சுதந்திரம் என்பது மிக அற்புதமான ஒன்று!
இல்லாதபோதுதான் அதன் அருமை தெரிகின்றது. கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் கிளி, வெளியே ஆனந்தமாகப் பறந்து திரியும் கிளிகளைப் பார்த்து ஏங்குகின்றது. நம்மவர்களில் பலரும் இதேபோல சுதந்திரம் இல்லையே என்ற ஏக்கத்தில் தமது நாட்களைக் கழித்து வருகின்றார்கள். பேச்சுச் சுதந்திரம் இல்லை, எழுத்துச் சுதந்திரம் இல்லை என்றெல்லாம் பலருக்கு வேறுபட்ட குறைகள் பல இருக்கின்றன.
தாங்கள் செய்த ஏதோ ஒரு தவற்றுக்காக அல்லது பல தவறுகளுக்காகத் தங்கள் சுதந்திரத்தை இழந்து, சிறைக் கம்பிகளைப் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இது அவர்களாகவே சம்பாதித்தது!
அண்மையில் பிரித்தானியப் பத்திரிகையொன்றில் இந்தச் சிறைப் பறவைகளைப் பற்றிய செய்தியொன்றை வாசிக்க நேர்ந்தது. போலந்து நாட்டுச் சிறைக் கைதிகளை பிரித்தானியச் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்க அரசு ஆண்டுதோறும் 35 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டு வருகின்றது என்பதுதான் அந்தச் செய்தி.
போலந்து நாட்டுக் கைதிகளை எதற்கு பிரித்தானியச் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்க வேண்டும் என்கிற சந்தேகம் எழுகின்றதல்லவா? காரணம், போலந்து நாட்டுச் சிறைச்சாலைகள் கைதிகளால் நிரம்பி வழிகின்றனவாம்! அங்கே இடப் பற்றாக்குறை என்பதால் ஏறத்தாழ 900 போலந்துக் குற்றவாளிகள் பிரித்தானியச் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
போலந்து அரசு டிசம்பர் 2016 வரை காலக்கெடு வைத்திருக்கின்றது. அவர்கள் புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிக்கும் பணி 2016 முடிவில்தான் நிறைவுபெற இருக்கின்றது. போலந்து மட்டுமல்ல, வேறு பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரித்தானியச் சிறைச்சாலைகளைத் தம் கைதிகளை வைத்திருக்கப் பயன்படுத்தி வருகின்றன என்று இந்தச் செய்தி மேலும் விவரிக்கின்றது. ஆனாலும் இவர்களுள் போலந்து நாட்டுக் கைதிகள் தொகைதான் அதிகம் என்பதையும் இந்தச் செய்தி சொல்கின்றது.
சிறைச்சாலைகளைப் பராமரிக்க ஏராளமான தொகை செலவழிவதால் இந்தச் செலவை எந்த வழியிலாவது குறைக்க வேண்டும் என்று அரசு முயற்சித்து வருவதையும் இந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள். பிரித்தானியாவின் குற்றவியல் உயர் அதிகாரி இது பற்றிக் குறிப்பிடுகையில், “பிரித்தானியாவில் குற்றம் இழைப்பவர்கள் தொகை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. குற்றவாளிகள் வெளிநாட்டவர்களாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட காலம் பிரித்தானியச் சிறைகளில் அவர்களை வைத்துவிட்டுப் பின்பு அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பி விடலாம். ஆனால், எட்டுக் குற்றவாளிகளில் ஒருவர்தான் வெளிநாட்டவராக இருக்கின்றார்” என்று உண்மையை இந்த அதிகாரி வெளிப்படுத்தி இருக்கின்றார்.
உலக நாடுகளை நாம் சற்றே நோக்கினால், அமெரிக்காவில்தான் சிறைக்கைதிகள் அதிகமாகக் காணப்படுகின்றார்கள் என்பது தெரியவரும். 2002ஆம் ஆண்டிலிருந்து, ஐக்கிய அமெரிக்காதான் சிறைக்குத் தள்ளப்படுபவர்கள் தொகையைப் பொறுத்த அளவில் முன்னணியில் நிற்கின்றது. ஏனைய நாடுகளில் 10,000 பேரில் 100 பேர் சிறைக்குச் செல்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால், ஐக்கிய அமெரிக்காவிலோ இத்தொகை 500ஆக இருக்கின்றது. பிந்திய தரவுகளின்படி, 2010இல் 1.6 மில்லியன் தொகைக் கைதிகள் அமெரிக்காவில் இருந்திருக்கின்றார்கள்.
