சிபி (9)

திருச்சி.

திருச்சிராப்பள்ளி என்கிற புராதனப் பெயரைக் கொண்ட திருச்சி.

மலைக்கோட்டை, மெய்ன்காட் கேட், மாம்பழச்சாலை போன்ற காதல் ஸ்தலங்களையும் ஸ்ரீரங்கம், சமயபுரம், சீத்தாலக்ஷ்மி ராமசாமிக் கல்லூரி போன்ற புனித ஸ்தலங்களையும் உள்ளடக்கிய திருச்சி.

ஸ்ரீரங்கமும் சமயபுரமும் புனித ஸ்தலங்கள் சரி, சீத்தாலக்ஷ்மி ராமசாமிக் கல்லூரி?

அது… வந்து… நம்ம சிநேகிதி படித்த கல்லூரி.

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்ட சிநேகிதி.

சிநேகிதியா, காதலியா?

கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால் காதலி. கல்யாணம் கைகூடாமற் போனால் சிநேகிதி.

பிற்காலத்தில், நான் வசித்த தூத்துக்குடிக்கு அவளுடைய கல்யாண அழைப்பு தபாலில் வந்தபோது, சோக சோகமாய் ஒரு கவிதை எழுதத்தான் முடிந்தது.

மான்விழியால் மயக்கி என்னை

வான்வெளியில் மிதக்கவிட்ட

தேன்மொழியாள் யார் எனக்கு

சிநேகிதியா, காதலியா?

சரி. காதல் (அல்லது சிநேகித) சமாச்சாரங்களில் ஆழமாய்ப் போவது ஓர் அரசியல் நாவலின் வரம்புகளை மீறுவதாகும் என்றொரு குற்றச்சாட்டு எழலாம். வரம்புகளை மீறக்கூடாதுதான். ஆனாலும் என் நாடி நரம்புகளைச் சிலிர்க்கச் செய்கிற அந்த வசந்த கால, மலராமற் போன நினைவுகளை அவ்வப்போது நீவி விடுவதில் சின்னதாய், சோகமாய் ஒரு சுகம். தயவு செய்து அனுமதியுங்கள்!

அந்தக் கவிதைக் காகிதம் கூட வாப்பாவிடம் வசம்மாய்ச் சிக்கி எனக்குத் திட்டுகள் வாங்கித் தந்தது. குட்டுகள் அல்ல, வெறும் திட்டுகள்தான். குட்டுகளையெல்லாம் வாப்பா கட்டுப்படுத்திக் கனகாலம் ஆகிவிட்டிருந்தது.

திருச்சியில், ஜமால் முஹம்மது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வாப்பாவிடம் ரொம்பச் செல்லம். தன்னுடைய ஸ்டாண்டர்டு 10 காரில் பத்து ரூபாய்க்குப் பதிமூணு லிட்டர் பெட்ரோல் போட்டு எனக்குக் காரோட்டக் கற்றுக் கொடுத்தார் வாப்பா.

என்னது, என்னது? பத்து ரூபாய்க்குப் பதிமூணு லிட்டர் பெட்ரோலா!

ஆமா, ஆமா, ஆமா. பதிமூணு லிட்டர், பத்தே பத்து ரூபாய்தான். இப்போது அதே பதிமூணு லிட்டர் ஆயிரம் ரூபாய். பத்துக்குப் பின்னால் ரெண்டே ரெண்டு ஸைஃபர். அம்புட்டுத்தான்.

காரோட்டக் கற்றுக்கொண்டு, லைசன்ஸ் வாங்கின சில வாரங்களிலேயே வாப்பாவுடைய காரில் டபுள்ஸ் போக ஆரம்பிச்சாச்சு. டிரைவர் ஸீட்டில் நான், பக்கத்தில் நம்ம சிநேகிதி.

