சிபி (6)

ஜமீலா பபூஷா.

லிபியா நாட்டைச் சேர்ந்த பெண் போராளி. அறுபதுகளில், லிபியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருந்த ஃப்ரெஞ்ச் (அல்லது இத்தாலிய) அராஜகவாதிகளை எதிர்த்துப் போராடிய புரட்சிப் பெண்.

ஜமீலாவின் குடும்பமே சிறைபிடிக்கப்பட்டுக் கொடுமை செய்யப்பட்டதாம். ஜமீலாவின் தந்தையுடைய வயிறு பலூன் மாதிரி உப்புகிற வரைக்கும் தண்ணீரால் நிரப்பிப் பிறகு அந்த வயிற்றின் மேல் குதிப்பார்களாம். உடம்பில் எங்கெங்கே துவாரங்கள் இருக்கின்றனவோ, அத்தனை துவாரங்களிலும் தண்ணீர் வெளியே பீய்ச்சியடிக்குமாம்.

ஆண் போராளிகளுக்கு இப்படிச் சித்ரவதை என்றால் பெண் போராளிகளின் வேதனைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெண் போராளிகளைக் கொடுமைப்படுத்துவது அதிகாரத்திலிருக்கிற அராஜகவாதிகளுக்கு அல்வா தின்கிற மாதிரி.

ஜமீலா நிர்வாணப்படுத்தப்பட்டு, அவளுடைய மார்புக் காம்புகளில் வயர்கள் மூலம் மின்சாரம் செலுத்தப்பட்டதாகவும் அவளுடைய பெண்ணுறுப்பு அந்த அரக்கர்களுக்கு ஆஷ்ட்ரேயாய்ப் பயன்பட்டது என்றும் வாசித்தபோது, அந்தக் கொடியவர்களை அப்படியே குதறிப் போட்டாலென்ன என்கிற வெறி ஏறியது, அந்த வயசிலேயே.

ஜமீலா மேலே பிரயோகிக்கப்பட்ட உச்சக்கட்டச் சித்ரவதை, கூட்டுக் கற்பழிப்பு.

அயோக்கியர்களின் கைகளில் அபலைப் பெண்கள் சிக்கிக் கொண்டால், உடனே காமம் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். முதற்கட்ட நடவடிக்கையே கற்பழிப்புதான்.

போர்க்காலங்களில், கற்பழிப்பு என்பது அன்றாடம் நடக்கிற ஒரு சடங்கு. 1971 பாகிஸ்தான் – பங்களாதேஷ் யுத்தத்தின் முடிவில் பார்த்தால், ஆயிரக்கணக்கான வங்காளதேசப் பெண்கள் கர்ப்பமாம். பாகிஸ்தான் படை வீரர்களின் கைங்கர்யம்.

அது சரி, வீரர்களென்று அவர்களைக் குறிப்பிட முடியுமோ? இப்படித்தான் நாம் அடிக்கடி தவறு செய்கிறோம். கிரிக்கெட் விளையாடுகிறவனைக்கூட வீரன் என்கிறோம். கற்பழிப்பதற்கு எப்படி வீரம் தேவையில்லையோ அப்படித்தான் கிரிக்கெட் விளையாடுவதற்கும் வீரம் தேவையில்லைதானே!

இந்தியப் படையினர் கூடக் காஷ்மீரில் இந்த இழி செயலில் ஈடுபட்டிருப்பதாய்த் தகவல்கள் வருகின்றன.

பங்களாதேஷ் யுத்தத்தில் நடந்த கற்பழிப்புகள் மாதிரி அல்லது அதைவிடக் கொடூரமான கற்பழிப்புகள் சமீபத்தில் விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தத்தில் சிங்களப் படைக் காடையர்களால் நிகழ்த்தப்பட்டிருப்பதைச் சனல் 4 தொலைக்காட்சி வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

துப்பாக்கி, ஏ.கே-47, பயோனட், பீரங்கி மாதிரி, கற்பழிப்பு கூட ஒரு போர்க்கால ஆயுதம். பெண்ணினத்துக்கெதிராய்ப் பிரயோகிக்கப்படுகிற படுபாதகமான ஆயுதம்!

