மாநிலத் தலைவர் நல்ல விதமாய் வீடு போய்ச் சேர்ந்தாரா என்று விசாரிக்க ஒரு ஃபோன் போட்டேன்.
ஸ்டேஷனுக்கு மாவட்டத் தலைவரும் கட்சி நண்பர்களும் வந்திருந்ததாகவும் சௌக்கியமாய் வீட்டில் சேர்ப்பித்து விட்டதாகவும் சொன்னார்.
எப்போதும் இப்படித்தான். தலைவர் சென்னையிலிருந்து ஊர் திரும்புகிறபோது நாகர்கோவில் ஸ்டேஷனில் ஒரு வரவேற்புக்குழு காத்திருக்கும். தலைவரை வரவேற்று, வீடு வரை துணைக்கு வரும்.
ஏழு வருடங்களுக்கு முன்னால், தலைவர் சென்னையில் மாநிலத் தலைவராய்ப் பொறுப்பேற்ற பின் முதன்முதலாய் ஊர் திரும்புகிறபோது, நானும் அவரோடு பயணம் செய்கிற வாய்ப்புக் கிடைத்தது.
மாநிலத் தலைவருக்கு மகத்தான வரவேற்பளிக்க வந்திருந்த தொண்டர் படையின் ஆரவாரத்தில் நாகர்கோவில் ஸ்டேஷன் திக்குமுக்காடிப் போனது. தக்கலை வரை, அவருடைய வீடு வரை வரவேற்பு. மார்ஷல் நேசமணியின் சிலையைச் சுற்றிச் சுற்றிக் கட்சிக் கொடிகள். ஜிந்தா பாத் கோஷத்தில் அந்த ஏரியாவே அல்லோலகல்லோலப்பட்டது.
தலைவரின் அருமை பெருமைகளை அறிந்த பிரஜைகள்.
தலைவர் சென்னைக்கு வருகிறபோதுதான் நான் சிங்கிளாய்ப் போய் அவரை அழைத்து வருகிற அவலம். முன்பெல்லாம் மூத்த பொதுச் செயலாளர் அறிவரசன் வரவேற்க வருவார். உடன் சில தொண்டர்களையும் அழைத்துக் கொண்டு வருவார். இப்போது அவர் தனிக் கொடி பிடித்துக் கொண்டு கொடிக் கம்பத்துக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள ஆரம்பித்த பிறகு, ஐயாதான் ஒன் மேன் ஆர்மி.
மாநிலத் தலைவரிடம் நான் பேசி முடித்த பிறகு ஓர் இன்கமிங் கால். அருளானந்தம் பேசினார். கன்னியாகுமரி மாவட்டத் தலைவர். அறுபதுகளில் நம்ம தலைவர் வகித்த பதவியை இப்போது அலங்கரித்துக் கொண்டிருக்கிறவர்.
"சார்! தலைவர் சௌக்கியமா வந்து சேந்தாக. ரொம்ப நன்றி! ஆமா, அந்த டி.டி.இ-க்கி மெட்ராஸ்ல என்ன சொக்குப் பொடி போட்டீக?"
"சொக்குப் பொடியா? மூக்குப்பொடி கூடப் போடலீங்க. ஏன் கேக்றீங்க?"
"இல்ல, தலைவர் கூட அதே பெட்டியில வந்த நம்ம ஊர்ப் பாஸஞ்சர் ஒருத்தர் ரொம்ப ஆச்சர்யப்பட்டு ஒரு விஷயத்தச் சொன்னார்."
"என்ன சொன்னார்?"
"டி.டி.இ பெர்த்லல்ல தலைவர் படுத்துக்கிட்டு வந்தாகளாம்?"
"ஆமா."