ஹஜ்ஜுக்குப் போய் வந்த பிறகு வாப்பா சினிமா பார்ப்பதை விட்டு விட்டார். ஊட்டியில் இருந்தபோது, அசெம்ளி ஹால் தியேட்டரில் பார்த்த ஷான் கானரியின் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான ‘டாக்டர் நோ’தான் குடும்பத்தோடு வாப்பா பார்த்த கடைசிப் படம்.

இங்கே திருச்சியில் எத்தனை தியேட்டர்கள் இருக்கின்றன, எங்கெங்கே இருக்கின்றன என்கிற விவரங்களெல்லாம் வாப்பாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதற்கு அவசியமும் இருக்கவில்லை. சினிமாவுக்குக் கூட்டிக்கொண்டு போவதற்கு வாப்பா எதற்கு அநாவசியமாய்? அதற்குத்தான் நம்ம சிநேகிதி இருக்கிறாளே! ஆனால், சிநேகிதியோடு சினிமா பார்த்த வெலிங்டன், ஜுபிடர் தியேட்டர்களெல்லாம் இப்போது இல்லை என்பது ஒரு கூடுதல் சோகம். சென்னையில் திரையரங்குகள் தகர்க்கப்படுவதைப் போலத் திருச்சியிலும் தகர்க்கப்பட்டு விட்டன. ராக்ஸி, ஸென்ட்ரல், ப்ளாசா, பாலாஜி, பாலஸ், ஜுபிட்டர் எல்லாம் காணாமல் போய்விட்டன.

ஆனால் பிரபாத் தியேட்டர் இன்னும் உயிருடன் இருக்கிறது என்று சொன்னார்கள். ‘ராமன் எத்தனை ராமனடி’ நான் முதல் நாள் முதல் காட்சி பார்த்த பிரபாத் தியேட்டர்.

ராமன் எத்தனை ராமனடி படம் தயாரிப்பிலிருந்தபோது, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுக்கெதிராய் ஒரு வேண்டாத வீர வசனத்தைப் பேசி விட்டார், ஓர் அரசியல் மேடையிலே. சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி, சிவாஜியும் எம்.ஜி.ஆரும் எதிரெதிர் அணியில், விரோதத்திலும் குரோதத்திலும் உச்சத்திலிருந்த காலக்கட்டம் அது.

எம்.ஜி.ஆர் என்ன வசனம் பேசினார்?

"சிவாஜி கணேசன் அரசியல் அறியாதவர்."

நடிகர் திலகத்திடம் யாராவது வசனம் பேசிவிட்டுத் தப்பித்து விட முடியுமோ!

எம்.ஜி.ஆர் மேடையில் பேசியதற்கு சிவாஜி கணேசன் திரையில் திருப்பிக் கொடுத்தார்.

ராமன் எத்தனை ராமனடி படத்துக்குள்ளே, வீர சிவாஜி படத்தின் படப்பிடிப்பு. ஷூட்டிங்கில் வீர சிவாஜி கர்ஜிக்கிறார், குலோஸ் அப்பில்.

"அரசியலை நான் அறியாதவனா? ஹ? அரசியல் எனக்குத் தெரியாதா? ஹ ஹ?"

தியேட்டருக்குள் கைதட்டல், விசில், கரகோஷம்.

இது பலப்பல வருஷங்களுக்கு முந்தி. அது போன்ற கரகோஷங்கள் இப்போது எழுந்தால், பிரபாத் தியேட்டரின் சுவர்கள் கழண்டு விழுந்துவிடும்.

கை தட்டித் தட்டி எனக்கு உள்ளங்கைகள் ரெண்டும் காய்த்துப் போயின.

காரோட்டவும் காதல் வசப்படவும் கற்றுக் கொண்டிருந்தவன், இத்தனை வயசாகியும் விசிலடிக்கிற கலையைக் கற்றுக் கொள்ளவேயில்லையே என்று ரொம்ப வெட்கமாயிருந்தது.

சிவாஜி கணேசனுடைய 150ஆவது திரைப்படம், ‘சவாலே சமாளி’.

