அடுத்த நாள் தமிழ்நாட்டுச் சுவர்களெங்கும் நம்முடைய க்ளைமாக்ஸ் கவிதை.
சிங்கிள் பிட், டபுள் பிட்டெல்லாம் இல்லை. அட்டகாசமாய் ஆறு பிட்.
மதுக்கடைகள் இல்லாத ஆட்சியொன்று வருகுது
மணற்கொள்ளை இல்லாத ஆட்சியொன்று வருகுது
நிலத் திருட்டு இல்லாத ஆட்சியொன்று வருகுது
நலத் திட்டங்கள் நிறைந்த ஆட்சியொன்று வருகுது
பாலின் விலை குறைவதற்கு ஆட்சியொன்று வருகுது
நூலகத்தைப் பேணுகிற ஆட்சியொன்று வருகுது
அரிசி அஞ்சு ரூபாய்க்கு அனைவருக்கும் கிடைக்குது
அரசியல் பழிவாங்கல்க் கைது இனிக் கிடையாது
லஞ்சம் தந்து மெடிக்கல் ஸீட் வாங்கும் அசிங்கம் ஒழியுது
லஞ்சத்துக்கே தமிழ் நாட்டில் பஞ்சம் வரப் போகுது
வரிப்பணத்தில் அரசாங்க விளம்பரங்கள் ஒழியுது
எரிகிற விளக்குக்குக் கரன்ட் கட் இனி இருக்காது
கண்ணியமான அதிகாரியைப் பந்தாட இனி முடியாது
மந்திரிகள் மாதாமாதம் மாறுவதும் கிடையாது
வாரிசுகளின் ஆதிக்கம் அஸ்தமனம் ஆகுது
தோழிகளின் அதிகாரத் துஷ்பிரயோகம் தொலையுது
தமிழ் நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில் இருக்குது
வாக்குச்சீட்டும் அம்மா, ஐயா உங்களிடம் தான் இருக்குது.
தேர்தலன்றைக்கு மனசு ஆண்டவனை வேண்டுகிறது.
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
டாஸ்மாக் கடைகளெல்லாம் தேர்தலன்றைக்கு மூடிக்கிடக்கின்றன.
இந்தக் கறைபடிந்த கடைகள் இனித் திறக்கவே திறக்காமல் போக அருள்புரி ஆண்டவனே.
வாக்குச் சாவடிகளில் வரிசை வரிசையாய்ப் பெண்கள்.
வரலாறு காணாத தொண்ணூறு சதவீத வாக்குப்பதிவு.
அப்போதே தெரிந்து விடுகிறது, ஜெயம் நம்ம பக்கம் தான் என்று.
மூன்று வருடக் கடின உழைப்புக்குக் கை மேல் பலன்.
வெற்றி!
மகத்தான வெற்றி!
குடிகாரர்கள் அடிப்படை உறுப்பினர்களாய்க் கூட இல்லாத கட்சிக்கு வெற்றி!
கல்வித் தரத்தை உயர்த்தி, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இங்கே நூற்றுக்கு நூறு என்று தமிழ் நாட்டைத் தலை நிமிரச் செய்யப் போகிற கட்சிக்கு வெற்றி!
எளிமைக்கும் இனிமைக்கும் நேர்மைக்கும் நாணயத்துக்கும் இலக்கணமாயிருக்கிற மஹா மனிதரொருவரை மாநிலத் தலைவராய்க் கொண்டிருக்கிற கட்சிக்கு வெற்றி!
கண்ணதாசன் எழுதி, எம் எஸ் விஸ்வநாதனின் இசையில் பி சுசீலா பாடிய, தேனான பாடல் வரிகளை என் மனமும் உதடுகளும் முணுமுணுக்கின்றன.
என் மனத்தில் ஒன்றைப்பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி!
வெற்றி விழாக் கொண்டாட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், வாழ்த்துச் சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள் எதுவுமே கூடவே கூடாது என்று தடை விதித்து விடுகிறார் தலைவர்.
தமிழ் நாட்டு வாக்காளர்களுக்கு, நம்மக் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு, வாக்களிக்காதவர்களுக்கு, அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிக்கிற அறிக்கை மட்டும், மாநிலத் தலைவரின் பெயரில் பத்திரிகைகளில் பிரசுரமாகிறது.
நாகர்கோவிலிலிருந்து ரயிலில் கிளம்பி, மாநிலத் தலைவர், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முந்தின நாள் சென்னைக்கு வந்து சேர்கிற மாதிரி ஏற்பாடு.
மாநிலத் தலைவர் வருகிறார்.
நாளைய முதல்வர் வருகிறார்.
கன்யாகுமரி எக்ஸ்ப்ரஸ்ஸில் வருகிறார்.
ஃபஸ்ட் க்லாஸ் ஏ ஸி?
ஸெகண்ட் ஏ ஸி?
ரெண்டுமே இல்லை. வழக்கம் போல, த்ரீ ட்டயர் ஏ ஸி.
விட்டால், சாமான்ய ரெண்டாம் வகுப்பிலேயே கூட ஏறி விடுவார். அப்புறம் சக பயணிகள் சங்கடப்படுவார்கள்.
கன்யாகுமரி மாவட்டத் தலைவர் அருளானந்தமும் தொண்டர்களும் உடன் வருகிறார்கள், ரெண்டாம் வகுப்பில்.
(அடுத்த இதழில் முடிகிறது)
“