மாலைகளோடும் மலர்க் கொத்துகளோடும் தலைமைச் செயலாளரும், உயர் அதிகாரிகளும், எழும்பூர் ரயில் நிலையத்தில்.
மாலைகளையும் மலர்க் கொத்துகளையும் பெற்றுக்கொண்டு, பார்வையால் யாரையோ தேடுகிறார் தலைவர்.
தட்டுத் தடுமாறிக் கும்பலுக்குள் புகுந்து தலைவரை நெருங்குகிறேன் நான்.
"அஸ்ஸலாமு அலைக்கும் தலைவர், யாரத் தேடறீங்க தலைவர்?"
"வலைக்கும் சலாம் தம்பி, ஒங்களத்தான் பாத்துட்டிருக்கேன். கார் கொண்டாந்திருக்கீங்கல்ல? ஃபோன் பண்ண விட்டுப் போச்சு."
"காரா? ஸ்டேஷனுக்கு வெளிய சிகப்புக் குடுமியோட ஒரு கார் க்யூலே நிக்கிது தலைவர்."
"அது அதுபாட்டுக்கு நின்னுட்டுப் போகுது தம்பி. நாம நம்ம வண்டில போவோம்."
"தலைவர், ப்ரோட்டோக்கால் இருக்கே…"
"அது நாளக்கி. நாமச் சார்ஜ் எடுத்தப்புறம்."
****
நம்மப் பச்சை மாருதியில் போய்க் கொண்டிருக்கிறேன்.
மாநிலத் தலைவரோடு போய்க் கொண்டிருக்கிறேன்.
நாளைய முதல்வரோடு போய்க் கொண்டிருக்கிறேன்.
நாளைக்குப் பதவியேற்கப் போகிற முதல்வரோடு போய்க் கொண்டிருக்கிறேன்.
"ப்ரோட்டோக்காலயெல்லாம் கொஞ்சம் ரிப்பேர் பாக்க வேண்டியிருக்கு தம்பி" என்று சிரிக்கிறார் தலைவர்.
"தம்பி, ஓரமாக் கொஞ்சம் ஸ்லோ பண்ணுங்க."
மாருதி ஓரங்கட்டப்பட்டதும், பின்னால் வந்து கொண்டிருந்த ஆடம்பர அரசாங்க வாகனத்திலிருந்து தலைமைச் செயலாளர் இறங்கி விரைவாய் வருகிறார்.
"சார், எனி ப்ராப்ளம்?"
"ப்ராப்ளம் ஒண்ணும் இல்ல சார், இத்தன வண்டி பின்னால வரணுமா! அந்த வண்டிகளயெல்லாம் ரிலீஸ் பண்ணிட்டு நீங்க மட்டும் வந்தாப் போதுமே."
அடுத்த நாள் பதவியேற்பு வைபவம், ஆடம்பரமோ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் எளிமையாய் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
வைபவமல்ல. ஜஸ்ட், நிகழ்ச்சி.
நிகழ்ச்சி எங்கே நடக்கிறது?
கவர்னர் மாளிகையுமல்ல, வள்ளுவர் கோட்டமுமல்ல.
கிண்டியில், காமராஜர் நினைவகத்தில்.
காமராஜருடைய, முதல் மந்திரி சபையில் ஏழே ஏழு மந்திரிகள் இருந்தது மாதிரி, இந்த அமைச்சரவையிலும் இப்போதைக்கு ஏழே ஏழு அமைச்சர்கள் தான்.
யார் அந்த ஏழு அதிர்ஷ்டசாலிகள்?
அவர்கள் ஒன்றும் அதிர்ஷ்டசாலிகள் அல்ல. தமிழக மக்கள் தான் அதிர்ஷ்டசாலிகள்.
சரி, கேள்வி எளிமைப் படுத்தப் படுகிறது. யார் அந்த ஏழு அமைச்சர்கள்?
நாளை பத்திரிகைகளில் வரும் பார்த்துக் கொள்ளலாம்.
அதற்கு நாளை வரைக் காத்திருப்பானேன்? இப்போதே லைவ்வாய் தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்ளலாமே?
இல்லை. தொலைக்காட்சியில் லைவ் கவரேஜ் எல்லாம் கிடையாது. அரசுச் சிக்கனம் அமுலுக்கு வந்து விட்டது.
பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து, அரசாங்கக் காரில் முதலமைச்சர், இன்றைய முதல்வர், அலுவல்களை கவனிக்கக் கோட்டைக்குப் போகிறார்.
முன்னே, ஸைரன் ஊதிக் கொண்டு பராக் பராக் கென்று போலீஸ் வாகனங்கள் பறக்கவில்லை. பின்னே, வால் போல வாகனங்கள் தொடர்ந்து வரவில்லை.
பக்கவாட்டில், கரும்பூனைகள் ஜீப்களில் தொங்கியபடி வரவில்லை.
சக வாகனங்கள் கலவரப்படுத்தப்படவில்லை.
சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை.
முதலமைச்சரின் வாகனம் மட்டும் தனியாய்ப் போகிறது.
தன்னந் தனியாய்ப் போகிறது.
தன்னந் தனியாகவா?
தப்பு.
ஒரேயொரு வாகனம் பின் தொடர்ந்து போகிறது.
பச்சைக் கலர் மாருதி.
பச்சைக் கொடி கட்டிய பச்சைக் கலர் மாருதி.
1987 மாடல்.
****
மாருதியில் ரேடியோ பாடிக் கொண்டிருக்கிறது.
மதியம் 12 ட்டூ 2 “ஆஹா FMமில் ‘பிளாக் அண்ட் ஒய்ட்.’
இனிமையான பழைய திரைப்படப் பாடல்கள் இசைக்கிற ஆனந்தமான நிகழ்ச்சி.
"அம்மாடீ பொண்ணுக்குத் தங்கம்மனசு" என்று டி எம் சவுந்தரராஜன் பாடுகிறார்.
"யாருக்கு இந்தக்கதை தெரியும்
சாமிக்கு மட்டும் இது புரியும்
பாலுக்குள் மோரும் கூட இருக்கும்
நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்"
என்கிற அற்புதமான வரிகளில் மனசு லயித்துக் கிடக்கிறது.
நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்.
நடந்து விட்டது.
நடந்தே விட்டது.
நிகழ்ந்து கொண்டிருப்பது கனவா, அல்லது நிஜமே தானா?
இது கனவாயிருந்தால், கடவுளே, எனக்கு முழிப்புத் தட்டாமலே போகட்டும்.
இது நிஜமாயிருந்தால், இறைவா, எனக்கு உறக்கமே பிடிக்காமல் போகட்டும்.
(முடிந்தது)
“