நான் திருச்சியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலா அந்தப் படம் ரிலீஸ் ஆக வேண்டும்? ரிலீஸ் ஆச்சு சரி, திருச்சி மாநகரத்திலா மாநிலம் தழுவிய அந்த 150 ஆவது பட விழா நிகழ வேண்டும்? நிகழ்ந்தது. அதெல்லாம் சரி, காலையில் நான் காரோட்டிக் கொண்டு காலேஜுக்குப் போகிற பாதையிலா சவாலே சமாளி ஊர்வலம் போக வேண்டும்? போச்சு.

நான் என்ன செய்தேன்? அந்த இக்கட்டான சூழ்நிலையில் திக்கற்ற மாணவனொருவன் என்னதான் செய்ய முடியும்?

காரை ஓரங்கட்டிவிட்டு ஊர்வலத்தைப் பரவசத்தோடு பராக்குப் பார்த்தேன். படத்தின் இயக்குநர் மல்லியம் ராஜகோபால் வெற்றிப் பெருமிதத்துடன் காரில் போய்க் கொண்டிருந்தவர், ரசிகர்களால் வழிமறிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டார்.

"இந்தப் படை போதுமா இன்னுங் கொஞ்சம் வேணுமா" போன்ற சவால் கோஷங்களோடு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஊர்வலம் போய்க் கொண்டிருக்க, பல்லாயிரத்தி ஒண்ணாக நானும் இணைந்து கொண்டேன், காதல் வாகனத்தை சாலையோரம் அநாதையாய் விட்டு விட்டு. காலேஜுக்கு செம லேட். அதுக்கென்ன, எத்தனை காலைகளில் நம்ம சிநேகிதியை அவளுடைய கல்லூரியில் இறக்கி விட்டு விட்டு நான் கிலாசுக்கு லேட்டாய்ப் போயிருக்கிறேன்!

சின்னதாய் ஒரு தியாகம், சிவாஜி கணேசனுக்காக. பின்னொரு காலத்தில் நம்ம கட்சியின் மாநிலத் தலைவராய் வரப்போகிற சிவாஜி கணேசனுக்காக.

அன்றைக்குச் சாயங்காலம், பிஷப் ஹீபர் காலேஜ் மைதானத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனுடைய பிரமாண்டமான பாட்டுக் கச்சேரி. சோவுடைய முஹம்மது பின் துக்ளக் படத்தில் வருகிற ‘அல்லா அல்லா’ பாடல்தான் அப்போது ரொம்பப் பிரபலம். ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று ரசிகர்கள் ஆனந்தத் தொல்லை தர, எம்.எஸ்.விஸ்வநாதன் மறுபடி மறுபடி ‘அல்லா அல்லா’ பாடிக் கொண்டிருந்தார்.

"எங்க போய்ட்டு வாற?” என்று ராத்திரி வாப்பா கேட்டபோது, ‘அல்லா அல்லா’ என்றுதான் எனக்கு வாயில் வந்தது. வாப்பாவுக்கு சந்தோஷம். நல்ல பிள்ளை, மசூதிக்குப் போய்விட்டு வருகிறான் என்று நினைத்திருப்பார்.

புதுக்கோட்டை, ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர், விராலிமலை, துவரங்குறிச்சி என்று அடிக்கடி கேம்ப் போய் வருவார் வாப்பா. ராத்திரி ஒன்பது மணிக்கு மேல் கிளம்பித் தன்னந்தனியாய்க் காரோட்டிக் கொண்டு போவார். விடுமுறை தினங்களில் அவர் கேம்ப் கிளம்புகிறபோது என் முன்னே அந்தக் கான்வென்ட் காலக் கேள்வியை வைப்பார்: “நாளக்கி டெஸ்ட் இருக்கா?” நான் ஆமா என்று சொன்னாலும் சரி, இல்லை என்று சொன்னாலும் சரி, அவருடைய அடுத்த வாக்கியம் ஒரே மாதிரிதான் இருக்கும் எப்போதும்.

