ஸுன் லீ காட்டில் வசித்தாள். ஒவ்வொரு நாள் காலையிலும் அவள் தன் வேலைகளை முடித்து விட்டு உலாவப் போவாள். சில நேரங்களில் அவள் தரையில் விழுந்திருந்த மரப் பொந்தில் ஒரு நரி ஓடுவதைக் காண்பாள். வேறு நேரங்களில் அணில்கள் கொட்டைகளைச் சேகரிப்பதைக் காண்பாள். கிளைகளில் இருந்தபடி கூவிடும் குயில்களையோ கூடப் பார்ப்பாள். அழகிய வண்ணத்துப் பூச்சிகள் எப்போது பறக்கும். வண்டுகள் கிரிஸந்தமம் போன்ற பல்வகைப் பூக்களின் மீது பறந்து ரீங்கரிக்கும்.
ஒரு நாள், ஸுன் லீ ஒரு பறவைக் கூடு தரையில் கிடக்கக் கண்டாள். அதற்குள் மூன்று வெண்முட்டைகள் இருந்தன. மெதுவாகக் குனிந்து பார்த்தாள். உட்கார்ந்து ஆராய்ந்தாள். கூட்டையும் முட்டைகளையும் வந்து காக்க எந்தத் தாய்ப் பறவையும் வரவில்லை. ஆகவே, ஸுன் லீ கூட்டை முட்டைகளுடன் எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் போனாள். "அம்மா, இதோ பாருங்க. நான் என்ன கொண்டு வந்திருக்கிறேன் என்று பாருங்க", என்று அம்மாவிடம் காட்டினாள். "அம்மாப் பறவை காட்டிற்குள் கொடிய விலங்குகளால் கொல்லப் பட்டிருக்கும். அம்மா, இதை நான் வைத்துக் கொள்ளவா?", என்று கேட்டாள்.
"அது என்ன சாதாரண வேலையா? உன்ன மாதிரி சின்னப் பொண்ணுக்கு இதெல்லாம் என்ன தெரியும்? அவை குஞ்சு பொறித்ததும் அவற்றை வெப்பத்துடன் வைக்க வேண்டும். உண்ண அவற்றுக்கு உணவு கொடுக்க வேண்டும். அது எல்லாவற்றையும் விட முக்கியமா ஒண்ணு இருக்கு. நீ ஆசையா வளர்த்து விட்டு பிறகு, அவை பறந்து போகும். அப்போது நீ வருந்துவாய். பறவைகள் சுதந்திரமாகப் பறக்க வேண்டும். இல்லையா?", என்றார் அம்மா.
"ம், சரி. நான் இந்தக் கூட்டையும் முட்டைகளையும் பாதுகாப்பேன்."
தினமும் ஸுன் லீ முட்டைகள் போதிய வெப்பத்துடன் இருக்கின்றனவா என்று சோதித்துக் கொண்டாள். சுள்ளிகளால் ஆன கூட்டிற்குள் முட்டைகளை வைத்திருந்தாள். பகலில் சூரிய ஒளி படுமாறு வைத்தாள். இரவில் கம்பளியைப் போர்த்தி வைத்தாள். ஒரு நாள், ஒரு முட்டையின் மீது ஒரு விரிசலைக் கண்டாள். "அம்மா, முட்டைகள் குஞ்சு பொறிக்கப் போகின்றன", என்று சொன்னாள் ஸுன் லீ அம்மாவைக் கூப்பிட்டு. அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. சிரித்துக் கொண்டே இருந்தாள்.
அவளுடைய அம்மா வந்து பார்த்தார். "ஆமாம், ஸுன் லீ இவை குஞ்சு பொறிக்கத் தயாராகி விட்டன. கவனமாகப் பார்த்துக் கொள். தொடாதே. அவற்றுக்கு உதவாதே. தாமே அவை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தால் வலுவுடன் இருக்கும். நீ உதவினால், அவை வலுவற்று இருக்கும்", என்று எச்சரித்தார்.
அவளுக்கு ஒன்றுமே செய்யாமல் இருப்பது எளிதாக இல்லை. இருந்தாலும், ஸுன் லீ பொறுமையாக உட்கார்ந்து குஞ்சுகள் வெளியேறுவதை கவனித்தாள். சீக்கிரமே, கூட்டுக்குள் புசுபுசுவென்ற நான்கு குஞ்சுகள் இருந்தன. பழுப்பு நிறத்தில் முதலில் அவை ஈரமாக இருந்தன. பிறகு அவற்றின் இறகுகள் காய்ந்ததும், அவை மஞ்சள் நிறத்தில் மென்மையாக இருந்தன. ச்சிர்ப்! ச்சிர்ப்! ச்சிர்ப்!
சில மணி நேரங்கள் போனதும், கூட்டை விட்டு வெளியாகும் பலத்தைப் பெற்றிருந்தன. "வெளியில் கொண்டு போய் அவற்றுக்கு விதைகள் பொறுக்குவது எப்படி என்று காட்டு. தரையில் கொஞ்சம் தானியங்களைத் தூவி விடு. அவை தாமே தேடி எடுக்கட்டும். மிக அருகில் போடாதே. கொஞ்சம் வேலை வாங்கு. அதுதான் அவற்றை உறுதியாக்கும்", என்றார் அம்மா.
ஸுன் லீ அம்மா சொன்னது போலவே செய்தாள். கொல்லைப் புறத்துக் கொண்டு போனாள் அந்த குஞ்சளை. புற்களின் மீது விட்டாள். கொஞ்சம் விதைகளை புற்களெங்கும் தூவினாள். அவை போய் தேடித் தின்னட்டும் என்று பார்த்தபடியே காத்திருந்தாள். முதலில் குஞ்சுகள் கண்டபடி அலைந்தன. அவற்றால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவற்றுக்கு விதைகளைக் காட்ட ஸுன் லீ நினைத்தாள். ஆனால், அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. ஆகவே, பேசாமல் இருந்தாள். கொஞ்ச நேரத்தில் நான்கு குஞ்சுகளும் கொத்தித் தின்றன.