"மெட்ராஸ் டி.டி.இ-க்கி திருச்சி வரக்யுந்தான் டியூட்டி. திருச்சில சார்ஜ் எடுத்த டி.டி.இ நம்ம ஊர்க்காரர். தலைவரப் பத்தித் தெரிஞ்சவர். அவர் தலைவரத் தொந்தரவு பண்ணாமக் கீழ விரிச்சிப் படுத்துக்கிட்டாராம். அந்த மெட்ராஸ்க்கார டி.டி.இ திருச்சில டியூட்டி முடிஞ்சி எறங்கறப்ப, தலைவர் காலத் தொட்டுக் கும்புட்டுட்டு எறங்கிப் போனாராம். அந்தப் பாஸஞ்ஜர் சொன்னார். தலைவருக்கு நல்ல தூக்கம். இதெல்லாம் ஒண்ணும் தெரியாது. ஆமா, அந்த டி.டி.இ-ட்ட நம்ம தலைவரப் பத்தி அப்டி என்னதான் நீங்க சொல்லி வச்சீக?"
"நா ஒண்ணுமே சொல்லலீங்க. அறுவத்தெட்டு, அறுவத்தொம்போதுல நம்ம தலைவர் மாவட்டத் தலைவரா இருந்தப்ப பெருந்தலைவர் ஒங்க ஊர்ல நின்னு ஜெயிச்சாரே, அந்தக் கதையத் தலைவரும் நானும் பேசிட்டிருந்தோம். அது அந்த டி.டி.இ காதுல விழுந்திருக்கு. அதக் கேட்டப்பெறகு அவருக்குத் தலைவர் மேல ஒரு மரியாத ஏற்பட்டுப் போச்சுன்னு நெனக்கிறேன்."
"ஹ்ம். ரயில்வேக்காரங்களுக்குத் தெரியுது, நம்ம கச்சிக்காரங்களுக்குத் தெரியமாட்டங்கு பாருங்க. இதையெல்லாம் அந்த மூவரணித் தலைவர்ட்ட எடுத்துச் சொல்லுங்க."
"எந்தத் தலைவர்ட்ட சொல்லச் சொல்றீங்க? மூவரணிக்கித்தான் மூணு தலைவங்க இருக்காங்களே!"
"தலைநகர்ல இருக்கிற தலைவர் அறிவரசன்ட்ட சொல்லுங்க. அவர் அவரோட பத்திரிகைல போட்டாலும் போடுவார்."
"மறந்துபோய்ப் போட்டுரப் போறார், நீங்க வேற. இப்பல்லாம் அவரோட பத்திரிகைல நம்ம பேரையே அவர் போடறதில்ல தெரியுமோ? முந்தில்லாம் நாலு இனிஷியலோட நம்ம பேரப் போட்டு, சிறுபான்மையர் பிரிவு மாநிலத் தலைவர்னு விலாவாரியா எழுதுவார். அப்புறம் பேர விட்டுட்டு சும்மா சிறுபான்மையர் பிரிவுத் தலைவர்னு போட்டார். அப்புறம் தலைவர விட்டுட்டு சுருக்கமா சிறுபான்மையர் பிரிவுன்னு போட்டார். அதையும் சுருக்கி இப்ப சிபி-ன்னு போடறார்."
"வள்ளல் பேரு. நல்லதுதான? ஆமா, மொரார்ஜி தேசாய்ப் பிறந்தநாளுக்கு அறிவரசன் ஒரு மீட்டிங் போட்டாரே, ஒங்களக் கூப்ட்டாரா?"
"அதெல்லாம் கூப்புட மாட்டார். ஆனாலும் நா போனேன். கூப்புடாமலேயே போனேன்."
"மீட்டிங்ல மைக்கப் புடிச்சிப் பேசினீங்களா?"
"மைக்கப் புடுங்கிப் பேசினேன். மொரார்ஜி நமக்குப் பிரியமான தலைவராச்சே, நா வுட்ருவேனா!"
மொரார்ஜி தேசாய்.
இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்துக்கு எதிராய் வெகுண்டெழுந்து சிறைப்பட்டுப் பின் இந்தியாவில் ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்கி, சரித்திரப் பிரசித்தி பெற்றதொரு ஆட்சி மாற்றத்துக்கு அடிகோலிய புரட்சித் தலைவர்களின் தலைமைத் தலைவர்.