"சரி சரி, கௌம்பு. வந்து படிச்சிக்கலாம்."

மின்சாரம் போய்ச் சேர்ந்திராத கிராமங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு சேர்த்து, அந்த ரூரல் எலக்ட்ரிஃபிக்கேஷனை ஒரு விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருந்த ஸீசன் அது. சரியான சாலை வசதி இல்லாத கிராமத்துக்குக் கூட மின்சாரம் போய்ச் சேர்ந்திருந்தது.

மின்சாரம் சாலை வழியாகவா போகிறது? கம்பி மார்க்கமாய்த்தானே போகிறது! ஆனால், அந்தக் கிராமத்துக்கு நாங்கள் கம்பி மார்க்கமாய்ப் போக முடியாது. சாலை வழியாய்த்தான் போய்ச் சேர முடியும். சில இடங்களில் ஆற்றைக் கடந்து போக வேண்டியிருக்கும். தமிழ்நாடு மின் வாரியத்தின் வில்லீஸ் ஜீப், முட்டளவுத் தண்ணீரில் சரளைக் கற்கள் பாவிய ஆற்றுப் படுகையில் பயணிக்கும். கூடுதலாய் ரெண்டு கியர் ராடுகள் பொருத்தப்பட்ட ஃபோர் வீல் டிரைவ் ஜீப். குட்டி கியர் ராடுகளில் ஒன்றை, டிரைவரானவர் அமுக்கி மற்றதைத் தூக்கிவிட்டவுடன் நான்கு சக்கரங்களும் சுழல ஆரம்பிக்க, படகு மாதிரி தண்ணீரைக் கிழித்துக்கொண்டு ஜீப் முன்னேறும். அக்கரையை அடைந்து, குக்கிராமத்துக்குப் போய்ப் பார்த்தால், அமைச்சர் பெருமக்கள் ரெண்டு பேர் எங்களுக்கு முந்தியே போய்ச் சேர்ந்திருப்பார்கள். ஆற்றையெல்லாம் கடக்காமலே, தஞ்சாவூர் – கும்பகோணம் – நாகூர் மார்க்கமாய் ஷாட்கட்டில் போய்ச் சேர்ந்திருப்பார்களோ என்னவோ!

மின்சாரத்துறை அமைச்சர் ஓ.பி.ராமனும், திருச்சி மாவட்ட லோக்கல் அமைச்சர் அன்பில் தர்மலிங்கமும்.

அவர்களுக்கு முந்தியே, தன்னுடைய சகல வசதிகளும் பொருந்திய சொகுசு வேனில் ஈ.வெ.ரா.பெரியாரும் அவருடைய செல்ல நாயும் போய் ஸெட்டில் ஆகியிருப்பார்கள்.

அமைச்சர்களோடும் தந்தை பெரியாரோடும் அவருடைய குட்டி நாயோடும் மேடையிலிருப்பார், மேற்பார்வைப் பொறியாளரான நம்ம வாப்பா.

பெரியாருக்கும் இவருக்கும் நடுவில் நாய் வந்து உட்கார்ந்து கொள்கிறபோதோ, அல்லது பெரியாரும் அவருடைய நாயும் ஒரே டம்ளரில் காஃபியைப் பகிர்ந்து குடித்துக் கொள்கிறபோதோ வாப்பா முகஞ்சுளிக்கவே மாட்டார். என்ன, திடீர் திடீரென்று மேடையிலிருந்து காணாமற் போய் விடுவார். எங்காவது ஒரு மறைவான இடத்திலிருந்து தொழுகை புரிந்து கொண்டிருப்பார்.

ஆண்டவனுக்குப் பிறகுதான் அமைச்சர்கள் அவருக்கு.

சில வருடங்கள் முன்பு வரை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், காமராஜரைப் பச்சைத் தமிழன் என்று புகழ்ந்து தள்ளியவர் பெரியார். திராவிட முன்னேற்றக் கழகத்தினரைக் கண்ணீர்த் துளிகள் என்று கடிந்து கொண்டிருந்தவர். அதற்கென்ன? இப்போது எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி.