20களிலும் 30களின் தொடக்கத்திலும் உள்ள வயதினரே மிக அதிகமாகச் சிறைக்குச் செல்வது அறியப்பட்டுள்ளது. இப்படிச் சிறைக்கு வருபவர்கள் மிகக் குறைவாகவே கல்வி கற்றிருப்பதும், சராசரி 10ஆம் ஆண்டு வரை படித்திருப்பதும், 70 விழுக்காட்டுக் கைதிகள் தமது உயர் கல்வியை முடித்திருக்காததும் கண்டறியப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் பரவலாகச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் கைதிகள் தொகை ஏறத்தாழ 10 மில்லியனைத் தொடுகின்றது. இதில் பாதித் தொகையினர் அமெரிக்க, சீன, ருஷ்ய சிறைச்சாலைகளில்தான் அடைபட்டு இருக்கின்றார்கள்.
சரி, உலகின் சிறைச்சாலைகள் எந்த நிலையில் இருக்கின்றன?
பல சிறைகளில், கைதிகள் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டு வரும் செய்திகள் பலவற்றை நாம் அடிக்கடி படித்து வருகின்றோம். பெப்ரவரி 12ஆம் திகதி 2012ஆம் ஆண்டு, பிந்திய இரவில், சிறைக்கூடம் தீப்பிடித்துள்ளது. 360 பேருக்கு மேற்பட்ட கைதிகள் தீயில் கருகி மரணித்திருக்கின்றார்கள். நடந்த இடம் ஹொண்டுறாஸ்.
இதே ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அமெரிக்காவின் ஜோஜியா மாவட்டத்துச் சிறையில் நடந்த அராஜகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அம்பலத்திற்கு வந்தன. சிறைக் காவலாளிகள் கைதிகளை மூர்க்கத்தனமாகத் தாக்குதல், பாலியல் சீண்டல்கள், மிக மோசமான வார்த்தைகளால் திட்டுதல் போன்றவற்றை வீடியோ படமாகத் தொலைக்காட்சி காண்பித்தது.
மேலும் ஒரு மாதம் கழித்து, இலங்கையின் வெலிக்கட என்னுமிடத்திலுள்ள சிறைச்சாலையில் பொலீஸ் கமாண்டோ பிரிவினருக்கும், கைதிகளுக்கும் இடையில் வெடித்த மோதலில் குறைந்தபட்சம் 27 கைதிகள் கொல்லப்பட்டார்கள். 43 பேர் காயமடைந்தார்கள்.
அளவுக்கு அதிகமான கைதிகளை ஒரே சிறைச்சாலையில் அடைத்து வைத்தல், மிக மோசமான சுகாதார வசதிகள், கைதிகளைக் காவலாளிகள் துன்புறுத்தல், மிகக் குறைந்த மருத்துவ வசதி, மிகக் குறைந்த அளவு உணவு – குடிநீர் வசதி என்று சிறைச்சாலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பல இருக்கின்றன.
மோசமான நடைமுறைக்குப் பெயர்பெற்ற சிறைச்சாலைகள் உலகெங்கும் இருக்கின்றன. இங்கு போய்விட்டால் அதுவே வாழ்வின் அஸ்தமனம் என்று சொல்லுமளவிற்கு மிக மோசமான சிறைகள் இவை என்று வர்ணிக்கப்படுகின்றன.
பாங்கொங் ஹில்டன் என்று ஏளனமாக வர்ணிக்கப்படும் தாய்லாந்தின் BangKwang மத்தியச் சிறைச்சாலை உலகின் சிறைச்சாலைகளில் மிக மோசமான ஒன்று எனச் சொல்லப்படுகின்றது. இங்கேயுள்ள கைதிகள் குறைந்தபட்சம் 25 ஆண்டுக்காலம் சிறைத் தண்டனை பெற்றவர்கள். அளவுக்கு அதிகமானவர்களைக் கொண்டுள்ள இந்தச் சிறைச்சாலையை தாய்லாந்து மக்கள் ‘பெரிய புலி’ என்று அழைத்து வருகின்றார்கள். இங்குள்ளவர்களில் 10 விழுக்காட்டினர் மரண தண்டனைக்காகக் காத்திருப்பவர்கள். இந்தச் சிறைக்குள் தள்ளப்படுபவர்களை மூன்று மாதக் காலமாவது சங்கிலிகளில் பிணைத்து வைப்பது இங்குள்ள வழமை. மரண தண்டனை பெற்றவர்களோ, இங்குள்ள காலம் முழுவதும் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில்தான் இருக்கின்றார்கள். இந்த நிலையில் கைதிகள் எப்படி இங்கு தமது நாட்களைக் கழித்து வருகின்றார்கள் என்று நம்மால் நன்றாகவே ஊகிக்க முடிகின்றது.
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இன்னொரு மோசமான சிறைச்சாலை கியூபாவின் குவாந்தனாமோ பே (Guantanamo Bay). இந்தச் சிறைச்சாலை மகா மோசமானது. இராணுவத்தினரின் பொறுப்பில் இருக்கும் இந்தச் சிறைக் கைதிகள் மிக மோசமாக உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டு வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. தொடக்கத்தில், போர்க் காலத்தில் பிடிக்கப்பட்ட ஆபுகானிஸ்தான், ஈராக் போராளிகளை இங்கு அடைத்து வைத்து இந்தச் சிறை பயங்கரவாதிகளின் சிறையாக உலகப் பிரசித்தி பெற்றிருந்தது.