கற்பழிப்பு என்கிற வார்த்தைக்கு இலங்கைத் தமிழில் வலுப் பொருத்தமான சொற்றொடர் ஒன்று வைத்திருக்கிறார்கள்.

பாலியல் வல்லுறவு.

வார்த்தை எதுவானாலும் வேதனை பெண்களுக்குத்தான்.

நம்ம ஊர்ப் போலீஸ் ஸ்டேஷன்களில் கற்பழிப்பு அல்லது பாலியல் வல்லுறவு என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம். ஓய்வுநேர வீர விளையாட்டு.

இந்த இடத்தில், ‘வீர’ என்பது உயர்வு நவிற்சி அணி.

1992 ஆம் வருடம், வாச்சாத்தி கிராமத்துப் பழங்குடியினர் மேலே, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், காவல் துறையினர், வனத்துறையினர் அனைவரும் இணைந்து பிரயோகித்த வன்முறையில், அந்தக் கொடுங்கோலர்களால் கற்பழிக்கப்பட்ட பதினெட்டுப் பெண்களில் பதினைந்து பேர் மைனர் சிறுமிகள் என்கிற பயங்கரத்தை பகிரங்கப்படுத்தியிருக்கிறது பாரதி கிருஷ்ண குமாரின் ஆவணப்படமான ‘உண்மையின் போர்க்குரல்’.

போலீஸோடு இணைந்து கற்பழிப்புக் களியாட்டத்தில் ஈடுபட்ட வனத்துறையை, வனத்துறை என்று நாகரிகமாய்க் குறிப்பிடாமல் காட்டுத் துறை என்று கொச்சையாய்ச் சொன்னால் சரியாயிருக்காது?

கற்பழிக்கிற போலீஸ்காரர்களும் லஞ்சம் வாங்குகிற போலீஸ்காரர்களும் திருந்திவிட்டாலே நாடு ஓரளவு சுபிட்சமாகிவிடும்.

இணங்க மறுக்கிற, முரண்டு பிடிக்கிற, தற்காப்புக்காக நகங்களால் பிறாண்டுகிற, விட்டுவிடும்படி மன்றாடுகிற, கண்ணீரோடு கதறுகிற, வசவுகளையும் சாபங்களையும் வாரியிறைக்கிற ஒரு பாவப்பட்ட பெண்ணின்மேல் காமம் கொண்டு, அவளை முழுமையாய் ஆக்கிரமித்து, அமுக்கிப் பிடித்து இந்தக் கயவர்கள் எப்படித்தான் வல்லுறவு கொள்வார்களோ!

தங்களுடைய மனைவிமாருக்கோ, சகோதரிகளுக்கோ, பெண் மக்களுக்கோ இது போன்ற கொடுமை நேர்ந்தால் எப்படியிருக்கும் என்று அந்த எக்கச்சக்கமான தருணங்களில் இவர்கள் நினைத்துப் பார்க்கவே மாட்டார்களா?

திருட்டு, கொள்ளையை விடவும் கொடுமையான, சொல்லப்போனால் கொலையை விடவும் கொடூரமான வல்லுறவு வக்கிரத்தில் ஈடுபடுகிற பாவிகளுக்கு அதிகபட்சத் தண்டனையாய் என்ன வழங்கலாம்? கிராமங்களிலும் தமிழ்த் திரைப்படங்களிலும் அதிகபட்சத் தண்டனையாக ஓர் ஆனந்தமான தண்டனையை வழங்குவார்கள். கற்பழிக்கப்பட்ட பெண்ணை, கற்பழித்த கயவனுக்கே கட்டி வைத்து சோலியை முடித்து நீதியை நிலைநாட்டி விடுவார்கள்.

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்குத் தாலி. காமுகனுக்கு ஜாலி.

இதுவா தண்டனை? காமுகனுக்கு கத்னா செய்து விடுவது அல்லவா சரியான தண்டனையாயிருக்கும்?

இந்த கத்னா என்பது முஸ்லிம்கள் செய்கிற, ஆண்குறியின் மேல் தோலைச் சீவி விடுகிற, ஸர்க்கம்ஸிஷன் என்கிற இஸ்லாமிய கத்னா அல்ல.

மேற்படி (அல்லது கீழ்ப்படி) உறுப்பையே சீவி விடுவதுதான் நான் சொல்கிற ‘கத்னா’.

சவூதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் கடுமையான ஒரு தண்டனை முறை அமலில் இருக்கிறது. திருட்டுக் குற்றத்துக்கு, திருடிய கையை மணிக்கட்டோடு துண்டித்து விடுவது. அந்தத் திருடன் இனி திருடவே முடியாது. கையிருந்தால்தானே திருடுவான்!

அதே மாதிரி, கற்பழிப்புக் கயவன் வேரோடு கத்னா செய்யப்பட்டு விட்டால், பிறகு கற்பழிப்பில் ஈடுபடவே முடியாது இல்லையா!

ஐட்டம் இருந்தால்தானே ஆட்டம் போட முடியும்?

இந்த சப்ஜக்ட்டை வைத்து விவகாரமான ஒரு சிறுகதை கூட வந்திருக்கிறது. எழுதியது யாராயிருக்கும்? இது ஒன்றும் கஷ்டமான கேள்வியில்லை. ஈஸியாய் ஊகித்து விடலாம்.

கோடிகளில் புரள்கிற சவூதி அரேபிய ஷேக்குகளெல்லாம் கற்பழிக்கிற பாவச் செயலில் ஈடுபடவே மாட்டார்கள். ரெண்டோ மூணோ நாலோ மனைவிகளைக் கைவசம் எப்போதும் வைத்திருப்பார்கள். அதையும் மீறி உடம்பு உணர்ச்சிவசப்படுகிறபோது, விமானமேறி பம்பாய்க்கு வந்து, அஞ்சு நட்சத்திர ஹோட்டேலொன்றில் அறையெடுத்துத் தங்கி, சில லட்சங்கள் செலவில் ஆறாவதாய் ஒரு நட்சத்திரத்தை அமர்த்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஊர் போய்ச் சேருவார்கள்.

அதன் பிறகு, இருக்கவே இருக்கிறது ஹஜ் என்கிற வசதி. வருஷா வருஷம் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிற வசதி கூட இருக்கிறது, லோக்கல் சவூதிகளுக்கு. ஹஜ் ஸீஸனில் புனித மக்காவுக்குப் போய், பாவ மன்னிப்புக்காக அல்லாவிடம் அப்ளிகேஷன் போட்டுவிட்டால் பாவங்களெல்லாம் பைசல் செய்யப்பட்டு அன்று பிறந்த பாலகனைப் போலப் புனிதம் பெற்று விடுவார்கள். பிறகு, அக்கம் பக்கம் ஒரு நோட்டம் விட்டு விட்டுத் திரும்பவும் பம்பாய்க்குப் பிளேன் ஏறி விடலாம்.

இத்தனை வசதிகள் இல்லாத, சாமான்ய சவூதிகள் சிலர் கற்பழிப்புக் குற்றத்தில் ஈடுபடுகிறபோது, நாம் முன்மொழிந்த கத்னா தண்டனை அவர்களுக்கு வழங்கப்படுவதாய்த் தெரியவில்லை. சவூதி மன்னரின் பார்வைக்கு இந்த நாவலை அனுப்பி வைக்கலாமென்றால், அவருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமா என்று தெரியவில்லை. தமிழ் வாசகங்களை இடமிருந்து வலமாய் வாசிக்க வேண்டுமென்பது கூட அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

நம்ம நாட்டில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தலாம்.

அதாவது… ஒருவேளை… நம்ம கட்சி… ஆட்சிக்கு… வந்துவிட்டால்!

சரி, கனவுலகிலிருந்து மீண்டு நிஜவுலகத்துக்கு வருவோம்.

என்ன சொன்னேன்?

கற்பழிக்கிற போலீஸ்காரர்களும் லஞ்சம் வாங்குகிற போலீஸ்காரர்களும் திருந்தி விட்டாலே நாடு ஓரளவு சுபிட்சமாகி விடும்.

லஞ்சம் வாங்குகிற போலீஸ்காரர்களுக்கு ஒரு வகையில் நானுங்கூட ஒரு காலத்தில் உடந்தையாயிருந்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கிறபோது வெட்க வெட்கமாய் வருகிறது இப்போது.