பெரியாருக்கு விசேஷமான செல்லப் பெயரொன்று இருந்தது: ஆள்வார்க்கடியார்.

விடுமுறை நாட்களில் வாப்பாவோடு வெளியூர் போய்விட்டால் இங்கே சிநேகிதியோடு சந்திப்பு ஒத்திப் போகுந்தானே!

"ஒங்க ஸிஸ்டரப் பக்கத்ல வச்சிக்கிட்டு என்னப் பாத்து அப்டி சிரிச்சீங்களேம்மா இது தர்மமா?"

"ஸிஸ்டர் மட்டுமில்ல, அவ எனக்கு ஃப்ரண்ட் கூட. ஒங்களுக்கு ஒரு மேட்டர் தெரியுமோ? ஒங்கள மொத மொதல்ல எனக்குக் காட்டிக் குடுத்தவளே அவதான். பஸ் ஸ்டாப்ல ஒங்களப் பாத்துட்டு ஹாண்ஸம்மா ஒரு பையன் நிக்கிறாம் பாருக்கா, ஒனக்குக் கரெக்ட்டா இருப்பான்னு அவதான் சொன்னா. அப்புறந்தான் ஒங்களப் பாத்து நா பல்லக் காட்னேன்."

"ஹா! அந்த சின்னப் பாப்பா என்னப் பாத்துப் பையன்னா சொன்னா?"

"அதுல ஒண்ணும் தப்பில்ல. ஹாண்ஸம்னு சொன்னாளே, அதான் தப்பு"

"ஒதப்பேன்! நா அழகா இல்லியா?"

"கோச்சிக்காதிங்க சார், சும்மா ஜோக்கிங். கொஞ்ச நாள்ள பார், ஒன்ன ஸைட் அடிக்கிறதுக்கு நம்ம வீட்டு வாசல்ல ஒரு இளைஞர் பட்டாளம் கியூல நிக்யப் போகுது பார்னு மோஹன் சொல்லிட்டிருக்கு."

"மோஹன்?"

"எங்கண்ணன். என்ன ஸைட் அடிக்கிறதுக்கு எங்க வீட்டு முன்னால ஒரு கியூ ஃபாம் ஆகறதுக்கு முந்தியே நா ஒங்கள ஸைட் அடிச்சேன்னா, நீங்க ஹாண்ஸம்னுதானே பாஸ் அர்த்தம்? அது மட்டுமில்ல, எப்பவுமே நீங்க ஃப்ரஷ்ஷா இருப்பீங்க. ஐ லைக் தட், மை பிரின்ஸ்ச் சாமிங்."

"பிரின்ஸுமில்ல, ச்சாமிங்குமில்ல. அன் பார்லிமென்ட்ரியால்லாம் பேசாதீங்க. நா ஒரு சாமான்யன். இந்த பூலோக மனிதன். நீங்கதான் தேவதை. தேவலோக ஏஞ்ஜல். அம்மாடி, என்ன கண்ணும்மா இது!"

"யார் கண்ணு?"

"ஒங்க கண்ணுதான். முஹம்மது ரஃபி பாடின ஹிந்திப் பாட்டு ஒண்ணு இருக்கு. ‘தேரே ஆங்க்ஹோங்கே சிவா துனியாமே ரக்ஹா க்யா ஹை’ன்னு."

"சிவான்னா, சிவபெருமானப் பத்தியா?"

"ஹையோ ஹையோ! ஒரு அட்சரம் கூட ஹிந்தி தெரியாதா?"

"நீங்க வீட்ல உர்து பேசறீங்க. ஒங்களுக்கு ஹிந்தி தெரிஞ்சிருக்கும். எனக்குத் தெரிஞ்சிருக்க என்ன ஞாயம் இருக்கு? அர்த்தம் சொல்லுங்களேன் ப்ளீஸ்!"