ஒவ்வொரு நாளும் அவை பெரிதாகிக் கொண்டே வந்தன. நிறைய தின்றன. மேலும் பெரிதாகின. ஸுன் லீ ஒரு வாளி நிறைய தானியம் எடுத்துக் கொண்டு போய் அவற்றுக்கு வைத்தாள். சில நேரங்களில் குஞ்சுகளுக்கு கொழுத்த புழுக்கள் கிடைக்கும். அப்போது அவசர அவசரமாக அவை புழுவை விழுங்குவதைப் பார்த்து ஸுன் லீ சிரித்தாள்.
அம்மா வெளியில் வந்து பார்த்தார். "சீக்கிரமே சிறகுகள் விரித்துப் பறக்க ஆரம்பிக்கும். அவை பறக்க நீ விட வேண்டும். கல்லில் மோதினாலோ கீழே விழுந்தாலோ கூட நீ அவை பறக்க அனுமதிக்க வேண்டும் ஸுன் லீ. புரிந்ததா?", என்றார் அம்மா.
"சரிம்மா."
ஒரு நாள், இரண்டு பளீர் வண்ண வண்ணத்துப் பூச்சிகள் அவ்வழியில் பறந்தன. ஒரு குஞ்சு அதன் பின்னால் ஓடியது. ஸுன் லீ சிரித்துக் கொண்டே பார்த்தாள். குஞ்சு தன் இறகுகளை அடித்துக் கொண்டதைப் பார்த்த ஸுன் லீ ஆச்சரியப் பட்டாள். "அம்மா, வெளியில வந்து பாருங்க. குஞ்சு பறக்க முயற்சிக்கிறது", என்று கூவினாள்.
அம்மா வெளியில் வந்து பார்த்தார். "ஸுன் லீ அவை இனி குஞ்சுகள் இல்லை. பார், பறவைகளாகி வருகின்றன. சீக்கிரமே, காட்டிற்குள் பறந்து போகும்."
அவை போவதை ஸுன் லீ விரும்பவில்லை. அவளுக்கு பறவைகளின் மீது அதிக பற்று ஏற்பட்டிருந்தது. அம்மா முன்பு சொன்னது மிகவும் உண்மை. சில நாட்கள் கடந்தன. நான்கு பறவைகளும் சிறகுகளை அடித்துப் பறக்க முயற்சித்தன. சில அடி உயரம் பறந்து கீழே விழுந்தன. சிறகுகளை விரிக்க ஸுன் லீ அவற்றைத் தனியே விட்டாள்.
ஒரு வாரம் போனதும், ஸுன் லீ வெளியே பறவைகளுக்கு தீனி போடப் போனாள். அவற்றுக்கென்று தனி வீடு ஏற்கனவே தயாரித்திருந்தாள். வாளியைத் தூக்கிக் கொண்டு போனாள். "வாங்கடா செல்லங்களா", என்று கூப்பிட்டாள். பறவைகள் அங்கு இல்லை. "எங்கடா போயிட்டீங்க?", என்று கேட்டாள். எல்லா இடமும் தேடினாள். ஆனால், எங்குமே பறவைகள் இல்லை. "பறந்து போய் விட்டன", என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள். "என்னிடம் விடை பெறக் கூட இல்லையே", என்று எண்ணி வருந்தினாள். அப்படியே புல்லின் மீது அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
அப்போது, ‘ச்சிர்ப்! ச்சிர்ப்! ச்சிர்ப்!’ சத்தத்துடன் நான்கு பறவைகளும் மரத்தின் மேல் கிளையிலிருந்து கீழே பறந்து வந்தன. பாறை ஒன்றின் மீது அமர்ந்தன. ‘எத்தனை பெரியதாக வளர்ந்து விட்டன’ என்று யோசித்தாள் ஸுன் லீ. அவற்றின் இறக்கைகள் வெள்ளையும் அடர் பழுப்புமாக இருந்தன. மிக அழகாக இருந்தன. ச்சிர்ப்! ச்சிர்ப்! ச்சிர்ப்! சேர்ந்து இசைத்தன. மிக அழகிய ஒரு பாடலை ஸுன் லீக்கென்றே பாடியதைப் போலக் கூவின. பிறகு, காட்டிற்குள் பறந்து போயின.
"பை பை டா செல்லங்களா. சுதந்திரமாப் பறந்து போங்க. கவனமா இருக்கணும், ம் என்ன?", என்று அவற்றை வழி அனுப்பி வைத்தாள். அவை மரங்கள் பல கடந்து பறப்பதைப் பார்த்தாள். "சிறகுகள் விரித்துப் பற", என்று கத்தினாள். கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
அவளின் அம்மா சன்னலிலிருந்து பார்த்தார். அவரின் கண்ணிலும் ஒரு சிறு கண்ணீர்த் துளி உருண்டது. ஸுன் லீ வருந்துவாள் என்று அவருக்குத் தெரியும். ஆனால், தன் மகளைப் பார்த்து அவருக்குப் பெருமையாக இருந்தது. குஞ்சுகளை அழகாகப் பராமரித்துக் காத்து வளர்த்து உரிய நேரத்தில் அவை சுதந்திரமாகப் பறக்க விட்ட தன் மகளை நினைத்து நெகிழ்ந்தார்.
(‘மீன்குளம்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“