எப்போது அது? மதுரையில் வைத்து, ஸெயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி படித்துக் கொண்டிருந்த காலத்தில். திருப்பரங்குன்றம் சாலையில் வடக்கிலிருந்து தெற்காய்ப் போகிற, லோடு ஏற்றிய மாட்டு வண்டிகள் கிரைம் பிராஞ்ச் சந்திப்பைத் தாண்டித் தெற்கே போகக் கூடாது என்று, அறிவிக்கப்படாத தடை உத்தரவு ஒன்று அறுபதுகளில் அமலில் இருந்தது. கிரைம் பிராஞ்ச் போலீஸ்காரர்கள் விதித்திருந்த கட்டுப்பாடு. ஆனால், கட்டுப்பாட்டைக் குறித்து அலட்டவே அலட்டிக் கொள்ளாமல் எல்லா மாட்டு வண்டிகளும் எல்லை தாண்டிப் போய்க் கொண்டே இருக்கும். போலீஸ் பீட்டிலிருக்கிற காவலருக்கு ஒரு நாலணா லஞ்சம் கொடுத்து விட்டுப் போய்க் கொண்டேயிருக்க வேண்டும், அவ்வளவுதான். பீட்டைத் தாண்டுகிறபோது வண்டிக்காரர்கள் வண்டியை நிறுத்த மாட்டார்கள், கீழே இறங்க மாட்டார்கள். மாடுகள் அதுபாட்டுக்கு நடந்து கொண்டேயிருக்கும். பாதையோரம் போகிற பாதசாரிகள் யாரிடமாவது ஒரு நாலணா நாணயத்தைக் கையளித்து, “அந்தப் போலீஸ்காரட்ட குடுத்துருங்க அண்ணே” என்று ஏற்பாடு செய்துவிட்டு, வண்டிக்காரர்கள் போய்க் கொண்டேயிருப்பார்கள்.

இந்த இடைத்தரகர் வேலையில் நானுங்கூட ஒருமுறை ஈடுபடுத்தப்பட்டேன்.

ஐயே, அசிங்கம்!

வாப்பா முனிஸிபல் இஞ்சினியராய், மதுரை சுப்பிரமணியபுரம் பவர் ஹவுஸ் வளாகத்துக்குள்ளே ஒரு நாலு ஏக்கர் தோட்டத்துக்குள்ளே அமைந்திருந்த அட்டகாசமான பங்களாவில் எங்களைக் குடிவைத்திருந்தார்.

அந்த பிளாட்டும் பங்களாவும் இன்றைய சென்னை அண்ணா நகர் ரேட்டுக்கு ஒரு பதிமூணு பதினாலு கோடி தேறும்.

அந்தப் பவர்ஹவுஸ் பங்களாவில் வசித்த காலத்தில்தான் அந்த ஜமீலா பபூஷாவின் வீர வரலாற்றை வாசித்தேன். குமுதம் வார இதழில். எஸ்.ஏ.பி அண்ணாமலை, ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன் ஆகிய மூவரணி ஆட்சியிலிருந்த அந்தக் காலத்தில், குமுதத்தில் உருப்படியான விஷயங்கள் நிறையப் பிரசுரமாயின.

இன்ட்டர்நெட்டைத் திறந்து, ஜமீலா பபூஷாவை கூகுளிலும் யாஹூவிலும் இப்போது தேடிப் பார்த்தால், அந்தப் பெயருக்குரிய குறிப்புகள் எதுவுமே மின்வலையில் இல்லை என்று தகவலொன்று வருகிறது. பலப் பல தியாகிகளையும் சிறப்புமிக்க மாந்தர்களையும் மறந்து விட்டது மாதிரி, ஜமீலா பபூஷாவையும் உலகம் ஒதுக்கி விட்டது. ஆனால் அந்தப் பெண்ணின் வீரமும் போராட்டமும் தியாகமும் எனக்குள்ளே அன்றைக்கு ஏற்படுத்திய தாக்கம், பல தசாப்தங்கள் கழிந்தும் அவளை என் நினைவில் நிறுத்தி வைத்திருக்கிறது.

ஜமீலா பபூஷாவின் போராட்டத்தைப் படித்து நான் மனம் சிலிர்த்துக் கிடந்த அந்த சமயத்தில்தான் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தது.