"உன்னுடைய கண்களையல்லாமல் இந்த லோகத்தில் வேற என்னதான் இருக்கிறதுன்னு அர்த்தம்."

"யாருடைய கண்கள்?"

"ம்? விளக்கமா விவரமா சொல்லணுமாக்கும்? எல்லாம் ஒங்க கண்ணுதான். இந்தக் கண்கள விட்டா எனக்கு வேற கண்களத் தெரியவும் தெரியாதேம்மா!"

"ஓஹ்ஹோ!"

"அது மட்டுமில்லம்மா, ஒரு முக்கால் நிமிஷம் ஒங்க மொகத்தப் பார்த்துட்டிருந்தா எனக்கு மயக்கம் மயக்கமா வருது தெரியுமா!"

"ம். அப்புறம்?"

"முக்கால் நிமிஷம்னு சொன்னது ஒரு மிகைப்படுத்தல். கால் நிமிஷத்லயே நேக்குக் கிறக்கம் வந்துருது. சும்மா ஒரு மோனை நயத்துக்காக முக்கால் நிமிஷம்னு சொன்னேன்."

"மோனை நயமா? அப்டீன்னா?"

"ஹிந்தி தெரியாதுன்னீங்க, சரி. தமிழ்லயும் சூன்யமா?"

"நா ஒரு இங்லீஷ் லிட்ரேச்சர் ஸ்ட்யூடன்ட். ஷேக்ஸ்பியர், கீட்ஸ், ஷெல்லி, பெர்னாட் ஷான்னா பிச்சு ஒதறிருவேன் தெரியுமா? If winter comes, can spring be far behind-ன்னா தெரியுமா ஒங்களுக்கு?"

"ம்ம். தெரியாது. நீங்களே சொல்லுங்க."

"சொல்ல மாட்டேன். காலம் வரும்போது நீங்களே தெரிஞ்சிக்குவீங்க."

"காலம் வரும்போது தெரிஞ்சிக்கிறேன். இப்போதக்கி ஒங்க ஃபோட்டோ ஒண்ணக் குடுத்தீங்கன்னா அதப் பாத்துக்கிட்டே நா சதா சர்வ காலமும் மயக்கத்லயே இருப்பேன்ல."

மேற்கண்டவாறு அமைந்த காதல் வசனங்கள் அல்லது சிநேகித உரையாடல்களெல்லாம் சில வாரங்கள் பின் தங்கிப் போய் விட்டன, பட்டி தொட்டிகளுக்கு மின்சாரம் வழங்க நான் போய் விட்டதால்.

புகைப்படப் பரிமாற்றம் கூடப் பின்தங்கி விட்டிருந்தது. அவளுடைய புகைப்படத்தைப் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருக்கிறவனாகவும், அவ்வப்போது அதை எடுத்துப் பார்த்துக் கிறக்கங் கொள்கிறவனாகவும், அவளுடைய வசீகர முகத்துக்கொரு முத்தங் கொடுத்துப் பரவசங் கொள்கிறவனாகவுமிருந்தேன்.

குளிர் காலம் வரும் என்றால், வசந்த காலமும் வந்துதானே ஆகவேண்டும் என்றாள்.

கோடை காலம், குளிர் காலம், கார் காலம் என்று எல்லா bore காலங்களும் வரிசையாய் வந்து போய்க் கொண்டிருந்தன.

ஆனால், அவள் சொன்ன வசந்த காலம் வரவேயில்லை.

ஆனாலும் அவளுடைய புகைப்படத்தைப் பாதுகாப்பாய் வைத்திருந்தேன்.

அந்த எழிலரசியின் புகைப்படம் சில வருடங்களுக்குப் பின்னால் கிழிபடும், என் பொண்டாட்டி கைகளால் என்கிற தீர்க்கதரிசனம் அப்போது சத்தியமாய் எனக்குத் தோன்றவில்லை.