அடுத்தது, பிரேசில் நாட்டின் சாவோ பௌலோ (Sao Paolo) நகர்ச் சிறைச்சாலை. மிக மிருகத்தனமான ஒன்று என்று பெயர் பெற்றிருந்த இந்தச் சிறை 2003இல் மூடப்பட்டது. 2003இல் இதே பெயரோடு ஒரு திரைப்படத்தை வெளியிட்டு, இந்தச் சிறையின் கொடுமையை உலகுக்குக் காண்பித்தார்கள். நாட்டின் மிக மோசமான குற்றவாளிகள் இங்கேதான் அடைத்து வைக்கப்பட்டார்கள். இந்தச் சிறைக்கூடம் மூடப்பட்டபோது ஐந்திலொரு பகுதியினருக்கு எயிட்ஸ் பாதிப்பு இருந்தது. மருத்துவ வசதி என்பது இங்கு ஏறத்தாழப் பூஜ்யமாகவே இருந்தது. 1992இல் கைதிகள் இங்கு கிளர்ச்சி செய்தபோது நடைபெற்ற இரத்தக் களரி உலகப் பிரசித்தி பெற்றது. 111 கைதிகள் கொல்லப்பட்டார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களைக் கொன்றது பிரேசில் நாட்டுப் பொலீஸார்தான்!
DIYARBAKIR என்று அழைக்கப்படும் துருக்கி நாட்டுச் சிறைச்சாலையும் மிக மோசமான ஒன்று எனச் சொல்கிறார்கள். பொதுவாக, குருதிஷ் அரசியல் கைதிகளே இங்கு அடைக்கப்பட்டு வந்தார்கள். இங்கு மிக மோசமான சித்திரவதைகள் நடைபெற்று வந்தன. பல எதிர்ப்புக் குரல்களால் இந்தச் சிறையும் மூடப்பட்டது. இதை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம் இருக்கின்றது. வெட்கப்பட வைக்கும் அருங்காட்சியகம் என்றுதான் பெயரிடப் போகிறார்களாம். அந்த அளவுக்கு மோசமான மனித வதைகளைக் கண்டு வெட்கித் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலை என்கிறார்கள்.
Gitarama என்ற பெயர் கொண்ட ருவாண்டா பிராந்தியச் சிறையை உலகின் மோசமான சிறைச்சாலைகளில் முதலிடத்தில் வைத்து விடலாம் எனத் தோன்றுகின்றது. அந்த அளவுக்கு இது மகா மோசமான ஒன்று! இங்கு, அடைத்து வைக்கப்படக்கூடிய தொகையை விட 20 விழுக்காட்டுக்கு அதிகமானவர்கள், சாக்குகளில் கிழங்கு நிரப்பி வைக்கப்பட்டுள்ளதுபோல மிக நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ளார்கள். இங்கு இவர்கள் அனுபவிக்கும் பட்டினிக் கொடுமை எழுத்தில் விவரிக்க இயலாதது. இதனால் உயிரோடு இருக்க, இங்குள்ள கைதிகள் சக கைதிகளைக் கொன்று, உயிரோடு உண்டு வருகிறார்களாம்! பலவான் பிழைப்பான் என்கிற காட்டுச் சட்டம் இங்கே!
இப்படி உலகெங்கும் ஏராளமான சிறைகளில், சிறகொடிந்த சிறைப்பறவைகளாக இருப்பவர்கள் ஏராளம் ஏராளம்!
கொள்ளை, கொலை, கற்பழிப்பு, கள்ளக்கடத்தல் என்று வன்முறைகள் மலிந்து விட்ட இந்த யுகத்தில், சிறைக்குச் செல்பவர்கள் தொகையும் அதிகரித்தபடிதான் இருக்கின்றது. சிறைகளில் ராஜபோகம் என்றால் சிறைக்குச் செல்பவன் திருந்தப் போவதில்லை. எனவே, சிறையில் கடும்போக்கு என்பது நியாயமாகத் தெரிந்தாலும், எல்லை மீறிய கொடுமைகள் மனித உரிமைகளைத் துச்சமாக எண்ணச் செய்கின்றன!
இந்தியாவிலுள்ள சிறைச்சாலைகளே மேலாக உள்ளது. சிறைச்சரலையில் கல்லூரி ப்டிப்பு, மேற்படிப்புகள் எல்லாம் நன்றாக உள்ளது இங்கு. வெளி நாட்டு சிறைவாசத்தை நினைத்தால் பாவம் ஆண்டவர் காப்பாற்றட்டும்