உட்கார்ந்து அவர்களுக்கு கதைப் பொத்தகங்களை/இதழ்களைப் படித்துக் காட்டி, கதைச் சுவையை அறிமுகப்படுத்தலாம்.
ஆக மொத்தம் சிறுவர்களுக்குப் படிக்கும் பழக்கம் ஏற்படத் தேவையானது, அதற்காகச் செலவிடத் தயங்காத உங்கள் பாங்கும், பொறுமையும்தான்!
ஆனால் ஒன்று! நீங்கள் வாங்கித் தரும் சிறுவர் இதழ்களும் புத்தகங்களும் தாய்மொழியில்தான் இருக்க வேண்டும். காரணம், ஏற்கெனவே, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் எனப் பிள்ளைகள் பள்ளியில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் (சில குடும்பங்களில் வீடுகளிலும்). பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. இந்நிலையில் நீங்கள் பொழுதுபோக்கு எனும் பெயரில் படிக்கச் சொல்லும் புத்தகமும் ஆங்கிலத்திலேயே இருந்தால் குழந்தைகள் அதையும் ஒரு பாடப் புத்தகம் போலத்தான் கசப்பாகப் பார்ப்பார்கள். கண்டிப்பாகப் படிக்க மாட்டார்கள்!
“
மிக்க நன்றி!