(சுஜாதா நினைவுநாள் சிறப்பு வெளியீடு)
‘ஆனந்த விகடன்’ நடத்திய ‘ஜூனியர் போஸ்ட்’ என்ற இதழில் 1998ஆம் ஆண்டு வெளியாகி, பின் ‘விகடன் பிரசுரம்’ வெளியிட்ட ‘சுஜாதாட்ஸ்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்ற, சிறுகதைகள் பற்றிய சுஜாதாவின் ‘தாட்ஸ்’ நன்றியுடன்.
1. சிறுகதை என்பது என்ன? அதை எழுத ஏதாவது விதி இருக்கிறதா?
எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு விதிதான் அதற்கு. சிறிதாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை. A Short fictional narrative in prose. மற்ற எந்த வரையறைகளுக்குள்ளும் நவீனச் சிறுகதை அடங்காது.
2. இதில் நல்ல சிறுகதை என்பது…?
நல்ல சிறுகதை என்பது சிறிதாக, சிறப்பாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை.
3. ‘சிறப்பாக’ என்கிற வார்த்தை அவசியமா?
அப்படித்தான் நான் நினைக்கிறேன். கதை சிறப்பாக இல்லையென்றால் அதை மறப்பார்கள். ஒரு கதை ஜீவித்திருக்க, அது சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
4. சிறுகதையின் அளவுகோல் என்ன? வார்த்தைகளின் எண்ணிக்கையை வைத்துக் கணக்கிடுவார்களா?
சுமார் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வார்த்தைகளுக்குள் சொல்லப்பட வேண்டுமென்று குத்துமதிப்பாகச் சொல்லலாம்.
5. அளவு வரையறை எதற்கு?
அதை ஒரு வழிகாட்டியாகத்தான் சொல்ல வேண்டும். நூறு பக்கங்கள் இருந்தால் அதை எனக்குச் சிறுகதை என்று ஒப்புக்கொள்ளத் தயக்கமாக இருக்கிறது. அதேபோல், ஒரு பக்கத்தில் இருந்தால் அது கதையல்ல, கதைச் சுருக்கம். அதற்குக் கீழ் என்றால் கவிதையாகச் சொல்லி விடலாம்.
6. அளவு வரையறை தேவைதானா?
தேவையில்லை என்று நவீன விமர்சகர்கள் சொல்கிறார்கள். உதாரணமாக ஜாய்ஸின் ‘யுலிஸ்ஸிஸ்’ஸை (768 பக்கங்கள்) ஒரு சிறுகதை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். புதிதாக எழுதுபவர்கள் இந்த அளவு வரையறையைக் கடைப்பிடிப்பது நல்லது.
7. சிறுகதைக்குக் கதை தேவையா?
நல்ல கேள்வி! கதை தேவையா என்பதையும் இப்போது சந்தேகிக்கிறார்கள். ஆர்வெல்லின் ‘எ ஹாங்கிங் (A Hanging)’ என்னும் கட்டுரையைச் சிறுகதையாகப் பார்க்கிறவர்களும் உண்டு.
8. சிறுகதை எதைப் பற்றி இருக்கலாம்?
யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் இருக்கலாம்.
9. காலம்?
நூற்றாண்டுக் காலத்தையோ, சில நிமிடங்களையோ சொல்லலாம்.
10. கதை மாந்தர்கள்?
கறுப்போ சிவப்போ, ஏழையோ பணக்காரனோ, வயசானவர்களோ இளைஞர்களோ, வியாதியஸ்தர்களோ தர்மகர்த்தாக்களோ, நாய் வளர்ப்பவர்களோ பாய் முடைபவர்களோ, விஞ்ஞானிகளோ வேதாந்திகளோ, மீசைக்காரர்களோ ஆசைக்கு அலைபவர்களோ, மீன் பிடிப்பவர்களோ பஸ் பிடிப்பவர்களோ, சினிமா பார்ப்பவர்களோ இனிமா எடுப்பவர்களோ -எந்தக் கதாபாத்திரமும் அதற்குத் தடையில்லை. மனிதர்களே இல்லாமல் கூடக் கதை சொல்லலாம். அப்படி ஒரு விஞ்ஞானக் கதை இருக்கிறது.
11. கதையை எப்படிச் சொல்ல வேண்டும்?
கண்ணீர் வரச் சொல்லலாம், சிரிக்கச் சிரிக்கச் சொல்லலாம், கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர… படிப்பவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.
12. இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதைகளில் பொது அம்சம் என்று எதுவும் இருக்காதே?
இருக்கிறது. ஒரே ஒரு பொது அம்சம்தான் எனக்குத் தெரிந்தது. படித்த இரண்டு நிமிடத்தில் மறந்து போய்விட்டால் அது சிறுகதையில்லை – பஸ் டிக்கெட்! ஒரு வாரம் கழித்தோ, ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவர்களிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதை
13. எப்படிச் சொல்கிறீர்கள்?
அனுபவத்தில்தான். நான் 1979இல் எழுதிய சிறுகதைகளை இப்போது யாராவது நினைவு வைத்துக் கொண்டு சொல்லும்போது எனக்கு வேறு எந்தச் சான்றிதழும் தேவையில்லை.
14. எனவே?…
நல்ல சிறுகதைகள் காலத்தையும், அன்றாட அவசரத்தையும் கடக்கின்றன.
15. இது பேருக்குப் பேர் வேறுபடும் அல்லவா?
நிச்சயம். எனக்கு நல்ல கதை உங்களுக்கு நல்ல கதையாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஒரு கதை உங்களை எந்த விதத்திலும் பாதித்திருந்தால் ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் விட்டுக்கூட அதை உங்களால் திருப்பிச் சொல்ல முடியும்.
16. அப்படியென்றால், நல்ல ஞாபகம் உள்ளவர்கள் நல்ல ரசிகர்கள் என்பீர்களா?
இது ஞாபகப் பிரச்சினை அல்ல. கதையின் பெயர்கள், இடம், பொருள், ஏற்பாடெல்லாம் ஞாபகம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் கதையின் அடிநாதம். அதில் பாதித்த ஒரு கருத்தோ, வரியோ நிச்சயம் நினைவிருக்கும்.
17. அப்படி நினைவு இல்லையென்றால்?
அப்படி இல்லையென்றால் அந்தக் கதை உங்களைப் பொறுத்தவரை தோல்விதான்.
18. இதை வாசகருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள ஏற்பாடு என்று சொல்லலாமா?
ஒரு நட்பு என்று சொல்லலாம். ஒரு வாசகர் தனக்குப் பிடித்தமான எழுத்தாளரை ஒரு நண்பரைப் போல் தேர்ந்தெடுக்கிறார். காரணம், அவர் எழுதுவது இவருக்குப் புரிகிறது. கதையின் ஏதோ ஒரு பகுதியை வாசகரால் தன் மனத்தில் மீண்டும் வாழ விட முடிகிறது. அந்த எழுத்தாளர் அந்த வாசகரின் வாழ்வின் குறையை ஏதோ ஒரு விதத்தில் நிரப்புகிறார்.
19. அதற்குக் கதை புரிய வேண்டும் அல்லவா?
ஆம். கதை வாசகருக்குப் புரிய வேண்டியது மிக முக்கியம் எனக் கருதுபவன் நான்.
20. சிலர் புரியாமலேயே கதை எழுதுகிறார்களே?
அவர்களைப் பசித்த புலி தின்னட்டும்.
“