ஒரு நாள் முல்லா இறைவனைத் தொழுது கொண்டிருந்தார். அவருடைய வீட்டுக்கு மூன்றாவது வீட்டில் இருந்து வந்த சத்தம், தொழுகை செய்யவிடாமல் தொல்லைபடுத்தியது. ஒரு வழியாக, முல்லா தொழுகையை முடித்துக் கொண்டு நேராக அந்த வீட்டிற்குச் சென்றார்.
அந்த வீட்டில் கணவனை இழந்த ஏழைப் பெண்மணி ஒருவர் வசித்து வந்தார். தையல் வேலை செய்து அவர் சிரமமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்குப் பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். அவன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மீது அவருக்கு இரக்கமும் உண்டு.
வீட்டுக்குள் தாயும் மகனும் ஏதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.
"இங்கே என்ன நடக்கிறது? உங்கள் இருவரின் சத்தம் என் வீடு வரை கேட்கிறதே!" என்று முல்லா கேட்டார்.
"முல்லா அவர்களே! இவனைப் பாருங்கள்! ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போகாமல் அடம்பிடிக்கிறான். அறிவுரை கூறிப் பார்த்தேன், அடித்து மிரட்டிப் பார்த்தேன். ஒன்றுக்கும் மசிய மாட்டேன்கிறான்" என்று அந்தச் சிறுவனின் தாய் வேதனையோடு கூறினார்.
முல்லா, சிறுவனைப் பக்கத்தில் அழைத்து, "குழந்தாய்! நீ ஏன் பள்ளிக்கூடம் போக மறுக்கிறாய்? பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா?" என்று அறிவுரை கூறினார்.
ஆனால், பையன் கேட்பதாக இல்லை.
‘பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை’ என்று அடம்பிடித்தான்.
முல்லா சுற்றுமுற்றும் பார்த்தார். அந்தப் பையனின் தாய் தைப்பதற்காக வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது. உடனே முல்லா அதை நோக்கி விறுவிறு என்று நடந்து சென்றார். அதைக் கையில் எடுத்து, துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டுவிட்டார்.
தாயும் மகனும் அதைக் கண்டு திகைப்படைந்தனர்.
"அம்மா! மாமா விலை உயர்ந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே! கொடுத்தவர்கள் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்"என்று திகைப்போடு கேட்டான் பையன்.
உடனே முல்லா, "பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே, அதைவிட இந்தத் துணி பாழானது பெரிய விஷயமா?" என்று கேட்டார்.
இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கின. உடனே, புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான்.
அவன் சென்ற பிறகு முல்லா, அந்தச் சிறுவனின் தாயைப் பார்த்து, "அம்மா! என்னை மன்னித்துக் கொள்! அவனைத் திருத்த இதுதான் சரியான வழியாகத் தோன்றியது" என்று கூறிவிட்டு, கடைத்தெருவிற்குச் சென்று தாம் கிழித்த அதே போன்ற துணியை வாங்கி வந்து கொடுத்தார். அந்தத் தாய் அதை இரட்டிப்பு நன்றியுடன் பெற்றுக் கொண்டார்.