மொரார்ஜி பிரதமராயிருந்த குறுகிய பொற்காலத்தில் அகில இந்தியாவிலும் விலைவாசிகள் வீழ்ந்தன. வயிறு நிறைய ஜனதா சாப்பாடு ஒரு ரூபாய்க்குக் கிடைத்தது. ரேஷன் கடைகளை விடக் குறைந்த விலையில் மார்க்கெட்டில் பொருட்கள் கிடைத்ததால் ரேஷன் அட்டைகள் தலைமறைவாகின.
லால்பஹதூர் சாஸ்திரியின் அகால மரணத்துக்குப் பின், யார் பிரதமர் என்கிற பிரச்சினை எழுந்தபோது, மொரார்ஜியா இந்திராவா என்றொரு கேள்வி பிறந்தபோது, கிங்மேக்கர் காமராஜர் க்வீன் மேக்கராய் மாறாமலிருந்திருந்தாரானால், காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருக்காது. பொற்காலம் ஒரு பத்து வருஷம் முந்தியே மலர்ந்து, யார் கண்டது, இன்று வரை கூடத் தொடர்ந்து கொண்டிருந்திருக்கலாம். மதவாதக் கட்சிகள் தலை தூக்கியிருக்கவே முடியாது. பிராந்தியக் கட்சிகள் காளான் போலப் பெருகிப் பரவியிருக்காது. ஊழல் உலகளாவியது என்கிற அசிங்கமான வசனம் இந்திரா காந்தியால் மொழியப்பட்டிருக்காது. இந்திய மில்லியனர்களின் கள்ளப் பணம் ஸ்விஸ் வங்கிகளில் குவிந்திருக்காது. களவாணிகளாய் மாறிய கல்மாடிகளும், ஊழல் ராஜாக்களும் மந்திரியாகியிருக்க முடியாது. திஹார் ஜெயில் மோசடி அரசியல்வாதிகளால் நிரம்பி வழியாது. ஜெயிலுக்குத் தப்பிய கிரிமினல்களெல்லாம் எம்.பி-க்களாய்ப் பார்லிமென்ட்டுக்குள் புகுந்து சட்டமியற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள். திஹார் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருந்த உலக மஹா ஊழல்வாதிகள் மூன்று பேர், நாடாளுமன்றக் கமிட்டிகளுக்கு நியமனம் பெற்றுத் திரும்பவும் காசு எண்ணுகிற வசதிகளைப் பெற்றிருக்கிற வெட்கக்கேடுகள் நடந்திருக்காது. விக்கிரமாதித்தனின் வேதாளம் போலப் பெட்ரோல் விலை மூணு மாசத்துக்கொருமுறை முருங்க மரத்தில் ஏறாது. உலகமகா நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் லட்சக்கணக்கான கோடிகளை ஒதுக்கியிருக்க மாட்டார்கள்.
கிரானைட் குவாரி தாதாக்கள் கோதாவில் இறங்கியிருக்க மாட்டார்கள். இந்தியாவை ஒரு வல்லரசாக்குகிற அப்துல் கலாமின் கனவு இருபதாம் நூற்றாண்டிலேயே பலித்திருக்கும். மொத்தத்தில், இந்தியாவின் வரலாறே மாற்றியெழுதப்பட்டிருக்கும்.