ஆனால், வேறொரு தீர்க்கதரிசனம் தோன்றியது. அரசியல் தீர்க்கதரிசனம். தேர்தல் முடிவுகள் பற்றிய தீர்க்கதரிசனம். 1971ஆம் வருடச் சட்டமன்றத் தேர்தல்.

தேர்தல் முடிவுகள் பற்றிய தீர்க்கதரிசனம் எனக்கு மட்டுமா தோன்றியது? பெருந்தலைவர் காமராஜருக்குத் தோன்றியது. மூதறிஞர் ராஜாஜிக்குத் தோன்றியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குத் தோன்றியது. துக்ளக் ஆசிரியர் சோவுக்குத் தோன்றியது. தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகளுக்குத் தோன்றியது. தமிழ் நாட்டு வாக்காளர்களில் முக்கால்வாசிப் பேருக்குத் தோன்றியது.

அன்றைக்கு நான் அறிந்திராத, இன்றைய நம்ம மாநிலத் தலைவருக்குக் கூடத் தோன்றியிருக்கும்.

ஆனால், இந்த ஒட்டு மொத்த தீர்க்கதரிசனமும் பொய்த்துப்போனது மஹாப் பெரிய துயரம். மத்தியில் ஆட்சியிலிருந்த இந்திராக் காங்கிரசும் மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த தி.மு.க-வும் அமைத்திருந்த அதிகார வர்க்கக் கூட்டணி, பெருந்தலைவர் காமராஜருடைய ஸ்தாபனக் காங்கிரசும் மூதறிஞர் ராஜாஜியுடைய சுதந்திராக் கட்சியும் இணைந்திருந்த அற்புதமான கூட்டணியை அநியாயமாய்த் தோற்கடித்து விட்டது.

சாராயக் கடைகளையும் கள்ளுக் கடைகளையும் சகட்டு மேனிக்குத் திறந்து விட்டு, ஆல்கஹால் வாடையையே அறியாமலிருந்த ஒரு தலைமுறையையே பாழ்படுத்திய ஒரு அரசாங்கத்தைத் திரும்பவும் இந்த மக்கள் எப்படி ஆட்சியில் அமர்த்தினார்கள் என்று ஆச்சர்யமாயும் அருவெறுப்பாயுமிருந்தது.

அந்த ஆச்சர்யமும் அருவெறுப்பும் இன்று வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கிற அவலம் போன வருஷம் நம்ம கட்சியின் மாநாட்டுக்காகத் திருச்சிக்குப் போயிருந்தபோது அடித்துப் போட்டது என்னை.

கட்சி மாநாடு நிறைவடைந்த பிறகு, கட்சித் தோழர்கள் யாரும் அறியாதபடி நைசாய் நழுவி, நம்ம சிநேகிதி வாழ்ந்திருந்த வீதியிலெல்லாம் காலார நடந்து முறைப்படி அளந்து விட்டு, அவளோடு நான் ‘உத்தரவின்றி உள்ளே வா’ பார்த்த வெலிங்டன் தியேட்டர் தகர்க்கப்பட்டுத் தரிசாய்க் கிடப்பதைக் கண்டு சோகங் கொண்டாடி விட்டு, இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் வருகிற காதல் ஸ்தலங்களையும் புனித ஸ்தலங்களையும் ஒரு நோஸ்டால்ஜியாவோடு தரிசித்து முடிக்கிறபோதுதான் நினைவு வந்தது, ராத்திரி ராக்ஃபோட்டில் நம்ம டிக்கட் வெய்ட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறதே, உடனடியாய்ப் போய், ஸ்டேஷனை அடுத்திருக்கிற ரயில்வே அலுவலகத்தில் ஈ.கியூ கொடுக்க வேண்டுமே என்று.

திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, ஸ்டேஷனுக்கு முந்தின சாலையின் வலது பக்க நடைமேடையில், வறுமைக் கோட்டுக்கு ரொம்ப ரொம்பக் கீழே, அதல பாதாளத்தில் கிடக்கிற ஒரு பத்துப் பதினஞ்சு மக்கள் உட்கார்ந்திருந்ததைப் பார்க்கப் பாவமாயிருந்தது. வசிக்க ஒரு வீடு இல்லாதவர்கள். அடுத்த வேளைச் சோத்துக்கு வழியில்லாதவர்கள். இந்த அப்பாவி மக்களுக்கு ஒருவேளை உணவுக்காவது நான் உதவமுடியுமானால் எவ்வளவு புண்ணியமாயிருக்கும் இறைவனே என்று நான் வருந்திக் கொண்டிருந்தபோதே என்னை உரசிக் கொண்டு வந்து நின்றது ஓர் ஆட்டோ. ஆட்டோவில் உணவுப் பொட்டலங்கள். நடைபாதை ஏழைகளுக்கு ஆளுக்கொரு பொட்டலத்தை வழங்கினார் ஆட்டோவிலிருந்த பெரியவர். பதிவாய் வந்து இவர்களுக்கு உணவு விநியோகம் செய்கிற புண்ணியவானாயிருக்கலாம். வாழ்க!

மானசிகமாய் அந்த மனிதரை வாழ்த்திவிட்டு ரயில்வே அலுவலகத்துக்கு மன நிறைவோடு நடந்தேன். ஈ.கியூ கொடுத்த பிறகும் டிக்கட் கன்ஃபம் ஆகவில்லையென்றாலுங்கூட அதற்காக விசனப்பட நியாமில்லை இனி. ரயில்வே ஆஃபீஸிலிருந்து நான் திரும்பி நடந்து வருகிறபோது இந்த ஏழைகளெல்லாம் பொட்டலங்களைப் பிரித்து வயிறார உண்டு கொண்டிருப்பார்கள். என்னுடைய மன நிறைவு, உச்சத்துக்கு எகிறிவிடும்.

திரும்பி நடந்து வந்தேன். பிளாட்ஃபாம்வாசிகளெல்லாம் வட்டமாய் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவர் முன்னாலும் பிரிக்கப்பட்ட பார்சல்கள், ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு யூஸ் ன் த்ரோ ப்லாஸ்ட்டிக் டம்ளர். அது தண்ணி குடிக்க என்று நான் நினைத்தது தப்பாப் போச்சு. வட்டத்துக்கு நடுவில் நின்றிருந்தாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. அவளுடைய கையில் ஒரு பாட்டில். வண்ணத் திரவம் நிரம்பியிருக்கிற பாட்டில். மில்லி என்றும் குவாட்டர் என்றும் ஹாஃப் என்றும் ஃபுல் என்றும் ஆங்கிலச் சொற்களை அவமானப்படுத்துகிற திரவம் நிரம்பியிருக்கிற பாட்டில். ஒவ்வொரு ப்லாஸ்டிக் டம்ளரிலும் அந்தப் பெண் வரிசையாய்ச் சரக்கை ஊற்றிக் கொண்டு வந்தாள். அந்த டம்ளர்கள் தண்ணி குடிப்பதற்கல்ல, தண்ணியடிப்பதற்கு என்பதை உணர்ந்தபோது, மன நிறைவெல்லாம் ஆவியாய்ப் போய் உடலிலும் உள்ளத்திலும் உஷ்ணமேறியது.

சாப்பாட்டுக்கு வழியில்லாத வர்க்கத்துக்குக் கூட மதுவின் மேலே ஒரு தாகத்தையும் மோகத்தையும் ஏற்படுத்திக் கொ(கெ)டுத்து, அப்பாவிகளையெல்லாம் பாவிகளாய் மாற்றி வைத்திருக்கிற இந்தச் சண்டாளர்களை என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம், இப்போதைக்கு வயிறெரிந்து ஒரு சாபத்தை அவர்கள் மேல் இறக்கி வைக்கலாம்.

அடப் படு பாவிகளா!

–தொடர்வேன்…

About The Author