கையில் முள் மட்டை ஏந்தி, ராட்சசப் பற்களோடு கூடிய, உடம்பு கனத்த பெண்ணுருவம் ஒன்றை வரைந்து, ‘இந்தி அரக்கி’ என்று சித்தரிக்கிற கார்ட்டூன் கருத்துப்படங்கள் தினந்தினம் தினத்தந்தியை அலங்கரித்தன அப்போது.

மதுரை லட்சுமி தியேட்டரில் நான் ராஜ்கபூரின் ‘சங்கம்’ பார்த்த பிறகு, தமிழ்நாட்டில் ஒரு ஆறு மாத காலத்துக்கு ஹிந்திப் படங்களே இல்லை.

ஹிந்தி எதிர்ப்புக் கலவரத்தை அன்றைக்குத் தூண்டி விட்டவர்கள், அவர்களின் வாரிசுகள் எல்லாம் இன்றைக்கு ஹிந்தியோடும், ஹிந்தியர்களோடும் சமரசம் செய்து கொண்டு, மத்திய அரசில் பதவிகள் வகித்துக் கொண்டு, சென்னைக்கும் டில்லிக்குமிடையில் விமானத்தில் பறந்து கொண்டு பரம சவுக்கியமாய் ஜீவிக்கிறார்கள்.

கட்டுப்பாட்டுக்குப் பேர்போன எங்க ஸெயின்ட் மேரிஸ் உயர்நிலைப்பள்ளியிலேயே மாணவர்கள் தரந்தாழ்ந்து போனார்கள், ஹிந்தி எதிர்ப்பு ஸீஸனில்.

ஹிந்திப் புஸ்தகங்களெல்லாம் பள்ளியின் முகப்பில் போட்டுக் கொளுத்தப்பட்டன. இறுதி வரிசையில் நின்றிருந்த நான், பின்புறம் திரும்பிப் பார்த்தபோது பள்ளியின் விறாந்தையில் ஒரு தூணில் சாய்ந்தபடி தன்னந்தனியாய் ஓர் உருவம் நின்றிருப்பது தெரிந்தது.

என்னுடைய ஹிந்தி ஆசிரியர்.

இந்த அராஜகக் கும்பலிலிருந்து விலகி, அந்த ஆசிரியரின் அருகாமையில் போய் நிற்க வேண்டுமென்று எனக்கு உதித்தது.

ஹிந்தி ஆசிரியரை நோக்கி நடந்தேன். அவருடைய கண்களில் பூத்திருந்த கண்ணீர், நான் நெருங்கி வருவதைப் பார்த்ததும் பூமியில் சிந்தியது. அவரை சமீபித்த என்னைக் கையைப் பிடித்து இழுத்துத் தன்னோடு இணைத்துக் கொண்டார்.

அவருடைய உடம்பு லேசாய்க் குலுங்குவதை நான் உணர முடிந்தது.

அவருடைய வாயிலிருந்து ஒரு விம்மல் வெளிப்பட்டது.

பள்ளிக்கூட வாயிலில் பாடப் புஸ்தகங்கள் எரிந்து கொண்டிருந்தன.

தமிழ்நாடெங்கும் கொந்தளிப்பு, போராட்டம், கலவரம்.

அடாவடி அரசியல்வாதிகளால் மாணவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மாநில மந்திரி, மத்திய மந்திரி என்கிற பாகுபாடு இல்லாமல் காங்கிரஸ் மந்திரிகளெல்லாம் கரித்துக் கொட்டப்பட்டனர். பிரதம மந்திரி லால் பஹதூர் சாஸ்திரியைத் தரக்குறைவான வாசகங்களால் வசைபாடுகிற வசனங்கள் புனையப்பட்டுப் புழக்கத்தில் விடப்பட்டன. மத்திய கல்வியமைச்சர் சி.சுப்பிரமணியத்தை மாணவர்கள் கல்லெறிந்து காயப்படுத்தினர்.

அந்தக் கல்லெறியை ஒரு கார்ட்டூனாய் வரைந்திருந்தது ஆனந்த விகடன். கார்ட்டூனில், ஒரு கற்குவியலுக்கு மத்தியில், சோகமாய், கோரமாய் உட்கார்ந்திருக்கிறார் சி.எஸ்.

கார்ட்டூனுக்குத் தலைப்பு:

இளமையில் கல்.

–தொடர்வேன்

About The Author