பிரதமராவதற்குப் பல வருஷங்களுக்கு முன்பே பம்பாய் மாகாணத்தின் முதலமைச்சராயிருந்தவர் மொரார்ஜி தேசாய். அவருடைய மகள் மருத்துவக் கல்லூரி மாணவி. கல்லூரித் தேர்வில் அவளுக்கு ரெண்டு மார்க் குறைந்து போய், ஃபெயில் ஆகி விடக்கூடிய இக்கட்டான சூழ்நிலையில், முதலமைச்சராயிருக்கிற அப்பா லேசாய்த் தலையசைத்தால் பாஸ்மார்க் விழுந்து விடும் என்று அவளிடம் சொல்லப்படுகிறது. மகள் அப்பாவிடம் மன்றாடுகிறாள். தந்தை தலையசைக்கிறார். மேலும் கீழுமாய்த் தலையசைந்தால் உடன்பாடு என்று அர்த்தம். இட வலமாய்த் தலையசைந்தால் இல்லை என்று அர்த்தம். தந்தையின் தலை எப்படி அசைகிறது? இட வலமாக. பாஸ்மார்க் விழவில்லை. மகள் ஃபெயில். ஃபெயிலான மகள், அந்தச் சிறுமையைத் தாங்கிக் கொள்ள இயலாமல் தற்கொலை செய்து கொள்கிறாள். நேர்மை நாணயத்துக்காக மகளையே இழக்கிற அளவுக்குத் தூய்மையிலும் வாய்மையிலும் உறுதியாய் நின்றவர் மொரார்ஜி தேசாய். அதனால்தான் அவர் மனிதப் புனிதர்.
இங்கே, நம்ம ஊரிலும் ஒரு முன்னாள் முதல்வர் இருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக, காலை உணவை முடித்துக்கொண்டு பந்தலுக்கு வந்து மதிய உணவு வேளை வரை உண்ணாவிரதம் இருந்து உலக சாதனை படைத்த முன்னாள் முதல்வர்.
தமிழீழ விடுதலைக்காக யாழ்ப்பாணத்தில் உண்ணா விரதமிருந்து உயிர் விட்டார் திலீபன். வடக்கு அயர்லாந்துக்காக லண்டன் டெர்ரியில் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டார் பொபி ஸாண்ட்ஸ். அதுக்குப் பேர்தான் உண்ணாவிரதம். நீர் உயிரை விடவேண்டாம். ஒரு வேளையோ ரெண்டு வேளையோ உணவைக்கூட விட முடியாது என்றால், அது என்னவேய் உண்ணாவிரதம்?!
ரம்ஜான் மாதத்தில் உலக முஸ்லிம்களனைவரும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள், அதிகாலை நாலு மணி முதல் மாலை ஆறு ஆறரை வரைக்கும். தண்ணீர் கூடக் குடிக்காமல், அன்றாட அலுவல்களைப் பார்த்துக்கொண்டு. உள்ளத் தூய்மையோடு கடைப்பிடிக்கப்படுகிற முப்பது நாள் உண்ணாவிரதம் அது.
குளிர்சாதனக் கூடாரத்துக்குள்ளே கட்டில் மெத்தை போட்டுப் படுத்திருந்துவிட்டு, கேமராக்களுக்குப் போஸ் கொடுத்து விட்டு, பசி வந்ததும், “போர் நின்றுவிட்டது” என்று படுக்கையைச் சுருட்டிக்கொண்டு கிளம்பிப்போவது உண்ணாவிரதமா?
ஈழத் தமிழருக்காக உண்ணாவிரதமும் மனிதச் சங்கிலியும் நடத்தியதாய்ச் சொல்லிக்கொண்ட முன்னாள் முதல்வரை ஈழத்தமிழர் எவருமே வாழ்த்தவில்லை. பாட்டுக்கு எழுபத்தஞ்சாயிரம் வாங்குவதாய்ச் சொல்லிக் கொள்கிற நம்ம ஊர் சினிமாக் கவிஞரொருவர்தான், ஏ.எம் முதல் பி.எம் வரை ஓய்வில்லாமல் உழைக்கிற ஸி.எம் என்று ஐஸ் வைத்து வாலித்தினார்.
மத்திய அரசில் அங்கம் வகித்தாலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக டில்லிக்கு ஒரு முறை கூடப் போகாதவர், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி திஹார் ஜெயிலில் அடைபட்ட மகளை விடுவிக்கப் பலமுறை படையெடுத்தார். தொலைக்காட்சிக் கேமராக்கள் முன்னே கண்ணீர் உகுத்தார். கடைசியில் வெற்றிகரமாய்ப் பெண்ணைப் பிணையிலெடுத்தே விட்டார். சென்னைக்கு வந்து சேர்ந்த புதல்வியை வரவேற்கத் தொண்டர் படை என்ன, தோரணங்கள் என்ன, வாண வேடிக்கைகள் என்ன, வருங்கால முதல்வியாய்ப் புதல்விக்குப் பட்டங்கட்டுகிற கோஷங்களென்ன! எல்லாம் பாசமுள்ள தகப்பனாரின் திரைமறைவு ஏற்பாடுகள்.
அந்த அம்மையார் என்ன ஜான்ஸி ராணி மாதிரி அநீதிக்கு எதிராய் வாளேந்திய வீராங்கனையா? அல்லது, சரோஜினி மாதிரி சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்ற தியாகியா? அல்லது, ஆங் சான் சூ கி மாதிரி மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து இருபது வருஷம் வீட்டுக் காவலில் அடைபட்டுக் கிடந்த தலைமைப் புரட்சித் தலைவியா?
ஊழல் குற்றச்சாட்டில் சிறைப்பிடிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போய் பெயிலில் வந்திருக்கிற பெண்.
ஊழல் மகளை உச்சி முகர்கிற இவரும் ஒரு தந்தை,
உண்மைக்காகவும் நேர்மைக்காகவும் மகளையே இழந்த
மொரார்ஜி தேசாயும் ஒரு தந்தை.
அந்த மனிதப் புனிதரின் பிறந்த நாள் பிப்ரவரி 29. நான்கு வருடங்களுக்கு ஒரு முறைதான் வருகிறது. அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிற உரிமையும் கடமையும் தகுதியும் நம்முடைய கட்சிக்கு மட்டுந்தானிருக்கிறது. அந்த மஹா மனிதனை இந்த நாடு மறந்து போகாமலிருக்க அவ்வப்போது இந்த மக்களுக்கு அவரை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டியது அவசியம். நிரந்தர நினைவுச் சின்னமாக மொரார்ஜி தேசாய்க்கு ஒரு சிலை அமைக்க வேண்டும். அந்தப் புனிதப் பணியை சிரமேற் கொண்டு நாம் செய்து முடிப்போம்.
முந்தைய ஆட்சியில், மெரினாவில் சிவாஜி கணேசனுக்கு ஒரு சிலை வைத்தார்கள். அந்தச் சிலையின் முகத்தை உற்றுப் பார்த்தால், பொற்கால சிவாஜி மாதிரியும் இல்லை, பிற்கால சிவாஜி மாதிரியும் இல்லை. சிலையின் காலடியிலிருக்கிற பீடத்தில், பெயரென்ன பொறித்திருக்கிறதென்று பார்க்கலாமென்று பார்வையைத் தாழ்த்தினால், சிலையாயிருப்பவரின் பெயரை விடவும், சிலையைத் திறந்து வைத்தவரின் பெயர்தான் பெரிதாகவும் பிரதானமாகவும் கல்வெட்டப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி, சுய விளம்பரத்துக்காக சிலை வைக்காமல் மொரார்ஜிக்கு நாம் கலை நயத்தோடு சிலையெடுப்போம்.
சிலைகளுக்குச் சென்னையில் பற்றாக்குறையே இல்லை. கண்ணதாசனுக்கு, ராமசாமிப் படையாச்சிக்கு என்.எஸ்.கிருஷ்ணனுக்கு, மேயர் ராதா கிருஷ்ணனுக்கு, வீரன் அழகுமுத்துக்கோனுக்கு, தீரன் சின்னமலைக்கு, ஏன், சோபன் பாபுவுக்குக் கூடச் சென்னையில் சிலை இருக்கிறது, மொரார்ஜி தேசாய்க்கு இல்லை என்று நான் முடித்தபோது கூட்டத்தில் எல்லோரும் கைதட்டினார்கள். ஒரேயொரு நபரைத் தவிர.
அறிவரசன். சீனியர் பொ.செ.
அடுத்த நாள் நான் கட்சி அலுவலகத்துக்குப் போனபோது அவருடைய பத்திரிகைகளை அடுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார் அறிவரசன். நான் வணக்கம் போட்டபோது, தலை நிமிர்ந்து பார்த்தவர், படக்கென்று பார்வையைத் தாழ்த்தி, “வாங்க சிபி” என்று வரவேற்றார்.
"ரொம்ப நன்றி சார்!" என்றேன்.
"எதுக்கு நன்றி?" என்றார்.
"சிபி-ன்னு எனக்குப் பேர் வச்சதுக்கு. ஒங்களையே அறியாம, ஒரு கொடை வள்ளலோட பேர எனக்கு வச்சிருக்கீங்க."
"சிறுபான்மைப் பிரிவ எளிமைப்படுத்தி சிபின்னு வச்சேன். சிபின்னு கொடை வள்ளல் யாரும் கெடையாதே! இருந்திருந்தா அந்தப் பேர ஒங்களுக்கு நா வச்சிருக்க மாட்டேனே. எனக்குத் தெரிஞ்ச கொடை வள்ளல்கள் பாரி, ஓரி, கோரி."
"கோரி இல்ல, காரி."
"சாரி."
"ஆனா, சிபிச் சக்கரவர்த்தின்னும் ஒரு வள்ளல் இருந்தார்னு ஸ்கூல்ல படிச்சிருக்கேன்."
"எங்க ஸ்கூல்ல அப்டியொண்ணும் சொல்லித் தரலியே!"
"சொல்லித் தந்திருப்பாங்க. அன்னிக்கி நீங்க பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்க மாட்டீங்க. இதுல வேற ரெண்டு விசேஷங்களும் இருக்கு. நா அரசியல்வாதி மட்டுமில்ல. நா ஒரு இலக்கியவாதி கூட. இலக்கிய இனமும் ஒரு சிறுபான்மை இனம்தான். அதுவுமில்லாம, நா மெஜாரிட்டியோட ஒத்துப் போகாத மைனாரிட்டி. தர்ம ஞாயம், நீதி நேர்மைன்னு ஒரு கொள்கைப் பிடிப்போட வாழணும்னு நெனக்கிறவன். இந்த மாதிரியான உயர்ந்த பண்புகளப் பத்தி அலட்டிக்காத மெஜாரிட்டியோட சமரசம் பண்ணிக்காதவன். இந்த அம்சத்ல பாத்தாக் கூட நா ஒரு சிறுபான்மையர்ப் பிரிவுதான், சிபிதான். இப்டியெல்லாம் யோசிச்சே பாக்காம நீங்க எனக்கொரு நன்மை செஞ்சிட்டீங்க சார். சரி அத விடுங்க. ஒங்க பத்திரிகைல என்னக் கேவலப்படுத்றீங்க பரவாயில்ல. ஆனா நீங்க நம்ம மாநிலத் தலைவரையும் கேவலப்படுத்றீங்களே சார்?"
"மாநிலத் தலைவரப் பத்தி நா ஒண்ணும் கேவலமா பத்திரிகைல எழுதலியே!"
"பத்திரிகைல எழுதினா தேசியத் தலைவர் ஒங்க மேல நடவடிக்கை எடுத்துருவார். அதனால எழுதல. ஆனா ஒங்க கோஷ்டி ஆட்கள்ட்ட பேசும்போது தலைவரப் பத்திக் கேவலமாப் பேசறீங்க."
"உதாரணமா?"
"மாநிலத் தலைவர்னு சொல்ல மனசில்லன்னா அவரோட பேரச் சொல்லுங்க. அத விட்டுட்டு அவர ‘பாய்’ங்கறீங்க, ‘சாய்பு’ங்கறீங்க."
"பாவிங்க! அத ஒங்க காதுல போட்டு விட்டுட்டானுங்களா?"
"மாநிலப் பொதுச் செயலாளர்னு நீங்க வகிக்கிற உயர்ந்த பதவிக்கி இதெல்லாம் நல்லாவா சார் இருக்கு? நம்ம கட்சியோட பெயர்லயே மதச்சார்பின்மை இருக்கு. ஒரு மதச்சார்பற்ற கட்சில இருந்துக்கிட்டு ஒரு மதத்த குறிப்பிட்டு அசிங்கமாப் பேசறதுதான் மதச்சார்பின்மையா சார்?"
"நீங்க என்னச் சொல்றீங்க. மத்தவங்க எல்லாரும் நம்மக் கட்சில மதச்சார்பின்மையத் தூக்கிப் புடிக்கிறவங்களாத்தான் இருக்காங்களாக்கும்?"
"மத்தவங்களப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா நா அப்டித்தான் இருக்கேன். சின்ன வயசுலயிருந்தே எங்க அம்மா என்ன அப்டித்தான் வளத்தாங்க. எங்க வீட்டுக்கு எதிர்க்க இருந்த கோவில்லயிருந்து எங்க வீட்டுக்குப் பிரசாதம் வரும். ஹிந்துக் கோவில் பிரசாதத்த முஸ்லிம்ஸ் நாம சாப்பிடலாமாம்மான்னு கேட்டா, சாப்புட்டா என்ன, பிஸ்மில்லா சொல்லிட்டு சாப்புடுன்னு அம்மா சொல்லுவாங்க."
"அம்மா கத இருக்கட்டும். ஒங்க கதயச் சொல்லுங்க. மதச்சார்பின்மைக்கி நீங்க என்ன தொண்டு செஞ்சீங்க?"
"என்னோட பேனா மூலமா நா தொண்டு செஞ்சிருக்கேன் சார். என்னோட எழுத்து மூலமா நா மதச்சார்பின்மையத் தூக்கிப் புடிச்சிருக்கேன். நா ஒரு எழுத்தாளன்னு ஒங்களுக்குத் தெரியும். மத நல்லிணக்கத்த வலியுறுத்தி நா ஒரு பதினஞ்சி இருவது சிறுகதைகள் எழுதிப் பல பத்திரிகைகள்ள பப்ளிஷ் ஆகியிருக்கு. அந்தக் கதைகள் புஸ்தகமாயும் வந்திருக்கு."
"அதாவது, மதச்சார்பின்மையையும் மத நல்லிணக்கத்தையும் கற்பனைல நீங்க தூக்கிப் புடிச்சிருக்கீங்க?"
"கற்பனைல இல்ல சார், நிஜ வாழ்க்கைலயும் தூக்கிப் புடிச்சிருக்கேன்."
"அப்ப, அந்தக் கதயச் சொல்லுங்க."
"கதயில்ல சார். நிஜம். நாம நண்பர்களாயிருந்த காலத்ல ஒங்கட்டயே நா சொல்லியிருக்கேன். திருச்சியில நா காலேஜ்ல படிச்சிட்டுருந்தப்ப ஒரு ஹிந்துப் பொண்ண லவ் பண்ணின சமாச்சாரத்த."
"முஸ்லிம் பையனான நீங்க, காலேஜ்ல, திருச்சியில படிச்ச காலத்ல மதம் மாறி ஒரு ஹிந்துப் பொண்ண லவ் பண்ணினதால நீங்க மதச்சார்பின்மைல, மத நல்லிணக்கத்ல நம்பிக்கையுள்ளவர்னு சொல்றீங்க?"
"நிச்சயமா."
"சிபி, நா ஒரு உண்மையச் சொல்லட்டுமா?"
"நீங்க உண்மை பேசி ரொம்ப நாளேச்சே சார்!"
"பரவாயில்ல. இப்ப சொல்றேன் கேட்டுக்குங்க."
"சொல்லுங்க!"
"மெய்யாலுமே நீங்க மதச்சார்பின்மை, மத நல்லிணக்க நம்பிக்கையுள்ளவராயிருந்திருந்தா, நீங்க லவ் பண்ண அந்த ஹிந்துப் பொண்ணையே கல்யாணம் பண்ணிட்டிருந்திருப்பீங்க."
–-தொடர்வேன்...